குறுங்கதை 92 பேப்பர் கேமிரா

கோர்ட் வளாகத்திற்குள் கைவிலங்கிடப்பட்டு வீரசேகர் வந்த போது ஒன்றிரண்டு பேரே இருந்தார்கள். நீதிமன்ற விசாரணைக்காக அவனை அழைத்து வந்திருந்த காவலர் யாரோ வழக்கறிஞர் உடன் பேசிக் கொண்டிருந்தார். கோர்ட் துவங்க இன்னும் நிறைய நேரமிருந்தது.

அப்போது தான் அந்தப் பெண் கைதியைப் பார்த்தான். அடர் மஞ்சள் நிறத்தில் சுடிதாரும் சிவப்பு நிறத் துப்பட்டாவும் அணிந்திருந்தாள். கண்ணுக்குப் பொருத்தமில்லாத அகலமான கண்ணாடி. குளித்துக் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பியவள் போல நெற்றியில் சிறியதாகத் திருநீறு பூசியிருந்தாள். அவளுடன் இருந்த பெண் காவலர் யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தாள்.

கோர்ட் வளாகத்தில் இப்படியான அழகியைக் காண்பது வீரசேகருக்குச் சந்தோஷமாக இருந்தது. அருகில் போய்ப் பார்க்கலாம் என்பது போல வராண்டாவில் நடந்தான்.

வழக்கறிஞருடன் பேசிக் கொண்டிருந்த காவலர் முறைத்தபடியே “எங்கடா போறே“ எனக்கேட்டார். “இங்க வெயிலடிக்குது“ என்று பொய் சொல்லியபடியே சற்று நகர்ந்து அந்தப் பெண்ணை நன்றாகப் பார்த்தான். அவளும் அவனைக் கவனித்தது போலத் தெரிந்தது.

அந்தப் பெண் ஜாடையில் என்ன வேண்டும் என்று கேட்டாள். வீரசேகர் பதில் சொல்லாமல் அவளைப் பார்த்துச் சிரித்தான். அவள் வேண்டுமென்றே நாக்கை பாம்பு போல நீட்டிக் காட்டினாள். அவளைப் போலவே வீரசேகரும் செய்தான். உடனே அவள் கன்னத்தை உப்ப வைத்து வெடிப்பது போலப் பாவனைச் செய்தாள். அதை வீரசேகர் வெகுவாக ரசித்தான்.

பெண் காவலர் அவளைக் கவனித்தபடியே “சும்மா இருக்க மாட்டயாடீ“ என்று திட்டினாள். அதைக் கண்டு கொள்ளாமல் அவள் வீரசேகரைப் பார்த்து விரலால் சுண்டினாள். அதன் பொருள் என்னவென்று வீரசேகருக்குப் புரியவில்லை.

அதற்குள் காவலர் “சாப்பிடப் போகலாம்“ என அவனை அழைத்துக் கொண்டு கோர்ட் வளாகத்திலிருந்த சிற்றுண்டி கடையை நோக்கி நடந்தார். அந்தப் பெண்ணைத் திரும்பித் திரும்பி பார்த்தபடியே அவன் சிற்றுண்டி கடைக்குச் சென்றான். அவர்கள் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அந்தப் பெண் காவலர் அவளை அழைத்துக் கொண்டு சாப்பிட வந்திருந்தாள்.

எதிர்பெஞ்சில் உட்கார்ந்தபடியே அந்தப் பெண் சப்தமாக “ மொருகலா ஒரு ரவா தோசை “ என்று சொன்னாள். பெண் காவலர் அவளை முறைப்பது தெரிந்தது. அந்தப் பெண் தோசை வரும்வரை உதட்டை மேலும் கீழும் கடிப்பது போலச் செய்து கொண்டிருந்தாள். அதைக் காணும் போது வீரசேகருக்குச் சிரிப்பு வந்தது. அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

அவளுக்கு ரவா தோசை வந்தது. தோசையின் மீது சாம்பாரை ஊற்றியபடியே அவள் வீரசேகரைப் பார்த்துக் கண்ணடித்தாள். அவன் இட்லியைக் கையில் வைத்தபடியே “வேணுமா“ எனக்கேட்டான். அவள் பதிலுக்குத் தோசையைப் பிய்த்து குழந்தைக்கு ஊட்டுவது போலக் காட்டிவிட்டு அவளது வாயில் போட்டுக் கொண்டாள். அவளுக்குப் பசி அதிகமிருந்தது போலும் இரண்டு தோசைகள் சாப்பிட்ட பிறகும் பூரி வேண்டும் என்றாள். பெண் காவலர் “யார் கிட்ட காசு இருக்கு“ என்று கோவித்துக் கொண்டாள்.

மறுபடியும் அவர்கள் கோர்ட் வராண்டாவிற்கு வந்த போது அந்தப் பெண் கீழே கிடந்த காகிதம் ஒன்றை எடுத்து மடக்கி பேப்பர் கேமிரா போலச் செய்து அதில் அவனைப் புகைப்படம் எடுப்பது போலக் கிளிக்கினாள். போஸ் கொடுப்பது போல வீரசேகர் நடித்தான். அந்தப் பெண் சைகையிலே மணி என்னவென்று கேட்டாள். வீரசேகர் அருகிலிருந்து காவலர் கையில் கட்டிய வாட்சை பார்த்து மணி சொன்னான். அவள் அதற்கும் சிரித்துக் கொண்டாள்.

பெண் காவலர் அதைக் கவனித்திருக்க வேண்டும். வீரசேகரைப் பார்த்து முறைத்தபடியே “என்னடா சைட் அடிக்கியா“ என்று கேட்டாள். “இல்லக்கா. தெரிஞ்ச பொண்ணு மாதிரி இருந்துச்சி“ என்று சொன்னான் வீரசேகர். அதைக் கேட்டும் அவள் சிரித்தாள்.

அதன்பிறகு அவர்கள் இருவரும் சைகையிலே விளையாடிக் கொண்டிருந்தார்கள். சில நேரம் அவள் உதட்டை கடிப்பதும் கையால் தலையைக் கோதிவிடுவதும் விரலோடு விரல் கோர்த்துக் கொள்ளுவதுமாக இருந்தாள். என்ன பெண் இவள். இத்தனை பேர் மத்தியில் இவ்வளவு சேஷ்டைகள் செய்கிறாளே என வீரசேகர் அவளைக் கடித்துத் தின்பது போலப் பாவனைச் செய்தான்.

கோர்ட் வளாகத்திலிருந்த பரபரப்பில் யாரும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. மூன்று மணி நேரம் அவர்கள் பார்வையாலும் சைகையாலும் காதல் விளையாட்டில் கழித்தார்கள்.

பின்பு அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு பெண் காவலர் நீதிமன்றத்தின் இரண்டாவது தளத்திற்கு நடக்கத் துவங்கினாள். அவள் திரும்பிப் பார்த்துப் பை பை என்று டாட்டா காட்டியபடியே பெண் காவலருடன் சென்றாள்

வீரசேகருக்கான நீதி மன்ற விசாரணை 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அந்தப் பெண்ணிற்கு என்னவானது எனத் தெரியவில்லை.

பேருந்தில் திரும்பி வரும் போது அவன் தனக்குத் தானே சிரித்துக் கொண்டே வந்தான். அவனுடன் வந்த காவலர் முறைத்தபடியே “என்னடா லூசு மாதிரி சிரிச்சிகிட்டு இருக்கே“ என்றார்.

“லவ்வு சார் லவ்வு“ என்றான் வீரசேகர்.

“ரொம்பத் தேவைடா“ என்று காவலர் சலித்துக் கொண்டார்.

••

Archives
Calendar
July 2020
M T W T F S S
« Jun    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: