குறுங்கதை 75 ஒரு வழக்கு

1949ல் முர்ஷிதாபாத் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் துவங்கிய போது எழுத்தாளர் ஏவம் சக்கரவர்த்திக்கு வயது 41. நவபிரஜா பதிப்பகம் தனது நாவலைத் திருடி சுனில் பிரசாத் என்ற எழுத்தாளரின் புதிய நாவலாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இது ஒரு மோசடி. சுனில் பிரசாத்தின் நாவலைத் தடைசெய்வதோடு, இதை வெளியிட முன்வந்த நவபிரஜா மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்தார்

ஏவம் சக்கரவர்த்தி மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் என்பதால் அவரது வழக்கு குறித்த செய்தி தினசரிகளில் முதற்பக்கத்தில் வெளியிடப்பட்டது.

சுனில் பிரசாத் தனது நாவல் தன்னுடைய தந்தையின் சுயசரிதை என்றும், அது ஏவம் சக்கரவர்த்தியின் நாவலோடு எவ்விதமும் தொடர்பு கொண்டதில்லை என்றும் அறிக்கை வெளியிட்டான்.

நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு வந்த போது ஏவம் சக்கரவர்த்திச் சார்பில் வழக்காடியவர் பாரிஸ்டர் விக்டர் பானர்ஜி. அவர் ஏவம் சக்கரவர்த்தி நாவலுக்கும் சுனில் பிரசாத் நாவலுக்குமான ஒப்புமைகளை வரிசையாக அடுக்கிக் காட்டினார்.

அதாவது ஏவம் சக்கரவர்த்தி நாவலின் கதாநாயகன் பிரமோத் கல்கத்தாவிலிருந்து இங்கிலாந்திற்குப் படிக்கச் செல்கிறான். அங்கே ஒரு பிரெஞ்சு பெண்ணைக் காதலிக்கிறான். திருமணமும் செய்து கொள்கிறான். இந்நிலையில் கல்கத்தாவில் அவனது தந்தை திடீரென மரணமடையவே இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு வருகிறான். தந்தையின் நிறுவனங்களைக் கவனித்துக் கொள்ள ஆரம்பிக்கிறான். சில மாதங்களில் அவனுக்கு வங்காளப் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

இந்நிலையில் பிரெஞ்சு பெண் தனது மகனை அழைத்துக் கொண்டு கல்கத்தா வருகிறாள். தன்னை ஏமாற்றிவிட்டதாக நீதிமன்றத்தில் முறையிடுகிறாள். வழக்கு நடக்கிறது. பிரெஞ்சு பெண் தோல்வி அடைகிறாள். மனம் வருந்தி தற்கொலை செய்து கொள்வதுடன் நாவல் நிறைவு பெறுகிறது.

சுனில் பிரசாத் நாவலில் பிரெஞ்சு பெண் வெற்றி பெறுகிறாள். நாயகன் தற்கொலை செய்து கொள்கிறான் என்பதே வேறுபாடு.

வழக்கை விசாரித்த நீதிபதி ஷியாம் முகர்ஜி இரண்டு நாவல்களின் கையெழுத்துப் பிரதியையும் தான் வாசிப்பதற்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு கொடுத்தார். அதன்படி இரண்டு நாவலின் கையெழுத்துப் பிரதிகளும் ஒப்படைக்கப்பட்டன.

ஷியாம் முகர்ஜி வாசித்த போது இரண்டும் ஒன்று போலவே இருப்பதை உணர்ந்தார். இது அப்பட்டமான இலக்கியத் திருட்டு என்று உணர்ந்து விசாரணையின் போது சுனில் பிரசாத்தைக் கடுமையாக நடத்தினார்.

ஆனால் சுனில் பிரசாத் தனது தந்தை இங்கிலாந்திற்குச் சென்ற விபரம். கப்பல் டிக்கெட், பாஸ்போர்ட். பிரெஞ்சு பெண்ணைத் திருமணம் செய்த சான்று. மற்றும் சுனில் பிரசாத்தின் தந்தைக்கு எதிராகப் பிரெஞ்சு பெண் நீதிமன்றத்தில் தொடுக்க வழக்கு எண் எல்லாவற்றையும் சமர்ப்பித்தான்.

அத்தனையும் நிஜம் என உணர்ந்த நீதிபதி எப்படிச் சுனில் பிரசாத்தின் கதை ஏவம் சக்கரவர்த்தியால் நாவலாக எழுதப்பட்டது என்று குழம்பிப் போனார்.

இதனால் குறுக்குவிசாரணைக்காக ஏவம் சக்கரவர்த்திக் கூண்டில் ஏற்றப்பட்டார். ஆச்சரியம் என்னவென்றால் அவரும் தனது அண்ணன் இங்கிலாந்திற்குச் சென்ற பாஸ்போர்ட் முதல் சகல சான்றுகளையும் நீதிபதி முன்பு சமர்ப்பித்தார். இரண்டும் ஒன்று போலவே இருந்தன.

ஒரே நிகழ்ச்சி இரண்டு முறை ஒன்று போல எப்படி நடைபெற முடியும். இரண்டு பேர் சொல்வதும் நிஜம். இதில் யார் யாரை நகலெடுத்தார்கள் என்று எப்படிக் கண்டறிவது என்று நீதிபதிக்குக் குழப்பமானது.

நாவலை விடவும் விசித்திரமாகயிருந்தது அவர்களின் வாழ்க்கை கதை.

அதுவும் இங்கிலாந்திற்குச் சென்ற பிரமோத் தங்கியிருந்த விடுதி, படித்த கல்லூரி, பிரெஞ்சு பெண்ணைச் சந்தித்த இடம் எல்லாமும் நூறு சதவீதம் ஒன்றாக இருந்தன. ஆனால் நடந்த வருஷம் மட்டும் வேறு.

இது நடந்த மூன்று மாதங்களில் நீதிபதி உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்படவே அந்த வழக்கு ஓரம்கட்டப்பட்டது. புதிய நீதிபதிக்கு இதுவெல்லாம் ஒரு வழக்கா என்று எரிச்சல் வந்தது. அவர் அதைத் தூக்கி மூலையில் போட்டார். 21 ஆண்டுகள் ஏவம் சக்கரவர்த்திக் காத்துக் கொண்டேயிருந்தார். இதற்குள் சுனில் பிரசாத் எழுதுவதை நிறுத்திவிட்டு டீ எஸ்டேட் ஒன்றில் வேலைக்குப் போய்விட்டான். இலக்கிய உலகம் அந்த வழக்கை மறந்துபோனது.

இதற்கிடையில் புதிதாகப் பதவி ஏற்ற நீதிபதி எட்வர்ட் தானியேல் இரண்டு கையெழுத்துப் பிரதிகளையும் தான் படிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதாகப் பணியாளர்கள் தெரிவித்தார்கள். இந்நிலையில் எப்படித் தீர்ப்பை வழங்குவது என்று அவரும் தன் முயற்சியைக் கைவிட்டார்.

ஏவம் சக்கரவர்த்திக்கு திடீரென நினைவு இழப்பு ஏற்பட ஆரம்பித்தது. அவருக்கு அப்படி ஒரு வழக்குத் தொடுத்த நினைவேயில்லை.

தீர்க்கப்படாத வழக்குகள் யாவும் ஒரே நாளில் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் ஏவம் சக்கரவர்த்தி வழக்கு முடிவுக்கு வந்தது. அதன்படி சுனில்பிரசாத் தனது நாவலை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று தீர்ப்பானது.

நினைவே இல்லாத ஏவம் சக்கரவர்த்தியிடம் இந்தத் தகவலை எப்படிச் சொல்வது என்று வீட்டோருக்கு தெரியவில்லை.

சுனில்பிரசாத் தீர்ப்பைக் கண்டுகொள்ளவேயில்லை.

நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு நீதிமன்ற புதுப்பித்தல் பணியின் போது ஒரு உறையில் இரண்டு நாவல்களின் கையெழுத்துப் பிரதிகளும் செல்லரித்துப் போன நிலையில் இருப்பதை ஒரு பணியாளர் கண்டுபிடித்தார்.

அதை என்ன செய்வது என அறியாமல் குப்பைத் தொட்டியில் கொண்டு போட்டார்.

விசித்திரமான அந்த இரண்டு நாவலின் காகிதங்களும் அதை எழுதியவர்களின் விதியைப் பற்றி அறியாமல் ஒன்றாகக் காற்றில் பறந்து கொண்டிருந்தன.

••

0Shares
0