குறுங்கதை 80 மனக்கண்.

காணாமல் போன, திருடு போன பசுமாடுகளைக் கண்டுபிடித்துத் தருவதற்கென ஒரு மனிதர் இருந்தார்.

சாது சுப்பையா என்ற அவருக்கு எந்த ஊரில் பசு காணாமல் போயிருந்தாலும் அது எங்கே போயிருக்கக்கூடும் என்று தெரிந்துவிடும்.

கரிசலின் சின்னஞ்சிறிய கிராமம் ஒன்றில் வசித்து வந்த அவரிடம் தங்கள் மாடு பற்றி அறிந்து கொள்வதற்காக வடக்கேயிருந்து கூட ஆட்கள் வருவார்கள்.

ஒரு கட்டு வெற்றிலை பாக்கும் ஒரு படி உப்பும் தான் அவருக்குக் காணிக்கை. சாது சுப்பையாவின் ஞானதிருஷ்டி தான் பசுவைக் கண்டறிகிறது என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.

சாது சுப்பையா ஒரு நந்தவனத்தில் தான் குடியிருந்தார். அவர் ஒரு போதும் சட்டை அணிந்ததேயில்லை. சாயவேஷ்டி. மேல் துண்டு. மெலிந்த உருவம். மார்பு வரை புரளும் தாடி. நெற்றி நிறையத் திருநீறு. நந்தவன கிணற்றின் படிக்கட்டில் தான் எப்போதும் உட்கார்ந்திருப்பார்.

தேடி வருபவர்கள் காணிக்கை பொருட்களை அவர் முன்னால் வைத்துவிட்டு விழுந்து வணங்குவார்கள். எந்த ஊரு என்று மட்டும் தான் கேட்பார். வந்தவர்கள் ஊர் பேரைச் சொன்னவுடன் கண்களை மூடிக் கொள்வார். எவ்வளவு நேரம் அப்படித் தியானிப்பது போலிருப்பார் என்று தெரியாது. ஆனால் திடீரென “கண்விழித்து மாடு ரொம்பத் தொலைவு போயிருச்சுப்போல. கண்ல தட்டுப்படலை“ என்பார். வந்தவர்கள் முகம் வாடிப்போய்விடும்.

“நாலு ரோடு பக்கம் போயி சாப்பிட்டு வாங்க. சாயங்காலம் பார்ப்போம்“ என்பார்.

வந்தவர்கள் நாலு ரோட்டில் இருந்த ரங்கசாமி ஹோட்டலில் சாப்பிட்டுக்காத்திருப்பார்கள். சில நேரம் ஹோட்டல் உரிமையாளர் ரங்கசாமி “என்னய்யா மாடு போன திசை தெரியலையா“ என்று விசாரிப்பார்.

மாலை அவர்கள் திரும்பிப் போனதும் சாது சுப்பையா கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்து சில நிமிஷங்களில் மாடு எங்கேயிருக்கிறது எனத் துல்லியமாகச் சொல்லிவிடுவார்.

இப்படிச் சாது சுப்பையாவால் மாட்டைக் கண்டுபிடித்து மீட்டவர்கள் பல நூறு பேர். அவர்கள் சொல்லிச் சொல்லியே சாது சுப்பையாவின் புகழ் பரவ ஆரம்பித்தது.

பசுவை கண்டறிந்து சொல்வதைத் தவிர அவருக்கு வேறு வேலைகள் கிடையாது. நந்தவனத்தின் ஓரத்திலே சிறிய குடிசை போட்டு வாழ்ந்து வந்தார். பெரும்பாலும் அவர் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவதில்லை. தேங்காயும் பச்சைக் காய்கறிகளும் பழமும் தான் உணவு. சில நேரத்தில் பெண்கள் அவரிடம் காணாமல் போன கம்மலையோ, பண்ட பாத்திரங்களையோ தேடித் தருமாறு கேட்கையில் அவர் சிரித்தபடியே “அது என்னாலே ஆகாதம்மா“ என்று மறுத்துவிடுவார்.

சில நேரங்களில் போலீஸ்காரர்கள் கூட அவரிடம் துப்பு கேட்டு வந்து நிற்பதுண்டு. சாது சுப்பையா தனக்குத் தெரியாது என்று கையை விரித்துவிடுவார்.

தனக்குக் காணிக்கையாகத் தரப்பட்ட உப்பினை கிராமத்திலுள்ள வீடுகளுக்குத் தந்துவிடுவார். அதனால் அந்த ஊரில் யாரும் உப்பு வாங்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை.

ஒரு முறை வெள்ளிக்கிழமை பகலில் சாதுசுப்பையாவை தேடி வந்த வருச நாட்டு விவசாயி ஒருவன் எப்படியாவது கண்டுபிடித்துத் தரும்படி மன்றாடினான். சாது சுப்பையா முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார். செய்வதறியாமல் ரங்கசாமி ஹோட்டலில் தேநீர் குடித்தபடியே அந்த விவசாயி புலம்பிய போது ரங்கசாமி சொன்னார்

“பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு வெள்ளிகிழமை விடிகாலையில் சுப்பையாவோட சம்சாரம் தபால்காரனோட ஒடிப்போயிருச்சு. எந்த ஊருக்கு ஒடிப் போனாங்கன்னும் கண்டுபிடிக்கமுடியலை. பாவம் அவரும் தேடாத இடமில்லை. விசாரிக்காத ஆள் இல்லை. ஒரு துப்பும் கிடைக்கலை. அதுக்கு அப்புறம் தான் நந்தவனத்துல வந்து சாமியாரா உட்கார்ந்துகிட்டாரு. இந்த ஞானதிருஷ்டி எல்லாம் அப்புறம் தான் வந்துச்சி.. எங்கேயோ திருட்டுப் போன பசுமாட்டைக் கண்டுபிடித்து சொல்லிர முடியுற மனுசனுக்கு இன்னும் பொண்டாட்டி எங்கே போனானு கண்டுபிடிக்க முடியலை. அதான் வெள்ளிக்கிழமை யாருக்கும் குறி பார்த்து சொல்லமாட்டாரு. நீங்க போயிட்டு நாளைக்கு வாங்க. “

அதைக்கேட்ட வருஷ நாட்டு விவசாயி “பாவம்  சுப்பையா. எல்லாத்தையும் மனக்கண்ணாலே பாத்துர முடியாதுல்லே“. என்றபடியே பேருந்திற்குக் காத்திருக்கத் துவங்கினார்.

•••

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: