இடக்கை -ஒரு பார்வை

இடக்கை இருண்டகாலத்தின்  கதை.அதிகாரத்தின் இறைமைக்கும் பேராசைக்கும் தீனியாக்கப்படும்  சாமானியர்களின்  வாழ்க்கையை  சொல்லும் குரூர வரலாற்றின்  கதை.கிட்டத்தட்ட அரசியல் சூதும் -வஞ்சகங்களும்-படுகொலைகளும்- அழித்தொழிப்புக்களும்  நிரம்பிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தினை அதனுடைய தன்மைகெடாமல் வெளிப்படுத்திய நடப்புயுகத்தின் புனைவுப்பிரதியாக இடக்கை நாவலைக் கருதுகிறேன்.

இந்த நாவல் நெடுக பேரரசுகள் வீழ்ச்சியுறும் ஒலிகள் கேட்டபடியிருக்க,அந்தப் பேரரசுகளால் கொல்லப்பட்ட,நீதிமறுக்கப்பட்ட குரல்கள்  தம்மை அடையாள அழிப்புச்செய்து மவுனித்துக் கொண்டேயிருக்கின்றன.நாவலில் வருகிற தூமகேது,அஜ்ஜா பேகம் ஆகிய இவ்விரு கதாபாத்திரங்களின் மூலமாக நிகழ்த்தப்படும் – விவாதிக்கப்படும் ஒவ்வொரு சம்பவங்களும் வரலாற்றை விசாரணை  செய் என்று நிகழ்காலத்தை கட்டளை செய்கிறது.வாசகனை வரலாற்று விசாரணையாளனாக ஆக்குகிறது.அதன்பொருட்டு சம்பவங்களையே இந்நாவல் உருவாக்குகிறது.அதுவே இந்த  நாவலின் தனித்தன்மையும் அசலான உத்தியாகவும் எழுந்து நிற்கிறது.

இந்திய வரலாற்றில் முகாலய மன்னர்களின் குறிப்ப்பிடத்தகுந்த அரசர்களில் ஒருவரனான ஒளரங்கசீப் ஆட்சிக்காலத்தின் அந்திமநாட்களில் இருந்து தொடங்கும் இந்நாவல் ஒரு அலைபோல எழுந்தடிக்கிறது.அக்காலத்தின் இரைச்சல்களும்,திடுக்கிடல்களும்,அடிமுட்டாள்தனங்களும்,கோரங்களும்,வறுமை,தீண்டாமை,கொடுங்குற்றங்கள்,களவு,பசி,காமம்,ஏமாற்றங்களும்,துரோகங்களும், நம்பிக்கைகளும்,சத்தியங்களும்,உண்மையானவர்களும் என எத்தனையோ முகங்கொண்ட அலைகள் எழுந்தடித்த வண்ணமேயுள்ளன.சம்பவங்களின் மீது ஒரு வரலாற்றாய்வாளனுக்கு இருக்கும் கவனமும் கோணமும் எழுத்தாளனுக்கு வேறொன்றாகவே இருக்கும்.எழுத்தாளன் வரலாற்றாய்வாளனின் கண்களைக்கொண்டிருக்கவில்லை,மாறாக அவன் வரலாற்றை தனது புனைவிற்கு சக்திதருகிற  ஊட்டமாக கையாளுகிறான்.

கைதேர்ந்த ஒரு சிற்பியின் முதல் சந்திப்பில் கல்லாகநிற்குமொரு பொருள் – சிற்பியின் உளியால் கடைசிச் செதுக்கலை கண்ட பின்னர் போற்றக்கூடிய சிற்பமாக தோன்றுவதைப் போல எழுத்தாளன் வரலாற்றை செதுக்குகிறான்.ஆனால் அவன் வரலாற்றின் புனிதங்களை ஏற்கும் இடத்தில் ஏற்று,கலைக்கும் இடத்தில் கலைக்கவும் தயங்குபவனில்லை.எந்தவொரு  வரலாற்றிலும் அபத்தங்களும் -பொய்யான புனிதப்படலங்களும் இல்லாமலில்லை. அவற்றையே எழுத்தாளன் தன்னுடைய புனைவுகளின் மூலம் தகர்த்து எறிகிறான்.இடக்கை  நாவல் அதனையே செய்திருக்கிறது எனலாம்.

முற்றாகத் தன்னையே அது ஒருவரலாற்றின் சாட்சியாக முன்நிறுத்துகிறது.பல தகவல்களையும்,அதனுடன் கூடிய விவரணைகளாலும் அது ஒரு கலைப்பிரதியாக அவதாரம் கொள்கிறது.இந்நாவலின் எல்லாப் பக்கங்களும் காட்சிகளாலும் கதைகளாலும் நிறைந்துபோய் உருவாக்கும் உலகு – அதிர்ச்சிக்குரியது.வரலாறு என்றால் மிஞ்சுவது அதிர்ச்சி.அதுநேர்மைறையாகவும்  எதிர்மறையாகவும் மிஞ்சும்.அவ்வளவுதான்.

முகாலயப் பேரரசர் ஒளரங்கசீப் இறந்துபோன இரண்டாம் நாள்.சத்கரில் ஆட்டுத் தோல் பதப்படுத்துபவனும் ஒன்பது பிள்ளைகளின் தந்தையும் இடக்கைப் பழக்கம் கொண்டவனும் வறியவனுமான தூமகேது திருட்டுக்குற்றம் சுமத்திக் கைது செய்யப்பட்டான்.அதே இரவில் ஒளரங்கசீப்பின் அந்தப்புரப் பணியாளரும் அரவாணியும் மஹல்தாருமான அஜ்யா பேகம் அஹமது நகர் அரண்மனையில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டாள்”.

என்று நாவலின் இரண்டாவது அத்தியாயம்  தொடங்குகிறது. யார் இவர்கள்? எதற்காக இவர்களை அரசு  கைது  செய்கிறது? இவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு  இவர்களுக்கும்  உண்மையில்  சம்பந்தம்  இருக்கிறதா? இவர்களுக்கு  என்ன  ஆகும்? என ஆயிரம் கேள்விகளோடு  நாவல்  விரிந்து பயணிக்கத் தொடங்குகிறது.பிஷாட மன்னனின்  ஆட்சியில்  நீதிக்காக காத்திருக்கும்  பல கைதிகளில்  தூமகேது ஒருவனாக  சேர்க்கப்படுகிறான்.இன்னொரு சிறையில் அஜ்யா.இறந்துபோன ஒளரங்கசீப் ரகசியங்கள் யாவும் அறிந்த கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறாள்.இவர்களுக்கு மறுக்கப்படும் நீதியும் – நீதிக்காய் காத்திருக்கும் இவர்களைப்போன்ற பலருமே இந்தநாவலின்  முக்கிய மையம். அப்படியாயின் நீதி மறுக்கப்பட்டவர்களின் கதையை மட்டும் பேசும் நாவலா இடக்கை என்றால் அவர்களின் கதையையும் பேசும் நாவல் என்றே கூறமுடியும்.

ஏனெனில் இந்நாவல் அதிகாரத்தின் பலவிதமான கோரமுகங்களை உணர்த்துகிறது.மனிதர்களை மட்டுமல்லாமல் மிருகங்களைக்கூட வதைப்படுத்தும் அதிகாரத்தின் செயலை பல்வேறு தருணங்களில் சித்திரப்படுத்துகிறது.ஒரு வரலாற்றுக்காலத்தின் மொத்த தரிசனங்களையும் உருவாக்கிவிடவேண்டுமென்ற எத்தனங்கள் எதுவுமில்லாமல்  தனது எல்லையை வகுத்துக்கொண்டு நாவல் தன்னுடைய திசையில் சென்றுகொண்டேயிருக்கிறது.

பேரரசர்களின்  காலத்தில் நிலவிவந்த சாதியக் கொடூரங்களும் – அதனால் பாதிக்கப்படும் தூமகேதுவின் சிறிய பராயமும் நெஞ்சைத்திகில் கொள்ளச் செய்கின்றன. அந்தப் பக்கத்தைப் புரட்டுகிற போது மானுட நேயம் கொண்டவர் எவரெனினும் வெட்கித்தலைகுனிவர்.தூமகேதுவின் சிறைவாழ்க்கையில் அவன்சந்திக்கும் சாதியவதைகள் சொல்லிமாளாதவை. அந்த நிமிடத்தின் ஆற்றாமையும் உருவாகி நிற்கும் கேள்விகளுக்கு இன்று வரைக்கும் பதிலில்லை.நாவல் நீதி மறுக்கப்பட்டவர்களை நினைவுகூர்கிறது.நினைவுகூர்வதன் வழியாக நடப்பு வரலாற்றில் மீண்டும் நீதி கோருகிறது.நீதியென்பது என்னவென்று நினைவற்றுப்போன எல்லாக்காலத்திற்குமான அதிகாரத்திடமும்  நாவலின் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் நீதியைக் கோருகின்றன.

இந்நாவலில்  வருகிற  கதாபாத்திரங்களுக்குள் தொழிற்படும்  அகச்சுதந்திரம் மிகமுக்கியமானது.சுதந்திரமற்ற  காலத்து மனித அகங்களின் ஒவ்வொரு  சொல்லும் தமது சுதந்திரமற்ற நிலையையே பேசுகிறது.அந்தச் சொற்களின் நிழல்களையும் வெம்மையையும் நாம் உணரும்பட்சத்தில் நமக்குத் தெரியாத  இருண்டகாலமொன்றுக்குள்  இழுத்துச்செல்லப்படுவோம்.”இடக்கை” நாவலில் எஸ்.ரா அவர்களின் புனைவுலகம் இன்னொரு புதிய சாளரத்தின் வழியாக படைப்பு மொழியை அழைத்து வந்திருக்கிறது.அவ்வளவு எளிமையான,சுவைமிகுந்த,வியப்பூட்டும் மொழியும் கவித்துவ உரையாடல்களும் இந்த நாவலுக்கு செழுமை தந்திருக்கின்றன.அதில்  சில பகுதிகளை  பகிர்ந்து  கொள்கிறேன்.

1

ஒருவனை அல்லா மிகமோசமாக தண்டிக்க விரும்பினால்அவனை தேசத்தின் பாதுஷாவாக அமர்த்தி வேடிக்கை பார்ப்பார் எனச் சொல்வார்கள்.அரசபதவி என்பது ஒரு தண்டனை,வெளியேபகிர்ந்து கொள்ளமுடியாத வலிகள் நிரம்பிய தண்டனை.

2

அச்சத்தை உருவாக்குவது தான் ஆள்பவனின் முதற்பணி

3

எனது மரணத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வந்திருக்கிறேன்.

அதைக்கேட்டதும் பரிகாசமான குரலில் முகைதீன் சொன்னார்,

மூச்சு அடங்கியதும் இறந்துவிடுவாய்.இதில் தெரிந்துகொள்ள வேறு என்ன இருக்கிறது. மரணத்தைக் கண்டு எதற்காக பயப்பட வேண்டும்? அதைச் சந்தித்த பிறகு நீ இருக்கமாட்டாயே.சந்திக்கும் முன்பு நீ எவ்வளவு தயார் செய்து கொண்டாலும் பயனில்லை தானே?”

4

ஒருவன் விதியை நம்பத்துவங்கிய மறுநிமிசம் பலவீனமானவன் ஆகிவிடுகிறான்.பின்பு அவனால் அதிலிருந்து விடுபடவே முடியாது.

5

குற்றத்தின் நிழலில் வாழும்போது சிரிப்பது ஒன்றுதான் ஆறுதலானது

6

ஒருநாள் தூமகேது சக்ரதாரிடம் கேட்டான்

நீதி என்றால் என்ன?”

அவர் சிரித்தபடியே சொன்னார்.

அரசிற்கு எது நன்மை பயக்கிறதோ அதுவே நீதி

எஸ்.ராவின் புனைவுலகம் யதார்த்தவாதத்திற்கும் – மாய யதார்த்தத்திற்கும் இடையே ஆடும் ஊஞ்சல்.கதாபாத்திரங்களின் உரையாடல் மூலம் கதை நிகழும் சூழலை ஒரு படிமமாக மாற்றுகிறார்.அவ்வளவு ஆழமாக ஒவ்வொரு மனித மனத்தையும் ஊடுருவி மானுட எல்லையை தரிசிக்கத்தருகிறார்.நீதிக்காக காத்திருந்தவர்கள் தூமகேதுவும் – அஜ்யாவும் மட்டுமல்ல.ஆனால் இன்றுள்ள இவ்யுகத்தில்  நாமன்றி யார் தூமகேதுக்கள்  என்று  இந்த  நாவலை படித்து  முடிக்கையில்  ஒரு தயக்கம் நேர்கிறது.“அசையாதே என்ற கட்டளை தாக்கு என்ற தூண்டுதலாகவே உருமாறுகிறதுஎன்ற அமில்கார் கப்ரால் அவர்களின் கூற்றைப் வாசகனின் மனத்தில் எந்தக் கோஷமும் குரலுயர்த்தலும் இல்லாமல்  விதையூன்றுகிறார் எஸ் .ரா.

இடக்கை நீதியைக் கோருகிறது.குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படும் அவலத்தை அடையாளம் செய்கிறது.வரலாற்றின் கறைபடிந்த  கரங்களை மண்ணுக்கு மேலே  இழுத்துவந்து விசாரணை செய்கிறது.வரலாற்றின் இரத்த நெடி குடல்பிடுங்கி குமட்டுகிறது.வரலாற்றை ஒரு  புனைவெழுத்தாளன் அறுவைச்சிகிச்சை செய்கிறான்.அவனுடைய தரப்பு உண்மை.அவனுடைய மனிதர்கள் ஒடுக்கப்பட்டவர்கள். அவனுடைய சொற்கள் அவர்களுடையது.ஆகையால் “இடக்கை” நீதிமறுக்கப்பட்டவர்களின் மீட்சிக்காக அறத்தின்  நீட்சியோடு  அசையும் சுடர்.அதன்  வெளிச்சம் என்பது நீதியின் வரலாற்றில் அசைகின்றது.

-அகரமுதல்வன்

14.06.2020

Archives
Calendar
July 2020
M T W T F S S
« Jun    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: