குளிர் மலை

சசிகலா பாபு சிறந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர். கல்குதிரையில் இவரது மொழிபெயர்ப்புகளை வாசித்திருக்கிறேன். அத்துடன் இவரது மொழியாக்கத்தில் வெளியான வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை – இஸ்மத் சுக்தாய் நூலை வாசித்திருக்கிறேன்.

தற்போது அவரது மொழியாக்கத்தில் வெளியான குளிர் மலை என்ற சீனக் கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பினை வாசித்தேன். தேர்ந்த மொழியாக்கம். தாவோயிச சிந்தனைகளை வெளிப்படுத்தும் இக்கவிதைகள் தனித்துவமிக்கவை.

ஹான்ஷான் என்ற ஜென் துறவி எழுதிய இக்கவிதைகள் மொழிபெயர்ப்பிற்குச் சவாலானவை. அதை மிகச்சிறப்பாக உள்வாங்கிக் கொண்டு சசிகலாபாபு மொழியாக்கம் செய்திருக்கிறார். இது அவரது தீவிர இலக்கிய ஈடுபாட்டின் அடையாளம் என்றே சொல்வேன். சசிகலா பாபுவிற்கு எனது பாராட்டுகள்.

குளிர்மலை என்பது இடத்தின் பெயர் மட்டுமில்லை. அது ஒரு அடையாளம். குறியீடு. அகத்தில் புத்தனைத் தேடும் நிலை. ஜென் கவிதைகளில் இயற்கையின் வழியே ஞானத்தை அறிவது முதன்மையானது.

குளிர்மலை விசித்திரமான காட்சிகள் நிறைந்தது ஆயிரம் மேகங்கள் கொண்ட உச்சியது. முப்பது ஆண்டுகள் அந்த மலையில் ஹான்-ஷான் வாழ்ந்திருக்கிறார். மலையோடு வாழ்வது என்பது துறவின் உயர்வான நிலை. No-mindன் வெளிப்பாடாகவே இக்கவிதைகளைக் காணுகிறேன்.

இந்த நூலைச் சிறப்பாக வெளியிட்டுள்ள எதிர் வெளியீட்டிற்கு வாழ்த்துகள்

**

0Shares
0