ஸ்டீன்பெக்கின் குறிப்புகள்.

“a book must be the axe for the frozen sea inside us,”

-          Franz Kafka

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஜான் ஸ்டீன்பெக்கின் The Grapes of Wrath நாவல் அமெரிக்காவின் நவீன இதிகாசமாகக் கொண்டாடப்படுகிறது. திரைப்படமாக வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற நாவலது. இதுவரை இரண்டு கோடி பிரதிகளுக்கும் மேலாக விற்றிருக்கும் என்கிறார்கள். நாவல் அடைந்த வெற்றியில் ஸ்டீன்பெக் மிகப்பெரிய பண்ணை வீட்டினை விலைக்கு வாங்கினார். அதற்குள் அழகான நீச்சல் குளம் ஒன்றை அமைத்துக் கொண்டார். புக்கர் பரிசு மற்றும் நோபல் பரிசு பெற்றவர் என்பதால் எழுத்தின் வழியே கோடிக்கணக்கில் பணம் கிடைத்தது. இந்தப் பணத்தில் கடன் கேட்டும் உதவிகள் கேட்டும் தினமும் நூறு கடிதங்கள் வருவது வழக்கம்.

ஸ்டீன்பெக் நாவல் எழுதும் நாட்களில் அது குறித்துத் தினசரி குறிப்புகளை எழுதியிருக்கிறார். அதன் தொகுப்பே Working Days: The Journals of the Grapes of Wrath – John Steinbeck

1938 ம் ஆண்டு ஜூன் முதல் அக்டோபர், வரை ஒரு நாளைக்குச் சராசரியாக 2,000 சொற்கள் வீதம் இந்த நாவலின் முதற்பாதியை எழுதினார் ஸ்டீன்பெக்.வாரத்தில் சராசரியாக ஐந்து நாட்கள் எழுதியிருக்கிறார். காலை 11 மணிக்குத் துவங்கி மாலை 5 வரை எழுத்துப்பணி. பக்கத்துவீட்டில் நடைபெறும் கட்டிட வேலையின் குறுக்கீடு. வீட்டில் வாஷிங்மிஷன் ஓடும் சப்தம். வேலையாட்களின் கூச்சல். எல்லாவற்றையும் தாண்டியே அவர் எழுதியிருக்கிறார்.

ஒரு நாவல் எப்படி உருவாகிறது என்பதற்கான சாட்சியம் போல இக்குறிப்புகள் உள்ளன.ஒரு நாவல் எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை விரித்துக் கொள்கிறது என்பதைத் துல்லியமாகக் காணமுடிகிறது. அது போலவே நாவலை எழுதும் நாட்களில் எழுத்தாளனின் மனநிலை எப்படி இருந்தது. எது போன்ற புறச்சூழலின் நெருக்கடியின் ஊடே தனது நாவலை எழுதினார் என்பதையும் விரிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

ஸ்டீன்பெக் கையால் எழுதியதை அவரது மனைவி கரோல் தட்டச்சுச் செய்து திருத்தியுள்ளார். The Grapes of Wrath நாவல் புலம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை போராட்டத்தை விவரிக்கக் கூடியது. நேரடியாக அந்த அனுபவம் ஸ்டீன்பெக்கிற்குக் கிடையாது. ஆகவே கள அனுபவம் கொண்ட ஒருவரைத் தனது பணிக்குத் துணையாக வைத்துக் கொண்டார் ஸ்டீன்பெக். அத்துடன் புகைப்படங்கள். நேரடி சான்றுகள். புலம்பெயர்ந்தவர்களின் குரல்பதிவு எனப் பல்வேறுவகையாக ஆதாரங்களையும் திரட்டி அதிலிருந்தே தனது நாவலை எழுதியிருக்கிறார்.

டாம் ஜோட் மறக்கமுடியாத கதாபாத்திரம். சிறையிலிருந்து விடுதலையாகி அவன் ஓக்லஹாமாவிலுள்ள தனது வீட்டிற்குச் செல்கிறான். அங்கே பயிர்கள் அழிக்கப்பட்டு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அவனது வீட்டில் யாருமில்லை. பாதிரியான ஜிம் காஸியைச் சந்திக்கிறான். அவர் நடந்தவற்றை நினைவுகூறுகிறார். அவர்கள் இணைந்து பயணம் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு டிரக்கில். கலிஃபோர்னியா நோக்கி ஜோட்டின் குடும்பம் பயணிக்கிறது. வழியில் அவர்களைப் போலவே புலம்பெயர்ந்து செல்லும் மக்கள் கூட்டத்தினைக் காணுகிறார்கள். டாமின் தாய் அபூர்வமான கதாபாத்திரம். வலிமையான பெண். போராட்டமிக்க அவளது வாழ்க்கை கதையை ஸ்டீன்பெக் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக விவரித்திருக்கிறார்..

அன்றாடம் காலை உணவிற்குப்பிறகுத் தனது நாவல் எழுதும் பணியைத் துவங்கியிருக்கிறார். கதாபாத்திரங்களின் வளர்ச்சி மற்றும் கதையின் போக்கு பற்றி அவருக்குத் தெளிவான பார்வையில்லை. ஒரு தாவரம் வளர்வது போலவே கதாபாத்திரங்கள் தானே வளர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தனது மொழி எவ்வளவு சரளமாக, நுட்பமாக வெளிப்படுகிறது என்பதில் அதிகக் கவனம் கொண்டிருக்கிறார். சில நேரங்களில் கதாபாத்திரங்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்ற குழப்பம் அவரை ஆட்டுவிக்கிறது

வீட்டிற்கு விருந்தினர்கள் வந்துவிட்டாலோ, அல்லது நண்பர்கள் எவரேனும் வந்துவிட்டாலோ எழுத்துப்பணி தடைபடுகிறது . முழுமையான நிசப்தம் இருந்தால் மட்டுமே தன்னால் எழுத முடியும் என்கிறார் ஸ்டீன்பெக்.

இது மட்டுமின்றித் தொடர்ந்து எழுதி மனச்சோர்வு அடைகிறார். தூக்கமில்லாமல் போகிறது. எழுதியது சரிதானா என்ற சந்தேகம் வருகிறது. தான் நினைத்தது போல எழுத முடியவில்லையோ என்று எழுதுவதைத் தள்ளிப்போடுகிறார். ஆனால் எழுத்துப்பணிக்கு வேறு எவரும் உதவி செய்ய முடியாது தானே. ஆகவே தானே தன்னைச் சரி செய்து கொள்கிறார். நல்ல உறக்கமும் தெளிந்த மனநிலையும் அவரைத் தொடர்ந்து எழுத வைக்கிறது. சில நாட்கள் உற்சாகமாக எழுதுகிறார். இதற்கிடையில் பதிப்பாளர் நாவல் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று விசாரித்துக் கொள்கிறார். நாவலுக்கு என்ன தலைப்பு வைப்பது என்று ஸ்டீன்பெக் முடிவு செய்ய முடியவில்லை. அவரது மனைவி தான் நாவலுக்குத் தலைப்பு வைக்கிறார்

தன்னை விடவும் தனது மனைவி சமூக விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். அரசியல் பேசக்கூடியவர். தீவிர வாசிப்பாளர். ஆகவே தனது கையெழுத்துப் பிரதியில் அவர் செய்த திருத்தங்கள் முக்கியமானவை. சில நேரம் அவர் எழுதிய பக்கங்களில் சிலவற்றை அர்த்தமற்றவை என்று துண்டித்து நீக்கியிருக்கிறார். அந்த முடிவை அப்படியே ஏற்றுக் கொள்வேன் என்கிறார் ஸ்டீன்பெக்.

ஒருமுறை அவரது மனைவிக்குத் தொண்டை வலி காரணமாக மருத்துவரைக் காண வேண்டிய நிலை. கரோல் மருத்துவரைக் காணச் செல்கிறார். டான்சிலுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று நாள் குறிக்கிறார்கள். அந்த நாட்களில் ஸ்டீன்பெக் வீட்டில் தனியே இருந்தாலும் அவரால் ஒரு வரி எழுத இயலவில்லை. மனைவி குணமடைந்து எழுந்து நடமாடத் துவங்கிய பிறகே நாவலை எழுத முனைகிறார்.

வீட்டில் தனியே இருப்பதற்கு ஸ்டீன்பெக் பயப்படக்கூடியவர். நிழல் போல யாராவது ஒருவர் நடமாடிக் கொண்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்கிறார். அது போலவே தபால்காரனின் வருகை அவரை மிகவும் சந்தோஷப்படுத்தக்கூடியது. பை பையாக அவருக்குக் கடிதங்கள் வருவது வழக்கம். அதில் தேர்வு செய்யப்பட்ட சில கடிதங்களை மட்டுமே வாசித்துப் பதில் போடுவார்

ஸ்டீன்பெக்கின் சமகால எழுத்தாளரான வில்லியம் பாக்னர் தனது தனித்துவமிக்கக் கதை சொல்லும் முறையால் புகழ்பெற்றிருந்தார். ஸ்டீன்பெக் அவரை ஒரு போதும் போட்டியாளராகக் கருதவேயில்லை.

இது போலவே நெருக்கமான நண்பர்கள் வந்தால் தான் எழுதியுள்ள பகுதியை வாசிக்கத் தருகிறார். அவர்கள் பாராட்டுத் தன்னை மேலும் எழுத தூண்டியது என்கிறார்

எல்லா நாளும் அவர் நினைத்த பக்கங்களை எழுதி முடிக்க முடியவில்லை. சில நாட்கள் ஒரு பக்கம் அல்லது நூறு சொற்களுக்குள் நாவல் நின்று போயிருக்கிறது. சில நாட்கள் நாவல் மிக வேகமாக வளர்ந்திருக்கிறது.

பெயரும் புகழும் பெற்றுவிட்டால் அதன் பிறகு எழுத்தாளன் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. அவனது புகழ் அவன் எழுத்திற்குப் பல்வேறு தடைகளை உருவாக்கும். அவனது முந்தைய வெற்றியைக் கடந்து போக வேண்டிய கட்டாயம் உருவாகிவிடும். தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்ள அவன் மிகுந்த பிரயாசைப்பட வேண்டியிருக்கும். அதே நேரம் தீவிரமான மனநிலையும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஒரு நாவலை எழுதி முடித்துவிட்டால் அது தரும் வெற்றி வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும் என்கிறார் ஸ்டீன்பெக்.

ஒரு எழுத்தாளனின் வாக்குமூலம் போலவே இந்தக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. இளம் எழுத்தாளர்கள் இந்தக் குறிப்புகளைப் படித்துப் பார்த்தால் ஒரு நாவல் எப்படி உருவாகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

••

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: