குறுங்கதை 83 சந்தன சோப்.

சங்கரனின் அப்பா மரக்கடை வைத்திருந்தார். அதற்குத் தேவையான மரங்களைக் கேரளாவில் சென்று வாங்கி வருவது வழக்கம்.அப்படி ஒரு முறை லாரியில் கிளம்பும் போது சங்கரனையும் உடன் அழைத்துச் சென்றார். அப்பாவோடு லாரியில் செல்வது சங்கரனை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியது. வளைந்து செல்லும் மலைப்பாதைகளில் லாரி போகும் போது காற்றுக் கன்னத்தை வருடுவது போல அடித்தது.

மூன்று மணி நேரப்பயணத்தின் பிறகு அவர்கள் சர்ப்பக்காவு என்ற கிராமத்தை அடைந்தார்கள். சோலை போல அடர்ந்திருந்த மரங்கள். ஆற்றின் கரையை ஒட்டிய கிராமம். பெரிய பெரிய மரங்கள் வெட்டிப் போடப்பட்டுத் தடிகளாகக் கிடந்தன. லாரியில் மரங்களை ஏற்றி முடிக்க மதியமாகிவிடும் என்றபடியே அவனை அழைத்துக் கொண்டு மேற்குநோக்கி நடந்தார் அப்பா. உயர்ந்து நிற்கும் தீப்பெட்டிகள் போலச் சரிவில் வீடுகள் தென்பட்டன.

மஞ்சள் பூக்கள் அடர்ந்த பாதை. சிறியதொரு குடிசை வீட்டின் முன்பு போய் அப்பா லிசி லிசி எனக் குரல் கொடுத்தார். பதில் வரவில்லை. அப்பா கதவை தள்ளி உள்ளே போன போது தரையில் சுருண்டு படுத்துகிடந்த இருபத்தைந்து வயது பெண் அவசரமாக எழுந்து கொண்டு சிரித்தபடியே “நீங்க வர்றேன்னு சொல்லவேயில்லை“ என்றாள்.

அப்பா அவளை ஏறிட்டுப் பார்த்தபடியே “சொகமில்லையா“ என்று கேட்டார்.

“அதெல்லாமில்லை. லேசா தலைநோவு“ என்றபடியே அவள் சங்கரனைப் பார்த்தபடியே “சின்ன முதலாளிக்குக் குடிக்கச் சாயா தரட்டுமா“ என்று கேட்டாள். அப்பா சரியெனத் தலையாட்டினார்

சங்கரன் அவளைப் பார்த்தான். கருகருவென அடர்ந்த தலைமுடி. திருத்தமான முகம். கழுத்தில் சிவப்பு கயிறு ஒன்றில் சிலுவை போட்டிருந்தாள். மார்பை ஒரு துண்டால் மறைத்திருந்தாள். சாயம் போன பச்சை நிற பாவாடை.

அப்பா தனது சட்டையைக் கழட்டி ஆணியில் மாட்டிவிட்டுச் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கயிற்றுக்கட்டிலைப் போட்டுப் படுத்துக் கொண்டார். அது சங்கரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்பா வெளியே ஒரு போதும் இப்படிச் சட்டையைக் கழட்டி வெறும் மேலோடு இருந்ததில்லையே என அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

லிசி சங்கரனுக்கு ஈயடம்ளர் ஒன்றில் சாயா கொண்டுவந்து கொடுத்தாள். ரொம்பவும் சூடாக இருந்தது. அவள் ஆசையோடு அவன் தலையைத் தடவியபடியே என்ன படிக்கிறே என்று கேட்டாள். நாலு என்று சொன்னான் சங்கரன். கட்டிலில் படுத்த அப்பா மீன் வாங்கிச் சமைக்கும்படி சொல்லிவிட்டுத் தான் தூங்கப்போவதாகச் சொன்னார். அவளே அப்பா சட்டைப்பையிலிருந்து பணம் எடுத்துக் கொண்டு வெளியே போனாள்.

அவள் வெளியே சென்றிருந்த நேரம் அந்த வீட்டின் பின்புறமிருந்த பலாமரத்தை வேடிக்கை பார்த்தபடியே நின்றிருந்தான் சங்கரன்.

தொலைவில் ஒரு யானை போய்க் கொண்டிருந்தது. அவள் மீன்வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். சங்கரனைச் சமையல் அறையில் உட்காரச் சொல்லியபடியே அவள் மீனைச் சுத்தம் செய்தாள்.

அப்பாவும் அவனும் மதியம் லிசியின் வீட்டில் சாப்பிட்டார்கள். அவ்வளவு ருசியான மீன் குழம்பை அவன் சாப்பிட்டதேயில்லை. சாப்பிட்டபின்பு அப்பா பிடிப்பதற்காக அவள் சிகரெட் வாங்கி வந்திருந்தாள். கட்டிலில் உட்கார்ந்தபடியே அப்பா சிகரெட் பிடித்தார். அப்போது அவள் சிறிய நகவெட்டி மூலம் அப்பாவின் கால் நகங்களை வெட்டி விட்டாள். சங்கரனுக்கும் நகம் வெட்டிவிடவா என லிசி கேட்டபோது கூச்சத்துடன் மறுத்துவிட்டான். அப்பா மறுபடியும் உறங்கத் துவங்கினார்.

அப்பா உறங்குவதால் அவள் சங்கரனை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள தென்னந்தோப்பிற்கு அழைத்துப் போனாள். அங்கே இரண்டு சிறுமிகள் ஆடுபுலி ஆட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சங்கரனையும் விளையாடும்படி சொன்னாள். அந்தச் சிறுமிகள் மலையாளம் பேசியது அவனுக்குப் புரியவில்லை. பாதி விளையாட்டின் போது திரும்பிப் பார்த்தான் லிசியைக் காணவில்லை. அந்தச் சிறுமிகள் சங்கரனுக்குச் சுட்ட பலாக்கொட்டை ஒன்றைத் தின்பதற்காகத் தந்தார்கள்.

சங்கரனுக்கு விளையாட்டில் ஆர்வமேயில்லை. அவனாக லிசியின் வீட்டிற்குத் திரும்பிப் போன போது லிசி கலைந்த தலையுடன் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள். அவனைக் கண்டதும் ஆத்துல போயி குளிப்பமா என்று கேட்டாள். வேண்டாம் எனச் சங்கரன் மறுத்தான்.

அவனை வற்புறுத்தி ஆற்றுக்குக் குளிக்க அழைத்துப் போனாள். அவளாக டிராயரை கழட்டிவிட்டது சங்கரனுக்குப் பெருங்கூச்சமாக இருந்தது. படித்துறையில் ஆளேயில்லை. இருவரும் ஆற்றினுள் இறங்கினார்கள். ஸ்படிகம் போன்ற தண்ணீர். ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுப்பது போன்ற குளிர்ச்சி..

சங்கரனுக்கு அவள் சந்தன சோ போட்டுக் குளிப்பாட்டினாள். யாரும் அவனை அப்படிக் குளிக்கச் செய்ததில்லை. சங்கரன் வெட்கத்தில் சிரித்தான். அவள் கைகளுக்கும் முகத்திற்கும் நுரைக்கச் சோ போட்டுக் கொண்டாள். திடீரெனக் கையை அவன் முன் நீட்டி முகர்ந்து பார்க்கும்படி சொன்னாள். அந்த வாசனை சங்கரனை மயக்கியது.

குளித்து முடித்து ஈர உடையுடன் படியேறும் போது நான் அழகா இருக்கனா என லிசி கேட்டாள். ஆமாம் எனத் தலையாட்டினான். அவன் மீது வேண்டுமென்றே தலையைச் சிலுப்பி ஈரம் படும்படி செய்தாள். சங்கரன் மறுபடியும் சிரித்தான்.

அப்பாவும் அவனும் புறப்படும் போது அவள் சங்கரன் வழியில் தின்பதற்காகப் பொரி உருண்டை கொடுத்தாள். அப்பா லிசிக்குப் பணம் கொடுப்பதைச் சங்கரன் பார்த்துக் கொண்டிருந்தான். லாரியில் அவர்கள் வீடு திரும்பும் போது அப்பா எதையோ நினைத்துச் சிரித்தபடியே வந்தார். அவரிடம் லிசியைத் தனக்குப் பிடித்திருப்பதாகச் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் சங்கரன் சொல்லவில்லை.

வீடு வந்த இரவில் அம்மா பகலில் என்ன செய்து கொண்டிருந்தாய் என்று கேட்டார்.

“சும்மா விளையாடிகிட்டு இருந்தேன்“ என்றான்.

“எங்கேயும் போகலையா“ என்று கேட்டாள்

“எங்கேயும் போகவில்லை“ என்று சங்கரன் அழுத்தமாகச் சொன்னான். ஏன் அப்படிச் சொன்னான் என்று அவனுக்குப் புரியவேயில்லை.

**

21/5/20

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: