சாமானியர்களின் வாழ்க்கை

- மணிகண்டன்
”மழைமான்” – தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. இக்கதைகள் தனித்துவமான கதை சொல்லும் முறையைக் கொண்டிருக்கின்றன.
1. புலப்படாத பறவை : பணத்திற்கும் பொருளுக்கும் ஆசை கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இக்கால மனிதக் கூட்டத்தில் அபூர்வமான பறவை ஒன்றைத் தேடி பல மைல்கள் தூரம் 40 ஆண்டுகள் தேடி அலையும் ஒரு பறவையிலாரின் இடைவிடாத பயணங்கள் பற்றியும், அப்பறவையைக் கடைசி வரை பார்க்க முடியாமலே துயரத்துடன் இறந்து போகும் அந்த மாமனிதரைப் பின்பற்றி இன்னொரு நண்பர்கள் குழு அதே பறவையைத் தேடிச் செல்லும் பயணத்தின் மெனக்கிடலும், அக்கறையும் நேசிப்பும், கடைசியில் இறந்து போன இரட்டைவரி ஜோர்டன் காடையைத் தான் காணமுடிந்த துயரமும் தான் இக்கதையில் மனம் நெகிழச் சொல்லப் பட்டிருக்கிறது.
2. விரும்பிக்கேட்டவள்: சிறுவயது முதலே சினிமாப் பாடல்களை ரசித்துப் பாடும் ஒரு பெண் தன் அப்பாவினால் கண்டிக்கப்பட்டும் தண்டிக்கப்பட்டும் வளருகிறாள். அதுவும் பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடல்கள் என்றால் உயிர். படித்து ஆசிரியர் வேலை செய்து தனியாகவே வாழும் அந்தப் பெண்ணிற்குப் பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடல்கள் தான் ஒரே வாழ்க்கைத் துணை. நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயிலும் பாடல்களைச் சொந்த டேப் ரிக்கார்டர் மூலம் கேட்டுக் கொண்டே இருக்கிறாள். அவளால் அன்பு செலுத்தப்பட்ட அவளை முழுமையாகப் புரிந்து கொண்ட அக்காவின் மகன் பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் தன்னுடைய சித்தியை நினைத்து வருந்துவதை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் எஸ் ராமகிருஷ்ணன்.
3. அவன் பெயர் முக்கியமில்லை : இது வித்தியாசமான எதிர்பாராத ஒரு கதை. அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் ஒருவரின் மனைவி ஒருநாள் காய்கறி வாங்க மார்கெட் செல்கிறாள். அப்போது ஜீன்ஸ், டீசர்ட் அணிந்த ஒரு இளைஞன் பையுடன் காய்கறி வாங்க அலைவதை இருமுறை பார்க்கிறாள். காய்கறிகள் வாங்கிவிட்டுக் கிளம்பும்போது ஒருவனை நான்கு பேர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்வதைப் பார்க்கிறாள். அதைத் தொடர்ந்து சந்தையில் நடக்கும் கலவரமும் அசம்பாவிதங்களும், அதிலிருந்து அவள் தப்பித்து வீடு சேர்வதும் தான் கதை..
கதை முழுவதும் அந்தப் பெண்ணைப் பற்றியே சம்பவங்கள் நடந்தாலும் அவளைக் கடந்து செல்லும் ஒரு சிறிய பெயரேயில்லாத கதாபாத்திரம் தான் கதையின் தலைப்பாக வருகிறது என்பது ஆசிரியரின் வித்தியாசமான அணுகுமுறையைக் காட்டுவதாகவே நினைக்கிறேன்.
4. மழைமான் : சென்னையில் மின்வாரிய நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் ஐம்பது வயதுடைய ஒருவர் உடனே ஒரு மானைப் பார்க்க வேண்டும் என்று விசித்திரமாக நினைக்கிறார். கொஞ்ச நாளாகவே இப்படித் திடீரென ஏதாவொன்றை நினைப்பதும் உடனே அதைப் பார்த்துவிட வேண்டும் அல்லது செய்து விட வேண்டும் என்று தோன்றுவது ஏன் என்று அவருக்கே தெரியவில்லை. கதை ஒரு சாதாரண நிகழ்வைச் சொல்ல வந்தாலும், கதை முழுவதும் நகர வாழ்க்கை எப்படி மனிதர்களை மாற்றி வைத்திருக்கிறது? ஏன் இப்படிப் பணம் ஒன்றையே தேடி ஓடுகிறார்கள்? வயதானவர்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள்? போன்று பல கேள்விகளைக் கதாபாத்திரம் வழியாக ஆசிரியர் கேட்டுக் கொண்டே செல்கிறார்.
5. வெறும் பிரார்த்தனை : திடீரெனப் பழனிக்குக் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று குடிகார அப்பா சொன்னதால் இரண்டு பெண்களுடன் புறப்படும் ஒரு குடும்பத் தலைவி படும் அவஸ்தைகளைச் சொல்வதே இக்கதை. மனசு கஷ்டமாக இருக்கிறது என்று எங்காவது கடன் வாங்கித் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் கோயிலுக்குக் குடும்பத்தோடு செல்வதே இவரது வாடிக்கை. மதியம் மூன்றுக்கு பசியுடன் பழனியில் இறங்கும் அவர்களுக்குச் சாப்பாடு கிடைக்கும் கடையைத் தேடிச் சென்ற அப்பா ஐந்து மணிவரை திரும்பாததால் அவரைத் தேடும் மனைவியும் மகள்களும் படும் மனவேதனையை வேதனையோடு பகிர்ந்திருப்பார் ஆசிரியர். அத்தோடு அம்மாவை அடித்தும் கேவலமாகப் பேசியும் இழிவுபடுத்தும் பல சம்பவங்களை விவரிக்கும் போது இன்னும் பெண்களின் துயரம் முழுவதும் தீர்ந்து விடவில்லை என்றே தோன்றுகிறது.
6. எதிர்கோணம்:
தான் விரும்பிய படிப்பும் வாழ்க்கையும் அமையாத எண்ணற்றவர்களின் மன ஆற்றாமையையும் ஏக்கங்களையும் கடந்த கால நினைவுகளையும் நடத்துநரின் பாத்திரம் மூலம் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார் ஆசிரியர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று ஒரு இளைஞன் விலை உயர்ந்த காமிராவுடன் அருகில் இருப்பதால் அந்தக் காமிராவைத் தொட்டுப் பார்க்கவும் முடிந்தால் ஒரு படம் எடுக்கவும் எண்ணி அவனுடன் பலமுறை உரையாடுகிறார் கண்டக்டர். அவனோ அவருக்குச் சரியான படி பதிலளிக்காததோடு காமிராவைத் தொடக்கூட அனுமதிக்காமல் அவமதித்து விடுகிறான். அதனால் எழுந்த கோபத்தில் படியில் பயணம் செய்து உள்ளே வராமல் இருந்த அந்தக் காமிரா இளைஞன் உட்படப் பலரையும் கீழே இறக்கிவிடுகிறார். பேருந்து கிளம்பியவுடன் வெளியே எட்டிப்பார்க்கும் நடத்துநரை அந்தக் காமிரா இளைஞன் ஒரு போட்டோ எடுத்ததைப் பார்க்கும் அவர் அந்தப் போட்டோ சரியாக விழுந்திருக்குமா? என்ற சிந்தனையில் ஏக்கமுடன் டிக்கட் கொடுக்கிறார் என்று கதை முடிகிறது.
7. இன்னொரு ஞாயிற்றுக்கிழமை: சென்னையில் வேலையில்லாமல் நண்பனின் தயவில் அவனது அறையில் ஒண்டியிருக்கும் ஒருவன் தன்னிடம் இருக்கும் பழைய நண்பர்களின் விசிட்டிங் கார்டுகளில் ஒன்றை தேர்வு செய்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நல்ல மதியச் சாப்பாட்டைச் சாப்பிட்டு வரும் அவன் இந்த ஞாயிற்றுக்கிழமை அசோக் நகர் முகவரியில் இருக்கும் பாஸ்கர் என்ற நண்பன் வீட்டிற்குப் போனதில் அவன் எதிர்கொள்ளும் வேதனை நிறைந்த அனுபவமே இக்கதை.
8. ஓலைக்கிளி : அபார்ட்மெண்ட் ஒன்றில் வசிக்கும் மருத்துவர் ஒருவரைத் தேடி வரும் அவர்கள் ஊரில் ஒருகாலத்தில் பெரும் ரவுடியை பெயர் சொல்லி அழைத்து வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார். தன்னுடன் அழைத்து வந்த பெண்ணைத் தன் மகள் என்றும் அவளுக்கு மேற்படிப்பிற்காகப் பணம் தேவை என்றும், மருத்துவரின் உதவியை நாடி வந்திருப்பதாகக் கூறுகிறான். அவனுக்கும் மருத்துவருக்குமான நெருக்கத்தைக் கதை அழகாக விவரிக்கிறது.
9. மழையாடல் : நிகழ்காலக் கதையாகவே இருக்கிறது என்று ஆசிரியர் நினைத்தாரோ என்னவோ ஒரு சரித்திரக் கதை ஒன்றை அவர் பாணியில் கூறுவது தான் மழையாடல். மழை பெய்யும் பொழுது எல்லோருக்குமே ஒரு சந்தோஷம் கலந்த குளிர்ச்சியும் பழைய சம்பவங்களும் நிழலாடும். அதுபோல் மக்களுக்குக் கல்வி, மருத்துவம் போன்ற சேவைகள் செய்து வந்த பெண் புத்த பிக்குணிகள் சிலர் ஒரு பெருமழைக் காலத்தில் தங்களுக்குள் மழை பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது தான் இக்கதை.
சொந்த ஊரை, வீட்டை, பிடித்தமான மனிதர்களை, காதலை, பிரிவை என்று ஆளுக்கு ஒன்றாகச் சொல்ல, பிக்குணிகளின் தலைவியோ மழை மரணத்தை நினைவுபடுத்துகிறது என்கிறாள். ஒரு மழைக் காலத்தில் தான் பகைவர்களின் கையில் சிக்கித் தன் ஊரும் மக்களும் அழிந்து விட்டது. தான் இப்போது நாடற்றவள், அகதி என்றும் அதனால் தான் மழை எங்களின் துயரங்களை நினைவுபடுத்துகிறது என்பதாகக் கதை முடியும்.
கடைசி வரிகளைப் படிக்கும் போது நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் துயரங்கள் நினைவுக்கு வந்து மனம் சோகத்தில் ஆள்வதைத் என்னால் தடுக்கமுடியவில்லை.
10. தூய வெளிச்சம் : இதுவும் ஒரு வித்தியாசமான கதை என்றே கூறலாம். ஏனென்றால் ஒரு திருடன் பல ஆண்டுகளுக்கு முன் தான் திருடிய வீடு தற்போது இடிக்கப்படுவதைக் கண்டு வேதனையுறுவதும் தான் அங்குத் திருடிய நாளையும், அந்த வீட்டின் சிறப்பையும் அதில் வாழ்ந்த மனிதர்களையும் பற்றி நினைவு கூறுவது என்பது ஆசிரியருக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு.அந்த வீட்டை மையப்படுத்தி நிறையச் சம்பவங்களை நினைவு கூறுகிறான்
இப்படி எல்லாக் கதைகளிலும் யாரும் பார்க்காத பார்வையில் சாதாரண மனிதர்களின் வாழ்வில் நடக்கும் இன்பங்களையும் துன்பங்களையும் கதைகளாக வடித்துள்ளார். இது போன்ற சாமானியர்களின் வாழ்க்கையைப் படிக்கும் போது ஆசிரியரோடு நமக்கு ஒரு இனம் புரியாத பாசமும் பிணைப்பும் உண்டாகிவிடுகிறது. அதுவே மழைமான் தொகுப்பின் வெற்றி என்பேன்
••
Archives
Calendar
July 2020
M T W T F S S
« Jun    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: