செய்தியின் விலை

பில்லி வைல்டர் இயக்கிய சிறந்த திரைப்படம் Ace in the hole. நேற்று மதியம் இந்த படத்தைப் பார்த்தேன். பரபரப்புச் செய்திகளுக்காக பத்திரிக்கைகள் எவ்வாறு செயல்பட்டன என்பதை இப்படம் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது.

இன்றைக்கு அதே இடத்தைத் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் எடுத்துக் கொண்டுவிட்டன.

இப் படத்தின் பாதிப்பில் உருவானதே PEEPLI LIVE இந்தித் திரைப்படம். முடிந்தால் இரண்டினையும் அடுத்தடுத்துப் பாருங்கள். ஒரு செய்தி எப்படி விற்பனை பொருளாகிறது என்ற உண்மையை நீங்களே உணருவீர்கள்.

சக் டாடம் என்ற பத்திரிக்கையாளராகக் கிர்க் டக்ளஸ் நடித்திருக்கிறார். தனது குடியின் காரணமாகப் பெரிய பத்திரிக்கையொன்றின் வேலையை இழந்த சக் தற்போது சிறியதொரு இதழில் வேலை செய்கிறார். அவருக்குப் பணம் தேவைப்படுகிறது. ஆகவே அரிய செய்தி ஏதாவது கிடைக்குமா எனத்தேடி பாலைவனத்திற்குப் பயணம் செய்கிறார்.

அங்கே யாருமற்ற மலைக் குகையினுள் ஒரு பாறையின் கீழ் ஒரு மனிதன் சிக்கிக் கொள்கிறான். அங்கிருந்து அவனால் வெளியேறி வர முடியவில்லை. இந்த விஷயத்தை அறிந்து கொண்ட சக் அந்தச் செய்தியைப் பரபரப்பாக்கி பத்திரிக்கையில் எழுதுகிறார். அதை மக்கள் ஆர்வமாக வாசிக்க ஆரம்பிக்கிறார்கள்.

உடனே சக பத்திரிக்கைகள் அந்தச் செய்தியைத் தனதாக்கிக் கொள்ளக் குகையை நோக்கி வரத் துவங்குகிறார்கள். பாறையடியில் சிக்கிக் கொண்ட மனிதனைக் காப்பாற்றுவதை விடவும் அதை வைத்து எப்படிச் செய்தி வெளியிடுவது என்ற போட்டி பெரியதாகிறது.

இதற்கிடையில் மாட்டிக் கொண்டுள்ள மனிதனை வேடிக்கை பார்க்க மலைப்பகுதியை நோக்கி மக்கள் படையெடுத்து வர ஆரம்பிக்கிறார்கள்.

அந்த இடம் ஒரு சுற்றுலா ஸ்தலம் போலாகிவிடுகிறது. ரயில் வந்து நின்றதும் மக்கள் இறங்கி மலையை நோக்கி ஓடும் காட்சி மந்தை மனநிலையின் சாட்சியம். நிறையக் கடைகள். நிறையக் கார்கள். மக்கள் உற்சாகமாக ஒன்றுகூடுகிறார்கள். அந்த மனிதன் உயிரோடு இருக்கிறானா இல்லை இறந்துவிட்டானா என வாதிடுகிறார்கள்.

நெருக்கடிக்கு உள்ளான மனிதனைப் பற்றித் தெரிந்து கொள்வதில் எப்போதுமே மனிதர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதை விற்பனை பொருளாக்குவதில் தவறில்லை என்கிறார் கிர்க் டக்ளஸ். ஆனால் அது தவறான செயல் என்பதை அவர் உணருவதில்லை.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஷெரிப் தனது தேர்தல் ஆதாயத்திற்குப் பயன்படுத்த முயற்சிப்பது ஒரு பக்கம் நடைபெறுகிறது.

இன்னொரு பக்கம் பாறையினுள் சிக்கிக் கொண்ட மனிதன் உயிருக்குப் போராடுகிறான். அவனை மீட்பதற்கான வழிகள் நடைபெறுகின்றன.

பாறையில் சிக்கிக் கொண்ட மனிதனின் மனைவியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்கிறார் கிர்க் டக்ளஸ். அத்தோடு மீட்புப் பணிகளைத் தனது விருப்பப்படியே செய்யவும் முயல்கிறார். குகையினுள் சிக்கியவனைப் புகைப்படம் எடுக்கும் காட்சி மறக்கமுடியாதது.

அந்த மனிதன் மீட்கப்பட்டுவிட்டால் அத்தோடு செய்தி முடிந்து போய்விடும். ஆகவே அதை நீடிப்புச் செய்யச் சக் முற்படுகிறார். அவரை விலை கொடுத்து வாங்க வேறு பத்திரிக்கை முயல்கிறது. பணமும் பேரும் எளிதாகக் கிடைக்கிறது என்பதால் சக் எல்லாவிதமான தந்திரங்களையும் மேற்கொள்கிறார்.

அந்த மனிதன் மீட்கப்பட்டானா என்பதே படத்தின் முடிவு.

கிரிக் டக்ளஸ் அற்புதமாக நடித்திருக்கிறார். சூழலை தனக்குச் சாதமாக்கிக் கொள்ளும் முனைப்பு, கோபம். வேகம். நெருக்கடியைக் கையாளும் விதம் என அவரது ஆளுமை படத்தில் சிறப்பாக வெளிப்படுகிறது. ஒரு காட்சியில் டைப்ரைட்டரில் தீக்குச்சியை உரசி நெருப்பு பற்ற வைப்பார் கிர்க் டக்ளஸ் அது தனித்துவமானது.

Tatum’s a hungry guy who bites off more than he can swallow என அந்தக் கதாபாத்திரம் பற்றி வைல்டர் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில், ஃபிலாய்ட் காலின்ஸ் என்பவர் இது போலக் குகையினுள் மாட்டிக் கொண்டார். அதைப் பத்திரிக்கைகள் எவ்வாறு தனது பரபரப்பிற்குப் பயன்படுத்திக் கொண்டன என்பதிலிருந்தே இந்தப் படத்தை வைல்டர் உருவாக்கியிருக்கிறார்.

வால்டர் நியூமன் என்ற 23 வயதான ரேடியோ நாடக ஆசிரியரின் யோசனை தான் இப்படம். அவரோடு இணைந்து வைல்டர் திரைக்கதையை உருவாக்கினார்.

கறுப்பு வெள்ளையில் மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். Charles Lang படத்தின் ஒளிப்பதிவாளர். மலைப்பகுதியில் வாகனங்கள் வந்து நிரம்பியிருப்பதும். மீட்புப் பணிகள் நடைபெறுவதும், குகையினுள் சக் செல்வதும் மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

••

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: