டர்னரின் கடற்காட்சிகள்.

Mr Turner  என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். பிரிட்டீஷ் ஒவியரான வில்லியம் டர்னர் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட படமிது. 2014ல் வெளியான திரைப்படத்தை Mike Leigh  இயக்கியிருக்கிறார். இப்படம் டர்னரின் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை மட்டுமே முதன்மைப்படுத்துகிறது. குறிப்பாக அவரது கடைசி நாட்களை.

டர்னரின் நிலக்காட்சி ஒவியங்கள் தனித்துவமானவை. குறிப்பாக கடல் சார்ந்த ஒவியங்கள் அவரது முத்திரை ஒவியங்களாகக் கருதப்படுகின்றன.  The Slave Ship  என்ற ஒவியத்தில் தான் எத்தனை நுட்பமான சித்தரிப்புகள்.  கடலின் சீற்றமும் அலைக்கழிக்கபட்டு மூழ்கும் கப்பலும் அதில் சிக்கிக் கொண்ட அடிமைகளின் துயரமும் மிகவும் நுண்மையாக வரையப்பட்டிருக்கின்றன. டர்னர் தேர்வு செய்யும் நிறங்களும் அதைப் பயன்படுத்தும் விதமும் நிகரற்றவை. மஞ்சள் வண்ணத்தை டர்னர் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

தனது பதினான்கு வயதில் ஒவியம் கற்பதற்காக ராயல் அகாதமியில் சேர்ந்த டர்னர் பதினைந்து வயதிலே ஒவியராக அடையாளம் காணப்பட்டுவிட்டார். அவரது முதல் ஒவியமே ராயல் அகாதமியால் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கபட்டது.

கட்டிடக்கலையின் மீது தீவிர ஈடுபாடு கொண்ட டர்னர் இங்கிலாந்தின் பழைய கோட்டைகள். மாளிகைளை ஒவியம் வரைவதில் அதிக ஆர்வம் காட்டினார். கட்டிக்கலைஞர்களுடன் இணைந்து அடிப்படை பாடங்களை கற்றுக் கொண்டார், அவரது ஒவியத்திறமையை கண்ட சககலைஞர்கள் முழுநேர ஒவியராகும்படி ஆலோசனை கூறினார்கள். அதன் படியே டர்னர் முழுமையாக ஒவியம் வரைவதிலே வாழ்க்கையை கழிக்கத் துவங்கினார்.

படத்தின் ஒரு காட்சியில் டர்னர் எவ்வாறு நிறங்களை தேர்வு செய்கிறார் என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான காட்சி புகைப்படக்கலை அறிமுகமான காலத்தில் முதன்முறையாக டர்னர் ஒரு ஸ்டுடியோவிற்கு புகைப்படம் எடுக்கச் செல்கிறார். அவருக்கு கேமிரா வியப்பூட்டும் சாதனமாகவுள்ளது. அது குறித்து நிறைய கேள்விகள் கேட்கிறார்

அந்த புகைப்படக்கலைஞர் கேமிரா அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டது எனப் பெருமையாகச் சொல்கிறார்.   புகைப்படக்கலைஞர் டர்னரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து அவரது முகத்திற்கு ஒளியூட்டி பார்வையை சரிசெய்து சில நிமிஷங்கள் சலனமற்றிருக்கும்படி சொல்கிறார். டர்னரின் புகைப்படம் எடுக்கபடுகிறது. அவரால் நம்பவே முடியவில்லை. தத்ரூபமாக தனது உருவம் ஒரு கேமிரா வழியாகப் பதிவு செய்யப்படுகிறதே என வியப்படைகிறார்.

இந்தக் கேமிரா எதிர்காலத்தில் ஒவியர்களுக்கு வேலையில்லாமல் செய்துவிடுமா எனக் கவலையோடு கேட்கிறார்  டர்னர். புகைப்படக்கலைஞர் அந்த கேமிரா எத்தனையோ அதிசயங்களைச் செய்யப்போவதாக சொல்கிறார்.

மறுமுறை டர்னர் தனது துணைவியாருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அப்போது துணைவியாரின் உறைந்து போன முகபாவம் மறக்கமுடியாதது.

அது போலவே டர்னர் ஒவியம் வரைவதற்காக சோபியா பூத்தின் விடுதிக்குச்  சென்று அறை எடுத்து தங்குகிறார். அவளுடன் நெருக்கமான உறவு ஏற்படுகிறது. கணவரை இழந்த அவள் தனியாக வாழுகிறாள். டர்னரின் இறுதிநாட்கள் வரை அந்த காதல் தொடர்ந்தது.

டர்னர் திருமணம் செய்து கொள்ளாதவர். அவரது இல்லத்தை பராமரிக்கும் ஹானாவோடு இணைந்து வாழுகிறார். அவள் ஒருத்தி தான் டர்னரை நன்றாகப் புரிந்து கொண்டவள். உலகைப் பொருத்தவரை டர்னர் ஒரு அகம்பாவி. கோபக்காரர், அலட்சியமாக நடந்து கொள்பவர். ஆனால் ஹானாவிற்கு அவர் அன்பான மனிதர்.  அவருக்குத் தேவையான சகல உதவிகளையும் செய்கிறாள்.

டர்னருக்கு கள்ளஉறவில் பிறந்த இரண்டு மகள் இருக்கிறார்கள். எவலின், ஜார்ஜினா என்ற இரண்டு மகளும் ஒரு காட்சியில் டர்னரைக் காண வருகிறார்கள். அப்போது அவரது பேரக்குழந்தையை அவருக்கு காட்டி ஆசி கேட்கிறார்கள். டர்னர் அந்தப் பெண்களை தனது வாரிசாக அங்கீகரிக்கவேயில்லை.

டர்னருக்கும் அவரது தந்தைக்குமான உறவு விசித்திரமானது. டர்னரின் தந்தை ஒரு விக்மேக்கர். டர்னரின் தாய் மனநலமற்றவர். லண்டனிலுள்ள மனநலவிடுதியில் அனுமதிக்கபட்டு சிகிட்சைப் பலன் அளிக்காமல் இறந்து போனவர். மாமா வீட்டில் தான் டர்னர் வளர்க்கபட்டார். டர்னர் ஒவியரான பிறகு அவரது தந்தை டர்னரின் உதவியாளர் போல ஒவியம் வரைவதற்கு தேவையான பணிகளை செய்து கொண்டு கூடவே இருந்தார். அவர்களுக்குள் இருந்த தோழமை உணர்வு படத்தில் அழகாக காட்சிப்படுத்தபட்டிருக்கிறது.

தந்தையின் மரணம் டர்னரை உலுக்கியது. அதன்பிறகு அவர் வரைந்த ஒவியங்களில் அந்த வெறுமை பிரதிபலிப்பதாக கலை விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

சூரிய ஒளியைப் பெரிதும் ஆராதித்த டர்னர் சூரிய உதயக் காட்சிகளை நிறைய வரைந்திருக்கிறார். The Sun is god என்ற வார்த்தையை டர்னர் கடைசியாக முணுமுணுத்தபடியே இறந்து போனார் என்கிறார்கள்.

திரைப்படத்தின் ஒரு காட்சியில் டர்னர் பனிப்புயலை ஒவியம் வரைய வேண்டும் என்பதற்காக ஒரு கப்பலில் தன்னை கயிற்றால் கட்டிக் கொண்டு இரவு முழுக்க பனியில் நிற்கிறார். அந்த அனுபவத்திலிருந்தே ஒவியம் வரைகிறார். கொட்டும் பனியில் இருந்த காரணத்தால் மூச்சிரைப்பு ஏற்படுகிறது. மருத்துவம் செய்து கொள்கிறார். ஆனால் அந்த நேரடி அனுபவம் அவரது ஒவியத்திற்கு புதிய பரிமாணத்தைத் தருகிறது.

காந்திக்குப் பிடித்தமான எழுத்தாளரான ஜான் ரஸ்கின்  டர்னரின் நண்பர். தனது கலைத்திறமையை நிரூபணம் செய்ய போராடுகிறவர். அடிக்கடி கடன் கேட்டு டர்னரை சந்திக்கிறார். ரஸ்கின் எழுதிய  Unto this Last  புத்தகம் தான் காந்தியை மாற்றியது. ரஸ்கின் ஒவியம் மற்றும் நுண்கலைகள் குறித்து நிறைய எழுதியிருக்கிறார். அவர் தான் டர்னரின் ஒவியங்கள் எதனால் முக்கியமானவை என்று விரிவாக ஆராய்ந்து எழுதியவர். இன்று டர்னர் கொண்டாடப்படுவதற்கு ரஸ்கின் ஒரு முக்கிய காரணம்.

Fishermen at sea என்ற டர்னரின் ஒவியத்தில் இரவும் நிலா வெளிச்சமும் மிகுந்த கவித்துவமாக வரையப்பட்டிருக்கின்றன. கடல் காட்சியை யாரும் இப்படி வரைந்ததில்லை.  கடல் மீது சூழ்ந்து கொள்ளும் இருளும் அலைகளின் மீது படும்  மெல்லிய வெளிச்சமும் அபாராமானவை.

ஐரோப்பா முழுவதும் பயணம் செய்த டர்னர் தனது சமகால ஒவியர்களுடன் நெருக்கமாகப் பழகினார். பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்திற்கு சென்று ஒவியங்களை பார்த்து ரசித்தார். புரவலர்களின் ஆதரவில் ஒவியங்கள் வரைந்து விற்றார். படத்திலும் டர்னரும் அவரது சமகால ஒவியர்களும் எப்படி நடத்தப்பட்டார்கள். அவர்களுக்குள் நட்பும் உறவும் எவ்வாறு இருந்தது என படத்தில் துல்லியமாகச் சித்தரிக்கபட்டிருக்கிறது

டிமோதி ஸ்பால் டர்னராக நடித்திருக்கிறார். சிறந்த நடிப்பிற்கான கேன்ஸ் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஒளிப்பதிவு அபாரம்.ஒளிப்பதிவாளர் Dick pope கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறப்பு விருது பெற்றிருக்கிறார்.

டர்னரின் கடற்காட்சிகள் அவரது மனக்கொந்தளிப்பின் வெளிவடிவங்களாகவே உள்ளன. கலைஞனின் அகம் இப்படித்தானே வெளிப்படக் கூடும்

••

ஜுலை 14 20

Archives
Calendar
August 2020
M T W T F S S
« Jul    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: