குறுங்கதை 95 சுவரை ஒட்டிய கிளை

வீட்டின் பின்புறமிருந்த மாமரத்தில் சுவரை ஒட்டிய  கிளையில் இதுவரை ஒரு பறவை கூட வந்து அமர்ந்ததேயில்லை. நிறையக் கிளிகளையும் அணில்களையும் அந்த மரத்தில் காணுகிறேன். ஆனால் ஒரு கிளி கூட சுவரை ஒட்டிய கிளையில் அமர்ந்ததேயில்லை.

நாம் எந்த வீட்டிற்குப் போனாலும் நமக்கான ஆசனத்தைத் தேர்வு செய்து அமருவது போலத் தான் பறவைகளும் மரத்தில் தனக்கான கிளையில் அமர்கிறதா?.

சில நேரம் கிளிகளின் கூட்டமே தரையிறங்கும். அப்போதும் ஒரு கிளி கூட சுவரை ஒட்டிய கிளையில் அமராது.

ஒரே மரத்திலிருந்தாலும் ஒரு கிளை மட்டும் ஏன் ஒதுக்கப்படுகிறது. சுவரை ஒட்டிய கிளை சற்றே பெரியது. பக்கத்துவீட்டுச் சுவரை நோக்கியதாக வளர்ந்திருந்தது. அந்தக் கிளையில் ஒரு அணில் கூட ஓடியாடியதில்லை. ஏன் சுவர் விட்டுத் தாவிச் செல்லும் பூனை கூட அக்கிளை வழி செல்வதில்லை.

சுவரை ஒட்டிய  கிளையில் மாங்காய்கள் குறைவாகவே காய்க்கின்றன. அதை வீட்டோரும் பறிப்பதில்லை. மாஇலைகளைப் பறித்து வரச்சொல்லும் போதும் தாத்தா சுவரை ஒட்டிய  கிளையில் பறிக்காதே என்பார்.

அக்கிளையில் காற்றும் ஒளியும் சேர்ந்து பழத்தைக் கனியச் செய்கிறது. யாரும் பறிக்காத மாம்பழம் கனிந்து உதிர்ந்தாலும் எவரும் எடுப்பதில்லை. பால்கறக்க வரும் முத்தையா மட்டும் அப் பழத்தை எடுத்து ருசித்தபடியே “இந்த ருசி வேற பழத்துக்குக் கிடையாதும்மா“ என்பார்.

ஆனாலும் வீட்டில் ஒருவரும் அந்த மாம்பழத்தில் ஒன்றைக் கூட ருசித்ததில்லை.

ஐந்து பிள்ளைகளில் நடுவில் பிறந்தவன் என்பதால் வீட்டில் நான் கவனிக்கப்படாமல் போய்விட்டதைப் போலவே மரத்திலிருந்த அக்கிளை கவனிக்கபடாமலே போனது.

காரணமேயில்லாமல் ஒதுக்கப்படும் துயரம் அனைவருக்கும் ஒன்று தானில்லையா.

••

Archives
Calendar
July 2020
M T W T F S S
« Jun    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: