குறுங்கதை 93 தலைமறைவு

பிளேடைப் பாதியாக உடைத்துச் சவரம் செய்யும் பழக்கம் தலைமறைவு காலத்தில் தான் குணாவின் அப்பாவிற்கு ஏற்பட்டது. அரசியல் காரணங்களுக்காகக் அவர் மூன்று ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். அப்போது குணாவிற்கு வயது நான்கு. அப்பா எங்கோ வெளியூர் சென்றிருக்கிறார் என்று தான் வீட்டில் சொல்லியிருந்தார்கள்.

மணல் தேரிகளுக்குள் இருந்த சிறிய கிராமத்தில் அப்பா அடைக்கலம் புகுந்திருந்தார். அந்த ஊரிலிருந்த நாவிதர் கருப்பையாவின் அண்ணன் என்றே அவரைச் சொல்லி வைத்திருந்தார்கள்.

தலைமறைவு காலத்தில் அப்பா ஒரு வாளித் தண்ணீரில் குளிக்கப் பழகியிருந்தார். போலீஸ் தேடி வருவது தெரிந்தால் வறண்ட கிணற்றில் போய் ஒளிந்து கொண்டுவிடுவார். சிலவேளை நாட்கணக்கில் கிணற்றினுள் இருக்க வேண்டியது வரும். அப்போது பீடி தான் உணவு. தீக்குச்சி தீர்ந்துவிட்டால் ஊருக்குள் போய்வர வேண்டும் என்பதற்காகக் கல்லை உரசிக் கூடப் பீடி பற்றவைத்துக் கொள்வார்.

இரவில் வெட்டவெளியில் உறங்கும் போது காதுகள் இரண்டினையும் துண்டை வைத்து இறுக்கமாகக் கட்டிக் கொண்டுவிடுவார். அது போலவே கால் பாதங்களில் கிழிந்த துணியைச் சுற்றிக் கொள்வது வழக்கம். காதையும் காலையும் பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் எந்த இடத்திலும் உறங்கலாம் என்பதே அவர் கற்றுக் கொண்ட பாடம்.

தலைமறைவு வாழ்க்கையில் அவர் தச்சுவேலைகள் கற்றுக் கொண்டார். பச்சிலை வைத்தியம் பயின்றிருந்தார். ஒரு நாளில் இரண்டு வேளைகள் மட்டுமே சாப்பிடும் பழக்கமும் ஏற்பட்டிருந்தது.

தலைமறைவு காலத்தில் அப்பா கையிலிருந்தது ஒரேயொரு புத்தகம். அது நீலகண்ட பறவையைத் தேடி என்ற நாவல். அதை எத்தனை முறை படித்தார் என்று கணக்கேயில்லை. வங்காள கிராமத்தில் தானே வசித்தது போன்ற உணர்வை அப்பா அடைந்தார். இன்றும் அப்பாவின் பெட்டியில் கிழிந்து போன அந்த நாவலின் பிரதியிருக்கிறது.

தலைமறைவு வாழ்க்கையில் அப்பா நிறையப் பறவைகளை அறிந்து கொண்டிருந்தார். இப்போதும் எங்கே பறவைகள் சப்தம் கேட்டாலும் அது என்ன பறவை என்று சொல்லிவிடுவார். யாரோடு பேசக்கூடாது என்ற வைராக்கியம் அவரை மௌனியாக்கியிருந்தது. ஏதாவது கேட்டால் மட்டுமே இன்றைக்கும் பதில் சொல்லுகிறார்.

மூன்று ஆண்டுகளில் அவரது தோற்றம் மாறியிருந்தது. அவரது இயல்பும் வெகுவாக மாறியிருந்தது. முற்றிலும் புதிய மனிதர் போல ஒரு நாளிரவு அப்பா வீடு திரும்பினார். அவரது மெலிந்த தோற்றத்தைக் கண்டு அம்மா அழுதாள். என்ன நடந்தது. இத்தனை நாள் எங்கேயிருந்தார் என்று எதையும் அவர் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் அரசியல் மாற்றம் காரணமாக அவரைப் போன்றவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் நின்று போயின. முன்பு போலவே அவர் தனது வேலைக்குப் போகத் துவங்கினார். முப்பது ஆண்டுகள் கடந்து போனது. பணி ஓய்வு பெற்ற பிறகும் தலைமறைவு வாழ்வில் கற்றுக் கொண்ட பழக்கத்தை மாற்றிக் கொள்ளவேயில்லை.

அரைப் பிளேடால் சேவிங் செய்வதும், இரவில் காதைப் பொத்திக் கொண்டு உறங்குவதும், பச்சிலைகளை மென்று உடல் நோவைப் போக்கிக் கொள்வதும் அவரது இயல்பாகியிருந்தது.

ஒருமுறை இதைப் பற்றிக் கேட்டபோது அப்பா சொன்னார்

“தலைமறைவு வாழ்க்கை தான் எனது தேவைகளைத் துல்லியமாக அடையாளம் காட்டியது. பொருட்களை அதிகம் சேர்க்கச் சேர்க்க குற்றவுணர்வு அற்றுப்போகத் துவங்கிவிடுகிறது.  ஒடுக்கப்பட்ட எளிய  மக்களுக்காக போராடுகிற ஒருவன் அவர்களைப் போல  எளிய வாழ்க்கையை தானே வாழ வேண்டும்.  அதை  நான் உணர்ந்து கொண்டு விட்டேன். “

••.

Archives
Calendar
July 2020
M T W T F S S
« Jun    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: