தானே உலரும் கண்ணீர்

-கிஷோர் குமார்

சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களையும் , அதிகாரத்தால் அநீதி இழைக்கப்பட்டவர்களையும் பற்றித் தமிழ் இலக்கியம் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்துள்ளது.

இக்கருவை வரலாற்றுக் காலத்தில் வைத்து ஆராய்கிறது ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல்.

அத்தோடு மட்டும் இந்நாவலை குறுக்கிக்கொள்ள முடியாதபடி வாசிப்பால் விரித்தெடுக்க வேண்டிய பலதளங்களையும் இந்நாவல் தொட்டு சென்றுள்ளது.

முகலாயப் பேரரசரான அவுரங்கசீபின் இறுதி காலத்தில் அனைத்து வரலாற்று நாயகர்களும், மாமன்னர்களும், புரட்சி வீரர்களும் அனுபவிக்கும் அந்தக் கொடுந் தனிமையை அவுரங்கசீபும் அனுபவிக்கிறாரார். இளமையில் மரணத்தைத் துச்சமாக நினைத்து பல வெற்றிகளை ஈட்டும் அவுரங்கசீப், இறுதியில் தன் ஆத்மார்த்தமான ஆசைகள் எதுவும் நிறைவேறாமல் இறக்கிறார்.

பிஷாட மன்னன் ஆட்சி செய்யும் சத்கரில் தூமகேது என்று கடைநிலை துப்புரவு தொழிலாளி , செய்யாத ஒரு குற்றத்திற்காகக் கைதாகிறான். ‘காலா’ என்ற ஒரு சிறை நகரில் அவனை அடைக்கிறார்கள். அவனைப் போல் பலர் செய்யாத குற்றத்திற்காகக் கைதாகி பல ஆண்டுகளாக அடைபட்டுக் கிடக்கிறார்கள்.

பிஷாட மன்னனின் விசித்திரமான தண்டனைகள் (தூக்கில் தொங்கும் யானை, விஷம் தின்று மறையும் பறவைகள்) ஒரே நேரத்தில் சிரிப்பையும் ஆழத்தில் அதிர்ச்சியையும் தருகிறது. இவனது நெருங்கிய நண்பன் ஒரு குரங்கு. இதுவே இவனது குணத்தை வெளிப்படுத்துகிறது. இவனும் இறுதியில் ஒரு டச்சு வனிகனுக்குக் குறங்காகிறான் . சத்கர் நகர்வாசிகள் அணைவரோடும் டெல்லிக்குச் செல்கிறான். வழியில் கடத்தப்பட்டுக் கைகால்கள் துண்டிக்கப்பட்டுக் கண் பிடுங்கப்பட்டுப் பாலையில் கைவிடப்படுகிறான் என்பிலதனைகள் போல் வெயிலில் காய்ந்து சாகிறான்.

அஜ்யா என்ற திருநங்கையின் வாழ்க்கை விவரிக்கப் படுகிறது. அவள் வீட்டைவிட்டு துரத்தப்பட்டு நடன மங்கையாகி, அரசரின் அணுக்கப் பணியாளராய் ஆகிறாள். அவுரங்கசீபின் மறைவிற்குப் பின் அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் தூக்கிலிடப்படுகிறாள்.

இன்னும் பல கதாபாத்திரங்களின் கதைகள் கூறப்பட்டுள்ளது. இந்நாவல் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட(இடக்கை போல்)மனிதர்களைப் பற்றிப் பெரும்பாலும் பேசினாலும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையால் புறக்கணிக்கப்படுகிறார்கள்

நாட்டின் அரசனும் கடைக்கோடி மனிதனும், தண்டனை தருபவனும் அதை வாங்குபவனும் அடைவது வெறுமையை அன்றி வேறு என்ன?

“நீதி என்பது நம் காலத்தின் மாபெறும் கொடை” என்னும் உணர்வையும், “நீதி என்பது வெறும் கற்பிதமோ?” என்ற எண்ணத்தையும் ஒரே நேரத்தில் இந்நாவல் நமக்கு ஏற்படுத்துகிறது.

பசியால் இறக்கும் சிறுவன், உணவு திருடும் தாய், அரச அந்தபுரத்தின் அதிகார கட்டமைப்பு, வணிகர்களின் தந்திரங்கள், பிராஜார்களின் சூழ்ச்சிகள், மதக் கலவரம், அக்கலவரத்தில் கொல்பவன் கொல்லப்படுபன், கடல் பயணத்தில் ஏற்படும் அபூர்வ நிகழ்வுகள் போன்ற அதிர்ச்சியும் ஆச்சரியமும் படவைக்கிற பல அத்தியாயங்கள் நாவல் முழுக்க உள்ளது.

“கண்ணிலிருந்து கசிந்து தானே உலரும் கண்ணீர்

இந்நாவலில் வரும் இந்த வரி ஒரு திடுக்கிட வைக்கும் வரி. வழியும் கண்ணீரை துடைக்க ஒரு கரம் நீளாமல் போவது எவ்வளவு வேதனைக்குரியது.

இந்நாவலின் வரும் முக்கியக் கதை மாந்தர்கள் அனைவரையும் இவ்வரிகள் மூலம் விளக்கலாம்.

இந்நாவல் தன் தரிசனமாக, வாசகனுக்கு ஒரு நம்பிக்கையாக, ஒரு கிராமத்தை காட்டுகிறது. தூமகேது சில நாள் வாழும் அந்தக் காந்திய கிராமம் (ஆம்! காந்திக்கு 300 வருடங்கள் முன்பு!) தன்னளவில் நிறைந்த, மனிதர்கள் மகிழ, ஒரு லட்சிய சமூகத்தை ஏந்தி நிற்கிறது.

காந்தியத்தைப் பூடகமாக வெளிப்படுத்தும் ஒரு வரலாற்று நாவல்! அபாரமான கட்டமைப்பு.

அரசன் அவுரங்கசீப் தன் கையால் ஆத்மார்த்தமாகச் செய்த ஒரு ‘பிரார்த்தனை குல்லா’ விதி வசத்தால் எங்கெங்கோ சென்று இறுதியில் தூமகேதுவின் தலையில் அமர்கிறது.

ஆனால் மஹா இந்துஸ்தானத்தின் பாதுஷா அவுரங்கசீப் செய்த குல்லா அது என்று அவனுக்குத் தெரியாது.

ஆம்! இயற்கை அல்லது விதி அல்லது கடவுள், மனிதனின் கண்ணீருக்கு ஆறுதலாக ஒரு சிறு குல்லாவை , ஒரு புறாவின் சிறகடிப்பை, ஒரு சூரிய உதயத்தை, ஒரு எளிய மலரை கொடுப்பதற்கு என்றுமே மறப்பதில்லை, என்ற நம்பிக்கையே இந்த அபத்தமான தொடர்ச்சியற்ற வாழ்வில், வரலாற்றில் ஒரு தூரத்து ஒளியாக, ஆழத்து நங்கூரமாக உள்ளது

••

இடக்கை நாவலை வாங்குவதற்கு :
Rs ₹375.00
Desanthiri Pathippagam
Address: D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu – 600093
ph 044 2364 4947 Cell : 8778435129
Archives
Calendar
July 2020
M T W T F S S
« Jun    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: