குறுங்கதை 91 காதலில் விழுந்த புலி


காட்டிலிருந்த புலியொன்று நீர் அருந்துவதற்காக வந்த குளத்தில் ஒரு சிவப்புக் கொண்டை மீன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டது. அந்த மீனிற்குத் தன்னைக் கண்டுபயமில்லை என்பது புலிக்கு வியப்பாக இருந்தது. புலி தன்னைக் கவனிப்பதை அறிந்தவுடன் சிவப்புக் கொண்டை மீன் வேண்டுமென்றே வாலசைத்து துள்ளியது. புலிக்கு அது வேடிக்கையாகத் தோன்றியது.

என்னை கண்டு பயமில்லையாஎனக்கேட்டது புலி

தண்ணீரை விட நீ ஒன்றும் பலசாலியில்லை. நான் தண்ணீரில் பிறந்து வளர்ந்தவள்என்றது சிவப்புக் கொண்டை மீன்

புலிக்குச் சிவப்புக் கொண்டை மீனைப் பிடித்திருந்தது.

மறுநாள் புலி நீர் நிலைக்கு வந்த போது சிவப்புக் கொண்டை மீன் அதே உற்சாகத்துடன் துள்ளியது.

புலி தண்ணீர் குடிக்கும் போது சிவப்புக் கொண்டை மீன் சப்தமாகச் சொன்னது

உன் கோபத்தைத் தண்ணீரிடம் காட்டாதே

புலிக்கு அந்த மீனின் மீது கோபம் வரவேயில்லை. மாறாக அதன் மனதில் சிவப்புக் கொண்டை மீன் போலத் தானும் துள்ளியாட வேண்டும் என்ற ஆசை உருவானது.

புலி அந்த மீனைப் பார்த்துச் சொன்னது.

நீ அழகாக இருக்கிறாய். உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது

எனக்கும் தான். ஆனால் உன் உருவம் தான் என்னை அச்சமூட்டுகிறது

நான் உன்னைக் காதலிக்கிறேன். என் கண்களை மட்டும் பார். பயம் வராது“.

நீ எப்போதும் கோபமாகவே இருக்கிறாய். சந்தோசப்படவே தெரியலை. உன்னிடம் உற்சாகமேயில்லை உன்னை மாற்றிக் கொள்ளாமல் காதலிக்க முடியாதுஎன்றது சிவப்புக் கொண்டை மீன்

அப்படியே பழகிவிட்டேன், நான் ஒரு புலி

என்னையே நினைத்துக் கொண்டேயிருந்தால் உன் மனதில் காதல் நிரம்பும். அப்போது உன்னால் துள்ளி ஆட முடியும். `.` என்றது சிவப்புக் கொண்டை மீன்

நிஜமாகவா என்றபடியே புலி தன் இருப்பிடத்திற்குப் போனது. நாள் முழுவதும் மீனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. சிவப்புக் கொண்டை மீனின் அழகும். துள்ளும் விதமும் மனதில் காதலை நிரப்பியது. ஆனால் புலியால் மீன் போல துள்ளியாட முடியவில்லை.

மறுநாள் சிவப்புக் கொண்டை மீனைத் தேடிப் போய்ப் புலி சொன்னது

`.`உன்னை நினைத்துக் கொண்டாலும் என்னால் உன்போல் துள்ளியாட முடியவில்லை`.`

`.`நீ புலி என்பதையே மறந்துவிட வேண்டும். நீயும் ஒரு மீன் என நினைத்துக் கொள்என்றது சிவப்புக் கொண்டை மீன்.

அதன்படியே மறுநாள் புலி தன்னை ஒரு மீனாகக் கருதிக் கொண்டது. ஆனால் நீரில் துள்ளியாடுவது போல நிலத்தில் ஆட முடியவில்லை.

அடுத்த நாள் மீனைத் தேடிச் சென்றது. ஆனால் அந்தக் குளத்திலிருந்த சிவப்புக் கொண்டை மீனைக் காணவில்லை. ஏதோ ஒரு நாரை அந்த மீனைக் கொத்திக் கொண்டு போனதைப் புலி அறியவில்லை. அது மீனுக்காகக் குளக்கரையில் காத்திருக்க ஆரம்பித்தது.

சூரிய ஒளி தண்ணீரில் நடனமாடுவதைக் காணும் போது அதற்கு மீனின் நினைவு வந்தது. தன்னையே ஒரு மீனாகக் கருதிக் கொண்டு புலி நீரில் இறங்கி துள்ளியாடியது. அதைக் காணச் சிவப்புக் கொண்டை மீன் அங்கே இல்லை. அந்த ஏக்கம் புலியை வாட்டியது. அது பகலிரவாகக் குளக்கரையிலே காத்துக்கிடந்தது.

புலியால் அந்தச் சின்னஞ்சிறிய மீனை மறப்பது முடியாமல் போனது.

அதன் பிந்திய நாட்களில் புலி வேட்டையாடுவதை மறந்து குளக்கரையில் பகல் முழுவதும் காத்துக்கிடப்பதும் சில வேளை குளத்தில் தனியே துள்ளியாடிக் கொண்டிருப்பதும் ஏன் என எந்த விலங்கிற்கும் புரியவில்லை.

காதலில் விழுந்த பிறகு புலியாக இருந்தாலும் ஒரே விதி தானோ

•••

30.5.20

Archives
Calendar
July 2020
M T W T F S S
« Jun    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: