குறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி

டோக்கியோ செல்லும் விமானத்தில் ராகேஷின் அடுத்த இருக்கையில் அந்த அழகி அமர்ந்திருந்தாள். பச்சை நிறமான கூந்தல். இயற்கையான கூந்தல் அப்படியிருக்காது தானே. அவள் ஏதோ செயற்கை வண்ணம் பூசியிருந்தாள். விலை உயர்ந்த கூலிங்கிளாஸ் அணிந்திருந்தாள். மெலிதான உதட்டுச்சாயம். கூடைப்பெண் வீராங்கனை போன்ற உடலமைப்பு. உயரம். கறுப்பு நிற உடை அணிந்திருந்தாள். கைவிரலில் பாம்பு மோதிரம் அணிந்திருந்தது விசித்திரமாக இருந்தது. அவள் பூசியிருந்த பெர்ப்யூம் விமானம் முழுவதையும் வாசனை கொள்ளச் செய்வது போலிருந்தது.

அவளுடன் என்ன பேசுவது எனத் தெரியாமல் கையில் இருந்த புத்தகத்தை மூடியபோது அவள் சிரித்தபடியே சொன்னாள்.

“நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் கதையில் ஒரு கார் சாலையோரம் நின்று கொண்டிருக்கிறது. அதன் எண் 6111 சரிதானா“ எனக்கேட்டாள்.

சட்டென படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை குனிந்து பார்த்தான் ராகேஷ். கதையின் முந்திய வரியில் அந்த கார் நின்றிருந்தது. அதே எண்தான். இந்த புத்தகத்தை முன்னதாக படித்திருந்தால் கூட எப்படி அந்த வரியை தான் படித்து முடித்தேன் என கண்டுபிடித்தாள் எனப் புரியாமல் திகைப்புடன் “சரியாகச் சொன்னீர்கள்“ என்றான்.

அவள் மெல்லிய புன்னகையுடன் “நான் ஆரூடம் சொல்பவள்“ என்றாள். “எனக்கு அதில் நம்பிக்கையில்லை“ என்றான் ராகேஷ்.

அவள் சிரித்தபடியே “நம்ப வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்துவதில்லை. 36ம் நம்பர் பயணி இன்னும் இரண்டு நிமிஷத்தில் வயிற்றுவலியால் அலறப்போகிறார் பாருங்கள்“ என்றாள். அவள் சொன்னது அப்படியே நடந்தது.

அவள் அதே சிரிப்புடன்  சொன்னாள்.

“உங்களுக்கு ஒரு நற்செய்தி மின்னஞ்சலில் வரப்போகிறது. இன்னும் மூன்று நிமிஷங்கள் கழித்து மின்னஞ்சலை சரி பாருங்கள்“ என்றாள். அவள் சொன்னது போலவே ராகேஷின் நிறுவனம் புதிய பொறுப்பு ஒன்றில் பதவி உயர்த்தி மின்னஞ்சல் அனுப்பியிருந்தது. வியப்பின் உச்சத்தில் ராகேஷ் அவளிடம் கேட்டான்.

“எல்லாவற்றையும் உன்னால் எப்படி சரியாகச்  சொல்ல முடிகிறது“.

அவள் சிரித்தபடியே சொன்னாள்

“நான் ஒரு கால சஞ்சாரி. எந்த காலத்திலும் என்னால் சஞ்சரிக்க முடியும்“

அவள் எது சொன்னாலும் நான் நம்புகிறவனாக மாறிப்போனான். அவள் தனது வாடிக்கையாளர்களின் அழைப்பின் பொருட்டு அடிக்கடி ஜப்பான் வந்து போகிறவள் என்பதை அறிந்து கொண்டான்.

“எதிர்காலத்தை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்துள்ள நீ உன்னை பற்றி ஆருடம் ஒன்றை சொல்வாயா“ எனக்கேட்டான்

“நான் இன்றைக்கு பிரச்சனையில் சிக்கிக் கொள்வேன்“ என்றாள் அவள்

“யாரால் எப்படி “எனக்கேட்டான்

“அது தெரியாது. ஆனால் இன்றைக்கு நிச்சயம் நடக்க கூடும். “

“காலத்தை முன்கூட்டியே தெரிந்த உன்னால் அதிலிருந்து தப்பிக்க முடியாதா“

யாராலும் முடியாது. என்றாள் அந்த அழகி

அதன்பிறகு கண்ணை சிமிட்டியபடியே சொன்னாள்

“இந்த பயணம் முடிவதற்கு நீ என்னை முத்தமிடுவாய்“

“நிச்சயம் மாட்டேன். என் மனைவியைத் தவிர வேறு பெண்ணை நான் முத்தமிட்டதேயில்லை“

அதைக் கேட்டு அவள் சிரித்தபடியே சொன்னாள்

“எனது ஆருடம் பொய்க்காது“

அவள் சொன்னது போலவே அடுத்த அரைமணி நேரத்தில் வானில் கடுமையான மழை. விமானம் தள்ளாட ஆரம்பித்தது. சட்டென ஒரு நிலையில் விமானம் குலுங்கியது. உறங்கிக் கொண்டிருந்தவர்கள் தடுமாறி விழுந்தார்கள். அந்தப் பெண் தடுமாற்றத்தில் என் தோள்களை பற்றிக் கொண்டிருந்தாள். அவள் சொன்னது அப்படியே நடந்தது. ராகேஷ் அவளை முத்தமிட்டுக் கொண்டிருந்தான். எப்படி அது என யோசிப்பதற்குள் அவள் தன் உதட்டினை துடைத்தபடியே சொன்னாள்

“உன் மனைவிக்கு நிச்சயம் இது தெரியவே தெரியாது“.

ஏன் இப்படி நடந்து கொண்டோம் என நினைத்தபடியே அந்த முத்தம் தந்த ரகசிய மகிழ்ச்சியோடு கண்களை மூடிக் கொண்டான் ராகேஷ்.

விமானம் டோக்கியோவில் தரையிறங்கியது. விமான நிலையத்தினுள் பயணப்பைகளை எடுக்க நடந்தபோது அவள் கைகாட்டியபடியே முன்னால் சென்று கொண்டிருந்தாள்.

ராகேஷ் தனது பயணப்பைகளை பெற்றுக் கொண்டு வாசலுக்கு வந்தபோது அந்தப்  பெண்ணை நான்கு காவலர்கள் கைது செய்து அழைத்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள்.

போதை மருந்துக் கடத்தல் செய்பவள் என்று சொன்னார்கள்.

அப்படியானால் அவள் சொன்ன ஆருடம். அதன் உண்மை.

ராகேஷிற்கு குழப்பமாக இருந்தது.

விமான நிலையத்தின் வெளியே வந்த போது அவளைப் போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நிறைய தொலைக்காட்சி கேமிராக்கள் அவளை படமெடுத்துக் கொண்டிருந்தன.

ஊரில் இருந்து மனைவி போனில் அழைத்தாள்.

“பயணத்தில் நல்ல உறக்கம். அதில் ஒரு விசித்திரக் கனவு“ என ராகேஷ் பொய் சொல்ல ஆரம்பித்தான்.

அவனது கார் சாலையில் வேகமாக செல்ல ஆரம்பித்திருந்தது.

•••

Archives
Calendar
August 2020
M T W T F S S
« Jul    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: