காலைக்குறிப்புகள்-2 காலமெனும் புதிர்.

Cosmic time is the same for everyone, but human time differs with each person. Time flows in the same way for all human beings; every human being flows through time in a different way.

என நோபல் பரிசு பெற்ற யாசுனாரி கவாபத்தா (Yasunari Kawabata ) கூறுகிறார். காலம் பற்றிய சிந்தனையில்லாத எழுத்தாளனே கிடையாது. அதிலும் கடந்தகாலத்தை எவ்வாறு எதிர் கொள்வது என்பது பெரும்பான்மை படைப்பாளிகளின் சவால். கடந்தகாலம் என்பது முடிந்து போன நிகழ்வுகளின் தொகுப்பில்லை. மாறாக நிகழ்காலத்தின் வேர்களாக அவையுள்ளன. தனது சொந்த வாழ்வின் வழியாகக் காலமாற்றத்தையே எழுத்தாளன் பதிவு செய்கிறான்.

காலம் குறித்து விசித்திரமான கதைகள் இந்தியாவில் நிறைய இருக்கின்றன. காலத்தைப் பகுக்கும் ரகசிய முறைகளும் இருக்கின்றன. ஆப்பிரிக்கப் பழங்குடி ஒன்றில் அவர்கள் திங்கள் செவ்வாய் என நாட்களைப் பிரித்துக் கொள்வதில்லை. மாறாக நிறங்களின் வழியே நாட்களைப் பிரித்துக் கொள்கிறார்கள். சிவப்பு என்பது ஒரு தினம். மஞ்சள் என்பது இன்னொரு தினம்.

காலத்தின் சுழல் வட்டப்பாதையைப் பற்றிப் போர்ஹெஸ் நிறையவே எழுதியிருக்கிறார்.

எந்த இரண்டு பேருக்கும் ஒரு நாள் ஒன்று போல இருப்பதேயில்லை. ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் ஒரே மணித்துளியில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு ஒன்று போல வாழ்க்கை இருப்பதில்லையே.

காலம் பெரும் புதிராகவே இருக்கிறது.  இயற்கைக்கு கடந்தகாலம் முக்கியமானதில்லை. அது எப்போதும் ஒரு நிகழ்காலத்தில் இருக்கிறது.

காலம் மனிதர்களின் உடலின் வழியே தனது அடையாளத்தைப் பதிவு செய்கிறது.

முதல் நரையைக் கண்ட போது திடுக்கிடாத மனிதர் யார் இருக்கிறார்கள்

நரை என்பது காலத்தின் சிரிப்பு. அது நம்மிடம் ரகசியமாக எதையோ சொல்கிறது.

ஒரு நாவலை எழுத முற்படும் படைப்பாளிக்குக் கவாபத்தா சொல்லும் விஷயம் தான் பாலபாடம். காலம் எப்படி மனிதர்களை ஊடுருவிச் செல்கிறது. ஒவ்வொரு மனிதனும் எப்படி ஒரு காலத்தில் வாழுகிறான். அவனது கால உணர்வு எவ்வாறு உறவுகளில் பிரதிபலிக்கிறது என்பதையே நாவல் விவரிக்க முயல்கிறது.

நாவலில் கதாபாத்திரங்களுக்கும் வயதாகிறது. அவர்களும் இறந்து போகிறார்கள். ஒரு கதாபாத்திரத்திற்கு இன்னொரு கதாபாத்திரம் அறிமுகமாவதில்லை. காலமற்ற வெளியில் நடக்கும் காலத்தின் நாடகம் தான் நாவல் போலும்

Lunatics have no age. If we were crazy, you and I, we might be a great deal younger. என்று ஒரு வரியை கவாபத்தா எழுதியிருக்கிறார்.

சித்தம் கலங்கியவர்களுக்கு ஏது வயது. அவர்கள் காலமற்ற நிலையில் தான் வாழுகிறார்கள். ஒரு நாவலை எழுத முற்படும் எழுத்தாளன் இப்படிக் காலமற்ற நிலையில் ஒரு கதாபாத்திரம் வாழ்ந்துவிடாதா என்றே ஆசைப்படுகிறான்

குந்தர் கிராஸின் டின் டிரம் நாவலில் வரும் ஆஸ்கர் என்ற நாயகனுக்கு வயதாவதேயில்லை. அவன் சிறுவனாகவே நின்றுவிடுகிறான். அது தான் நான் குறிப்பிடும் காலமற்ற நிலையில் வாழுவது. உலகிற்கு வயதாகிக் கொண்டே போகிறது. ஆனால் ஆஸ்கர் அப்படியே இருக்கிறான்.

கதைகளில் கிளைவிடும் காலம் கவிதைகளில் உறைந்துவிடுகிறது. கவிதை என்றைக்குமான ஒரு நிகழ்கணத்தையே விவரிக்கிறது.

சங்க கவிதையை வாசிக்கத் துவங்கும் போது அந்த நிமிஷம் தான் தலைவி மரத்தடியில் காத்திருக்கிறாள். அப்போது தான் குருகுகள் பறந்து வருகின்றன. அது கடந்தகாலத்தின் பாடலில்லை. நிகழ்காலம் ஒன்று என்றைக்குமாக இருந்து கொண்டேயிருக்கிறது.

விஞ்ஞானப்புனைகதைகளைப் போல விஞ்ஞானப் புனைகவிதைகள் அதிகம் எழுதப்படுவதில்லை. காரணம் எதிர்காலத்தின் விந்தை உலகம் பற்றிக் கவிதை கவலைப்படுவதில்லை. அது எப்போதுமிருக்கும் ஒரு தன்னிலையைப் பாடவே முயற்சிக்கிறது

கற்களில் காலம் மெதுவாக நுழைகிறது. நீண்டகாலத்தின் பிறகே வெளியேறுகிறது என்று ஒருவரியை வாசித்திருக்கிறேன். எத்தனை அழகான கவிதைவரி

••

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: