குறுங்கதை 103 ஒரேயொரு கவிதை

கேதரின் எழுதிய முதற்கவிதை அவள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கணையாழி இதழில் வெளியாகியிருந்தது. அவளது அப்பா தான் கவிதையைத் தபாலில் கணையாழிக்கு அனுப்பி வைத்தவர். அது கூட அவளுக்குத் தெரியாது. ஒரு நாள் தபாலில் கணையாழி இதழ் வீட்டிற்கு வந்த போது அப்பா அதைப் பிரித்து பார்த்து கேதரின் கவிதை வந்துள்ள சந்தோஷம் மிகுதியால் அவள் படிக்கும் பள்ளிக்கே சென்றார்.

அப்பா ஏன் திடீரென பள்ளிக்கு வந்திருக்கிறார் எனப்புரியாமல் கேதரின் அவரைத் தேடி ஆபீஸ் ரூமிற்குப் போனபோது அப்பா ஒரு சாக்லெட்டை அவளிடம்  கொடுத்து உன் கவிதை கணையாழியிலே வந்துருக்கு என்றார்.

அவளால் நம்பமுடியவில்லை. நான் அனுப்பவேயில்லைப்பா என்றாள். நான் தான்மா அனுப்பி வைச்சேன் எனச் சிரித்தார்.

அவளை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியர் அறைக்குப் போய் அவளது கவிதையை வாசித்துக் காட்டினார். தலைமை ஆசிரியருக்கு அவளது கவிதை பிடிக்கவில்லை. படிக்கிற பிள்ளை எதுக்கு கவிதை எழுதிகிட்டு என்று அறிவுரை சொன்னார்.

அப்பா அந்த கணையாழி இதழை அன்றைக்குள் ஐம்பது பேருக்காவது வாசித்துக் காட்டியிருப்பார். அத்தோடு அக் கவிதையை ஜெராக்ஸ் எடுத்து ஊரில் இருந்த தாத்தாவிற்கும் அனுப்பி வைத்தார்.

தன் கவிதையை அச்சில் பார்த்தபோது கேதிரினுக்கு பெருமையாக இருந்தது. ஆனால் அவளது அம்மா பொம்பளை பிள்ளை கவிதை எழுதக்கூடாது என்று கறாராகச் சொன்னாள். அவளது அக்கா அது காப்பி அடித்து எழுதப்பட்ட கவிதை என்று குற்றம்  சாட்டினாள். தங்கை இவள்  எல்லாம் கவிதை எழுதினா உருப்பட்டமாதிரி தான் என்று திட்டினாள்.

அப்பா அவளது கவிதையை பிரேம்போட்டு வீட்டுச்சுவரில் மாட்டிக் கொண்டார். அதன் ஜெராக்ஸ் பிரதியை எப்போதும் மணிபர்சில் மடித்து வைத்திருப்பார். அலுவலகத்தில் புதியவர் யார் வந்தாலும் அதைக் காட்டி தனது மகள் கவிதை எழுதுவாள்  என்று பெருமையாகச் சொல்லுவார்.

முதற்கவிதை வெளியான சில வாரங்களில் அவள் கணிதபரிட்சையில் 78 மதிப்பெண் வாங்கிய போது கணித ஆசிரியர் கவிதை எழுதுறதுல கவனம் இருந்தா இப்படி தான் ஆகும் என்று திட்டினார், அதன் பிறகு அவளது பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் பலரும் அவள் காதுபட கேலி செய்தார்கள். திட்டினார்கள்.

புத்தாண்டின் போது அப்பா அவள் கவிதை எழுதுவதற்காக புதிய டயரி ஒன்றை வாங்கி வந்து கொடுத்தார். அவளால் ஒரு கவிதையை கூட அதில் எழுத முடியவில்லை. ஒரு நாள் வீட்டுவேலை செய்த மறுத்தாள் என்பதால் அம்மா அவள் வைத்திருந்த டயரியை பிடுங்கி கிணற்றில் போட்டாள். அது கேதிரினுக்கு மேலும் வருத்ததைக் கொடுத்தது. அப்பாவிடம் சொல்லி அழுதபோது அவர் நீ எழுதுறா. நான் இருக்கேன் என்று ஆறுதல்  சொன்னார். ஆனால் அவளால் இரண்டாவது கவிதையை எழுத முடியவேயில்லை.

கல்லூரி நாட்களில் விடுதி அறையில் இருக்கும் போது சில வேளைகள் கவிதை மனதில் தோன்றும். அதை அப்பாவிற்கு மட்டும் போனில் சொல்லுவாள். எழுதி அனுப்பி வையும்மா என்று சொல்லுவார். ஆனால் எழுத மாட்டாள்.

அவளது இருபத்துமூன்றாவது வயதில் அப்பா ஒரு நாள் மாரடைப்பால் இறந்து போனார். அன்று கேதரின் அழுத அழுகை சொல்லி முடியாது. அவளை அம்மாவோ, சகோதரிகளோ புரிந்து கொள்ளவேயில்லை. அப்பா ஒருவர் தான் புரிந்து கொண்டிருந்தார், அதுவும் அவள் எழுதுகிற கவிதைகளை நேசித்த ஒரே மனிதர் அப்பா மட்டும் தான் என கதறிக்கதறி அழுதாள். அப்பாவின் இறுதி நிகழ்வுகள் நடந்து முடிந்து வீடு வெறிச்சோடியது. பத்து நாட்களுக்குப் பிறகு அப்பாவின் அலமாரியைத் தேடியபோது புதிய டயரி ஒன்றில் அவள் ஹாஸ்டலில் இருந்த நாட்களில் போனில் சொன்ன கவிதைகள் அத்தனையும் சொல் மாறாமல் எழுதி வைத்திருந்தார். அதன் முகப்பில் கவிஞர் கேதரின் என்று சிவப்பு மசி பேனால் பெரிதாக எழுதியிருந்தார்.

கேதரின் அதைக் கண்டபோது வெடித்து அழுதாள்.

அவள் அந்த கவிதைகள் எதையும் வெளியிடவேயில்லை. அப்பாவே இல்லாத போது அந்த கவிதைகள் உலகில் யாருக்காக வெளியாக வேண்டும் என்று அவள் பெட்டியில் போட்டுப் பூட்டிவைத்தாள்.

ஒரேயொரு கவிதை அச்சில் வெளியானதோடு கேதரினின் கவிதை வாழ்க்கை முடிந்து போனது

••

Archives
Calendar
July 2020
M T W T F S S
« Jun    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: