குறுங்கதை 79 ஐந்தாம் தேதி

அப்போது கதிருக்கு பதிமூன்று வயது நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதி எப்போது வரும் எனக் காத்துக் கொண்டேயிருப்பான்

ஐந்தாம் தேதி தான் மயில்வாகனம் மாமா சம்பளம் வாங்குவார். அன்று மாலை கதிரையும் அவன் தம்பி தங்கைகளையும் ஹோட்டலுக்கு அழைத்துக் கொண்டு போவார். அந்த நாளுக்காகக் காத்து கிடப்பான்.

மயில்வாகனம் மாமா குமார் ஸ்டோரில் கணக்காளராக வேலை செய்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. தனி அறை எடுத்துத் தங்கியிருந்தார். அப்பா தான் தென்காசியிலிருந்த அவரை வரவழைத்து குமார் ஸ்டோரில் வேலை வாங்கிக் கொடுத்திருந்தார்.

ஐந்தாம் தேதி மாலை சரியாக ஆறுமணிக்கு வீட்டின் முன்னால் மயில்வாகனம் மாமா சைக்கிளில் வந்து இறங்குவது வழக்கம். கதிரும் அவனது தம்பி தங்கையும் நான்கு மணிக்கெல்லாம் தயாராகக் காத்திருப்பார்கள். சில நேரம் தங்கை வாசற்படியிலே நின்று கொண்டிருப்பாள்.

மாமாவின் சைக்கிள் வீதியில் வரும் போது உற்சாகத்தில் சப்தமிடுவாள். கதிரும் தம்பியும் வாசலை நோக்கி ஓடுவார்கள் மாமா சைக்கிளை எப்போதும் தந்திக்கம்பத்தை ஒட்டியே நிறுத்துவார். சிரித்த முகத்துடன் அவர் வீட்டினை நோக்கி வருவதற்குள் ஓடிப்போய் அவரது கைகளைப் பிடித்துக் கொள்வார்கள்.

வீட்டிற்குள் வந்தவுடன் அம்மாவிடம் கொஞ்சம் பணம் தருவார். எவ்வளவு தருகிறார் என்று யாருக்கும் தெரியாது. அதன் பிறகு மெல்லிய குரலில் அக்கா வெளியே போயிட்டு வர்றோம் என்று சொல்லுவார்.

கணேஷ் அய்யர் ஹோட்டல் ரயில்வே ஸ்டேஷன் போகும் சாலையிலிருந்தது. நல்ல தூரம். வேகமாக ஒடி கணேஷ் அய்யர் கடைக்குப் போய்ச் சேர்ந்துவிடக்கூடாதா என்றிருக்கும். சுகந்தி மாமாவின் கையைப் பிடித்துக் கொண்டு வருவாள். ரைஸ்மில் தாண்டி, ராமசந்திரா கல்யாண மண்டபம் தாண்டி, ஐந்து விளக்குக் கம்பம் கடந்து நடக்கும் போது ஹோட்டலை நெருங்கப் போகிறோம் என்று சந்தோஷமாக இருக்கும்.

கணேஷ் அய்யர் ஹோட்டல் மிகச்சிறியது. இரண்டே மரப்பெஞ்சுகள் போட்டிருப்பார்கள். மதியச் சாப்பாடு கிடையாது. காலை மாலை இரண்டு வேளையிலும் டிபன் மட்டுமே. எப்போதும் யாராவது சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களைக் கண்டதும் கணேஷ் அய்யர் சிரித்த முகத்துடன் இலை போடுவார்.

மாமா சொல்வதற்கு முன்பு தங்கை சப்தமாகப் பூரி என்பாள். அந்த ஹோட்டலில் பூரி எப்போதும் சூடாகப் போட்டுத் தான் தருவார்கள். பூரி எண்ணெய்யில் உப்பி மிதப்பதைக் கண்ணால் பார்க்க முடியும். இலையில் கணேஷ் அய்யர் பூரியை வைத்து ஓரமாகக் கிழங்கு வைப்பார்.

பூரியின் மீது விரலை வைத்துக் குத்தியதும் அது உடைந்து வாயைத் திறக்கும். வயது தான் சாப்பாட்டிற்கு ருசியைத் தருகிறது போலும்.

தீர்ந்து போய்விடுமே என்று தங்கை பூரியைக் கிள்ளிக் கிள்ளி சிறியதாகச் சாப்பிடுவாள். ஆனால் தம்பியோ பாதிப் பூரியை பிய்த்து ஒரே வாயில் போட்டுவிட்டு அடுத்தவர் இலையை வெறித்துப் பார்த்தபடியே இருப்பான்.

எப்போதும் ஒரு செட் பூரி மட்டுமே மாமா வாங்கித் தருவார். ஆனால் இன்னும் நிறையச் சாப்பிட வேண்டும் என ஆசையாக இருக்கும். அடுத்தத் தடவை சாப்பிடுவோம் என்பார் மாமா. சாப்பிடுவதில் என்ன கணக்கு என்று கதிருக்கு ஆத்திரமாகயிருக்கும்.

பெரியவர்களால் சிறுவர்களின் பசியைப் புரிந்து கொள்ளவே முடியாது.

இலையின் ஒரம் உதிர்ந்து கிடந்த பூரித்துணுக்கை கூடக் கவனமாக எடுத்து வாயில் போட்டபடியே காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெய்யை பார்த்துக் கொண்டிருப்பான் தம்பி.

இந்த உலகம் பூரியால் நிரம்பியிருக்கக் கூடாதா என்பது போலிருக்கும் அவனது பார்வை. ஆசையாகச் சாப்பிட்டுத் திரும்பினாலும் மனதில் ஏக்கமாகவே இருக்கும். தம்பி விரலைச் சப்பிக் கொண்டே நடந்து வருவான்.

மாமா ஏன் ஒரு செட் பூரி மட்டும் வாங்கித் தருகிறார் என்று அம்மாவிடம் கதிர் கேட்டிருக்கிறான். அதுக்கு மேல சாப்பிடக் கூடாது வயிறு வலிக்கும் என்பாள். வலித்தால் வலிக்கட்டுமே என்று தோன்றும்.

தன் கடமை முடிந்தது என்பது போல மாமா சைக்கிளை எடுத்துக் கொண்டு திரும்பும் போது அறைக்குத் திரும்பும் போது அடுத்த ஐந்தாம் தேதி எப்போது வரும் என ஆசையாக இருக்கும்.

சிறிய சந்தோஷங்கள் வாழ்வில் ஒரு போதும் மறப்பதேயில்லை.

யாரோ ஒரு கிறிஸ்துவப் பெண்ணை மயில்வாகனம் மாமா திருமணம் செய்து கொண்டதால் அம்மா அவரோடு சண்டையிட்டாள். அதன்பிறகு மாமா வீட்டிற்கு வரவேயில்லை. ஆனால் ஐந்தாம் தேதி மாலையானதும் மனதின் மூலையில் பூரியின் வாசம் கிளர்ந்தெழுவதும் மாமா வரக்கூடுமோ எனக் காத்திருப்பதும் மாறவேயில்லை.

தங்கையும் தம்பியும் அம்மாவை வீட்டில் பூரி செய்யச்சொல்லி சண்டை போடுவார்கள். ஆனால் வீட்டுப்பூரிக்கு அந்த ருசி வரவே வராது.

உண்மையில் ஐந்தாம் தேதி மாலை தான் அந்த ருசி தோன்றுகிறதோ என்னவோ.

••

14/5/20

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: