உபபாண்டவம் எனும் பிரம்மாண்டம்


- மா. ஹரிஹரன். கோவை

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உபபாண்டவம் எனும் நாவலை வாசித்தேன்

பொதுவாக மகாபாரதம் கதை என்பது நடந்த நிகழ்ச்சிகளை யாராவது வரிசைக்கிரமமாகக் கூறுவதாக இருக்கும். அதாவது Narrative style என்பதுபோல. இதில் திரு. எஸ்.ரா அவர்கள் ஒரு நாடோடிப் பயணியாக அந்தக் காலகட்டத்திற்குள் பயணித்து, அந்தக் கதைமாந்தர்களுடன் விவாதித்து, அவர்களுடைய மன வோட்டத்தினை அவர்கள் மூலமாகவும், மற்றவர் வாயிலாகவும் கூறுகிறார். கதைக்களம் முன், பின்னாக மாறுகின்றது.

மகாபாரதத்தில் பேசப்படாத சாமானிய மக்களிடம் இவர் பேசுகிறார். அந்த மக்கள் அரசாங்க விஷயத்தை எப்படிப் பேசிக்கொள்கிறார்கள் என்பதனையும் ஒரு செய்தி எப்படி மற்றவர்களைப் போய்ச் சேருகிறது என்பதனையும் அழகாக விவரிக்கிறார். மக்களின் வாழ்க்கை விரிவாக அலசப்படுகிறது. பெற்றோர்களால் வளர்க்க படாத பாண்டவர்களின் குழந்தைகளைப் பற்றிப் பேசுகிறது. ஒருத்தி ஐவருக்கு மனைவியான அவலத்தைப் பேசுகிறது. கொஞ்சம் போர் முறையையும், கொஞ்சம் போர் பயிற்சியையும், நிறைய மதுவையும், வழிந்தோடும் காமத்தையும், நிறையத் தனிமையையும், வருத்தத்தையும் வகைப்படுத்துகிறார்.

ஒவ்வொருவருக்கும், தாம் ஏமாற்றப்பட்டதாகவே வருத்தம் இருக்கிறது. அடுத்தவரின் மீது வன்மம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அகவுலகம் அழுக்காகத்தான் இருக்கிறது. இன்றைய அவசர உலகம், தன்னைப் பற்றிக் கூடத் தனியாக யோசிக்க விடாமல் இருக்கிறது. அகவுலகம் என்று ஒன்று இருப்பதாகக் கூடத் தெரியவில்லை. எப்போதும் பரபரப்பாகவே மற்றவர்களைப் பற்றியும், மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் அல்லது என்ன நினைக்க வேண்டும் என்பது பற்றியும் பேசிக் கொண்டும், கருத்து பதிவிட்டு கொண்டும் இருக்கிறார்கள். உள்நோக்கி பயணித்தல் என்பது இல்லாமலே போய்விட்டது. இந்தப் புத்தகம் அந்த அகத்தைப் பற்றித்தான் பேசுகிறது. திரு.கமலஹாசனின் பிக் பாஸ் ப்ரோக்ராமில் வரும் அகம் அல்ல இது. சுயத்தில் வருவது. கலாச்சாரக் கர்வம் கருதி மூல நூலிலிருந்து தமிழுக்கு வரும் போது, முறையற்ற விசயங்களைப் பொது வாக ஒதுக்கி விட்டார்கள். இப்போது மீண்டும் படிப்பது, கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் உள்ளது.இந்த புத்தகம் நன்றாக இருக்கிறதா, ஒருவருடைய கருத்துக்கு ஏற்ப இருக்கிறதா அல்லது இல்லையா என்பது அவரவரின் மனநிலை மற்றும் ரசனை குறித்தது.

மொத்தத்தில் சொல்வதென்றால் இந்தப் புத்தகம் ஒரு பிரமாண்டம். அசத்தியிருக்கிறார் திரு. எஸ் ரா. எங்குப் படித்தேன் என்று சரியாக நினைவில்லை. தான் எழுதிய புத்தகங்களில் மிகச் சிறந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று என்றும், தன்னாலேயே மீண்டும் இப்படி எழுத முடியுமா என்பது சந்தேகம் என்றும் அவர் எழுதியிருந்தார். உண்மைதான். இது வேறு வகை எழுத்து. துவக்கத்திலிருந்து இறுதி வரை அந்த எழுத்துக்கு ஒரு தனிப்பட்ட வாசனை இருக்கிறது. நிறையப் பேரின் நிறைவேறாத ஆசைகளும், கனவுகளும், அவமதிப்பு களும், கோபங்களும் கூடவே காற்றில் கரைந்து அரூபமாய் நம்மைச் சுற்றுகின்றன.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது சற்றே வேறான தமிழ் தெரிகிறது. அது இலக்கிய வகை அல்ல, இக்கால வகையுமல்ல. இந்தத் தமிழ், இந்தப் பாரதத்திற்கே உண்டானது போல் இருக்கிறது. நம்மை மயக்க நிலையிலேயே அடுத்தடுத்த அத்தியாயங்களை நோக்கி தள்ளுகிறார். இந்த மனிதர் எல்லாவற்றையும் பேச வைக்கிறார், உயிர் கொள்ள வைக்கிறார். காற்று, நதி, வெயில், மழை, மரம், குதிரை, நாய், பறவைகள்.. அப்பப்பா. போர்க்களக் காட்சிகள் கலிங்கத்துப் பரணியைப் பற்றியும், கொலம்பஸ் அமெரிக்காவை அடிமைப்படுத்திய வரலாற்றைப் பற்றியும், கொஞ்சம் எம் இலங்கை மக்களைப் பற்றியும் நினைவு கொள்ளச் செய்கின்றன. அற்புதமான உரைநடை. போரில் யாருக்கும் இன்பமில்லை. போரில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், அதற்கு உதவியாக எவ்வளவு பேர் எந்தெந்த வகையில் கஷ்டப்படுகிறார்கள் என்பதைக் காட்சிபடுத்துகிறார்.

தானியங்கள் எப்படி உழவர்களிடமிருந்து கட்டாயப்படுத்தி வாங்கப்படுகின்றன, போர் வீரர்கள் மான்களையும், முயல்களையும், வேட்டையாடி, வேட்டையாடி மிருகங்கள் இல்லாமல் போய்விட்ட அவலம்… அடிப்பட்ட மனிதர்கள் மற்றும் விலங்குகளின் அவலக்குரல். அனேகமாய் இன்றைய தூக்கம் கடினம்தான். இறப்பு என்பது இரண்டு பக்கமும் தான். வெற்றி பெற்ற மனம் சந்தோஷமாக இல்லை. யுதிஷ்டிரன் அரியணையில் ஏறும் போது மக்களில் பெரும்பான்மையோர் விதவைகள்,சிறுவர்கள். இரவு எல்லோரையும் கேள்வி கேட்கிறது. தூக்கம் இல்லாமல் எல்லோருமே தவிக்கிறார்கள்.

கதையின் போக்கில், தன்னுடைய காட்டை அழித்த கோபத்தில் இருக்கும் மயனே இந்தப் போருக்கு, இந்த மகாபாரதக் கதைக்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார். என்னைப் பொறுத்தவரையில் பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்திருக்கும் “சரதல்பம்” அத்தியாயம் அற்புதம், ஒரு மாஸ்டர் பீஸ் என்பேன். சிகண்டி பீஷ்மரை நோக்கி வில்லை இயங்கும்போது ஒரு வரி சொல்லுவதாக எழுதி இருக்கிறார் – “காலத்தின் மிக ஆழத்திலிருந்து அம்பாவின் குரல் கேட்கிறது. இது நேசிப்பைக் புறக்கணிக்கும் மனிதனுக்குரிய அஸ்திரம். மரணத்தைவிட வலியதென” சொல்லியபடி அம்பை விடுகிறான். என்னைப் பொருத்தவரை பாரதத்தின் அடியாழமே இங்குதான் இருக்கிறது. பீஷ்மர், அம்பையைக் கல்யாணம் செய்திருந்தால், பாரதம் வேறுவிதமாக இருந்திருக்கும். பாண்டவர்கள் வெற்றி கொள்வதோடு பாரதம் முடிவதில்லை. அவர்களுக்கும் வயதாகிறது. தனிமையின் கொடுமையை அனுபவிக்கிறார்கள். சாதாரணத் திருடர்களிடமிருந்து துவாரகையின் பொக்கிஷங்களை, பெண்களைக் காக்க முடியாமல் தடுமாறுகிறான் விஜயன். கிருஷ்ணனோ முதுமையடைந்து, ஒரு அம்பினால் இறக்கிறான். திருதராஷ்டிரனும், காந்தாரியும், குந்தியும் மூப்பினால் இறக்கிறார்கள். கடைசியில், பாண்டவர்களும். வாழ்க்கையின் தத்துவம் அழகாகக் குறியீடாக வெளிப்பபடுகிறது.

வெற்றி என்பது வாழ்க்கையில் வந்து போகும் ஒரு வானவில் மட்டுமே. அதுவே வாழ்க்கை அல்ல. திருதராஷ்டிரனுக்கு, பௌர்ணமி நாளின் சாதாரணப் புல் படுக்கை கூடப் போதுமானதாகிறது. கௌரவர்களின் அரண்மனைகளை, பாண்டவர்கள் பயன்படுத்தும் போது பல அறைகள் காலியாக இருக்கிறது. இதற்குத் தானா இவ்வளவும்? இதைத் தான் இன்று கரோனா நோய் தொற்று, நமக்கு நினைவு படுத்துகிறது.

கர்ணன், பீஷ்மரிடம் சொல்லுவான் “இந்த அம்புப்படுக்கை உங்கள் வாழ்வின் துவக்கத்திலிருந்தே சயனத்தில் பழகி விட்டிருப்பீர்கள். ரகசியங்களின் கூர்ஙுனிகளில்தான் இத்தனை நாட்களும் படுத்திருக்கிறீர்கள். இந்தச் சரதல்பத்தின் ஒரு அம்பு நானும் தானே”. உண்மைதான், நம் எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு ரகசியத்தின் கூர்நுனி உறுத்திக்கொண்டே இருக்கிறது. சிலநேரங்களில், சாகும்போது கண்ணீராய் வெளிப்படுகிறது. அந்தக் கண்ணீருக்கான விளக்கம் யாருக்கும் தெரியாது, அந்தக் கண்ணீரைத் தவிர. இது எனக்குத் திருக் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனை நினைவுபடுத்துகிறது. எல்லோருக்கும் பொன்னியின் செல்வனின் அடி நாதம் என்பது எப்படியோ தெரியவில்லை. அதைப் போலவே திரு டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய புத்துயிர்ப்பு என்னும் நாவலையும் ஞாபகப்படுத்துகிறது. அதாவது, இரண்டிலுமே மனசாட்சி என்பதைத்தான் முன்னிலைப்படுத்தி இருப்பார்கள். பொன்னியின் செல்வனில் சுந்தரசோழன் தான் செய்த தவறை எண்ணி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் கதைதான் அவ்வளவு பெரிய புதினம் ஆகிறது. அந்த மனசாட்சி தான் அந்தக் கதைக்கு அடிநாதம்.கங்காபுத்திரனின் மனசாட்சி தான், சிகண்டியின் அம்பை நெஞ்சில் ஏந்தி கொண்டு, விரும்பி மரணத்தை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. பீஷ்மர் சிகண்டியை கொன்றிருந்தாலும் பாரதம், மாறியிருக்கக்கூடும். நான் கூறும் கண்ணீரும் அப்படியே.

***

நாவலை வாங்குவதற்கு :

விலை ரூ 375.00

Desanthiri Pathippagam

Address: D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu – 600093

ph 044 2364 4947 Cell : 8778435129

Archives
Calendar
July 2020
M T W T F S S
« Jun    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: