காந்தியின் நிழலில் -2 லூயி ஃபிஷரும் காந்தியும்

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் சத்திய சோதனையைத் தான் முதலில் வாசிப்பார்கள். காந்தியின் வாழ்க்கையைப் பற்றி வின்சென்ட் ஷீன் எனும் அமெரிக்கப் பத்திரிக்கையாளர் எழுதிய புத்தகம், பிரஞ்சு எழுத்தாளர் ரோமன் ரோலந்த் எழுதிய காந்தி குறித்த புத்தகம் இரண்டும் முக்கியமானது. இதை ஜெயகாந்தன் வாழ்விக்க வந்த காந்தி என மொழியாக்கம் செய்திருக்கிறார், தற்போது ராமச்சந்திர குகா காந்தியின் வாழ்க்கையை மிக விரிவான இரண்டு பகுதி கொண்ட நூலாக எழுதியிருக்கிறார்.

லூயி ஃபிஷர் எழுதிய காந்தி எனக்கு மிகவும் பிடித்தமான நூல். காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் மிகவும் முக்கியமானது. ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தி திரைப்படத்திற்கு இதுவே ஆதார நூல். இந்நூலைத் தமிழில் தி.ஜ.ர  சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

காந்தியின் சத்தியசோதனை முழுமையான சுயசரிதையில்லை. அது ஒரு வாக்குமூலம். சத்தியத்தின் வெளிச்சத்தில் தன் வாழ்க்கையை விவரிக்கும் காந்தியின் வாக்குமூலம். இங்கிலாந்தில் போய்ப் படித்துத் திரும்பிய காந்தி தனது சுயசரிதையைக் குஜராத்தியில் தான் எழுதினார். காந்தியின் ஆங்கில உரைகளையும், கட்டுரைகளையும் அறியும் போது எளிய, நேரடியான ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தியே அவர் பேசுகிறார் எழுதுகிறார் என்பது புரியும். நேருவின் ஆங்கில உரைகளைக் கேட்டால் அது ஒரு கவிஞனின் குரலைப் போலவே இருக்கிறது.

காந்தி தன் சுயசரிதையைக் குஜராத்தியில் எழுதியது முக்கியமான விஷயம். எந்த மனிதனும் தனது வாழ்க்கை வரலாற்றைத் தாய்மொழியில் தான் எழுத வேண்டும். அது தான் உண்மையின் சான்றாக இருக்கும்.

காந்தியின் சத்தியசோதனையை வாசிக்கையில் அவரது நினைவாற்றல் வியக்க வைக்கிறது. டால்ஸ்டாய் தனது பால்ய வயது நினைவுகளைப் பற்றி எழுதிய நூலில் அவர் கைக்குழந்தையாக இருந்த போது கண்ட காட்சிகள் கூட மனதில் பதிந்திருப்பதாக எழுதியிருக்கிறார். காந்தி டால்ஸ்டாயின் சீடர் என்பதால் தானோ என்னவோ அவரது நினைவுகளும் துல்லியமாக இருக்கின்றன. காந்தி தனது பள்ளி நாட்களை அதிகம் எழுதவில்லை. பள்ளிப் படிப்பு அவருக்குக் கசப்பான அனுபவமாகவே இருந்தது. சகோதரர்களுடன் இருந்த உறவு குறித்தும் அதிகம் எழுதப்படவில்லை.

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்க விரும்புகிறவர்களுக்கு நான் எப்போதும் சிபாரிசு செய்யும் நூல் லூயி ஃபிஷரின் காந்தி. ஒரு ஆவணப்படத்தைப் போலத் துல்லியமாக, உண்மையாக அது காந்தியின் வாழ்க்கையைக் கண்முன்னே சித்தரித்துக் காட்டுகிறது.

ஒரு பத்திரிக்கையாளர் எந்த அளவு தான் எழுத நினைக்கும் விஷயங்களை ஆராய்ந்து ஆழ்ந்து நுட்பமாக எழுத வேண்டும் என்பதற்கு லூயி ஃபிஷரின் நூலே சாட்சி.

காந்தி மருத்துவம் படிக்க விரும்பினார். ஆனால் பிணங்களை அறுத்துச் சோதிப்பது வைணவர்களாகிய நமக்கு ஆகாது என அவரது சகோதரர் தடுத்துவிட்டார் என்று  ஒரு செய்தி லூயி ஃபிஷர் நூலில் உள்ளது

காந்தி மருத்துவராக விரும்பினார் என்பது முக்கியமான தகவல். தன் வாழ்நாள் முழுவதும் தன் உடலைப் பரிசோதனை செய்து கொண்டேயிருந்தவர் காந்தி. மருத்துவத்துறைகளின் மீது அவருக்கு அவ்வளவு ஈடுபாடு. மிகுந்த நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட உடலைக் கொண்டிருந்தார். உயர் ரத்த அழுத்த நோய் அவருக்கு நீண்டகாலமிருந்தது. ஆனால் அதன் காரணமாக அவர் சிடுசிடுப்பாகவோ, கோபத்துடனோ நடந்து கொள்ளவில்லை. ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

போயர் யுத்தத்தின் போது காந்தி முதலுதவி மருத்துவக்குழுவோடு இணைந்து களப்பணி செய்தது அவரது மனதில் தான் ஒரு மருத்துவர் என்று இருந்த எண்ணத்தின் விளைவே.

போர்களத்தில் எதிரிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு நடுவில் காந்தி ஒடியோடி காயம்பட்டவர்களைக் காப்பாற்றினார். காந்தியை விடவும் உடல் வலிமை கொண்ட பலரும் நாள் முழுவதும் வேலை செய்த காரணத்தால் துவண்டுபோயிருந்தார்கள். சிடுசிடுப்புடன் நடந்து கொண்டார்கள். ஆனால் காந்தி அமைதியாக நடந்து கொண்டார். சாலையோரம் அமர்ந்தபடியே அவர் வழக்கமாகக் கொடுக்கப்படும் பிஸ்கட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் என்ற ஒரு காட்சியை ஃபிஷர் எழுதுகிறார். இது காந்தியின் அயராத உழைப்பின் அடையாளம். இன்பதுன்பங்களை ஒன்றாக நினைக்கும் உறுதியான மனது கொண்டிருந்தார் என்பதன் சாட்சியம்.

போயர் யுத்ததில் மருத்துவச் சேவை வழங்கியதற்காக அவருக்குப் போர் பதக்கம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் காந்தி கீழ்நோக்கி வளைந்த மீசை கொண்டிருக்கிறார் என்று ஃபிஷர் குறிப்பிடுகிறார். இது தான் தேர்ந்த பத்திரிக்கையாளரின் கைவண்ணம். காந்தியின் மீசை எப்படியிருந்தது என்பது அதுவரை எழுதப்பட்ட செய்திக்குத் தேவையற்றது போலத் தோன்றக்கூடும். ஆனால் அது துல்லியமாகக் காந்தியின் சித்திரத்தை நமக்குப் புலப்படுத்துகிறது. உண்மையை நாம் அறிகிறோம் என்று நம்ப வைக்கிறது அது தான் எழுத்தின் ரகசியம்.

1900 ம் ஆண்டு மே மாதம் 22ம் நாள் காந்தியின் நான்காவது குழந்தை பிறந்த போது பிரசவத்தைக் காந்தியே கவனித்துக் கொண்டார். அதைப் பற்றி எழுதும் போது நான் பயப்படவேயில்லை என்று சொல்லியிருக்கிறார். பிரசவம் பார்ப்பது எளிய விஷயமில்லை. இதற்காகக் காந்தி தாய்மை பேறு குறித்த மருத்துவநூலைப் படித்திருக்கிறார். தன்னை ஒரு பெண்ணைப் போலவே உணர்ந்த ஒருவரால் தான் இதை இத்தனை கவனமாகவும் பற்றோடும் செய்ய முடியும்.

காந்தி 1925, 1936, 1944 என மூன்று முறை மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு முறை அப்பெண்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். 1913 முதல் 1948 வரை மட்டும் சுமார் 79 ஆயிரம் கிலோமீட்டர் நடந்து உள்ளார். தன் வாழ்நாளின் கடைசி நாற்பது வருஷங்களில் தினசரி பதினெட்டு கிலோ மீட்டர் நடந்திருக்கிறார் என்கிறது மருத்துவ அறிக்கை.

தனது உயர் ரத்த அழுத்தத்தைச் சோதனைசெய்து பார்த்துக் கொள்ளத் தேவையான உபகரணத்தைக் காந்தி வைத்திருந்தார். அன்றாடம் சோதனை செய்து பார்த்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய உடல் எடையைக் காந்தி பார்க்கும் புகைப்படம் ஒன்றிருக்கிறது. அது அரிய புகைப்படமாகும். 1939ல் காந்தியின் எடை 46.7 அவரது ரத்த அழுத்த அளவு 220 /110. வாழ்நாள் முழுவதும் உயர் ரத்த அழுத்தம் கொண்டவராக இருந்த போதும் தொடர்ந்த நடைப்பயிற்சி. எளிய உணவுகள், மற்றும் பாரம்பரிய மருத்துவச்சிகிச்சைகள் மூலம் அதைக் கட்டுக்குள் வைத்திருந்திருக்கிறார்.

சிறைச்சாலையிலிருந்த நாட்களில் தான் காந்தியின் ரத்த அழுத்தம் சீராக இருந்திருக்கிறது. இதை அறியும் போது அவரது உயர் ரத்த அழுத்தத்திற்குக் காரணம் அவரைச் சுற்றிய பிரச்சனைகளே என்பது புரிகிறது

டெல்லியிலுள்ள காந்தி ம்யூசியத்திற்குச் சென்றிருந்த போது அங்கே காந்தியின் இதய ஒலியைப் பதிவு செய்து வைத்திருக்கிறார். அதை நான் கேட்டேன். காந்தியின் இதயம் துடிப்பதைக் கேட்டபோது அது இந்தியாவின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கேட்டுக் கொண்டேயிருப்பதாகவே உணர்ந்தேன்.

சமீபத்தில் காந்தியின் மருத்துவ அறிக்கை சிறுநூலாக வெளியாகியிருக்கிறது. அதில் காந்தி எந்த வயதில் எதற்காகச் சிகிச்சைகள் எடுத்துக் கொண்டார் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்திய மருத்துவ முறைகளில் அதிக ஈடுபாடு கொண்ட காந்தி ஆங்கில மருத்துவத்தை எதிரியாக நினைக்கவில்லை. தேவையான போது அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். ஒன்றிணைந்த மருத்துவத்துறைகளின் தேவையை அவர் நன்கு உணர்ந்திருந்தார். அதை விடவும் ஏழை எளிய மக்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் செய்கிற எந்த முறையாக இருந்தாலும் அது முக்கியமானதே என்பதைக் காந்தி நன்றாக உணர்ந்திருந்தார்

காந்தி மருத்துவம் படித்திருந்தால் மகத்தான மருத்துவராக இருந்திருப்பார். அவரது வாழ்க்கை மாறியிருக்கும். ஆனால் ஒரு தேசம் மாபெரும் தலைவனை இழந்திருக்கும். காலம் தனக்கான மனிதனைச் சரியாகவே தேர்வு செய்திருக்கிறது.

காந்தியைச் சட்டம் படிக்கும்படி அவரது சகோதரர் தான் அறிவுறுத்துகிறார். சட்டப்படிப்பு காந்தியின் தேர்வில்லை. ஆனால் இந்திய மக்களின் ஆதார உணர்வுகளில் ஒன்று நீதி என்பதைக் காந்தி உணர்ந்திருந்தார். நீதி கேட்பது என்பது நீண்ட வரலாறு கொண்டது. நிறைய நீதி சாஸ்திரங்கள் இந்தியாவில் உள்ளன. நீதி மறுக்கப்பட்டவர்களின் குரலைக் காந்தி அறிந்திருந்தார்.

என்ன படித்தால் நிறையச் சம்பாதிக்கலாம். உடனடியாக வேலை கிடைக்கும் என்பது எல்லாப் பெற்றோர்களின் கவலை. அது இன்றைக்குத் தோன்றிய விஷயமில்லை. காந்தியின் காலத்திலும் அப்படியே இருந்தது. காந்தியின் குடும்ப நண்பரான ஜோஷி இங்கிலாந்து போய் மூன்று ஆண்டுகள் சட்டம் படித்துத் திரும்பினால் நல்ல வேலை நிறையச் சம்பளம் கிடைக்கும் என்று வழிகாட்டினார். அந்த யோசனையைக் காந்தியின் குடும்பம் ஏற்றுக் கொண்டது.

லூயி ஃபிஷரின் காந்தியில் அவரது அன்றாட வாழ்க்கை மிகத் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக இங்கிலாந்திலிருந்த நாட்களில் காந்தி தானே சமையல் செய்து கொண்டு சாப்பிட்டார். அப்போது அவர் தினமும் காரட் சூப் செய்து சாப்பிடுவார். ருசி என்பது எண்ணத்திலிருக்கிறது. நாவில் இல்லை என்று காந்தி தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார் எனக் குறிப்பிடுகிறார் ஃபிஷர்

மனிதன் உயராமல் மனிதனின் அந்தஸ்து மட்டும் உயர்வதால் என்ன லாபம். காந்தி மனிதனை உயர்த்த விரும்பினார். ஒரு வகுப்பினரை மற்ற வகுப்பினர் இழிவுபடுத்தும் சூழல் இந்தியாவிலிருந்தது. இப்படியான மனிதன் எப்படி உயருவான் என்று காந்தி யோசித்தார். பரஸ்பர புரிதலும் அன்பு காட்டுவதும் சகிப்புத் தன்மையும் மனிதனை மேம்படுத்தக்கூடியவை என்பதை அவர் அறிந்திருந்தார். அதையே தனது வழியாகவும் அவர் முன்னெடுத்தார் என்கிறார் ஃபிஷர்.

காந்தியின் ஆரம்பக் கால வாழ்க்கையைப் பற்றி இந்த ஃபிஷரின் எண்ணங்கள் ஒட்டு மொத்த காந்தியின் செயல்பாட்டினைப் புரிந்து கொள்ள உதவும் சரியான சொற்களாகும்.

லூயி ஃபிஷர் 1896 பிப்ரவரி 29 அன்று அமெரிக்காவின் பிலடெல்பியாவில் பிறந்தார். 1914 முதல் 1916 வரை பிலடெல்பியா  பள்ளியில் படித்த பிறகு, அவர் கல்விப்பணியில் ஆர்வம் கொண்டு சில காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 1917 ஆம் ஆண்டில், ஃபிஷர் பாலஸ்தீனத்தைத் தளமாகக் கொண்ட இராணுவப் பிரிவில் சேர்ந்தார். சில காலம் அங்கே பணியாற்றிவிட்டு அமெரிக்காவிற்குத் திரும்பியதும் நியூயார்க் நகரில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தில் பணியை மேற்கொண்டார். அப்போது பெர்த்தா என்ற இளம்பெண்ணைச் சந்தித்துக் காதல் கொண்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு ஐரோப்பிய நிருபராக நியூயார்க் ஈவினிங் போஸ்ட்டில் பங்களிக்கத் தொடங்கினார். அடுத்த ஆண்டு, அவர் மாஸ்கோவுக்குச் சென்று பெர்த்தாவை மணந்து கொண்டார்.

சோவியத் யூனியனில் இருந்தபோது, சோவியத் ஆட்சி குறித்தும் மக்களுக்கான திட்டப்பணிகள் குறித்து நிறைய எழுதியிருக்கிறார். பஞ்சகாலத்தில் உக்ரேன் எப்படியிருந்தது என்பதைப் பற்றி நேரடியாக ஆய்வு செய்து எழுதினார். தீவிர கம்யூனிஸ்ட் என அறியப்பட்ட பிஷர் பின்பு ஸ்டாலின் ஆட்சி குறித்த மாற்றுக்கருத்துகளால்  ரஷ்யாவிலிருந்து விலகி வெளியேறினார்.

லூயி ஃபிஷர்  14 ஆண்டுகள் ரஷ்யாவில் வாழ்ந்திருக்கிறார் பின்பு அமெரிக்கா திரும்பி மீண்டும் பத்திரிக்கையாளராகப் பணியாற்ற ஆரம்பித்தார். பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து எழுதுவதற்காக ஃபிஷர் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். காந்தியைச் சந்தித்தார்.

காந்தியுடன் ஒரு வாரம் என்ற சுவாரஸ்யமான நூல் ஒன்றை ஃபிஷர் எழுதியிருக்கிறார். அதுவே பின்னாளில் எழுதப்பட்ட காந்தி நூலிற்கு அஸ்திவாரம் என்பேன்.

காந்தியுடன் ஒருவாரம் என்பது ஃபிஷர் வழியாகக் காந்தியின் உலகைக் காட்டும் அரிய சித்தரிப்பாகும்.

1942 ஜுன் 3 அன்று நியூடெல்லியில் இருந்து புறப்பட்டுக் கடுங்கோடை வெப்பத்துடன் ஃபிஷர் வார்தா ஆசிரமத்தை அடைந்தார். காந்தியைச் சந்தித்து அவரை நேர்காணல் செய்வதற்கு உதவி செய்யும் படி ஃபிஷர் நேருவை கேட்டுக் கொண்டார். காந்தியுடன் பேசி நேரு அந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். மகாதேவ் தேசாயின் உதவியோடு இந்தச் சந்திப்பு ஏற்பாடு ஆனது.

டெல்லி ரயிலை விட்டு இறங்கிய பிஷரை குதிரை வண்டியில் அழைத்துப் போக ஆள் வந்திருந்தார்கள்

காந்தியைச் சந்தித்த போது அவர் நீண்ட நாள் பழகியது போல இனிமையாக வரவேற்று எத்தனை நாட்கள் தங்குவதாக உத்தேசம் எனக்கேட்டார், இந்தச் சந்திப்பின் போது காந்தியின் பல்மருத்துவர் உடனிருந்ததையும் அவர் காந்தியின் பொய் பற்கள் எப்படியிருக்கின்றன என்பது குறித்து விசாரித்ததையும் காந்தி அந்தப் பொய் பற்கள் உணவைக் கடிக்கும் போது சீராகயில்லை என்று தெரிவித்த விஷயத்தையும் எழுதுகிறார்.

குர்ஷித் பென் பொறுப்பில் ஃபிஷர் ஒப்படைக்கப்பட்டார். வசதியான பார்சி குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணான குர்ஷித் பென் பிரான்சிலும் இத்தாலியிலும் கல்வி கற்றவர். நாற்பது வயது நிரம்பியவர். இசையில் தீவிர ஈடுபாடு கொண்டவர். ஃபிஷர் அவருடன் இந்தியாவின் தேசப்பற்று குறித்து ஆழ்ந்த விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். மறுநாள் காந்தியைச் சந்திப்பதற்காக ஆசிரமத்திலிருந்த அவரது அறைக்கு அழைத்துப் போனார் குர்ஷித்.

வார்தா ஆசிரமம் எப்படியிருந்தது என்ற துல்லியமான சித்திரத்தை நமக்குத் தருகிறார் ஃபிஷர். கேமிரா வழியாகக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டது போன்ற துல்லியம். காந்தியின் ஆசிரமத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்துத் திரும்பிய அரிய நாயகம் என்ற இலங்கைக்காரர் குறித்தும் அவர் ரஷ்யா குறித்துத் தன்னிடம் நிறையக் கேள்விகள் கேட்டு உரையாடியதையும் ஃபிஷர் பதிவு செய்திருக்கிறார்.

ஆசிரமத்தில் மதிய சாப்பாடு 11 மணிக்கு. உஷ்ணத்தைப் போக்கிக் கொள்ள எல்லோருக்கும் மாம்பழம் தரப்பட்டது. எளிய உணவு. ஆசிரமவாசிகளே உணவு தயாரித்தார்கள். ஸ்பூனை வைத்து சாப்பிடும்படி பிஷரை கேட்டுக் கொண்டார். பிஷருக்கு ஆசிரம வாழ்க்கை புதிதாகயிருந்தது. காந்தி பேசிக் கொண்டிருந்த போது இரண்டு பூனைக்குட்டிகள் அருகில் வந்து விளையாடிக் கொண்டிருந்தன என்றும் ஃபிஷர் எழுதுகிறார். ஆசிரமவாசிகள் செய்திதாள் படிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. அவர்களின் ஒரே கவனம் காந்தி. காந்தியின் வழிகாட்டும் சொற்கள். செயல்கள் மட்டுமே என்கிறார் ஃபிஷர்.

அதிகாலையில் காந்தி தனது நண்பர்கள் புடைசூழ நடைப்பயிற்சி செல்லும் காட்சியை ஃபிஷர் விவரிக்கிறார். நாமே கண்முன்னால் காந்தி போவதைக் காணுவது போலிருக்கிறது.

காந்தி தனது தவறுகளை ஒப்புக் கொள்ள ஒருபோதும் தயங்கியதேயில்லை. எல்லோர் முன்பாகவும் தவற்றை ஒப்புக்கொள்ளுவதையே அவர் விரும்பினார் என்று ஃபிஷர் குறிப்பிடுகிறார். அது தான் காந்தியின் பலம்.

காந்திக்கு ஒரே எண்ணம் தானிருந்தது அது இந்தியாவின் விடுதலை ஒற்றை எண்ணத்தை உறுதியாகக் கொண்டவர்களே பெரும் சாதனை செய்திருக்கிறார். காந்தியும் அப்படியான ஒரு ஆளுமையே என ஃபிஷரின் காந்தியோடு ஒரு வாரம் நூல் நிறைவு பெறுகிறது.

ஃபிஷரின் வழியே காந்தியின் சித்திரமும் அவரது செயல்களும் அமெரிக்க மக்களுக்கு அறிமுகமானது. 26 மொழிகளில் ஃபிஷரின் காந்தி மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.

ஒரு பத்திரிக்கையாளர் என்ற வரையறைகளைத் தாண்டி ஃபிஷர் காந்தியை நேசித்தார். காந்தியின் ஆளுமையைக் கண்டுவியந்தார். காந்தியின் மீதான ஃபிஷரின் நேசத்திலிருந்தே அவரது காந்தி நூல் எழுதப்பட்டிருக்கிறது.

காந்தியின் நிழலில் ஃபிஷர் அடைந்த அனுபவங்கள் உலகிற்குச் சொல்லப்பட்ட உன்னதமான செய்திகளாக மாறின என்பதே நிஜம்.

•••

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: