குறுங்கதை -78 இந்தியா எனும் கனவு.

1487ல் எஸ்மரால்டா கப்பல் லிஸ்பனிலிருந்து புறப்பட்டது. ஆனால் ஒன்றரை வருஷங்களாகியும் அவர்களால் இந்தியாவிற்குச் செல்லும் வழியைக் கண்டறிய முடியவில்லை. கடலில் சுற்றி அலைந்து கொண்டிருந்தார்கள்அக்கப்பலில் இருந்தவர்களுக்கு இந்தியா என்பது ஒரு சொல்லில்லை. கனவு. அக் கப்பலின் கேப்டன் ஒரு கிளி வளர்ந்து வந்தான். அது நாள் முழுவதும் இந்தியா இந்தியா என்று சொல்லிக் கொண்டேயிருந்தது.

இந்தியா என்பது வீதியெல்லாம் பொன்னும் மணியும் கொட்டிக்கிடக்கும் தேசம் எனக் கடலோடிகள் நம்பினார்கள். எவர் முதலில் சென்று சேருகிறார்களோ அவர்களுக்கே பொக்கிஷங்கள் என நம்பினார்கள்

ஆப்பிரிக்கா வழியாகவே இந்தியாவைச் சென்றடையும் முடியும் என்று எஸ்மரால்டா கப்பலின் மீகாமன் அறிந்திருந்தான். ஆனால் எவ்வளவு தொலைவில் இந்தியா இருக்கிறது என்று அவனால் துல்லியமாக அறிய முடியவில்லை.

எஸ்மரால்டா கப்பலில் ஒரு கிழவனிருந்தான். வரைபடம் தயாரிக்கும் அவன் அவன் ஒரு காலத்தில் கிரேக்க வணிகக் கப்பல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தான். ஒரேயொரு முறை அவன் இந்தியா துறைமுகம் ஒன்றுக்கு வந்து போயிருக்கிறான். அந்த நினைவு அவன் மனதில் பசுமையாக இருந்தது. கடற்கொள்ளையர்களுக்குப் பயந்து அவன் இந்தியாவிற்குச் செல்லும் வரைபடத்தைத் தனது உடலில் பச்சை குத்திக் கொண்டிருந்தான். அவன் உடல் முழுவதும் தீவுகளும் கடல்வழி வரைபடமும் விரிந்திருந்தது. இந்த வரைபடத்தைப் பிறர் அறிந்துவிடக் கூடாது என்பதற்காகவே கறுப்பு அங்கி அணிந்திருப்பான்

ஒவ்வொரு நாளும் அதிகாலை அந்தக் கிழவனைத் தேடி கப்பலின் கேப்டன் வருவார். இந்தியாவிற்குச் செல்லும் வழி சரிதானா என்று அந்தக் கிழவனின் உடலில் தேடுவார். அப்போது கிழவன் நிர்வாணமாக நின்று கொண்டிருப்பான். அவன் உடலில் அவரது விரல்கள் ஊர்ந்து செல்லும் சில நேரம் கேப்டன் எதையோ முணுமுணுத்தபடியே உன் நினைவு சரியானது தானா. இந்த வரைபடத்தின் படியே தான் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்பார். நாற்பது நிலவுகள் தொலைவில் இந்தியா இருக்கிறது. தூரத்து நட்சத்திரம் போல என் மனதில் அந்த நிலம் ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது. பேரழகியின் உதட்டைப் போன்று வசீகரமானது இந்தியா என்பான் கிழவன்.

கேப்டன் கிழவனின் உடலில் கண்ட வரைபடத்தின் படியே கப்பலைச் செலுத்துவான். தூரத்துப் பசுமையான மலைகளை, மரங்களைக் காணும் போதெல்லாம் அது இந்தியாவோ என்று கேப்டனுக்குத் தோன்றும். ஆனால் அது சிறிய தீவாக இருக்கும் போது ஏமாற்றமடைவான்.

சில இரவுகளில் கப்பலில் இருந்தவர்கள் கிழவனிடம் கடற்கொள்ளையர்களைப் பற்றிய கதைகளைக் கேட்பார்கள். கிழவன் கண்களில் பிரகாசம் மினுங்க அந்தக் கதைகளைச் சொல்லுவான். குறிப்பாகக் கடற்கொள்ளையர்களில் ஒருவன் இந்தியக் கப்பல் ஒன்றிலிருந்து கொள்ளையடித்த தங்க மயிலைப் பற்றிக் கிழவன் சொல்லும் கதையைக் கேட்கும் போது கடலோடிகளுக்கு வியப்பாக இருக்கும்.

தங்கமயிலின் கண்களில் வைரம் பதிக்கப்பட்டிருந்ததையும், அந்த மயிலின் தோகைகளில் முத்தும் மணிகளும் அலங்கரிக்கப்பட்டதையும் சொல்லி கிழவன் வியப்பான்.

எஸ்மரால்டா கப்பலில் இருந்த உணவுப்பொருட்களும் குடிநீரும் குறைந்து கொண்டே வந்தது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்தியாவை அடையாவிட்டால் கடலிலே சாக வேண்டியது தான் என்ற அச்சம் பலருக்கும் மேலோங்கியது.

கிழவன் ஒரு கனவு கண்டான். அதில் ஒரு துறைமுகத்தைக் கப்பல் அடைந்தது. அங்கே யாருமேயில்லை. கடற்கரையில் நடந்த போது நாய்களின் கூட்டத்தைக் கண்டான். ஒன்றிரண்டில்லை. ஆயிரக்கணக்கான நாய்கள். ஏதோ பெரும் போர் நடப்பது போல நாய்கள் வந்து கொண்டேயிருந்தன. எங்கிருந்து இத்தனை நாய்கள் வருகின்றன. அந்த நாய்கள் எங்கே செல்கின்றன என்று தெரியவில்லை. ஆனால் அதன் வேகமும் குரைப்பொலியும் அச்சப்படுத்தின. கிழவனை அந்த நாய்கள் அடையாளம் கண்டுவிட்டதைப் போலத் துரத்த ஆரம்பித்தன. கிழவன் உயிர்பயத்தில் தப்பி ஓடினான். நாய்கள் அவனைச் சுற்றிச் சூழ்ந்து கொண்ட போது கனவிலிருந்து விடுபட்டான்.

மறுநாள் காலை வழக்கம் போலக் கப்பலின் கேப்டன் அவனைத் தேடி வந்து நிர்வாணமாக்கி உடலில் வரையப்பட்ட வரைபடத்தை ஆராய்ந்த போது கிழவன் சொன்னான்

நம்மால் இந்தியாவிற்குப் போக முடியாது. “

ஏன் அப்படிச் சொல்கிறாய்

எனக்கு அப்படி ஒரு கனவு வந்தது. விசித்திரமான கனவு. அச்சமூட்டும் கனவு“.

காற்று மாறினால் துர்கனவுகள் வருவது இயல்பே. கடற்காற்று மாறிக் கொண்டிருக்கிறது. நாம் சரியான திசையில் போவது போலவே தெரியவில்லை. உன்னால் ஒரு பயனுமில்லை. நாளைக்குள் நிலம் தெரியாவிட்டால் உன்னைக் கொன்று கடலில் வீசி விடுவேன்.“

கிழவன் பதில் சொல்லவில்லை. ஆனால் அன்று முழுநாளும் அவன் சாப்பிடவில்லை. பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தான்.

அன்றிரவு கப்பலைப் பெரும்புயல் ஒன்று தாக்கியது. காற்றின் விசையும் பெருமழையும் கப்பலைப் புரட்டிப் போடுவது போல அசைத்தன. கப்பலை காப்பாற்ற கேப்டனும் உதவியாளர்களும் போராடினார்கள். ஆனால் கப்பல் சிதறடிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் புயல் தணியவில்லை. மூன்றாம் நாள் காலையில் கடல் சீற்றம் அடங்கி இயல்பு நிலைக்கு வந்த போது கிழவன் கடலில் செத்து மிதந்து கொண்டிருந்தான்.

அவனது நிர்வாண உடலின் மீது சூரியன் ஊர்ந்து கொண்டிருந்தது. கேப்டனின் கிளி மட்டும் வானில் பறந்து கொண்டிருந்தது. எந்தத் திசையில் செல்வது எனத் தெரியாமல் அது இந்தியா இந்தியா என்றபடியே கிழக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. அதன் துயரக்குரலை கடல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது

••

14.5.20

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: