புலியுடன் ஒரு தேநீர் விருந்து.

The Tiger Who Came to Tea (2019) என்ற அனிமேஷன் படத்தைப் பார்த்தேன்.

உலகப்புகழ் பெற்ற சிறார் கதையை அனிமேஷன் படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

சோஃபி என்ற ஒரு சிறுமி தனது அம்மாவுடன் பூங்காவிற்குக் கிளம்புகிறாள். எதிர்பாராதபடி மழை வந்துவிடுகிறது. வீட்டில் என்ன செய்வது என அம்மாவும் மகளும் கேக் செய்கிறார்கள். வீட்டிலே ஒரு தேநீர் விருந்து ஏற்பாடு செய்வோம் என்கிறாள் அம்மா. அது சோஃபியை உற்சாகம் கொள்ள வைக்கிறது. சாண்ட்விட்ச். கேக். தேநீர் என யாவும் தயாரித்து எடுத்துக் கொண்டு டைனிங்டேபிளுக்கு வரும் போது யாரோ வாசலில் அழைப்பு மணியை அடிக்கும் சப்தம் கேட்கிறது.

சோஃபி கதவைத் திறந்து பார்க்கிறாள். வெளியே ஒரு புலி நின்று கொண்டிருக்கிறது. அது பவ்வியமாக உங்களுடன் தேநீர் குடிக்க வரலாமா என்று கேட்கிறது. சோஃபியோ அவளது அம்மாவோ புலியைக் கண்டு பயப்படவில்லை. அதை உள்ளே அழைக்கிறார்கள். பவ்வியமாகப் புலி டைனிங்டேபிளில் வந்து அமருகிறது. அவள் புலி சாப்பிடுவதற்காக ஒரு சாண்ட்விச்சை தருகிறாள். ஆனால் புலி தட்டுடன் பிடுங்கிச் சாப்பிட்டுவிடுகிறது. இப்படிப் புலி செய்யும் அட்டகாசங்கள் நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன. தேநீர் விருந்தின் முடிவில் என்னவானது என்பதே மீதக்கதை.

ஒரு புலியைக் கண்டு சோஃபி ஏன் பயப்படவில்லை.அவர்கள் உண்மையாக ஒரு விருந்தினருக்காகக் காத்திருக்கிறார்கள். அந்த விருந்தினர் புலியாக இருப்பதில் அவர்களுக்கு ஒரு கவலையுமில்லை. பசித்த புலி இப்படி அழைப்பு மணியை அழுத்தி வீட்டிற்குத் தேநீர் குடிக்க வருவது தான் கதையின் சுவாரஸ்யம். தந்தை வேலைக்குப் போன பிறகு தாயும் மகளும் தனியே இருக்கிறார்கள். அந்தத் தனிமைக்குத் தோழனாகவே புலி வருகிறது. புலி செய்யும் அட்டகாசங்களை அவர்கள் ரசிக்கிறார்கள். ஒரு காட்சியில் சோஃபி புலிக்கு பல்துலக்கிவிடுகிறாள். அப்போது புலி முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகள் அற்புதம்.

1968ல் ஜூடித் கெர் எழுதிய சிறுவர்களுக்கான நூலை அழகான அனிமேஷன் படமாக மாற்றியிருக்கிறார்கள். இனிமையான இசையும் பாடலும் வசீகரமாகவுள்ளன.

மீனைத் திருடிக் கொண்டு செல்லும் பூனையிலிருந்து படம் துவங்குகிறது. அதை யாராலும் பிடிக்க முடியவில்லை. அதே பூனை தான் கடைசிக்காட்சியிலும் வீதியில் கடந்து போகிறது. பூனை தான் சோஃபியின் வீட்டிற்குப் புலியாகச் சென்றதோ எனும்படியாக உள்ளது. அல்லது சோஃபி அப்படிக் கற்பனை செய்து கொள்கிறாளோ என்றும் தோன்றுகிறது. எதையும் விட்டுத் தராத மனிதர்கள் வாழும் உலகிற்குள் தான் சோஃபியும் அவளது அம்மாவும் வசிக்கிறார்கள்.

சோஃபியின் அப்பா வீட்டிலிருந்திருந்தால் அந்தப் புலி வந்திருக்காது. ஒருவேளை வந்திருந்தாலும் அவர் சோஃபி போலப் புலியை நடத்தியிருக்கமாட்டார். கடைசியில் அவர் புலி தனது உணவைச் சாப்பிட்டுவிட்டதைக் கேட்டு ஏமாற்றமடைகிறார். அவரைப் பொருத்தவரை அது ஒரு கதை. ஒரு கற்பனை. அவ்வளவே.

தென்னாட்டுப் பழங்கதைகள் நூலிலும் இப்படி ஒரு புலி வருகிறது. அது மனிதர்கள் விதவிதமாக உணவு வகைகளைச் சமைத்துச் சாப்பிடுவதைக் கண்டு அந்த ருசிக்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறது. ஆண் உருவம் கொண்டு ஊருக்குள் போய் ஒரு பெண்ணைத் திருமணமும் செய்துவிடுகிறது. அந்தப் புலிக்கு அப்பளமும் காரக்குழம்பும் தயிர்சாதமும் பிடித்திருந்தது என்று கதையில் இடம்பெறுகிறது. ஒரு புலி அப்பளம் சாப்பிட ஆசைப்படும் கதைக்கு இணையாகவே இந்தச் சிறார் கதையைப் பார்க்கிறேன்.

சோஃபியி புலி எதைச்சாப்பிட்டாலும் கோவித்துக் கொள்வதேயில்லை. புலியும் தன் உக்கிரத்தை மறந்து சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போலவே நடந்து கொள்கிறது.

இந்தக் கதையை எழுதிய ஜூடித் கெர் நாஜிக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர். அவரது தந்தை ஹிட்லரின் கொடுமையால் மரண தண்டனை பட்டியலில் இடம்பெற்றவர். உயிருக்குப் பயந்து அவர்கள் நாட்டை விட்டுச் சென்றார்கள். அவர் இக்கதையைப் பற்றிச் சொல்லும் போது மிருககாட்சி சாலையில் பார்த்த புலியைத் தனது மகள் விருந்திற்கு அழைக்க வேண்டும் என்று சொன்னாள். அப்படித்தான் இக்கதை துவங்கியது என்கிறார்

பார்வையற்றவர்கள் வாசிக்கும் படி இப்புத்தம் பிரெயில் மொழியில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது.

Robin Shaw இயக்கியுள்ள இந்த அனிமேஷன் படத்தை குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள்.

••

21.5.20

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: