குறுங்கதை 77 மறதியின் காப்பகம்

அந்த ஷாப்பிங் மாலில் பார்வையாளர்கள் மறந்து விட்டுப் போன பொருட்களைப் பாதுகாத்து ஒப்படைப்பதற்கெனத் தனி அறையொன்று இருந்தது. அதன் நிர்வாகியாக இருந்தான் சிவானந்தம்.

வீட்டுச்சாவிகள். பைக், கார்சாவிகள். ஹேண்ட்பேக்குகள், கர்சீப், மணிபர்ஸ், குடை, சிறுவர்களின் காலணிகள், செல்போன்கள், வங்கி அட்டைகள், விளையாட்டுப் பொம்மைகள். குடிநீர் பாட்டில்கள். மூக்குக் கண்ணாடி, சில்லறைக் காசுகள். மாத்திரைகள், விக்ஸ் டப்பா, கால்கொலுசுகள் சிகரெட் லைட்டர்கள் போன்றவற்றைத் தான் மறந்து போன பொருட்களாக இருக்கும்.

சுத்தம் செய்யும் பணியாளர்கள் அவற்றை எடுத்து வந்து தருவார்கள். தனியே ஒரு உறையிலிட்டு அதற்கு ஒரு எண் கொடுத்து ரிஜிஸ்தரில் குறித்துக் கொள்வான். சம்பந்தப்பட்டவர்கள் உரியச் சான்றுடன் வந்து கேட்கும் போது திருப்பிக் கொடுத்து கையெழுத்து வாங்கிக் கொள்வான்.

ஒரு நாளில் எவ்வளவு பேருக்கு மறதியிருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கும். சில நாட்களில் பத்து இருபது குடைகள் மறந்து விட்டுப்போனவையாக வந்து சேரும். ஒரு நாள் தங்கமோதிரம் ஒன்று கூடக் கண்டெடுக்கப்பட்டது. ஏன் மக்கள் இப்படிச் சிறிய விஷயங்களை மறந்து விடுகிறார்கள்.

ஷாப்பிங் மாலில் தான் தொலைத்தோம் என்ற நினைவு கூடப் பலருக்கும் இருப்பதில்லை. பெண்களை விட ஆண்களே அதிகம் பொருட்களைத் தொலைக்கிறார்கள். தொலைந்து போன பொருளைத் தேடி வருபவன் முகத்திலிருக்கும் பதற்றம் விளக்கமுடியாதது. அதுவும் வீட்டுச்சாவியை மறந்த ஒருவன் ஷாப்பிங் மாலை மூடிவிடுவார்களோ என்ற பதற்றத்தில் இரவு பத்து மணிக்கு மூச்சிரைக்க ஐந்தாவது தளத்தில் வந்து நின்றபோது அந்த மனிதனால் பேச முடியவில்லை.

அவனது சாவியைச் சிவானந்தம் எடுத்துக் கையில் தந்தபோது பெற்றுக் கொள்ளமுடியாமல் கை நடுங்கியது. அந்த மனிதன் பேனாவை அழுத்தமாகப் பிடித்துக் கையெழுத்திட்டான். அதான் சாவி கிடைச்சிருச்சில்லே எனச் சிவானந்தம் சொன்னபோது மனைவியும் பிள்ளைகளும் வீதியில் நின்று கொண்டிருக்கிறார்கள். இப்படி ஆனதேயில்லை என்று சொல்லியபடியே அவன் படிகளில் இறங்கி ஓடினான். சிறிய மறதி பெரிய கவலையைத் தந்துவிடுகிறது.

குடைகளைத் தொலைத்தவர்களில் ஒரு சிலர் தான் அதை மீட்கத் திரும்ப வருகிறார். பலரும் அப்படியே விட்டுவிடுகிறார்கள். ஷாப்பிங் மாலின் விதிப்படி மூன்று மாதங்களுக்குள் அந்தப் பொருளை யாரும் கேட்டுவராவிட்டால் அலுவலகம் சொற்ப விலையில் பணியாளர்களுக்கே தந்துவிடும். அப்படி நிறையப் பேர் ஐந்து ரூபாய். பத்து ரூபாய்க்குக் குடைகளை வாங்கியிருக்கிறார்கள்.

சிவானந்தம் ஒவ்வொரு நாளும் மறதிக்குள்ளாகும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவதை உணர்ந்தான். ஒரு முறை பனிரெண்டாவது தளத்தில் யாரோ மறந்து விட்டுப் போனார்கள் என்று ஒரு மீன்தொட்டியைக் கொண்டு வந்து கொடுத்தார் ஒரு துப்புரவுப் பணியாளர்.

முதன்முறையாக இரண்டு தங்க மீன்களுடன் ஒரு மீன்தொட்டி மறந்து போன பொருட்களின் பட்டியலில் இணைந்து கொண்டது. ஒரு குடையைப் போல மணிபர்ஸை போல உறைந்து போயிருக்காமல் அந்த மீன்கள் சாவகாசமாக நீந்திக் கொண்டிருந்தன.

மீன் தொட்டியை எங்கே வைப்பது என்று புரியாமல் சிவானந்தம் தனது மேஜையின் மீதே வைத்துக் கொண்டான். யார் மீன் தொட்டியை மறந்து போனது எனத் தெரியவில்லை. மறந்துவிடப்பட்டதைப் பற்றி அந்த மீன்கள் கவலைப்படவேயில்லை. எப்போதும் போலக் கண்ணாடிக்குள் சுற்றிக் கொண்டிருந்தன.

சிவானந்தம் தனக்குப் புதிய துணை கிடைத்துவிட்டது போல மகிழ்ச்சி அடைந்தான். நாள் முழுவதும் மீன்களைப் பார்த்துக் கொண்டிருப்பது தியானம் செய்வது போலிருந்தது. அந்த மீன் தொட்டியைக் கேட்டு யாரும் வரவேயில்லை. மறந்து கைவிடப்பட்ட எந்தப் புதிய பொருள் அவனது பாதுகாப்பு அறைக்கு வந்தாலும் அதைத் தங்கமீன்களிடம் காட்டுவான் சிவானந்தம்.

ஒவ்வொரு நாளும் மீன்தொட்டியைக் கேட்டு யாரும் வந்துவிடக்கூடாது என்று உள்ளுற பதற்றம் கொண்டிருந்தான்.

தன்னை விலைக்கு வாங்கியது யார் என்றோ, யார் வீட்டில் வளர்க்கிறோம் என்றோ கவலையில்லாத மீன்கள் எப்போதும் போல ஒன்றையொன்று துரத்தி நீந்திக்கொண்டிருந்தன. மனிதர்கள் மறந்து போன பொருட்களும் இப்படிக் காலவெளியில் நீந்திக் கொண்டு தானிருக்கின்றன என்பதைச் சிவானந்தம் உணர்ந்தான்.

மூன்று மாத காலம் அதை யாரும் கேட்டுவரவேயில்லை. ஆகவே ஏலத்தில் விடப்படும் நாளில் தானே வாங்கிக் கொள்ள முடிவு செய்திருந்தான். ஏலம் விடப்படும் நாளில் ஷாப்பிங்மாலின் மேலாளர் அந்த மீன் தொட்டியைப் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு தன் காரில் கொண்டு போய் வைக்கச் சொன்னார். அதைக் கேட்டுச் சிவானந்தம் வருத்தமடைந்தான்.

வாகனத்தில் கொண்டு போய் வைக்க மீன் தொட்டியைச் சுமந்து கொண்டு போன போது மிகுந்த எடை கொண்டது போலிருந்தது

எல்லோரும் பொருளை அறியாமல் மறந்து போவதில்லை. சிலர் வேண்டும் என்றே தான் பொருளை மறந்து போகிறார்கள் என்று . காரில் வைத்துவிட்டுத் திரும்பும் போது தோன்றியது.

நினைவும் மறதியுமின்றித் தங்கமீன்கள் தன்னுடைய தொட்டிக்குள் நீந்திக் கொண்டேயிருந்தன.

••

13/5/20

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: