குறுங்கதை 82 இரவில் நடப்பவர்கள்

மலைநகரம் ஒன்றில் வசித்த நான்கு நண்பர்கள் தான் முதலில் அதைத் துவக்கினார்கள். ஆனால் மெல்ல ஒவ்வொருவராக ஆர்வம் காட்டவே அது முப்பது பேர் கொண்ட நடைக்குழுவாக மாறியது. அதில் ஆறு பெண்களும் இருந்தார்கள்

அவர்கள் வாரம் சனிக்கிழமை இரவு நடக்கத்துவங்குவார்கள். முழு இரவும் நடப்பார்கள். விடியும் போது எந்த ஊரை அடைகிறார்களோ அங்கே அறை எடுத்துத் தங்கிவிடுவார்கள். மறுநாள் பகல் முழுவதும் உறக்கம். திரும்பி வரும் போது பேருந்தில் பயணம் மேற்கொள்வார்கள்.

பகலில் நடப்பது போன்றதில்லை இரவில் நடப்பது. அதுவும் இருண்ட சாலையில் நடக்கும் போது விநோதமான சப்தங்களையும் அரூப நடமாட்டத்தையும் காண முடியும். வழியில் எவரும் எவருடனும் பேசிக் கொள்ளக் கூடாது. டார்ச் லைட் துணைக்கு எடுத்துக் கொண்டு வரக்கூடாது. ஊன்றுகோலும் தண்ணீர் குடுவையும் அனுமதி.

அப்படி ஒரு அனுபவத்தை முதலில் செய்து காட்டியவன் ஒரு கவிஞன் அவன் தனது நண்பர்களிடம் முழு இரவு நடந்த போது கிடைக்கும் அனுபவம் என்பது நூறு பகலில் நடப்பதை விடவும் அபூர்வமானது என்றான். அதை அடைந்து பார்க்க அவனது நண்பர்கள் ஒன்றிணைந்தார்கள்.

முதன் முதலில் அவர்கள் மலையிலிருந்து கீழாக நடக்க ஆரம்பித்த போது வழியில் கவிதை பாடியபடியே வந்தார்கள். ஆள் அற்ற சாலையில் அமர்ந்து குடித்தார்கள். சில இடங்களில் உடைகளை அகற்றிவிட்டு நிர்வாணமாக நடனமாடினார்கள். ஆனால் கவிஞன் ஒவ்வொரு செயலாக நிறுத்திக் கொள்ளும்படி வலியுறுத்தினான். ஆகவே பின்னாளில் அது நிசப்த நடையாக உருமாறியது.

இரவில் யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாமல் நடக்கும் போது ஏற்படும் அனுபவம் தண்ணீருக்குள் மூழ்கியிருப்பது போலவே இருந்தது. மரங்கள் இரவில் மர்மமான தோற்றம் கொண்டுவிடுகின்றன. வேகமாக ஓடுவதோ, குறுக்கு வழியில் போவதோ அனுமதிக்கப்படவில்லை ஆகவே அவர்கள் சீராக இடைவெளி விட்டு நடந்தார்கள். சில நேரம் அவர்கள் வானை ஏறிட்டுத் தொலைவில் தெரியும் நட்சத்திரங்களை ரசித்துக் கொண்டார்கள். சில நேரம் பெயர் தெரியாத மலரின் நறுமணத்தை நுகர்ந்து மகிழ்ந்தார்கள்.

உண்மையில் அவர்கள் இருட்டிற்குள் நடக்கும் போது தனது அகத்தினுள் ஆழ்ந்து செல்வது போலவே உணர்ந்தார்கள். இரவென்பது எத்தனை காலடிகள் கொண்டது என்று அளவிடுவது போலவே உணர்ந்தார்கள். இரவு கொள்ளும் விநோத ஜாலங்களை ரசித்தார்கள்.

ஒன்றிரண்டு பேருக்கு அந்த நடை அச்சத்தை உருவாக்கியது. சிலர் காலில் கற்களை எத்தி உருட்டியபடியே நடந்தார்கள். நிலா நாட்களில் அவர்கள் பாதைகளின் பால் போல வெளிச்சம் கரைந்தோடுவதைக் கண்டார்கள். நிலவின் துணை இத்தனை நெருக்கமானதா என்று வியந்தார்கள்.

இருட்டில் நடக்கும் போது குற்றம் செய்யும் ஆசை அதிகமாவதை உணர்ந்தான் ஒருவன். இன்னொருவனோ இருட்டில் நடக்கையில் தானும் ஒரு விலங்கு என்பது போலவே உணர்ந்தான். பகலில் மேற்கொள்ளும் நடை காரணம் காரியது. ஆனால் இரவின் நடப்பது நடத்தலின் இனிமைக்காக மட்டுமே என்று வேறு ஒருவன் உணர்ந்தான். ஆண்களை விடவும் பெண்கள் இரவு நடையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். சந்தோஷம் கொண்டார்கள். இருட்டு பற்றி மனதில் புதைந்து போயிருந்த பயத்திலிருந்து மீண்டு வந்தது போலிருந்தது அவர்களின் நடை.

ஒரு இரவு நடையின் போது சாலையில் கிடந்த நாணயம் ஒன்றைக் கண்டெடுத்தான் ஒரு இளைஞன். மறுநாள் அவர்களிடம் அந்த நாணயத்தைக் காட்டினான். அது ஒரு தங்க நாணயம். ஆனால் பழங்கால நாணயம். அபூர்வமான நாணயம் போலிருக்கிறது என்றார் ஒரு வரலாற்றுப் பேராசிரியர்.

அந்த நாணயம் எங்கே கிடைத்தது. அதன் மதிப்பு இப்போது எவ்வளவு என்று பலரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகான இரவு நடையில் அவர்களால் முன்பு போல அமைதியாக நடக்க இயலவில்லை. இருட்டில் காலில் தட்டுப்படும் பொருள் எதுவாக இருந்தாலும் அவசரமாகக் குனிந்து எடுத்தார்கள். சில நேரம் நாணயம் கிடைக்கக் கூடுமா என்பதற்காகத் தனியே நடந்தார்கள்.

தங்க நாணயம் கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றத்தை தனக்குள் மறைத்துக் கொண்டு காரணமில்லாமல் அடுத்தவர் மீது கோபம் கொண்டார்கள்.

தங்க நாணயத்தைக் கண்டு எடுத்தவனோ அது போல இன்னொரு நாணயம் கிடைத்துவிடாதா என்று தேட ஆரம்பித்தான். மெல்ல இரவு நடையின் அமைதியும் ஒருமையும் கலைந்து போக ஆரம்பித்தது.

பின்னொரு முறை ரகசியமாக ஒருவன் டார்ச் கொண்டு வந்தான். இன்னொருவன் பகிரங்கமாகச் சிகரெட் லைட்டரை உரசி தேடினான். இதனால் ஒருவரோடு மற்றவர் குற்றம் சாட்டி சண்டையிட்டுக் கொள்ளத் துவங்கினார்கள். அடுத்த சில வாரங்களில் இரவு நடைக்கு வருபவர்கள் குறைந்து போனார்கள். கடைசியில் கவிஞன் மட்டுமே மிஞ்சியிருந்தான்.

அவன் எப்போதும் போல இருட்டிற்குள் நடந்தபடியே மனதில் கவிதை புனைந்தபடியிருந்தான். அவனுக்கு மட்டுமே இரவு புதிதாகயிருந்தது

••

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: