அ.முத்துலிங்கம் நேர்காணல்

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் நேர்காணல் யாவரும்.காமில் வெளியாகியுள்ளது. அகரமுதல்வன் நேர்காணல் செய்திருக்கிறார். சமீபத்தில் படித்த மிகச்சிறந்த நேர்காணலிது. முத்துலிங்கத்தின் பதில்கள் வியக்கவைக்கின்றன.

அ.முத்துலிங்கம் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் இருக்கைக்காகச் செய்து வரும் முன்னெடுப்புகள்  மகத்தானவை. இயல் விருதுகள் வழங்குவதிலும், தமிழ் படைப்பாளிகளைக் கொண்டாடுவதிலும் அவர் காட்டும் அக்கறையும் நேசமும் நிகரற்றது.

கிரிக்கெட் விளையாட்டில் ஒரு சில வீரர்கள் தனக்குப் பந்து வரும்வரை காத்திருக்க மாட்டார்கள். ஒரு அடி முன்னால் போய்ப் பந்து வரும்போதே எதிர்கொண்டு ஓங்கி அடித்துவிடுவார்கள். சில வேளைகளில் அது பறந்து சிக்ஸராக மாறும். சில வேளை அவுட் ஆகிவிடுவார். அப்படித் தான் பல எழுத்தாளர்களும் கேள்வி கேட்பவர் சொல்லி முடிக்கும் முன்பு பதிலைத் தந்துவிடுவார்கள்.

ஆனால் முத்துலிங்கம் அப்படியில்லை. வீசப்படும் பந்து எங்கே தரையிறங்கும். அதை எங்கே தொட வேண்டும். எதைத் தொடக்கூடாது என்று அழகாகத் தெரிந்து வைத்திருக்கிறார். சரியான பந்தைத் தொட்டால் அது மைதானத்தைத் தாண்டிப் பறப்பதைத் தடுக்கவே முடியாது.

மேஜிக் செய்பவன் ஒரு போதும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்ளவே மாட்டான். சிரித்த முகம் தான் அவனது பலம். விளையாட்டு போலவே கூட்டத்தின் முன்பு தனது தொப்பியிலிருந்து ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்துக் காட்டுவான். பின்பு தொப்பியை ஆட்டி அது வெறுமனாக உள்ளது என்பதை நிரூபித்துவிட்டு அதே தொப்பியிலிருந்து புறா ஒன்றை எடுத்துப் பறக்க விடுவான். அரங்கமே கைதட்டி மகிழும். அதன்பிறகு அந்தத் தொப்பியைப் பார்வையாளர் வசமே தந்து உற்றுப்பார்க்கச் சொல்லிவிட்டு தொப்பிக்குள்ளிருந்து ஒரு முயலை வெளியே எடுத்துக்காட்டுவான். கொஞ்சம் கொஞ்சமாக வியப்பில் ஆழ்த்துவது ஒரு கலை.

முத்துலிங்கம் அப்படியான ஒரு மேஜிக்கை தான் தனது நேர்காணலில் நிகழ்த்துகிறார். கேட்ட கேள்விக்கு எளிய பதிலைச் சொல்லிவிடுகிறார். அதே பதிலின் இரண்டாவது, மூன்றாவது வரியில் இன்னொரு ஆச்சரியமான தகவலைத் தருகிறார். பின்பு அதன் இறுதி வரிகளுக்குள் முற்றிலும் புதிய கண்ணோட்டத்தை, அனுபவத்தைத் தந்துவிடுகிறார். நீண்ட வாசிப்பும் ஆழ்ந்த இலக்கிய ஈடுபாடும் பரந்த அனுபவமும் நிதானமும் கொண்ட ஒருவரால் மட்டுமே இது சாத்தியம்.

இந்த நேர்காணலில் சிறுகதைகளின் வடிவம் மற்றும் மொழி, விவரணை பற்றி அவர் சொல்லியிருப்பது ஒரு பாடம்.

பெரிய ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்றால் அங்கே ஏராளமாக விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். அவ்வளவு வெளிச்சம் நம்மைக் கூச வைக்கும். குறைவான வெளிச்சம் தரும் நெருக்கத்தைப் பகட்டான வெளிச்சம் தருவதில்லை. அது சிறுகதைகளின் விவரணைக்கும் பொருந்தக்கூடியது.

பிறந்த நாள் கேக்குகள் மீது அழகாக ஓவியம் வரையும், பெயர்கள் எழுதும் ஒரு பெண்ணை எனக்குத் தெரியும். அவள் கேக்கின் மீது அழுத்தம் கொடுக்காமலே நினைத்த உருவத்தைக் கச்சிதமாக வரைந்துவிடுவாள். அந்தத் திறமை ஒரு சிறுகதையாசிரியனுக்குத் தேவை.

கேக்கை தான் சாப்பிடப் போகிறாள். ஆனால் அதில் அழகான ஓவியமும் பெயரும் சேர்ந்து இடம் பெறும் போது கேக் வெறும் உணவுப்பொருளாக இல்லாமல் மாறிவிடுகிறது. சிறுகதையின் நுட்பங்களும் அப்படியானது தானே

அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகள் நேர்காணல் எதைப் படிக்கும் போதும் நான் உடனே ஒரு பென்சிலையும் நோட்டையும் பக்கத்தில் வைத்துக் கொள்வது வழக்கம். காரணம் புதிய புத்தகம். ஆளுமைகள். நிகழ்வுகள், அபூர்வமான குறிப்புகள் நிச்சயமிருக்கும். அவரது வாசிப்பும் பரிந்துரைகளும் ஒரு போதும் சோடை போனதேயில்லை. இந்த நேர்காணலிலும் எத்தனை எழுத்தாளர்களின் பெயர்கள். புத்தகங்கள்.

அது போலவே சமய இலக்கியங்களின் மீது அவருக்கு எப்படி விருப்பம் உண்டானது என்பதற்குப் பெஷாவாரில் இருந்த நெருக்கடியான சூழலைச் சொல்லி ஊரடங்கு நாட்களில் தான் சமய இலக்கியங்களை ஆழ்ந்து வாசித்ததாகச் சொல்கிறார். குறிப்பாக நெய்குடத்தில் எறும்பு ஒன்றன்பின் ஒன்றாக ஏறுவதுபோல முதுமையில் நோய்கள் என்னைப் பீடிக்கின்றன என்ற பெரியாழ்வார் சொல்லும் உவமை அரியதொரு வெளிச்சம்.

ராமநாதபுரம், மதுரை பகுதியில் முத்துராமலிங்கம் என்ற பெயர் நிறைய உண்டு. எனது நண்பர்களில் ஐந்து முத்துராமலிங்கமிருக்கிறார்கள். வேறுபடுத்திக்காட்ட அவர்கள் ஊரையும் சேர்ந்து போனில் பதிவு செய்திருக்கிறேன். அ.முத்துலிங்கத்தின் தீவிர வாசகர் ஒருவர் மதுரையிலிருக்கிறார். அவர் எப்போது பேசும் போதும் அ.முத்துலிங்கத்தை முத்துராமலிங்கம் என்றே சொல்லுவார். முத்துராமலிங்கம் கதை படிச்சீங்களா என்று தான் கேட்பார். அவர் பெயர் அ.முத்துலிங்கம் என்று எவ்வளவோ முறை திருத்தியிருக்கிறேன்.

அதனாலே என்ன. முத்துராமலிங்கமென்று சொல்லும் போது ரொம்ப நெருக்கமாக இருக்குல்லே என்பார். அது உண்மை தான்.

நேரில் சந்தித்துப் பேசாத பல்லாயிரம் தமிழ் வாசகர்கள் அவரை முத்துராமலிங்கமாகத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிறப்பான நேர்காணல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் யாவரும்.காம் மற்றும் ஜீவகரிகாலனுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

மிகப்பொறுப்புணர்வுடன், தீவிரமான வாசிப்பு அனுபவத்துடன் கேள்விகளைக் கேட்ட அகரமுதல்வனுக்கு வாழ்த்துகள்.

நேர்காணலின் இணைப்பு.

http://www.yaavarum.com/archives/5323

•••

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: