குறுங்கதை 81 மறுசந்திப்பு

நாற்பது வருஷங்களுக்குப் பிறகு அவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் மறுமுறை சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. அப்படி ஒரு நிகழ்வினை முன்னெடுத்தவன் மகேந்திரன்.

அவனே ஒரு வாட்ஸ்அப் குரூப் துவங்கி அதில் பழைய மாணவர்களின் தொலைபேசி எண்களைக் கண்டறிந்து அவர்களுடன் பேசி தேதி குறித்து அந்தச் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தான். பல்வேறு மாவட்டங்களிலும் பணிக்காகத் தங்கியிருந்தவர்கள் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் பங்கேற்க ஆர்வம் காட்டினார்கள்

டேனியலுக்கு அந்தச் சந்திப்பிற்குப் போவதில் விருப்பமிருந்தாலும் நாற்பது வருஷங்களுக்குப் பிறகு அந்தப் பள்ளியினைப் பார்ப்பதில் என்ன இருக்கிறது என்றும் தோன்றியது.

வாட்ஸ்அப்பில் வந்த புகைப்படங்களைப் பார்த்த போதே காலம் ஒவ்வொருவரையும் எவ்வளவு உருமாற்றியிருக்கிறது என்பதை அறிந்து வியப்பாக இருந்தது.

பள்ளி வயதில் மனதில் பதிந்து போன உருவம் அழிந்து போய்விட்டதே என்று டேனியல் வருத்தப்பட்டார்.

அவருடன் படித்த சிலரது பெயர்கள் மட்டுமே நினைவிலிருந்தது. முகம் மறைந்து போயிருந்தது. ஆனாலும் என்ன. அந்தப் பெயர்களை எங்கே கேட்டாலும் பள்ளி வயது நினைவில் வந்து தானே போகிறது.

அவர்களை நேரில் சந்தித்துப் பேசினால் அந்த நினைவு மறைந்து போய்விடுமோ என்றும் யோசனை செய்தார்.

என்றோ மழையில் நனைந்த ஒருவன் மறுபடி அதே ஈரத்தை நினைவு கொள்ள முடியுமா என்ன.

பள்ளி வயதில் நடந்த நிகழ்வுகள் நிறைய மறந்துவிட்டன. நினைவில் இருப்பது பெரும்பாலும் கசப்பான விஷயங்கள். அல்லது காதலித்த பெண்ணோடு தொடர்பான விஷயங்கள். இவை தவிர ஆசிரியர்கள் காட்டிய அன்பின் அடையாளமான சில நிகழ்வுகள் இவ்வளவு தான் ஞாபகத்தில் மிச்சமிருக்கின்றன.

பள்ளிக்கூடக் குரூப் போட்டோவில் டேனியல் கண்ணை மூடிக் கொண்டிருந்தார். இனி ஒரு போதும் அதை மாற்ற முடியாது தானே.

பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் மறுபடி சந்திப்பதைப் பெரிய கொண்டாட்டம் போல மகேந்திரன் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். ஏனோ டேனியல் போகவேண்டாம் என்று முடிவு செய்திருந்தார்.

ஆனால் முந்திய நாள் இரவு மகேந்திரன் அனுப்பிய பழைய புகைப்படத்தில் டேனியல் ஹாக்கி மட்டையுடன் நின்று கொண்டிருந்தார். அதைக் காணும் போது நெகிழ்ச்சியாக இருந்தது..

ஆசையாக விளையாடிய ஒரு விளையாட்டினை ஏன் வாழ்க்கையில் கைவிட்டோம் என அவராக வருந்திக் கொண்டார்.

மறுநாள் காலை எழுந்து பேருந்தில் பயணம் செய்தபோது பள்ளி வயதின் யூனிபார்ம் நினைவில் வந்து போனது. மைக்கறை படிந்த வெள்ளை சட்டையைப் பற்றி நினைத்தபடியே பயணம் செய்தார்

பள்ளிக்குச் செல்லும் பாதை மாறியிருந்தது. பள்ளி கட்டிடத்தின் முகப்பு புதிய வடிவில் உருவாக்கப்பட்டிருந்தது. அவரது மனதிலிருந்த சித்திரம் எதுவும் இப்போதில்லை. முன்பு பள்ளியின் வலதுபுறமிருந்த சைக்கிள் ஸ்டாண்ட் இப்போது பள்ளியின் பின்புறம் மாறியிருந்தது. பள்ளியின் பெயர் மட்டுமே மாறாமல் இருந்தது

ஒவ்வொருவராக வரத்துவங்கினார்கள். பால்யகால நண்பர்கள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கைகளைப் பற்றிக் கொண்டார்கள். அது பள்ளிச்சிறுவர்கள் போலப் பொய்யாக நடித்துக் கொள்வது போலவேயிருந்தது. அவரது வகுப்பிலிருந்த நாற்பத்து ஆறு பேரில் இரண்டு பேர் இறந்துவிட்டிருந்தார்கள். மற்றவர்கள் ஒன்று கூடி அவரவர் மனைவி பிள்ளைகள் பற்றிப் பேசிக் கொண்டார்கள். பிறகு தாங்கள் படித்த வகுப்பறையைப் பார்வையிடச் சென்றார்கள்.

அந்த வகுப்பறையிலிருந்த மரப்பெஞ்சுகள் இப்போது இல்லை. ஆசிரியர் நின்று வகுப்பெடுக்கும் மேடை அப்போது கிடையாது. முன்பு எந்த இடத்தில் அமர்ந்தார்களோ அங்கே போய் அமர்ந்து கொண்டார்கள். டேனியல் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டார். அந்த ஜன்னல் அப்படியே இருந்தது. மாறவேயில்லை.

பள்ளியின் ஜன்னல் வழியே தெரியும் உலகமும் அந்த ஜன்னல் வழியாக உருவான கனவுகளும் மனதில் ஒளிரத் துவங்கின. தனது இருக்கையை விட்டு எழுந்து ஜன்னலின் அருகே போய் நின்று வெளியே எட்டிப்பார்த்தார். சிறுவயதில் வசீகரித்த தொலைவும் அங்கே தென்படும் மனிதர்களும் அப்படியே மாறாமல் இருந்தது போல உணர்ந்தார். அந்த ஜன்னலை விட்டு நகர மனம் வரவில்லை.

உடன் வந்தவர்கள் புகைப்படம் எடுப்பதற்காக மைதானத்திற்குப் போனார்கள். டேனியல் மைதானத்திற்குப் போன போது பழைய மைதானத்தில் புதிய கம்ப்யூட்டர் சயின்ஸ் பிளாக் உருவாகியிருந்தது.

விளையாடும் இடம் சுருங்கியிருந்தது. புகைப்படம் எடுத்து முடித்துக் கொண்டு எல்லோரும் சாப்பிடுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்

டேனியல் மட்டும் மறுபடியும் அந்தப் பள்ளியின் ஜன்னலைக் காணுவதற்காகப் படியேறினார். யாருமில்லாத வகுப்பறையில் நுழைந்து ஜன்னலைப் பார்த்தபடியே இருந்தார். அது ஏதோ கேள்வி எழுப்புவது போல உணர்ந்தார். அதே ஜன்னலைப் பிடித்தபடியே ஆதங்கமாகத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்

“நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை. எதையோ பற்றிக் கொண்டு வாழ்க்கையை ஒட்டிவிட்டேன். அவ்வளவு தான் “

ஏனோ மனது கனக்கத்துவங்கியது. கீழே இறங்கி வந்த போது அனைவரும் சாப்பிடத் துவங்கியிருந்தார்கள். அந்த உற்சாகம். சந்தோஷம் நிஜமில்லை. ஒரு முறை அடைந்த சந்தோஷத்தை மறுமுறை அடையவே முடியாது என்பது போலவே அந்தச் சந்திப்பை உணர்ந்தார்.

எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் நோக்கிப் பயணிக்கத் துவங்கினார். தான் இன்று சந்தித்த எவரும் தனக்குத் தெரிந்தவரில்லை, யாரோ வயதான ஆட்கள் என்று ஏனோ வழியில் தோன்றியது

••

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: