கடைசி ரயில்.

ஹாலிவுட்டின் வெஸ்டர்ன் திரைப்படங்களை நான் விரும்பிப் பார்ப்பேன். சில திரைப்படங்கள் வெளியாகி ஐம்பது ஆண்டுகளைக் கடந்த போதும் அது தரும் பரவசம் குறையவேயில்லை. அப்படியொரு திரைப்படம் தான் Last Train from Gun Hill. பரபரப்பான கதை. மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். குறிப்பாகக் கிர்க் டக்ளஸ் மற்றும் ஆன்டனி குவின் இருவரது நடிப்பும் மிகச்சிறப்பாக உள்ளது.

மோர்கன் என்ற யு.எஸ்.மார்ஷலாகக் கிர்க் டக்ளஸ் நடித்திருக்கிறார். அவரது மனைவியைச் சில குதிரைவீரர்கள் மடக்கி பலாத்காரம் செய்து கொன்று விடுகிறார்கள் . இதன் சாட்சியாக இருப்பது அவரது மகன். தன் மனைவியைக் கொன்றது யார் என்பதை மோர்கன் தேடுகிறார். குதிரை வீரர்களில் ஒருவனின் சேணம் மட்டுமே கிடைக்கிறது. அதைக் கொண்டு அவன் கன்ஹில்லை சேர்ந்தவன் என்பதை அறிந்து கொள்கிறார். அவனைத் தேடி கன்ஹில்லிற்குப் புறப்படுகிறார்

அந்த நகரத்தின்  ஆட்சியாளராக இருப்பவர் பெல்டன். அவர் மோர்கனின் நண்பர். ஆகவே எந்த உதவி தேவை என்றாலும் செய்கிறேன் என்கிறார். இப்போது தான் பெல்டனுக்குத் தெரியவருகிறது மோர்கனின் மனைவியைக் கொன்றுவிட்டுத் திரும்பியிருப்பது தனது மகன் ரிக் என்று. அவனைக் காப்பாற்ற முனைகிறார் பெல்டன்.

தான் தேடிக் கொண்டிருக்கும் கொலையாளி பெல்டனின் மகன் ரிக் என அறிந்து கொண்ட மோர்கன் கடைசி ரயில் வருவதற்குள் அவனைப் பிடித்துவிடுவதாகச் சபதம் செய்கிறார். இதன்படியே அவனது இருப்பிடம் பற்றி அறிந்து அவனை ரகசியமாக மடக்கி கைது செய்துவிடுகிறார். அவனை ஒரு அறையில் அடைத்து விட்டு கடைசி ரயிலுக்காகக் காத்திருக்கிறார்

இதை அறிந்த பெல்டன் தன் மகனை மீட்பதற்காகப் ஆட்களை அனுப்புகிறார். இரண்டு நண்பர்களும் மோதிக் கொள்கிறார்கள். முடிவில் யார் வென்றார்கள். என்ன நடந்தது என்பதே படத்தின் கதை

மோர்கன் சேணத்துடன் மனைவியைக் கொன்றவனைத் தேடி கன்ஹில் வருவதும், அங்கே எதிர்பாராமல் தன் பழைய நண்பனைச் சந்திப்பதும் நல்லதொரு காட்சி.

மோர்கனின் மனைவி பூர்வபகுடி இந்தியர். அவளது தந்தை தனது மகளைக் கொன்றவனைத் தங்கள் முறைப்படி கொலை செய்ய வேண்டும் என்று துடிக்கிறார். ஆனால் மோர்கன் அவனைக் கைது செய்து சட்டத்தின் பிடியில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுகிறார்.

பெல்டனின் பழைய காதலியான லிண்டா முக்கியமான கதாபாத்திரம். அவளது உதவியால் தான் மோர்கன் ரிக்கை கைது செய்கிறார்.

ஹோட்டல் அறையில் அடைபட்டுக் கிடக்கும் மகனை மீட்க பெல்டன் துடிக்கிறான். மீட்பதற்காக அடியாட்களை அனுப்புகிறான். ஆனால் ரிக்கை விடுவிக்க முடியவில்லை. பத்து நிமிசங்களுக்கு மேலான அந்த சண்டைக்காட்சி மறக்கமுடியாதது.

இரவு ஒன்பது மணிக்குக் கடைசி ரயில் கன்ஹில் வரப்போகிறது. அதற்குள் மகனை மீட்க வேண்டும். இதற்கு மேலும் காத்திருக்க முடியாது எனப் பெல்டனே களத்தில் இறங்கித் தாக்குதல் நடத்துகிறான்.

ஒரு சிறிய விடுதி அறையில் பெல்டனின் மகனை பிணையக்கைதியாக வைத்துக் கொண்டு மோர்கன் செய்யும் சாகசங்களும், ஊரின் நடுவே கடைசி ரயில் வரும் காட்சியும், அதைத் தொடர்ந்த சண்டையும் சிறப்பாக உள்ளது. படத்தின் கடைசிப் பத்து நிமிடங்கள் மிகுந்த பரபரப்பானவை.

The Great Escape, The Eagle Has Landed போன்ற படங்களை இயக்கிய ஜான் ஸ்டர்ஜஸ் படத்தின் இயக்குநர்.

பரபரப்பான திரைப்படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும்.

31.3.20

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: