குறுங்கதை 41 சிவப்பு ஸ்வெட்டர் அணிந்த பெண்

அந்தப் பெண்ணை மெட்ரோ ரயிலில் முதன்முறையாகப் பார்த்த போது சிவப்பு நிற ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். மிகவும் ஒல்லியான உடல்வாகு. ஆனால் சற்றே பெரிய கண்கள். நறுக்கிய ஆப்பிள் துண்டு போலச் சிறிய உதடு. தோளில் ஆரஞ்சு வண்ண கைப்பை. அவளிடம் அபூர்வமான அழகு வெளிப்பட்டது.

அதை அவள் அறிந்திருப்பாளா எனத் தெரியவில்லை. ஆனால் ரயிலிலிருந்தவர்கள் அத்தனை பேரும் அதை உணர்ந்தார்கள். அவள் ரயிலிலிருந்த யாரையும் ஏறிட்டு பார்க்கவில்லை.

வாசனைத் திரவியத்தைத் தரையில் கொட்டிவிட்டால் குபீர் என்று எழுமே ஒரு மணம். அது போல அவளது இருப்பு அந்தப் பெட்டியிலிருந்தவர்களை சந்தோஷப்படுத்தியது.

இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்தவுடன் அவள் சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போவது போல இயந்திரத்தனமாக இறங்கி வெளியேறி நடந்தாள். ஒரு வார்த்தை கூடப் பேசாமல். கண்ணைத் திருப்பாமல் அவள் அந்த நாளுக்கான சந்தோஷத்தை வழங்கிப் போனாள் என்பது தான் நிஜம்.

அன்று அலுவலகம் போன பிறகும் அவள் நினைவிலே இருந்தான். மாலை வீடு திரும்பும் ரயிலில் அவள் வருவாளா என ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவள் வரவில்லை.

அதன் பிறகு ஒவ்வொரு நாளும் அவள் சரியாக அவன் இருக்கும் அதே ரயில் பெட்டியில் தான் ஏறினாள். பெரும்பாலும் ஜன்னலோர இருக்கையில் தான் அமர்ந்து கொண்டாள். ஒரு போதும் எவரையும் அவள் நேர்கொண்டு பார்க்கவேயில்லை. ஆனால் அவன் ஒவ்வொரு நாளும் அவள் பக்கத்தில் நெருங்கிவிட்டது போலவும், மௌனமாக அவளுடன் நட்பு கொண்டது போலவும் உணர்ந்தான்.

சில நாட்கள் அவள் இறங்கிப் போன பிறகு அவள் அமர்ந்திருந்த இடத்தின் வெறுமையைத் தடவிப் பார்த்துக் கொள்வான். அவளுக்கு அவனாகவே ஒரு பெயர் சூட்டினாள். அவளைப் பற்றி அவனாகவே ஒரு கதையை உருவாக்கிக் கொண்டான்.

ஒவ்வொரு நாளும் அவளுக்கும் அவனுக்குமான இடைவெளி குறைவதாக அவன் உணர்ந்தான். விளக்கின் சுடரை இருள் பார்த்துக் கொண்டிருப்பது போன்றிருந்தது அவனது செய்கை.

அலுவலகத்தில் முன்பைவிட உற்சாகமாக வேலை செய்தான். திடீரென உலகமே இளமையானது போல உணர்ந்தான். அவள் எத்தனை அடிகள் நடந்து ரயிலை விட்டு இறங்கிப் போகிறாள் என்று எண்ண ஆரம்பித்தான். அவளது கைப்பையாக மாறிவிடமுடியாதா என ஏக்கம் கொண்டான்.

அவளோடு ஒரு வார்த்தை பேசவில்லை. பேச முயற்சிக்கவும் இல்லை. பின்தொடரவில்லை. யார் என்று தேடி அறிந்து கொள்ள முயலவில்லை. அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதே போதுமானதாகயிருந்தது. அவளைப் பற்றிய கனவுகளுடன் வாழ்வேதே இனிதாக தோன்றியது.

பின்பு ஒரு நாள் காலை அவள் ரயிலில் வரவில்லை. ஏன் வரவில்லை என்று சற்றுப் பதற்றமாக உணர்ந்தான். அலுவலகத்திற்குப் போன பிறகு அவளது உடல்நிலை பற்றிக் கவலை கொண்டான். வீடு திரும்பிய பிறகு அவளுக்காகப் பிரார்த்தனை செய்தான். அதன்பிறகு அவள் வரவேயில்லை.

அதே ரயிலில் இப்போதும் அவன் போய்க் கொண்டேதானிருக்கிறான். அவள் வழக்கமாக ஏறும் ரயில் நிலையம் வந்தவுடன் அவன் மனதில் அவள் ஏறிவிட்டதாக உணருகிறான். அவள் அதே ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருப்பதாக உணருகிறான். இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி நடந்து மறைவதாகவும் உணர்கிறான்.

அவனுக்கு அந்தப் பெண் யாரெனத் தெரியவே தெரியாது. ஆனால் அவள் நேரில் சில நாட்களும் நினைவில் வாழ்நாள் முழுவதும் கூடவே வரப்போகிறவள் என்பது நன்றாகவே தெரியும்

••

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: