சிங்கப்பூர் கனவு.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் பயணநூல் Singapore Dream and Other Adventures: சின்னஞ்சிறிய நூல். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியாவிற்கு ஹெஸ்ஸே மேற்கொண்ட மூன்று மாத காலப்பயண அனுபவத்தை 21 கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றும் மூன்று நான்கு பக்கங்களே ஆகும். 1911ல் இந்தப் பயணத்தை ஹெஸ்ஸே மேற்கொண்டிருக்கிறார்.

ஹெஸ்ஸேயின் தாத்தா ஹெர்மன் குண்டர்ட் இந்தியாவில் மதப்பிரச்சாரம் செய்தவர். கேரளாவில் பணியாற்றிய கிறிஸ்துவ மிஷனரியில் இருந்தவர். அவருக்கு ஒன்பது இந்திய மொழிகள் தெரியும். அவரே மலையாளத்தின் முதல் அகராதியை உருவாக்கியவர் என்கிறார்கள்.

ஹெஸ்ஸேயின் குடும்பத்தினருக்கு இந்தியாவோடு நெருக்கமான உறவு இருந்த காரணத்தால் இந்தியப் புராணங்கள், தொன்மங்கள். வேதநூல்கள் அவரது வீட்டு நூலகத்தில் இடம்பெற்றிருந்தன. இளமையில் அவற்றை ஹெஸ்ஸே ஆழ்ந்து வாசித்திருக்கிறார்.

ஹெஸ்ஸே தனது புகழ்பெற்ற சித்தார்த்தா நாவலை எழுதுவதற்கு முன்பாக இந்தப் பயணத்தை மேற்கொண்டார். இந்தியாவிற்கு வராமலே அவர் இந்தியாவை மையமாகக் கொண்ட நாவலை எழுதினார் என்பதே சிறப்பு. பௌத்தம் தொடர்பான விஷயங்களையும் புத்த கோவில்கள். மடாலயங்களை அவர் இலங்கையில் கண்டிருக்கிறார். அந்தப் பதிவிலிருந்தே நாவலை உருவாக்கியிருக்கிறார்

தனது பயணத்தில் ஹெஸ்ஸே முதன்முறையாக ரப்பர் என்ற சொல்லை கேள்விப்படுகிறார். சக பயணிகள் இருவர் ரப்பரின் விலை பற்றிப் பேசிக் கொண்டு வருகிறார்கள்.. அப்போது வரை ரப்பர் பற்றி ஹெஸ்ஸேயிற்கு எதுவும் தெரியாது. ஆனால் ரப்பர் தான் மலேசியா துவங்கி சுமத்திரா வரை முக்கியமான வணிகப்பொருள் என்பதும் ரப்பர் மரங்களை உருவாக்கி எப்படிப் புதிய வணிகத்தை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதையும் பயணத்தில் அறிந்து கொள்கிறார்

மலேசியாவிற்குச் சென்ற ஹெஸ்ஸே அங்கே சீன நாடகம் ஒன்றைக் காணுகிறார். அது பாரம்பரிய முறையில் நடத்தப்படும் விதம் அவருக்குப் பிடித்தமானதாகியிருக்கிறது. அது போலவே மலாய் மொழியில் நடத்தப்பட்ட அலிபாபா நாடகத்தையும் பார்த்திருக்கிறார்.

சிங்கப்பூரில் ரிக்ஷாவில் பயணம் செய்த அனுபவத்தையும். அங்குள்ள சீன ஜப்பானியக் கடைகளைப் பற்றியும் எழுதும் ஹெஸ்ஸே தமிழ் கடைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.  சீனப்பட்டாடைகள் வாங்க விரும்பியதையும் தந்தப்பொருட்கள் விற்கப்படும் விதம் பற்றியும் கூறுகிறார்கள்.

சிங்கப்பூரின் நகர அமைப்பு. வீடுகள். மற்றும் பல்வகைக் கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக வாழுவதை வியந்து எழுதியிருக்கிறார். சிங்கப்பூரில் அரிய வகைப் பட்டாம்பூச்சிகளைத் தான் கண்டதாகவும் அவற்றைத் துரத்தி சென்ற அனுபவத்தையும்  பதிவு செய்திருக்கிறார்.

கப்பலில் சுமத்ரா சென்ற ஹெஸ்ஸே இயற்கை எழில்மிக்கச் சுமத்ராவை பூலோக சொர்க்கம் என்று புகழுகிறார். காட்டிற்குள் சிறிய மூங்கில் குடிலில் தங்கிய அனுபவத்தையும் சுமத்ராவில் காணப்படும் இயற்கை வளங்கள். மக்களின் பண்பாடு பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்

இலங்கையின் கண்டிக்கு வந்து தங்கிய ஹெஸ்ஸே மூன்று வாரங்கள் இருந்திருக்கிறார். இந்த நாட்களில் புத்தரின் பல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கண்டி பௌத்த ஆலயத்தைச் சென்று பார்த்திருக்கிறார். இலங்கையிலுள்ள பெண்களின் அழகையும் பிச்சைக்காரர்கள் மணி என்ற ஆங்கிலச் சொல்லை மட்டுமே அறிந்து வைத்திருப்பதையும் குறிப்பிடுகிறார்

இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மலைநகரமான நுவரெலியாவிற்குச் சென்று வந்த அனுபவத்தையும் அதன் பேரழகு மிக்க இயற்கைக் காட்சிகளையும் கவித்துவமாக எழுதியிருக்கிறார்.

ஜெர்மானியரான தனது குடும்பத்தில் பெற்றோர்கள் ஏதாவது ரகசியம் பேச வேண்டுமென்றால் ஆங்கிலத்தில் பேசிக் கொள்வார்கள் என்ற ஒரு குறிப்பை ஹெஸ்ஸே எழுதியிருக்கிறார்.

இலங்கையின் பௌத்த ஆலயங்கள் அவரை மிகவும் வசீகரித்திருக்கின்றன. புத்தரைப் பற்றிய அவரது அவதானிப்புகளையும் இந்த நூலில் காணமுடிகிறது.

ஹெஸ்ஸேயின் கவிதைகளும் இதன் பின் இணைப்பாகத் தரப்பட்டுள்ளன

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: