குறுங்கதை 97 கிணற்றடி பதுமைகள்

அந்தக் கிணற்றை வெட்டியன் சகரமல்லன். வடக்கிலிருந்து வந்த சகரமல்லனும் அவனது ஆட்களும் தென்மாவட்டங்களில் நிறையக் கிணறுகளை வெட்டியிருக்கிறார்கள். இது நடந்தது நானூறு ஆண்டுகளுக்கு முன்பு. சகரமல்லன் வெட்டிய கிணறுகளின் வடிவம் மற்றும் கலை நேர்த்தி வியப்பூட்டக்கூடியது.

அப்படி ஒரு கிணறு தான் பரமனின் ஊரிலிருந்தது. அது நல்ல தண்ணீர் கிணறு. அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துத் தான் ஊரே குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டது.

அந்தக் கிணற்றின் கிழக்கு மற்றும் மேற்கு பக்கம் இரண்டு பதுமைகளைச் செய்திருந்தான் சகரமல்லன். ஒரு அடி உயரத்திலிருந்த பெண் பொம்மைகள். அந்தப் பொம்மையின் சிறப்பு. கிணற்றில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை அந்தப் பொம்மைகளின் கண் எவ்வளவு திறந்திருக்கிறது என்பதை வைத்துக் கண்டறிந்துவிடலாம்.

கிணற்றில் தண்ணீர் சுரக்கச் சுரக்க பதுமைகளின் கண் முழுவதுமாக மலர்ந்திருக்கும். தண்ணீர் குறையத் துவங்கினாலே கண் மெதுவாக மூட ஆரம்பிக்கும். அந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றுவது அபூர்வம். ஆகவே எப்போதும் மலர்ந்த கண்களுடன் அந்தப் பதுமைகள் இருப்பதை மக்கள் கண்டார்கள். தண்ணீர் நிரம்பிய கிணற்றின் சந்தோஷம் அந்தப் பதுமையின் கண்களில் வெளிப்பட்டது.

ஆனால் காலமாற்றத்தில் விவசாயம் பொய்க்கத் துவங்கியது. மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர ஆரம்பித்தார்கள். கைவிடப்பட்ட குடிசைகளில் பூனைகள் அலைந்தன.

நல்ல தண்ணீர் கிணற்றில் தண்ணீர் குறைய ஆரம்பித்தது. அந்தப் பதுமைகளின் கண்கள் மெல்ல மூடிக் கொள்ள ஆரம்பித்தன. சில மாதங்களில் அந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றிப் போனது. பதுமைகளின் கண்கள் முழுமையாக மூடிக் கொண்டுவிட்டன.

தூர் வாறினால் மீண்டும் சுனையில் தண்ணீர் வரக்கூடும் என ஊர்மக்கள் கிணற்றைத் தூர் வாறினார்கள். ஆனால் நீரோட்டம் ஒடுங்கிவிட்டது. சுனையின் கண் உலர்ந்து போயிருந்தது. அந்தக் கிணற்றில் தண்ணீரின் சுவடேயில்லை. அந்த ஆண்டு மழையும் பெய்த்துப் போனது. கிணற்றடி பதுமைகளின் கண்கள் முற்றிலும் மூடிக் கொண்டுவிட்டன. மழையற்றுப் போன ஊரில் வாழ இயலாது என மக்கள் மேற்கு நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தார்கள். ஊரிலிருந்த கிணறுகள் யாவும் வறண்டு போயின. குடி நீருக்காக மக்கள் வெகுதொலைவு அலைந்தார்கள். வெறும் கிணற்றிலிருந்து அழுகையொலி போல ஒரு சப்தம் காற்றால் எழுப்பபட்டு வந்தது. இனியும் அந்த ஊரில் வாழ வேண்டாம் என மக்கள் ஊரை நீங்கினார்கள்.

பாதி ஊர் காலியானது. ஊரை விலக்கிச் செல்லும் மனிதர்களுக்குக் கிணற்றடி பதுமைகளின் மூடிய விழிகளைக் காணும் தைரியம் வரவேயில்லை. இதைத் தாங்க முடியாத ஒரு கிழவன் பதுமைகளின் தலையை மட்டும் உடைத்தெறிந்தான். தலையில்லாத இரண்டு பதுமையின் உடல்கள் வெறும் கிணற்றின் மீது நிற்பதைச் சூரியன் மட்டுமே பார்த்துக் கடந்து கொண்டிருந்தது

••

Archives
Calendar
August 2020
M T W T F S S
« Jul    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: