குறுங்கதை 43 சாப்பாட்டுக்கணக்கு

தேரடித் தெருவிலிருந்தது அந்தச் சிறிய சைவ உணவகம். அங்கே வேலை செய்த ஒரு சர்வருக்கு விசித்திரமான பழக்கமிருந்தது. ஒரு நாளில் யார் யார் எவ்வளவு தொகைக்குச் சாப்பிட்டார்கள் என்ற பில் கணக்கைத் துல்லியமாக மனதில் வைத்திருப்பான். அந்த நாளின் முடிவில் அன்று மிக அதிகமான தொகைக்குச் சாப்பிட்டவர் யார் என்று தேர்வு செய்வான்.அதில் அவனுக்கு ஒரு சந்தோஷம்.

அவனிடம் இப்படி ஒரு திறமை இருப்பது யாருக்கும் தெரியாது. சில நேரம் அவன் தோசை என்பதற்குப் பதிலாக ரூ 25 என்றும், வடை என்பதற்குப் பதிலாக ரூ 8 என்றும், இட்லி என்பதற்குப் பதிலான ரூ 4 என்றும் ஹோட்டலில் இருந்த சகலவிதமான உணவுப்பொருட்களுக்கும் அதனதன் தொகையைக் கொண்டு அடையாளம் வைத்துக் கொண்டிருந்தான்.

யாராவது தோசை கேட்டால் மனதில் மறுநிமிசம் ரூ25 என்று தோன்றி மறையும். வேடிக்கையும் விசித்திரமுமான அவனது இந்தச் செயல் சுவாரஸ்யமான விளையாட்டினைப் போலிருந்தது.

இந்தக் கணக்கை இரவில் வீடு வந்து சேரும்வரை நினைவில் வைத்திருப்பான். உறங்குவதற்கு முன்பு சிலேட்டில் எழுதியதைத்  ஈரத்தைத் தொட்டு அழிப்பது போல அன்றைய நாளின் பில்கணக்கு முழுவதையும் அழித்துவிடுவான்.

மறுநாள் காலை வழக்கம் போல ஹோட்டலுக்குப் போகையில் எழுதப்படாத வெற்று காகிதம் போலத் தன்னை உணருவான்.

ஹோட்டலில் ஒரு ஆள் எப்போது சாப்பிட வந்தாலும் சாப்பிட்டுப் பில் கொடுத்து முடித்தவுடன் தனது சிறிய பாக்கெட் நோட்டில் அந்தத் தொகையைக் குறித்துக் கொள்வதையும் அதன் எதிரில் நாள் நேரம் இரண்டினையும் குறிப்பதைக் கண்டிருக்கிறான். அது ஒரு வகை விசித்திரம். சில ஆட்கள் ஹோட்டல் பில்லை கேட்டு வாங்கிக் கொண்டு போய் வீட்டில் பத்திரப்படுத்திக் கொள்வார்கள்.

சாப்பிடும் விஷயத்தில் மட்டுமில்லை சாப்பாட்டுக் கணக்கிலும் நிறைய வித்தியாசமான மனிதர்கள் இருக்கிறார்கள். எந்த இரண்டு மனிதர்களும் ஒன்று போலச் சாப்பிடுவதேயில்லை.

அவன் தனது சர்வர் வாழ்க்கையில் மனிதர்களின் சாப்பாட்டு முறை மற்றும் ருசி பற்றி நிறைய ரகசியங்களைக் கண்டறிந்திருக்கிறான். உலகிற்கு அந்த விஷயங்கள் தேவையற்றவை. ஆனால் அவனுக்கு அந்த ரகசியங்கள் தான் வேலையைச் சுவாரஸ்யப்படுத்துபவை.

இத்தனை ஞாபகசக்தியும் கணித திறனும் கொண்டவனுக்குச் சிறு குறையிருந்தது. அவனால் மனைவி சொல்லி அனுப்பிய மளிகை பொருட்களை இரவில் வாங்கிச் செல்வதற்கோ, மருந்துக்கடையில் வாங்க வேண்டிய மாத்திரையின் பெயரோ, எந்த நாளில் தவணை சீட்டுக் கட்ட வேண்டும் என்றோ நினைவேயிருக்காது.

மனைவி கோவித்துக் கொள்ளும் போது தலையைச் சொறிந்தபடியே ஞாபகமறதி என்று சொல்லிக் கொள்வான்.

ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களும் ஒரு போதும் ஒன்றாக இருக்காது தானே.

••

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: