பத்துக் கேள்விகள்

10 Questions for the Dalai Lama என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்

இந்தியப் பண்பாடு குறித்த ஆவணப்படத்தை உருவாக்குவதற்கு நீண்ட பயணத்தை மேற்கொண்டார் ரிக் ரே . தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் அடித்தட்டு மக்களுடன் ஒன்றாகப் பயணித்து இந்திய வாழ்க்கைமுறை பற்றித் தெரிந்து கொள்ள முயன்றார். இந்த நிலையில் இந்தியாவின் தர்மசாலாவில் வசிக்கும் தலாய் லாமாவை சந்தித்து நேர்காணல் செய்யும் சந்தர்ப்பம் உருவானது. அவர் தலாய் லாமாவிடம் பத்துக் கேள்விகள் கேட்கலாம். அவர்களின் சந்திப்பிற்காக 45 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தலாய் லாமாவிடம் என்ன கேள்விகள் கேட்பது, அதை ஏன் கேட்க வேண்டும் என்பதிலிருந்து இந்த ஆவணப்படம் துவங்குகிறது

தலாய் லாமாவிடம் கேள்விகள் கேட்பதற்கு முன்பாகத் திபெத்தின் கடந்தகாலத்தையும் டென்சின் கியாட்சோ என அழைக்கப்பட்ட தலாய் லாமாவின் இளமைப்பருவ வாழ்க்கையையும் சீனாவின் ஆக்கிரமிப்பு காரணமாகத் திபெத்திலிருந்து தலாய் லாமா தப்பி இந்தியா வந்த வரலாற்றையும் ஆவணப்படம் விவரிக்கிறது

நேர்காணல் ஆவணப்படத்தின் மையப்பகுதி மட்டுமே. அதன் முன்பு விரிவாகத் திபெத்தின் தனித்துவம் மற்றும் அரசியல் சூழல் பற்றி விரிவாக ஆவணப்படுத்துகிறார் ரிக்.

படம் முழுவதும் தலாய் லாமா சிரித்த முகத்துடன் இருக்கிறார். அவரது பதில்களில் சிரிப்பொலி எதிரொலிக்கிறது. எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தாலும் அதைப் பற்றிப் பேசும் போது அவரது முகத்தில் தெளிவும் சாந்தமும் மட்டுமே வெளிப்படுகின்றன. துப்பாக்கி முனையால் மக்களைக் கட்டுப்படுத்திவிட முடியாது. ஒருவேளை தற்காலிகமாக வெற்றி கிடைக்கலாம். ஆனால் உண்மையின் பலமே என்றைக்குமானது. அது நிரந்தரமான வெற்றியைத் தரக்கூடியது என்கிறார் தலாய் லாமா

ரிக் அவரிடம் இந்தியாவை விட அமெரிக்கா ஏன் ஆன்மீக ரீதியில் ஏழ்மையானதாகத் தோன்றுகிறது? ஏழை மக்கள் இத்தனை கஷ்டங்களுக்கும் இடையில் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். ஆனால் வசதியானவர்கள் எவ்வளவு தான் பணமிருந்தாலும் சந்தோஷமாக இல்லை. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்குத் தலாய் லாமா சிரித்தபடியே பணக்காரனுக்கு எதைப் பார்த்தாலும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. வாங்கி வாங்கிக் குவித்துக் கொண்டேயிருக்கிறான். உண்மையில் அவன் தான் ஏழை, அதே நேரம் கிடைப்பதைக் கொண்டு ஏழை எளிய மக்கள் சந்தோஷமாக வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். மனதளவில் அவர்கள் வசதியானவர்களே என்கிறார்.

இன்றைய நவீன உலகில் நம் பண்பாட்டினை அப்படியே காப்பாற்றுவது முடியக்கூடிய விஷயமா எனக்கேட்கிறார் ரிக். அதற்குத் தலாய் லாமா ஒவ்வொரு பண்பாட்டிலும் தனித்துவமான சில விஷயங்கள் இருக்கின்றன/ அவை கட்டாயம் பாதுகாக்கப் பட வேண்டும் என்று பதில் சொல்கிறார்

அறிவியலில் அதிக ஆர்வம் கொண்ட தலாய்  லாமா ஒரு காட்சியில் கடிகார ரிப்பேர் செய்வதிலும் ஈடுபடுகிறார். அவரது மேஜையில் கார்ல் சாகனின் புத்தகம் இருக்கிறது.

ஆயுதத்தைக் கைக்கொள்ளாமல் நம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது . அது வன்முறையில்லையா என்றொரு கேள்வியை ரிக் கேட்கிறார். அப்போது தலாய் லாமா நமது பாதுகாப்பிற்காக, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எவரையாவது தாக்க வேண்டும் என்றால் அதைச் செய்து தானே ஆக வேண்டும் என்று வெளிப்படையாகப் பதில் தருகிறார்.

இந்த ஆவணப்படத்தில் தலாய் லாமா அமைதிக்கான நோபல் பரிசு பெறும் காட்சி இடம்பெற்றுள்ளது. அத்தோடு அவரது ஏற்புரையும் உள்ளது.

••

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: