ஜமீலா

நேற்றிரவு சிங்கிஸ் ஐத்மாத்தவ் (Chinghiz Aitmatov) எழுதிய ஜமீலா நாவலை மையமாகக் கொண்ட ஜமீலா(Dzhamiliya) திரைப்படத்தைப் பார்த்தேன். 1968ல் வெளியான இப்படத்தை இரினா போப்லாவ்ஸ்கயா மற்றும் செர்ஜி யூட்கேவிச் இயக்கியிருக்கிறார்கள்.

சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் ”முதல் ஆசிரியர்” மகத்தான படைப்பு. அது போலவே அவரது சிவப்பு தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று, மற்றும் குல்சாரி நாவலும் சிறப்பான படைப்புகள்.

ஜமீலா நாவலை வாசிக்கையில் ஜமீலாவின் தோற்றம் நம் மனதில் தனித்துவமிக்கதாக எழும். அதற்கு நிகரான ஒரு பெண்ணை ஜமீலாவாக நடிக்க வைத்திருக்கிறார்கள். அது போலவே சின்னவனே என்ற பொருளில் அழைக்கப்படும் 15 வயதைச் சேர்ந்த கிச்சினே பாலாவின் தோற்றம். மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. தானியாரும் நல்ல தேர்வு. சிங்கிஸ் ஐத்மாதவே இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார். ஆகவே நாவலின் நுட்பங்கள் திரையில் சரியாகப் பிரதிபலிக்கப்பட்டுள்ளன.

கிச்சினே பாலா தான் கதையைச் சொல்கிறான். அவனது நினைவுகள் தான் நாவலின் அடித்தளம். படம் கூட்டுக்குடித்தனமாக வாழும் கிர்கீஷிய மக்களின் வாழ்க்கையில் துவங்குகிறது. பரந்த சமவெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள். மண்சுவர்கள். கவைகளை வைத்துக் கொண்டு வைக்கோலைக் கிளறி விடும் பெண்கள். ரொட்டி சுடும் முதியவள். தலையில் வெண்ணிறமான துணியைக் கட்டிக் கொண்டு வசீகரமான சிரிப்புடன் ஜமீலா வைக்கோலை வண்டியில் ஏற்ற உதவி செய்கிறாள். வைக்கோல் துகள்கள் அவள் உடலில் ஒட்டிக் கொள்கின்றன. அவளைக் காணும் இளைஞர்கள் தன்னைக் காதலிக்கும்படி கெஞ்சுகிறார்கள். அவர்களைத் துரத்தியடிக்கிறான் கிச்சினே பாலா.

இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் கதை நிகழுகிறது. சிறுவர்களும் கூடக் கூட்டுப்பண்ணையில் வேலை செய்கிறார்கள். சிறுவனாக இருந்தாலும் ஒடியோடி வேலை செய்கிறான் கிச்சினே பாலா. வயலில் வேலை செய்வதும் ரயில் நிலையத்திற்குத் தானியத்தைக் கொண்டு செல்வதும் அவனது வேலை அவனது இரண்டு அண்ணன்களும் போர்முனையில் இருக்கிறார்கள். அவனது அண்ணி தான் ஜமீலா. ஸாதிக் என்ற அவளது கணவனுடன் நான்கு மாதங்கள் தான் ஒன்றாக வாழ்ந்திருக்கிறாள்.

படத்தின் துவக்கக் காட்சியில் போருக்குச் செல்லும் வீரர்களுக்குத் தானியங்கள் அனுப்பிவைக்க வேண்டிய தேவைகள் இருப்பதால் வண்டி ஒட்டிச் செல்ல ஜமீலாவை அனுப்பி வைக்கும்படி கேட்கிறான் பண்ணை அதிகாரி. அவளது மாமியார் அதை மறுக்கிறாள். ஜமீலாவை அப்படி அனுப்பி வைக்க முடியாது என்கிறாள். தேவைப்பட்டால் கிச்சினே பாலா உடன் வரட்டும் என்று ஆலோசனை சொன்னாலும் கேட்க மறுக்கிறாள்.

ஜமீலா மற்ற பெண்களுடன் வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். கணவனைப் பிரிந்த ஏக்கமும் ஆசைகளும் கொண்டிருந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளமுடியாமலிருக்கிறாள் ஜமீலா.

நாடோடியான தானியார் போர்க்களத்திலிருந்து ஊர் திரும்பி வருகிறான். அவனையும் ஜமீலாவோடு தானியங்களை ஏற்றிப் போகச் சொல்கிறார்கள்.

இரண்டு வண்டிகளில் தானியங்களை ஏற்றிக் கொண்டு ஜமீலா, கிச்சினே பாலா, தானியார் – மூவரும் ரயில் நிலையம் நோக்கிச் செல்கிறார்கள். தானியார் ஒரு அபூர்வமான கதாபாத்திரம். அவனை வேண்டுமென்றே ஜமீலா சீண்டுகிறாள். சிரிக்கிறாள். தானியாருக்கு அது பிடித்திருக்கிறது.

ரயில் நிலையத்தின் முன்பு தானிய வண்டிகள் வந்து சேரும் காட்சி எத்தனை அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒருவன் ஒட்டகத்தில் தானியம் ஏற்றி வந்திருக்கிறான். மறுபக்கம் நாலைந்து குதிரைவண்டிகள். தானிய மூட்டைகளை இறக்கிவைக்கும் கூலிகளின் கூச்சல். முதுகில் மூட்டையைத் தூக்கிக் கொண்டு சாய்வான பலகையில் ஏறும் விதம்

ஜமீலாவிற்கும் தானியாருக்குமிடையில் காதல் உருவாகிறது. பெற்றோரின் கட்டாயத்தில் பெயரிலே தான்  ஸாதிக்கை திருமணம் செய்திருந்தாள். ஆகவே அவன் போர்முனைக்கு போனது அவளுக்குள் பெரிய கவலையை உருவாக்கவில்லை. ஆனால் தானியாரின் அன்பும் இசையும் அவளை மிகவும் சந்தோஷப்பட வைத்தன. தனக்கு ஏற்றவன் தானியார் என்றே அவள் நினைத்தாள்.

திடீரென்று ஒரு நாள் ஜமீலாவிற்குத் தனது கணவரிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தான் ஊர் திரும்பி வரப்போவதாக எழுதியிருக்கிறான். காதலனுடன் வாழ்வதா இல்லை அவனை மறந்துவிட வேண்டுமா எனத் தெரியாமல் ஜமீலா தடுமாறுகிறாள். முடிவில் தானியாருடன் ஊரைவிட்டு வெளியேற நினைக்கிறாள். அது நடந்ததா. கிச்சினே பாலா என்ன செய்தான் என்பதே படத்தின் மீதக்கதை.

ஜமீலாவின் அழகை கிச்சினே பாலா ரகசியமாக ரசிக்கிறான். எப்போதும் அவளுடனே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அவளை யாராவது சீண்டினால் தாங்கமுடியாத கோபம் கொள்கிறான். ஜமீலா தனக்குரியவள் என்றே கிச்சினே நினைக்கிறாள். ஆனால் ஜமீலா அவனை ப்ரியத்துக்குரிய தோழன் என்றே நினைக்கிறாள்.

வைக்கோலில் ஜமீலா விழுந்து கிடப்பதும், குதிரையில் வேகமாகச் சவாரி செய்வதும் அவளது திருமணக்காட்சிகளும் மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஸ்டெப்பியின் ஊடே குதிரை வண்டியில் பயணம் செய்வதும் இரவில் அவர்கள் தங்கும் காட்சியும் கவித்துவமானது.

கிர்கிஸ் பண்பாடு குறித்த இனவரைவியல் திரைப்படமாக இதை உருவாக்கியிருக்கிறார்கள். அற்புதமான எடிட்டிங் படத்தின் தனிச்சிறப்பு , குறிப்பாக ஜமீலாவின் திருமணத்திற்கு முன்பு நடக்கும் குதிரைப்பந்தய காட்சிகள் வெகுநேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன.

ஸ்டெப்பியின் ஊடே ஜமீலாவிற்காக. தானியார் இனிமையான குரலில் பாடுகின்றான். அந்தப் பாடல் காற்றில் எதிரொலிக்கிறது. மெய்மறக்கச் செய்யும் அப்பாடலில் ஜமீலா மயங்கிவிடுகிறாள். தானியாரை ஜமீலாவிற்குப் பிடித்துப் போகத் துவங்குவதைக் கிச்சினே விரும்பவில்லை. அவன் எரிச்சலடைகிறான். பதின்வயதின் ஆசைகள் அப்படித் தானே நடந்து கொள்ளச் செய்யும்

ஜமீலா படத்தின் இசையும் ஒளிப்பதிவும் மறக்கமுடியாதவை. எத்தனை அழகான நிலக்காட்சிகள். கிறங்கச்செய்யும் இசை.

ஜமீலாவிடம் கிச்சினே தன் காதலை வெளிப்படுத்துவதேயில்லை. ஆனால் உள்ளுற அவன் ஜமீலாவை விரும்புகிறான். வெறும் விளையாட்டு தோழன் போலத் தன்னை ஜமீலா நினைப்பதை அவன் வெறுக்கிறான். அவனது காதல் உலகம் அறியாதது. அதைச் சிங்கிஸ் ஐத்மாத்தவ் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

பூ. சோமசுந்தரம் மொழியாக்கத்தில் ஜமீலா தமிழில் வாசிக்கக் கிடைக்கிறது.

0Shares
0