குறுங்கதை 58 காதல்பறவைகள்.

அன்புமிக்கச் சுனிதா அகர்வால் அவர்களுக்கு,

நீங்கள் எனது திருமணப்பரிசாகக் கொடுத்தனுப்பிய இரண்டு காதல் பறவைகளை உங்களிடமே திருப்பி அனுப்பி வைக்கிறேன். இது முறையான செயலில்லை என்ற போதும் இந்தப் பறவைகள் வந்த நாள் முதல் நான் நிம்மதியற்றுப் போய்விட்டேன் என்பதால் இதை நீங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மன்றாடுகிறேன்.

எனக்கோ, என் மனைவிக்கோ பறவைகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்ததே கிடையாது. ஒருமுறை அழகான நாய்க்குட்டி ஒன்றை வீட்டிற்குக் கொண்டுவந்த போது உடனே அதை வெளியே கொண்டு போய்விட்டுவிட வேண்டும் என்று மனைவி சண்டையிட்டாள். இரவோடு இரவாக அதை நண்பர் ஒருவர் வீட்டில் ஒப்படைத்தேன்.

ஆனால் உயரதிகாரியான நீங்கள் இப்படி என்னைக் கேட்காமலே இந்தக் காதல் பறவைகளைப் பரிசாக அனுப்பி வைத்தபோது எப்படி மறுப்பது எனத் தெரியவில்லை.

இந்தப் பறவைகள் தொடர்பாக நடந்த சில நிகழ்ச்சிகளை நான் சொல்ல விரும்புகிறேன். முதல் நிகழ்ச்சி இந்தப் பறவைகள் எனது வீட்டிற்கு வந்த நாளிலிருந்து ஒரு முறை கூடக் குரல் எழுப்பவேயில்லை. காகிதத்தில் செய்து வைத்த பறவைகளைப் போல அமைதியாக இருந்தன. புதிய இடம் என்பதால் அப்படியிருப்பதாக எனது மனைவி சொன்னாள். ஆனால் மூன்று நாட்கள் கடந்தபிறகும் இப்பறவைகள் குரல் எழுப்பவேயில்லை. ஏன் இவை இவ்வளவு மௌனமாக இருக்கின்றன என்றும் புரியவில்லை.

நானும் என் மனைவியும் அலுவலகம் கிளம்பிய பிறகு இந்தப் பறவைகள் நாள் முழுவதும் இனிய குரலில் சப்தமிடுவதாகவும் அது ஒரு காதல் நாடகம் போலிருப்பதாகவும் பக்கத்து வீட்டு ஆள் சொன்னார்.

அது உண்மையாக இருக்குமா எனச் சோதித்துப் பார்க்க நான் அலுவலகம் போவதாகப் பாவனைக் காட்டிவிட்டு வெளியே ஒளிந்து கொண்டேன். பக்கத்துவீட்டுக்காரர் சொன்னது நூறு சதவீத உண்மை என்பதை நானே பார்த்தேன்.

அந்தப் பறவைகள் ஒன்றையொன்று உரசிக் கொண்டன. அலகால் வருடின. இனிமையான குரல் எழுப்பின. இதைக் கண்டதும் எனக்கு ஆத்திரமாக வந்தது. சட்டென வாசற்கதவைத் திறந்து உள்ளே போனேன். என்னைக் கண்டவுடன் பறவைகள் ஒடுங்கிப் போயின. .

இந்த நிகழ்வை என் மனைவியிடம் சொன்னபோது அவள்“சுத்தப்பொய்“ என்றாள். மறுநாள் அவளே ஒளிந்திருந்த பார்த்து உண்மையை அறிந்து கொண்டபோது சொன்னாள்

“காதற் பறவைகள் தனிமையை விரும்புகின்றன. அதை நாம் கெடுக்க வேண்டாம்“

“சரி அப்படியே இருக்கட்டும் “என்று விட்டுவைத்தேன். அடுத்த சில நாட்களில் என் மனைவி சொன்னாள்.

அந்தப் பறவைகள் நாளெல்லாம் சண்டையிடுவதாகப் பக்கத்துவீட்டுப் பெண்மணி சொல்கிறாள். உக்கிரமான சண்டையாம்.

அவள் சொன்னது போலவே ஒரு பறவை காயம்பட்டிருந்தது. அதை மட்டும் தனியே எடுத்து மருந்திட்டு வேறு ஒரு கூண்டு வாங்கி அதில் அடைத்து வைத்தேன். ஆனால் பிரிக்கப்பட்ட பிறகு அந்தப் பறவைகளின் சண்டை அதிகமாகியது. இரண்டும் பகலிலும் சண்டையிட்டுக் கத்தின. ஒரு நிமிஷம் ஓயவேயில்லை

இது நடந்த இரண்டாம் நாள் ஒரு பறவை என்னைக் கண்டவுடன் “முட்டாள்“ “முட்டாள் “எனச் சொல்லத் துவங்கியது. இன்னொரு பறவை என் மனைவியைக் கண்டதும் “முட்டாள் முட்டாள்“ எனக் கத்தியது. இருவராலும் அதைக் கேட்க முடியவில்லை. கூண்டின் மீது துணியைச் சுற்றி மறைத்து வைத்தேன். அப்படியும் என் நடை சப்தம் கேட்டு பறவை கத்தியது. என் மனைவியின் கனவில் அந்தப் பறவை வந்து சுற்றுவதாகப் பயந்து அலறினாள்.

இதன் பிந்திய நாட்களில் காரணம் இல்லாமல் நானும் என் மனைவியும் சின்னஞ்சிறு விஷயங்களுக்குக் கூடச் சண்டையிட ஆரம்பித்தோம். சில நாட்கள் அந்த  காதல்பறவைகள். போலவே முட்டாள் முட்டாள் எனப் பரஸ்பரம் திட்டிக் கொண்டோம். எங்களுக்கு என்ன ஆனது எனப்புரியவில்லை. வீடு நிம்மதியற்றுப் போனது.

இன்னும் இந்தக் காதல்பறவைகளை வைத்திருந்தால் அது எங்களை நிரந்தரமாகப் பிரித்துவிடும் என நம்புகிறேன். ஆகவே திரும்பி அனுப்பி வைக்கிறேன். கூண்டில் அடைபட்டால் பறவைகளுக்கும் கூடக் காதல் கசந்துவிடும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

நீங்கள் பரிசாக அனுப்பிப் பறவைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். இதில் எந்த வருத்தமும் உங்களுக்கு ஏற்படாது என நம்புகிறேன்.

உங்கள் உண்மையுள்ள ஊழியன்

புருஷோத்தமன்.

**

24/4/420

0Shares
0