பந்தயக்குதிரை

ஃபிராங் காப்ரா இயக்கிய ஸ்டேட் ஆஃப் தி யூனியன் என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 1948ல் வெளியானது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட முயற்சிக்கும் ஒரு மனிதனின் விருப்பம் மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களின் சூழ்ச்சிகள் பற்றிய நாடகமே படத்தின் கதை

1948 ல் கே தோர்ன்டைக் என்ற இளம்பெண் தனது தந்தையைச் சந்தித்து உரையாடுவதில் படம் துவங்குகிறது

குடியரசு கட்சியின் பத்திரிக்கை அதிபரான கே தோர்ன்டைக் எவ்வாறு தனது காதலரான கிராண்ட் மேத்யூவை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயார் செய்கிறார் என்பதே படத்தின் மையக்கதை

தேர்தலில் ஒருவரைக் களமிறங்கச் செய்ய என்விதமான வழிமுறைகளை, தந்திரங்களைச் செய்கிறார்கள். ஊடகங்களை எப்படித் தன்வசப்படுத்துகிறார்கள். மக்களிடையே எவ்வாறு பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள் என்பதையே படம் விவரிக்கிறது.

அந்தக் காலத்தேர்தலில் துவங்கி இன்று வரை அமெரிக்க அதிபர் தேர்தல் ஒன்று போலவே தானிருக்கிறது.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் யோசனையை மேத்யூஸ் ஆரம்பத்தில் நிராகரிக்கிறார். அவர் விமான நிறுவனத்தை நடத்தி வரும் தொழில் அதிபர். ஆகவே தேர்தல் தனக்கானதில்லை என்று நினைக்கிறார். ஆனால் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி சம்மதிக்க வைக்கிறார்கள். பந்தயக்குதிரையை தயார் செய்வது போல தயார் செய்கிறார்கள்.

அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் மக்கள் மத்தியில் சிறப்பாக உரையாற்றத் தெரிந்திருக்க வேண்டும், மக்கள் நம்பிக்கையைப் பெற வேண்டும். அதற்கு மனைவியோடு ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்  ஜிம் கோனோவர். என்ற கட்சி ஆலோசகர்

ஆனால் கே தோர்ன்ன்டைக்கை மேத்யூஸ் ரகசியமாகக் காதலித்து வருவதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் சண்டை. குடும்பத்தில் பிரச்சனை. இந்தச் சண்டையிலிருந்து தான் தற்காலிகமாக விலகிக் கொள்வதாகச் சொல்கிறாள் கே. அதன்படியே தன் மனைவியைப் தொலைப்பேசியில் அழைத்துத் தனது சுற்றுப்பயணத்தில் உடன் வருவதற்காக அவளை உடனடியாக வாஷிங்டன் வரச்சொல்கிறார் மேத்யூஸ்.  மனைவியும் கிளம்பி வந்துவிடுகிறாள். அதன்பிறகு நடப்பது வேடிக்கையான நிகழ்வுகள்

படத்தின் ஒரு காட்சியில் வெள்ளை மாளிகை முன்பாக நின்றபடியே மேத்யூஸ் அதில் தான் குடியேறினால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டிருப்பார். அப்போது இன்னொரு நபர் அந்த மாளிகையின் சிறப்பு என்ன தெரியுமா எனக் கேட்டதற்கு மேத்யூஸ் சொல்லும் பதில் அற்புதம். அது அதிபரின் மாளிகை மட்டுமில்லை. அமெரிக்காவின் அடையாளம். கருத்துரிமையின், சுதந்திரத்தின் அடையாளம் என்று பொங்குகிறார் மேத்யூஸ்.

மேத்யூஸின் பிரச்சாரத்தைக் கவனித்துக் கொள்ள ஸ்பைக் மெக்மனஸ் நியமிக்கப்படுகிறார். அவர் எவ்வாறு மேத்யூஸை தயார் செய்கிறார். சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்கிறார் என்பது வேடிக்கையான காட்சிகளாக விரிகிறது. குறிப்பாக ஹோட்டல் அறையில் மாறி மாறி சந்திப்புகள் நடைபெறுவதும் பேச வேண்டிய விஷயங்களை மேத்யூஸ் குழப்பிக் கொள்வது நல்ல நகைச்சுவை.

ஸ்பைக்கின் பிரச்சனை மேத்யூஸின் மனைவி மேரி. அவளைச் சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறார்.

மேத்யூஸ் எப்படி ஒரு பாவை போல ஆட்டிவைக்கப்படுகிறார் என்பது படம் முழுவதும் தெளிவாக காட்டப்படுகிறது. படத்தின் இறுதியில் மேத்யூஸின் வீட்டிலிருந்து நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கான உரையை மேரியை வழங்கயிருக்கிறார். இதற்குள் கே தோர்ன்டைக்கின் ரகசிய ஆசை பற்றி அறிந்த மேரி கொதித்துப் போகிறார்.. முடிவு என்னவாகிறது என்பதை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்

படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான காட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காகச் செல்லும் மேத்யூஸ் நடுவானில் திடீரென விமானம் ஒட்ட ஆரம்பிப்பதும் விமானச் சாகசங்கள் செய்து காட்டுவதும் பத்து டாலர் பந்தயத்திற்காக ஆகாசத்திலிருந்து பாராசூட்டில் கீழே குதிப்பதும் நல்லதொரு காட்சி.

ஸ்பென்சர் ட்ரேசி மேத்யூஸாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். புலிட்சர் பரிசு பெற்ற நாடகத்தைத் திரைப்படமாக்கியிருக்கிறார்கள்.

ஹாலிவுட் கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் தரும் நெருக்கத்தை தற்போதைய பிரம்மாண்டமான ஹாலிவுட் படங்கள் தருவதில்லை என்பதே உண்மை.

••

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: