பாலைவனப் பள்ளி.

Khomreh (The Jar) என்ற ஈரானியத் திரைப்படத்தை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு திரைப்படவிழாவில் பார்த்தேன். மிகச்சிறந்த படமது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படத்தை நேற்றிரவு இணையத்தில் பார்த்தேன். இந்த 25 ஆண்டுகளுக்குள் சினிமா எவ்வளவோ மாறியிருக்கிறது. அதன் தொழில்நுட்பமும் கதை சொல்லும் முறையும்  வளர்ந்திருக்கிறது. ஆனால் நேரடியாக, எளிமையாக, வாழ்வின் நிதர்சனத்தை சொல்லும் ஒரு படம் எத்தனை காலம் கடந்தாலும் அதன் வசீகரத்தை இழப்பதில்லை என்பதற்கு Khomreh ஒரு உதாரணம்

ஈரானிய சினிமாவின் முன்னோடிப் படமாக கருதப்படுகிறது தி ஜார். ஈரானிய சினிமா அலை இரண்டாயிரத்தின் துவக்கத்தில் உலகெங்கும் வீசியது. திரைப்படவிழாக்களின் முக்கிய விருதுகளை ஈரானிய இயக்குனர்கள் அள்ளிச் சென்றார்கள். இன்று அந்த அலை ஒய்ந்திருக்கிறது. உண்மையில் நாம் பார்த்துக் கொண்டாடிய ஈரானிய திரைப்படங்களில் பாதி ஈரானில் வெளியாகவில்லை. தணிக்கை காரணமாக அவை பொதுமக்கள் பார்வைக்கு மறுக்கபட்டன. ஆனால் திரைப்படவிழாக்களில் அந்தப் படங்கள் காட்டப்பட்டு விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றதே திரைவரலாறு.

ஈரானில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்படுவதன் முன்பு அரசிடம் அதன் திரைக்கதையை சமர்பித்து அனுமதி பெறவேண்டும். இது போலவே படம் தயாரானதும் மறுபடியும் தணிக்கை நடைபெறும் மதம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக பல நல்ல படங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாகவே பெரும்பான்மை இயக்குனர்கள் சிறுவர்களை முதன்மைப்படுத்திய படங்களை உருவாக்கினார்கள். சிலர் சர்வதேச இலக்கியங்களில் முக்கியமானதாக கருதப்படும் சிறுகதைகளை. குறுநாவல்களை திரைப்படமாக உருவாக்கினார்கள்.

ஈரானிய சினிமா யதார்த்த வாழ்க்கையை மிக அழகாக படமாக்கிக் காட்டியது. அதன் தனித்துவம் கவித்துவமான அழகியல். ஈரானின் நிலக்காட்சிகள் பேரழகு மிக்கவை. அத்துடன் கதையின் மையமாக பயணம் அமைந்துவிடுகிற காரணத்தால் கதாபாத்திரங்களுடன் இணைந்து நாமும் ஈரானிய வாழ்க்கையினை நெருக்கமாக அறியத்துவங்குகிறோம்

1992ல் Ebrahim forouzesh இயக்கிய இந்த திரைப்படம் பாலைவனப் பகுதியிலுள்ள சிற்றூர் பள்ளி ஒன்றில் நடைபெறும் ஒரு நிகழ்வை முதன்மைப்படுத்துகிறது.

பாலைவனக் கிராமப்புற பள்ளி ஒன்றில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக மரத்தடியில் பெரிய தண்ணீர் ஜாடி ஒன்றிருக்கிறது. அதில் ஒரு டம்ளர்  செயினோடு இணைக்கபட்டிருக்கிறது. பள்ளி மாணவர்கள் அந்த ஜாடியிலிருந்து தண்ணீர் எடுத்து குடிக்கிறார்கள்.

படத்தின் துவக்கத்தில் தண்ணீர் குடிக்க மாணவர்கள் தள்ளுமுள்ளு செய்கிறார்கள். அப்போது ஒரு மாணவன் ஜாடியின் அடிப்பாகம் கீறல் விழுந்து தண்ணீர் கசிவதைச் சுட்டிக்காட்டுகிறான். யார் அதை உடைத்தது என ஆசிரியர் மாணவர்களை கோவித்துக் கொள்கிறார்.

புதிய ஜாடியை வாங்கும் வரை அதைப் பயன்படுத்த முடியாது என்ற நிலை ஏற்படுகிறது. அரசாங்கத்திற்கு விண்ணப்பித்து புதிய ஜாடி வாங்குவதற்கு நீண்ட காலமாகும் என்பதால் விரிசல் கண்ட ஜாடியை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என ஆசிரியர் முயற்சிக்கிறார்.

அவரது பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் தந்தையால் ஜாடியை சரி செய்ய முடியும் என அறிந்து அவரைப் பள்ளிக்கு அழைத்து வரச் சொல்கிறார். அந்த மாணவனும் அவனது தந்தையும் மறக்கமுடியாத கதபாத்திரங்கள். அவர் தனக்கு வேலை அதிகமிருப்பதாக சொல்லி பள்ளிக்கு வர மறுக்கிறார். இதனால் ஆசிரியரே அந்த மாணவனின் வீட்டிற்கு தேடிப்போகிறார். அது ஒரு அழகான காட்சி.

இரவில் மாணவன் வீட்டிற்கு ஆசிரியர் வருகிறார். மாணவனின் தாய் அவசரமாக வீட்டை ஒழுங்குபடுத்துகிறாள். ஆசிரியரை வரவேற்கிறாள். அந்த மாணவனின் தந்தை நேரில் வந்து அழைத்தாலும் தனது வேலையைப் போட்டுவிட்டு பள்ளிக்கு வந்து ஜாடியைச் சரிசெய்ய முடியாது என்கிறார். இதனால் ஆசிரியர் கோவித்துக் கொண்டு வெளியேறி  போகிறார்

மறுநாள் அந்தப் பையனும் அவனது அம்மாவும் எவ்வளவோ சொல்லியும் அந்த தந்தை கேட்பதில்லை. இதனால் மாணவன் பள்ளிக்குப் போக மறுக்கிறான். ஆத்திரமான பையனின் அம்மா தன் கணவனுடன் சண்டையிடுகிறாள். முடிவில் அவர் பள்ளிக்கு வந்து ஜாடியைப் பார்வையிடுகிறார்

ஜாடி மிக மோசமான நிலையில் இருப்பதால் அதைச் சரி செய்ய முடியாது என்கிறார். தற்காலிகமாக அதைச் சரிசெய்து தரும்படி கேட்கவே முட்டை, சாம்பல். சுண்ணாம்பு இருந்தால் பூசித் தர முடியும் என்கிறார்.

பள்ளி மாணவர்கள் அவரவர் வீடுகளில் இருந்து ஒரு பொருளைக் கொண்டுவர வேண்டும் என ஆசிரியர் அறிவிக்கிறார். பெரும்பான்மை வீடுகளில் சாம்பல் கொண்டு போகும்படி சொல்கிறார்கள்.  ஆனால் ஒரு மாணவன் முட்டை கொண்டு போக விரும்புகிறான். அவனது பாட்டி ஒத்துக் கொள்ள மறுக்கிறாள். நான்கே மாணவர்கள் மட்டுமே முட்டை கொண்டு வருகிறார்கள். அது போதாது என்று ஆசிரியர் கவலைப்படுகிறார்

இதற்கிடையில் மாணவர்களிடம் முட்டை கேட்டு  தொந்தரவுசெய்வதாக பெற்றோர்கள் ஆசிரியரிடம் சண்டை போடுகிறார்கள். அவர் கோவித்துக் கொண்டு முட்டைகளை திரும்பக் கொண்டு போகும்படி சொல்கிறார். மாணவர்கள் அதை ஏற்கவில்லை.

முடிவில் முட்டையின் வெள்ளையும் சாம்பலும் சுண்ணாம்பும் கலந்து அந்த ஜாடி பூசப்படுகிறது. மீதமான முட்டையின் மஞ்சள் கருவை பொறித்து மாணவர்களுக்கு ஆளுக்கு ஒரு ஸ்பூன் முட்டை பொறியல் தருகிறார் ஆசிரியர். சில மாணவர்களுக்கு போதவில்லை என்பதால் தன்னிடமுள்ள ஜாம் பாட்டிலில் இருந்து இனிப்பு ஜாமை அள்ளித் தருகிறார். ஜாடி பூசப்படுகிறது

ஆனால் அப்படியும் நீர்க்கசிவு நிற்கவில்லை. இவ்வளவு போராடியும் தோல்வியில் முடிந்துவிட்டதே என ஆசிரியர் கவலை கொள்கிறார். படத்தில் ஆசிரியராக நடித்துள்ளவர் அற்புதமாக நடித்திருக்கிறார். இயலாமையை வெளிக்காட்டிக் கொள்ளாத அவரது முகபாவம் மறக்கமுடியாதது.

பள்ளியை ஒட்டிய ஒடையில் போய் மாணவர்கள் தண்ணீர் குடிக்கிறார்கள். அதில் ஒரு மாணவன் தவறி விழுந்துவிடுகிறான். அவனைச் சக மாணவன் காப்பாற்றி மீட்கிறான். குளிர்காய்ச்சல் வந்துவிட்ட அந்த மாணவனை அவனது வீடு தேடிப் போய் பார்த்து கஞ்சி வைத்துக் குடிக்கத் தானியம் தருகிறார் ஆசிரியர். அவருக்கும் மாணவர்களுக்குமான பிணைப்பும் அன்பும் மிக அழகாக காட்சிப்படுத்தபட்டிருக்கிறது

முடிவில் அந்த கிராமத்திலுள்ள ஒரு பெண் தானே ஒரு தண்ணீர் ஜாடியை வாங்கித் தரப்போவதாக அறிவிக்கிறாள். அவளது முயற்சி என்னவானது என்பதே படத்தின் பிற்பகுதி.

கிராமப்புற பள்ளியும் ஒராசிரியரும் மிக யதார்த்தமாக சித்தரிக்கபட்டிருக்கிறார்கள். கதை 1963ல் நடக்கிறது. அதே காலகட்டத்தில் இந்தியாவில் இது போல ஒரு ஆசிரியர் ஆடு மேய்க்கும் பழங்குடிகள் வாழும் மலைக்கிராமம் ஒன்றுக்கு பணிக்கு செல்வதை பன்கர்வாடி என்ற மராத்திய நாவல் விவரிக்கிறது. இந்த நாவலை நடிகர் அமோல்பலேகர் திரைப்படமாக இயக்கியுள்ளார். இந்த நாவலில் வரும் ஆசிரியரும் ஈரானிய படத்தில் வரும் ஆசிரியரும் ஒன்று போலவே இருக்கிறார்கள். கிராமவாசிகளால் ஒன்று போலவே நடத்தப்படுகிறார்கள்.

கோவித்துக் கொண்டு அந்த பள்ளியை விட்டு ஆசிரியர் கிளம்பும் நேரத்தில் ஊரே கூடி அவரைச் சமாதானப்படுத்தும் காட்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக படமாக்கபட்டிருக்கிறது.

பள்ளி மாணவர்கள் வழியாக அந்த கிராமமும் அவர்களின் வாழ்க்கை தரமும் நுட்பமாகக் காட்டப்படுகிறது. வறுமையான வாழ்க்கை. சின்னஞ்சிறிய வீடுகள். பிள்ளைகள் எப்படியாவது படித்து முன்னேற வேண்டும்  என ஆசைப்படும் பெண்கள். முன்கோபியான ஆண்கள், பேரன் பேத்திகளை நேசிக்கும் தாத்தா பாட்டிகள் என அந்த ஈரானிய கிராமம் நமது சொந்த கிராமத்தையே நினைவுபடுத்துகின்றன.

மொராதி கெர்மானி என்ற எழுத்தாளரின் குறுநாவலை அடிப்படையாகக் கொண்டே இந்த திரைப்படம் உருவாக்கபட்டிருக்கிறது.

பாலைவன வாசிகளுக்கு தான் தண்ணீரின் மகத்துவம் தெரியும். படத்தில் வரும் பள்ளி மாணவர்கள் வயிறு நிறைய தண்ணீர் குடிக்கிறார்கள். ஒரு மாணவன் நிறைய தண்ணீர் குடிக்காதே என்று கூட தடுக்கிறான். ஆனால் அதை பொருட்படுத்தாமல் மற்ற மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் விதத்தை பார்க்கையில் அது தீராத தாகம்  என்பது புரிகிறது. அதுபோலவே அவர்கள் ஒடையில் குனிந்து தண்ணீர் குடிக்கும் போது விலங்குகள் போல நடத்தப்படுவதாகவே நாம் உணருகிறோம்.

பள்ளியில் தண்ணீர் ஜாடி வைக்கபட்டுள்ள மரம் ஒரு சாட்சியம் போலவே உள்ளது. அது தான் பள்ளியில் நடைபெறும் சகல நிகழ்வுகளுக்கும் மௌனசாட்சி.

ஆசிரியர் பள்ளியிலே தங்கிக் கொள்கிறார்.குறைவான உடைகள். எளிய வாழ்க்கை என வாழும் அந்த ஆசிரியர் தன்னை ஊர்மக்கள் புரிந்து  கொள்ளவில்லையே என ஆதங்கப்படுகிறார். ஆனால் அவரை மாணவர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்

பூசப்பட்டு புதிதான ஜாடியில் இருந்து யார் முதற்குவளை தண்ணீர் குடிப்பது என மாணவர்கள் போட்டிபோடும் போது ஒரு மாணவி, ஆசிரியர் தான் குடிக்க வேண்டும் என்கிறாள். அது தான் அவர்கள் காட்டும் அன்பின் அடையாளம்.

கிராமத்தின் தலைவர் போன்று வரும் முதியவர் ஒரு காட்சியில் ஆசிரியரைக் கட்டிக் கொண்டு அவர் மிகவும் நல்லவர் என்று உணர்ச்சிப்பூர்வமாக சொல்கிறார். அது கிராமம் அவரை முழுமையாக ஏற்றுக் கொண்டதன் சாட்சியம்.

ஒரு மலரைப் போல அடுக்கடுக்காக படத்தில் சம்பவங்கள் விரிந்து கொண்டே போகின்றன. காட்சிகளை மிக எளிமையாக படமாக்கியிருக்கிறார்கள். நேர்த்தியான ஒளிப்பதிவு, இசை. படத்தொகுப்பு. தொழில் முறை சாராத நடிகர்கள்

இன்றும் இந்தியாவில் இது போன்ற ஒராசிரியர் பள்ளிகள் இருக்கவே செய்கின்றன. அங்கே இது போல சிறிய தேவைக்கு கூட நீண்டகாலம் காத்திருக்கும் சூழலே உள்ளது.

இந்திய இலக்கியத்தில் பிரதானமாக எழுந்த யதார்த்தமான எழுத்துமுறை போல சினிமாவில் உருவாகவில்லை. அதை நோக்கி நம்மைக் கவனப்படுத்த இது போன்ற படங்கள் மிகவும் அவசியமாக உள்ளன.

**

July 14 20

Archives
Calendar
August 2020
M T W T F S S
« Jul    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: