மோ-யானின் பசி.

2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான மோ-யானின் நேர்காணல் ஒன்றை வாசித்தேன்.

மோ-யான் சாண்டோங்கில் ஒரு கிராமத்தில் பிறந்தார், அவரது தந்தை தனியார் கிராம பள்ளியில் படித்தவர், அறிவுஜீவி. ஆகவே பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். மோயானின் சகோதரர் ஷாங்காய் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். மோ-யான் பல்கலைகழத்தில் படித்த நாட்களில் தான் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டார்

பெரும்பான்மை எழுத்தாளர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைப் பற்றி எழுதவே ஆசைப்படுகிறார்கள். குறிப்பாகக் குழந்தைப் பருவ நினைவுகளைப் பற்றி எழுதுவதன் மூலம் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். மோயானும் அப்படித்தான் தனது இலக்கிய வாழ்க்கையைத் துவங்கினார்.

அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் சீனாவில் கலாச்சாரப் புரட்சி துவங்கியது. ஆகவே பள்ளிப்படிப்பைக் கைவிட்டு விவசாயப்பணிகளில் ஈடுபடத்துவங்கினார். பள்ளியில் ஒருவன் கற்றுக் கொள்வதை விடவும் பலமடங்கு விவசாயத்தின் வழியே கற்றுக் கொள்கிறான் என்கிறார் மோ-யான் . குறிப்பாக அவரது தாத்தாவின் மூலமாகக் கிராமப்பண்பாடு மற்றும் நம்பிக்கைகள் குறித்து ஆழ்ந்து அறிந்து கொண்டார். அது தான் பின்னாளில் அவரது எழுத்தின் பலமாக விளங்கியது.

தனது நேர்காணலில் மோ-யான் , சீனாவில் சிறுகதை எழுத்தாளர்களை இலக்கிய உலகம் பெரிதாக நினைப்பதில்லை. சிறுகதை என்பது பயிற்சி எழுத்து என்பது போலவே நினைக்கிறார்கள். நாவல்கள் தான் எழுத்தாளனின் அடையாளம் என்கிறார்.

அதுவும் வரலாற்றுப் பின்புலத்திலுள்ள நாவல்களைத் தான் அதிகம் வாசிக்கிறார்கள். சீன நாவலாசிரியர் தனது நாவல்கள் பிற மொழிகளில் எவ்வளவு விற்பனையாகிறது என்பதை வைத்தே மதிப்பிடப்படுகிறார். குறிப்பாக அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் சீன மொழிபெயர்ப்பு நாவல்களே சீன இலக்கிய உலகின் விதியை முடிவு செய்கின்றன. இதற்காகவே பல எழுத்தாளர்களும் அமெரிக்காவிற்குக் குடிபெயரவே முயல்கிறார்கள்.

அமெரிக்காவில் ஒரு நாவல் மொழிபெயர்ப்பில் வெளியாகிவிட்டால் அது குறைந்தபட்சம் 15 வேற்று மொழிகளுக்குச் சென்றுவிடும். அதன் வழியே மிகப்பெரிய ராயல்டி கிடைப்பதோடு அக்கதை திரைப்படமாகும் சாத்தியம் கொண்டிருக்கும் என்கிறார் மோ-யான்

அவரிடம் எது உங்களை எழுதத்தூண்டியது என்று கேட்கிறார்கள். பசியும் தனிமையும் வறுமையான சூழலும் தான் எழுதத்தூண்டியது. ஹெமிங்வே போல, பாக்னர் போலப் புகழ்பெற்ற எழுத்தாளராக வேண்டும் என்று விரும்பியதேயில்லை.

சிறுவயதில் ஒரு நண்பன் எழுத்தாளராக இருப்பவர்கள் மூன்று வேளையும் விருந்து சாப்பிடுவார்கள். விதவிதமான இனிப்புகளைச் சாப்பிடுவார்கள் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் அப்படி வாழ்வதாகச் சொன்னான். மூன்று வேளையும் விருப்பமான உணவுகளை எல்லாம் சாப்பிட முடியும் என்றால் அதற்காக எழுத்தாளர் ஆகிவிட வேண்டியது தான் என்று முடிவு செய்து கொண்டேன். பசி தான் என்னை எழுத்தாளன் ஆக்கியது.

சிறுவனாக இருந்த போது கொட்டும் பனியில் முறையான குளிராடைகள் இன்றிச் சுற்றித் திரிவோம். கிழிந்த டவுசர் போட்ட சிறுவனுக்குப் பனி தன் உடலை வருத்துவதே தெரியாது. அப்படி அலைந்தது தானோ என்னவோ இன்றைக்கு எவ்வளவு குளிராக இருந்தாலும் தாங்கிக் கொள்ள முடிகிறது. வறுமை நிறைய விஷயங்களைச் சுலபமாகக் கற்று தந்துவிடுகிறது.

சிறுவர்களாகிய நாங்கள் ஒன்று கூடி யார் வீட்டில் என்ன சமைத்தார்கள். என்ன சாப்பிட்டார்கள் என்று பேசிக் கொண்டிருப்போம். அப்படியொரு பசி இப்போது கிடையாது. உண்மையில் மனிதர்கள் வளர்ந்த பிறகு பசி குறைந்துவிடுகிறது என்பேன்.

அது போலவே கிராமப்புறத்தில் தைரியமாக வாழ்க்கையைச் சந்தித்த பெண்களே தனக்கு ஆதர்சமாக இருந்தார்கள். மேற்கத்திய இலக்கியங்களை வாசித்த போது அவர்கள் என்ன கருப்பொருட்களை எழுதியிருக்கிறார்கள் என்பதே எனக்கு முக்கியமாக இருந்தது. மற்றபடி எனக்கான மொழியை நானே உருவாக்கிக் கொண்டேன்.

சிறுவயதில் வாய் ஓயாமல் பேசிக் கொண்டேயிருப்பேன். யாரும் கிடைக்காவிட்டால் எனக்கு நானே பேசிக் கொண்டிருப்பேன். அது போன்ற நேரங்களில் வீட்டோர் வாயை மூடு. பேசாமல் இரு என்று திட்டுவார்கள். அந்த நினைவில் தான் மோ-யான் என்று பெயர் வைத்துக் கொண்டேன். மோ-யான் என்பதற்குப் பேசாதே என்று தான் அர்த்தம். சீன கலாச்சாரப் புரட்சியின் பின்பு நடந்தவற்றை எழுத முயன்றபோது கடுமையான எதிர்ப்பு உருவானது. ஆகவே மோ-யான் என்பது குறியீட்டுப் பெயராகவும் மாறியது என்கிறார்

Red Sorghum என்ற மோ-யானின் நாவல் மிகவும் புகழ்பெற்றது. இந்நாவலைத் திரைப்படமாக்க இயக்குநர் Zhang Yimou விரும்பினார். அதுவும் இந்த நாவலின் களமாக இருந்த மோயானின் கிராமத்திலே படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினார். இதற்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து உள்ளுர்வாசிகளை நடிக்க வைத்ததில் மோ-யானுக்குப் பெரும்பங்கிருந்தது. படம் பெரிய வெற்றியை அடைந்ததோடு சர்வதேச திரைப்படவிழாக்களில் விருதுகளை அள்ளிக் குவித்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து மோயானின் பிற படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டன. Shifu: You’ll Do Anything for a Laugh என்ற சிறுகதைகளை Happy Times என்ற பெயரில். Zhang Yimou படமாக்கினார். அதுவும் வெற்றிபெறவே மோ-யானின் கதைகளைப் படமாக்குவதில் போட்டி உருவானது.

தமிழ்ச் சூழலோடு மிகவும் நெருக்கமாகவுள்ளது மோயானின் படைப்புலகம். குறிப்பாக அவரது பால்யகால நினைவுகளும் கிராமப்புற மனிதர்களும் நமக்கு மிகவும் பரிச்சயமானதாகவுள்ளன.

கி.ரா எழுதுவது போலவே வட்டார வழக்கில் தான் மோ-யான் எழுதுகிறார். தொன்மங்களும் கிராமப்புற நம்பிக்கைகளும் சடங்குகளும் துல்லியமாக அவரது படைப்பில் வெளிப்படுத்தபடுகின்றன. குறிப்பாகப் புதிய தொழில்நுட்பத்தின் வருகை கிராமப்புற மக்களை எப்படிப் பாதித்து என்பதை அவரது கதைகள் அழுத்தமாகச் சுட்டிக் காட்டுகின்றன. சீன நாட்டுப்புறக் கதைகளின் பாதிப்பை தனது படைப்புகளில் அதிகம் காண முடியும் என்கிறார் மோ-யான்

நோபல் பரிசு கிடைத்தபோது இவ்வளவு பணத்தைக் கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள் என்று பத்திரிக்கையாளர் கேட்டதற்குப் பீஜிங்கில் ஒரு வீடு வாங்குவேன். அப்போதும் கூட இந்தப் பணத்தில் பெரிய வீடு வாங்க முடியாது என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார் மோ-யான் . பீஜிங்கில் வீட்டின் விலை மிகவும் அதிகம்.

மோ-யான் எழுதிய மாற்றம் என்ற நாவலை. சீன மொழியிலிருந்து பயணி நேரடியாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். இந்நாவலைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மிகச்சிறந்த மொழியாக்கம். மாற்றம்’ நாவல் மோ-யானின் பால்யகால நினைவுகளை விவரிக்கிறது. இது போலவே கார்த்திகைப் பாண்டியன் எருது என்ற மோ-யானின் சிறுகதை ஒன்றையும் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அக்கதையில் வரும் Luo Tong கண்பார்வையிலே ஒரு மாட்டின் எடை எவ்வளவு என்று சொல்லிவிடுவார். இறைச்சிக்காக விற்கப்படும் மாட்டுச்சந்தையில் மாடுகளுக்கு ஃபார்மால்டிஹைட்டை செலுத்தி அதிக எடையுள்ளதாக காட்டி மோசடி வியாபாரம் செய்வதைப் பற்றியதே கதை. அந்த சந்தையில் Luo Tongன் மதிப்பீடு தான் அளவுகோல். அவர் ஒரு போதும் மாட்டின் எடையை தவறாக மதிப்பிட்டதில்லை.

Howard Goldblatt என்ற மொழிபெயர்ப்பாளர் தான் மோ-யானின் முக்கிய படைப்புகள் அனைத்தையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். அது தான் மோ-யான் நோபல் பரிசு பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மோ-யான் நோபல் பரிசு பெறச் சென்ற போது ஹோவர்ட் கோல்ட்ப்ளாட் உடன் சென்று விழாவில் கலந்து கொண்டார். தனது ஏற்புரையில் மோ-யான் தனது மொழிபெயர்பாளருக்கு மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

நோபல்பரிசு ஏற்புரையில் மறைந்த தனது அன்னையை நினைவு படுத்தி நெகிழ்ந்த மோ-யான்  புதிய ரயில் பாதை அமைக்கும் பணிக்காக தனது தாயின் கல்லறையை இடம் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. பீச் மரத்தடியில் புதைக்கபட்டிருந்த இடத்தை தோண்டிய போது எலும்புகளே மிச்சமிருந்தன. அம்மா மண்ணோடு மண்ணாகியிருந்தார். எனது தாயும் இந்த மண்ணும் ஒன்று தான் என்பதை அப்போது முழுமையாக உணர்ந்தேன்.  என் அம்மாவிற்கு கடைசிப்பிள்ளை நான். அம்மா தன்னை எந்த அளவு நேசித்தார் என்பதை பால்ய நினைவுகளின் வழியே விவரிக்கிறார் மோ-யான்

என் படிப்பறிவற்ற தாய்  எப்போது கேட்டாலும் புத்தகம் வாங்க காசு கொடுத்தார். நாங்கள் மிகவும் ஏழைகளாக இருந்தோம் அடுத்த வேளை உணவு எங்கிருந்து வருகிறது என்று எங்களுக்கு அடிக்கடி தெரியாது, ஆனாலும் அவள் என் புத்தகம் வாங்க பணம் தர மறுக்கவில்லை என்கிறார் மோ-யான்  .

ஒருமுறை கதைசொல்லி ஒருவர் சந்தைக்கு வந்து கதை சொல்லிக் கொண்டிருந்தார். அதை கேட்டபடியே சொன்னவேலையை மறந்து போனார் மோயான். இரவில் வீடு திரும்பிய போது அம்மா கோவித்துக் கொண்டார். ஆனால் அம்மாவிடம்  கதைசொல்லியிடம் கேட்ட கதையை விவரித்த போது அவர் சந்தோஷமடைந்தார். அம்மா தான் எனது முதல்கதையை கேட்டவர். அதன் பிறகு புதிய கதைகளை கேட்பதற்காகவே சந்தைக்கு போய் வரத்துவங்கினார். கதையை எப்படி மாற்றிச் சொல்லவேண்டும் என்று கற்றுக் கொண்டார். கதைகளே அம்மாவை சந்தோஷப்படுத்துகின்றன என்று அறிந்து  கொண்டார் மோ-யான்

தாயிடம் சொல்லத்துவங்கிய கதைகளின் தொடர்ச்சி போலவே தனது கதைகளை எழுத்தில் வெளியிட்டார் மோ-யான், இன்று உலகமே அவரது கதைகளை வாசித்துக் கொண்டாடுகிறது. கதை சொல்லிகள் அழிவற்றவர்கள் என்று மோ-யான்   சொல்வது அவருக்கும் பொருத்தமானதே.

**

10/5/20

••

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: