குறுங்கதை 84 மறு உத்தரவு.

சீனாவின் வடக்கு எல்லையை ஒட்டியிருந்தது அந்தக் கிராமம். அந்தக் கிராமத்திற்கு ஒரு நாள் அரசாணை ஒன்று வந்தது. அதன் படிப் போர் முடித்துத் திரும்பும் வீரர்களை வரவேற்க ஊரிலுள்ள பெண்கள் யாவரும் அலங்காரம் செய்து கொண்டு, ஊர் முகப்பில் ஒன்று கூடி, கையில் மலர்மாலை ஏந்தி வரவேற்றுப் பாட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

கிராமத் தலைவர் உடனடியாக உத்தரவிற்கு அடிபணிய வேண்டுமெனக் கட்டளையிட்டார். அக்கிராமத்தில் நூற்றுக்கும் குறைவாகவே வீடுகள் இருந்தன. அந்த வீட்டிலிருந்த பெண்கள் பண்டிகை நாட்களில் அணிவது போலப் புத்தாடை அணிந்து தலை முதல் கால்வரை அலங்காரம் செய்து கொண்டு கையில் மலர்மாலை ஏந்தி போர்வீரர்களின் வரவிற்காகக் காத்திருந்தார்கள்.

மாலை துவங்கிய காத்திருப்பு இரவு ஊரடங்கும் வரை நீண்டது. கிராமத்தலைவன் ஒருவேளை படைவீரர்கள் வழியில் ஒய்வெடுக்ககூடும் என்பதால் மறுநாள் வரவேற்பு கொடுக்கலாம் என அப் பெண்களைக் கலைந்து போகும்படி சொன்னார்.

மறுநாளும் அந்தப் பெண்கள் முந்திய தினம் போலவே அலங்காரத்துடன் மலர்மாலை ஏந்தியபடியே காத்திருந்தார்கள். அன்றைக்கும் படைவீரர்களைக் காணவில்லை. எத்தனை நாட்கள் ஆனாலும் அரசின் உத்தரவினை மீறக்கூடாது என்று சொன்ன ஊர்த்தலைவன் அன்றாடம் மாலையில் அந்தப் பெண்கள் அலங்காரம் செய்துகொண்டு ஊர் முகப்பில் நிற்கும்படி கட்டளையிட்டார். ஒரு பெண் கூட அந்த உத்தரவை மறுக்கவில்லை.

ஆனால் நீண்ட காத்திருப்பின் பின்பு கையில் மாலையுடன் வீடு திரும்புவதைப் பெண்கள் பெரும் ஏமாற்றமாக உணர்ந்தார்கள். ஆகவே அவர்களில் ஒரு பெண் வைக்கோலில் போர்வீரன் போல ஒரு பொம்மை செய்து அதற்கு மாலை சூட்டினாள்

சில நாட்களில் ஒரு பொம்மை வீரனுக்குப் பதிலாக நாற்பது ஐம்பது பொம்மை வீரர்களைச் செய்து வைத்தார்கள் கிராமத்து ஆண்கள். இப்போது பெண்கள் அவருக்குப் பிடித்தமான வீரன் முன்பு நின்று பாடி மலர்மாலையை அணிவித்தார்கள். உண்மையான போர்வீரர்கள் அந்தக் கிராமத்தின் பக்கம் வரவேயில்லை. ஆனால் மறுஉத்தரவு வரும்வரை அலங்கரித்துக் கொண்டு ஊர்முனையில் பெண்கள் நிற்பது மாறவேயில்லை.

ஒரு மாதம். ஒரு வருஷம், பத்து வருஷம், முப்பது வருஷம் என நீண்ட அந்தக் காத்திருப்பு முடிவில் இரண்டு தலைமுறைகளைத் தாண்டியும் மாறாத பழக்கமானது.

வைக்கோல் பொம்மையில் செய்யப்பட்ட வீரர்களுக்குப் பதிலாகக் கல்லில் போர்வீரர்களின் சிலையைச் செய்து அவர்களுக்கு மாலை சூட்டும் நிகழ்ச்சி அன்றாடம் நடந்தேறியது. அதைக் காண வெளியூர்களிலிருந்து பார்வையாளர்கள் வரத்துவங்கினார்கள்.

இன்றும் வடக்கு எல்லையை ஒட்டிய அந்தக் கிராமத்தில் மாலையானதும் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள். கையில் மலர்மாலை ஏந்தி நடந்து வந்து கற்சிலைகளுக்கு மாலை அணிவித்துப் பாடுகிறார்கள்.

வெற்றியைப் பாடும் அந்தப் பாடலின் ஊடே தீராத சோகமிருப்பதைப் பார்வையாளர்கள் உணர்ந்தார்கள்.

தொலைவிலிருந்த அரசாங்கம் கிராமத்துப் பெண்கள் இப்படி ஆண்டுக்கணக்கில் மாலைகளுடன் காத்துக் கொண்டிருப்பதை அறியவேயில்லை.  மறு உத்தரவைப் பிறப்பிக்கவுமில்லை.

•••

0Shares
0