கேமிராவுடன் ஒரு துறவி.


Monk with a Camera: The Life and Journey of Nicholas Vreeland என்ற ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். புகைப்படக் கலைஞராக உள்ள புத்த துறவி ஒருவரைப் பற்றியது.

நிக்கோலஸ் புகழ்பெற்ற புகைப்படக்கலைஞரான இர்விங் பென்னால் பயிற்சியளிக்கப்பட்டவர், பௌத்த சமயத்தில் ஈடுபாடு கொண்டு இந்தியாவில் ஒரு மடாலயத்தில் பதினான்கு ஆண்டுகள் பௌத்த நெறிகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.. பௌத்த மையம் ஒன்றை உருவாக்க அவர் தனது புகைப்படக்கலையைக் கொண்டு நிதி திரட்டியிருக்கிறார்

2014 ஆம் ஆண்டு இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நிக்கோலஸ் வ்ரீலேண்ட் திபெத்தியப் பௌத்த மடத்தின் மடாதிபதியாக ஆக்கப்பட்ட முதல் மேற்கத்தியர்.

இவரது கடந்த கால வாழ்க்கை மற்றும் நிகழ்காலப் பணிகளை ஆவணப்படுத்தும் இந்தப்படம் பௌத்தம் எவ்வாறு நிகோலஸிற்கு அறிமுகமானது என்பதில் துவங்கி புகைப்படக்கலையின் மீதான அவரது தொடர் ஈடுபாட்டினை விவரிக்கிறது

குறிப்பாக நிக்கோலஸ் நியூயார்க் நகரத்தின் பூங்காவில் நடந்து சென்று அங்குள்ள மரங்களைப் படமாக்கும் முறையும் மரங்கள் பற்றி அவர் சொல்லும்  கருத்துகளும் சிறப்பாக உள்ளன.

இந்த ஆவணப்படத்தில் கர்நாடகாவிலுள்ள திபெத்தியர்களின் மடாலயமும் அது சார்ந்த வாழ்க்கையும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. மடிகெரே அருகிலுள்ள அந்தத் திபெத்தியப் புத்த மையத்திற்கு சென்றிருக்கிறேன். அங்கே இளந்துறவிகளுக்கான பயிற்சி மையம் செயல்படுகிறது. பெரிய தியான மண்டபம் உள்ளது. மிக அழகான வளாகமது.

நிக்கோலஸ் வ்ரீலேண்ட் பிரபல பேஷன் எடிட்டரான டயானா வ்ரீலாண்டின் பேரன். பௌத்த சமயம் பற்றிப் படித்த கட்டுரை ஒன்றிலிருந்த தியான முறைகளின் மீது விருப்பம் கொண்டிருக்கிறார். அது இந்தியாவை நோக்கி அவரை பயணிக்க செய்திருக்கிறது.

துறவியான மாறிய போதும் அவரால் புகைப்படக்கலையைக் கைவிட முடியவில்லை. புகைப்படம் எடுப்பதும் ஒருவகைத் தியானமே எனக்கருதிய இவர் தலைமை துறவியாக இருந்த போதும் புகைப்படங்கள் எடுக்கிறார். எங்கே சென்றாலும் தனது கேமிராவை உடன் கொண்டு செல்கிறார்

சில ஆண்டுகளுக்கு முன்பு The cup என்றொரு படம் பார்த்தேன். கால்பந்து விளையாட்டினை டிவியில் பார்க்க ஆசைப்படும் புத்த மடாலயத்தைச் சேர்ந்த சிறுவனைப் பற்றிய அற்புதமாகப் படம். அதில் மடாலயத்திற்குள் டிவி வைத்து உலகக் கோப்பை கால்பந்து பார்ப்பதை மூத்த துறவிகள் விரும்ப மாட்டார்கள் ஆனால் இளந்துறவிகளுக்குக் கால்பந்தாட்டம் காணுவதில் ஆசை அதிகம். அந்தச் சிறுவன் மடாலயத்திற்குள் ஒரு டிவியை வாடகைக்குக் கொண்டு வருவதற்கு எவ்வளவு போராடுகிறான் என்பதைக் கதை. அழகான படம்

இந்தப் படம் போலவே பௌத்த மடாலயங்களுக்கெனத் தனியே கட்டுப்பாடுகள் இருக்கின்றன. நிக்கோலஸ் அந்தக் கட்டுப்பாடுகளை அறிந்தவர் என்ற போதும் அவரால் கேமிராவை கைவிட முடியவில்லை. தனக்கு விருப்பமான புகைப்படக்கலையைக் கொண்டு அவர் எவ்வாறு புத்த மடாலயம் உருவாக்க நிதி திரட்டுகிறார் என்பதே இந்த ஆவணப்படத்தின் சிறப்பு,

நிக்கோலஸ் எடுத்துள்ள புகைப்படங்கள் தனித்துவமான அழகு கொண்டிருக்கின்றன. இயற்கையின் நிகரற்ற வனப்பையும் அன்றாடச் செயல்களில் ஒளிரும் மாயத்தையும் புகைப்படங்களாக மாற்றுகிறார்.

பௌத்த துறவி என்றால் சதா சர்வகாலமும் தியானம் செய்து கொண்டிருப்பார்கள். அல்லது பௌத்த நூல்களை படித்துக் கொண்டிருப்பார்கள் என்றே பொதுப்பிம்பம் உள்ளது. அது உண்மையில்லை. பௌத்த துறவிகளுக்கென கடமைகள் இருக்கின்றன. அவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதை முதன்மையாக கருதுகிறார்கள்.

கல்வி, மருத்துவம். தொழில் என பல்வேறு விதங்களிலும் துறவிகள் உதவி செய்கிறார்கள். ஏழை எளியவர்களுக்கு தேவையான உணவு அளிக்கிறார்கள்.  கூட்டுவாழ்க்கையின் மூலம் அவர்கள் எளிமையான வாழ்க்கைமுறையை கைக்கொள்ளுகிறார்கள். அதே நேரம் தொழில்நுட்பகருவிகளை அவர்கள் விலக்குவதில்லை. தேவையான கருவிகளை கொண்டு ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுகிறார்கள். அதைத் தான் இந்தப்படம் முதன்மைப்படுத்துகிறது.

ஒவ்வொரு கணமும் உலகம் மாறிக் கொண்டேயிருக்கிறது. அழகான காட்சிகள் கூட நொடியில் கடந்து போய்விடுகின்றன. நிலையற்ற காட்சிகளை புகைப்படக்கலை நித்யமானதாக மாற்றுகிறது. பௌத்த துறவி என்றமுறையில் கேமிரா வழியாக காட்சியை நோக்கும் போது அதன் வியப்பூட்டும் அழகும் ஒருமையும் என்னை தூண்டுகிறது. ஒரு சமநிலையை காணுகிறேன். அரூபமான நடனம் ஒன்று அந்த காட்சியில் ஒளிந்திருக்கிறது. அதை கண்டறிந்து பதிவு செய்கிறேன் என்கிறார்.

புகைப்படக்கலை INNER SPIRITUAL BALANCEயை உருவாக்குகிறது என்கிறார் நிக்கோலஸ். அது உண்மையே.

•••

0Shares
0