குறுங்கதை 76 தந்தையும் மகளும்.

சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவின் சிறிய சமஸ்தானங்களில் ஒன்றாக இருந்தது கைசூர். அதன் மன்னராக இருந்த முக்திபோத் தன்னுடைய ஒரே மகள் கௌரியை ராம்கரில் திருமணம் செய்து கொடுத்திருந்தார்.

அந்த இரண்டு ஊர்களுக்கும் நடுவே ஒரு ஆறு ஓடியது. ஆற்றின் ஒரு கரையில் கைசூர் இருந்தது. மறுகரையில் ராம்கர்.

அன்றாடம் முக்திபோத் விடிகாலை  எழுந்தவுடன் தன் கையாலே மகளுக்கு விருப்பமான சிவப்பு ரோஜாவைப் பறித்து ஒரு தங்கப்பெட்டியில் வைத்து அனுப்பி வைப்பார். அதை அரண்மனையிலிருந்து  ஒரு வீரன் எடுத்துக் கொண்டு செல்வான். கோட்டை வாசல் வீரன் அந்தத் தங்கப்பெட்டியைப் பெற்றுக் கொண்டு குதிரையில் பயணிப்பான். அங்கே இன்னொரு வீரன் அப் பெட்டியைப் பெற்றுக் கொண்டு ஆற்றை நோக்கிச் செல்வான். பின்பு வேறு ஒருவன் படகில் மலரைக் கொண்டு செல்வான்..

படகு கரை சேர்ந்தவுடன் பெட்டி கைமாறி இன்னொருவன் வசம் போய்விடும். இப்படிக் கைமாறிக் கைமாறி அந்தப் பெட்டி கௌரி துயில் எழுந்து கொள்வதற்கு முன்பு அவளது அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.

அவள் தந்தை அனுப்பி வைக்கும் மலரைத் தான் கூந்தலில் சூடுவாள். தந்தையின் நிகரற்ற அன்பிற்குப் பதிலாக அவருக்கு விருப்பமான பாலாடையில் செய்த இனிப்பை அனுப்பி வைப்பாள். அது ராம்கரில் இருந்து குதிரைவீரர்களின் கைமாறி ஆற்றைக் கடந்து கைசூருக்கு வந்து சேரும். அந்த இனிப்பு வரும்வரை முக்தி போத் எதையும் சாப்பிட மாட்டார்.

இப்படிப் புத்தாடை, முத்துமாலை, முப்பத்தாறு வகை அசைவ உணவுகள், இனிப்புப் பீடாக்கள் வரை முக்தி போத் நாள் முழுவதும் மகளுக்காக அனுப்பிக் கொண்டேயிருப்பார். அவளும் பதிலுக்குத் தந்தைக்குப் பிடித்தமான பழவகைகள், பட்டாடைகளை அனுப்பிக் கொண்டேயிருப்பாள்.

ஒவ்வொரு நாளும் தந்தையும் மகளும் சதுரங்கம் ஆடுவார்கள். தந்தை சதுரங்கப்பலகையில் ஒரு காயை நகர்த்தியவுடன் அந்தச் செய்தியைத் தாங்கிக் கொண்டு ஒரு காவல்வீரன் புறப்படுவான். அந்தச் செய்தி ஆளுக்கு ஆள் மாறி ராம்கரை சென்று அடைந்து கௌரியிடம் தெரிவிக்கப்படும். அவள் அடுத்த காயைச் சதுரங்கப்பலகையில் நகர்த்தி வைப்பாள். மறுபடியும் காவல்வீரர்கள் அந்தச் செய்தியோடு பயணிக்கத் துவங்குவார்கள். இப்படி முடிவில்லாத ஆட்டமாக அது தொடர்ந்தபடியே இருக்கும்.

ஒவ்வொரு நாளின் மாலையிலும் மகள் தந்தைக்கு ஒரு கடிதம் எழுவது வழக்கம். அதில் அவள் எப்போதும் போலவே உங்களைப் பார்க்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது தந்தையே என்று எழுதியிருப்பாள். அது முக்திபோத்தை கவலையடையச் செய்யும். உடனே மகளைச் சந்தோஷப்படுத்த ஒரு நடனக் குழுவை அனுப்பி வைப்பார். அவர்கள் ஆற்றைக் கடந்து இரவோடு இரவாகக் கௌரியின் அரண்மனைக்குப் போய்ச் சேருவார்கள். இரவெல்லாம் அவள் அந்த ஆடல்பாடல்களைக் கேட்டு ரசிப்பாள்.

இப்படியாக முப்பத்தியெட்டு ஆண்டுகள் நாள் தவறாமல் கௌரிக்கான மலர்களும் உணவும் பரிசும் சந்தோஷப்படுத்தும் கலைஞர்களும் அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டேயிருந்தார்கள். ஆற்றில் வெள்ளம் வந்த நாளில் கூட இந்தப் பணி தடைப்படவில்லை.

விசேச காலங்களில் முக்திபோத் தானே நேரில் சென்று மகளைத் தன் அரண்மனைக்கு அழைத்து வருவார். iகைசூரின் வீதியில் யானையின் மீது மகளை உட்கார வைத்து அவர் நடந்து தான் வருவார். கைசூரே அதைக் கண்டு ஆச்சரியப்படும். முக்திபோத் நோயுற்றார். அந்த நாட்களில் கௌரி அவரது அருகிலிருந்து தானே மருந்து கொடுத்து வந்தாள். உடல் நலிவுற்று மரணப்படுக்கையில் இருந்த நிலையில் அவர் மகளிடம் கேட்டார்

“அடுத்த பிறவியிலும் நீ என் மகளாகப் பிறப்பாயா “

கௌரி சொன்னாள்.

“இல்லை தந்தையே. நான் ஒரு ஏழைத்தந்தையின் மகளாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன். ஏழைத்தந்தைகள் மகளுக்குப் பரிசுகள் அனுப்பிக் கொண்டேயிருப்பதில்லை. ஆனால் மகளின் எதிர்காலம் பற்றி எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஒவ்வொரு கவளம் சாப்பிடும் போதும் மகளை நினைத்துக் கொண்டே சாப்பிடுகிறார்கள்.

எப்போதாவது மகளைக் காணப் போகும்போது‘கடன் வாங்கியே இனிப்பும் பழங்களும் வாங்கி வருகிறார்கள். ஏழை தந்தை மகளுக்குத் தருவது ஆறுதலான வார்த்தைகள் மட்டுமே.

ஏழைக்குடும்பத்தில் பிறந்த மகளும் தந்தையினை எப்போதும் மனதில் நினைத்துக் கொண்டேயிருக்கிறாள். தனிமையில் தந்தையினை நினைத்துக் கண்ணீர் விடுகிறாள். தன் கஷ்டங்களைத் தந்தை அறிந்துவிடக் கூடாது என்று துடிக்கிறாள். பண்டிகை நாட்களில் தன் கையால் தந்தைக்குப் பரிமாறி அவர் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.

வறுமையில் வெளிப்படும் நேசமும் வசதியில் வெளிப்படும் நேசமும் ஒன்றில்லை தந்தையே.

நான் ஒரு ஏழைதந்தையின் மகளாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன். “

முக்திபோத்திற்கு மகள் சொன்ன பதிலின் அதிர்ச்சியைத் தாங்கமுடியவில்லை

•••

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: