நினைவுகளின் ஊர்வலம்.

ஞானபீடம் விருது பெற்றுள்ள மலையாளத்தின் தலைசிறந்த எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயரின் வாழ்க்கை வரலாற்றின் முக்கியப் பகுதிகளையும் அவரது நேர்காணல் ஒன்றையும் கொண்டுள்ள தொகுப்பே நினைவுகளின் ஊர்வலம்.

சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தத் தொகுப்பினை டாக்டர் டி.எம்.ரகுராம் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

எம் டி வாசுதேவன் நாயர் என்ற மகா கலைஞனின் வாழ்க்கை வறுமையும் கஷ்டங்களும் நிரம்பியதாகவே இருந்திருக்கிறது. அவரது அப்பா இலங்கையில் வேலை பார்த்த நினைவுகளையும், மாமா வீட்டில் தன்னை வளர்க்க அம்மா பட்ட கஷ்டங்களையும் வாசுதேவன் நாயர் விரிவாகப்பதிவு செய்திருக்கிறார். கஞ்சி என்றொரு கட்டுரை உள்ளது. அது கண்ணீரை வரவழைக்கக்கூடியது.

இந்த நினைவுக் குறிப்புகள் வழியாக எம்.டி.வாசுதேவனின் ஆளுமை எவ்வாறு உருவானது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிவதே இதன் சிறப்பு. புறக்கணிப்பும் வலியும் கசப்புணர்வும் கொண்ட அவரது பால்ய நினைவுகளிலிருந்தே அவரது படைப்புலகம் உருவாகியிருக்கிறது. அழுத்தமான ஆண்களை அவர் தன் படைப்புகளில் உருவாகியிருக்கிறார். அவரது படைப்புகளில் வெளிப்படும் இரண்டுவிதமான பெண்களைப் புரிந்து கொள்ள  வாழ்க்கை வரலாறு முக்கியமானதாகிறது.

இந்தத் தொகுப்பில் கோட்டோவிய கலைஞன் நம்பூதிரி மற்றும் பதிப்பாளர் எம்டிவியைச் சந்தித்து இரண்டாம் இடம் நாவல் பற்றி உரையாடுகிறார்கள். இது போன்ற சந்திப்பு இதுவரை நடந்ததில்லை. மகாபாரதத்தைப் பின்புலமாகக் கொண்ட அந்த நாவலுக்கு எப்படி ஓவியங்களை வரைந்தேன் என்று நம்பூதிரி அழகாக விவரிக்கிறார்.

ஐம்பது பதிப்புகளுக்கு மேலாக வெளியாகி இந்திய அளவில் கொண்டாடப்படும் நாவலான இரண்டாம்இடம் பீமனின் பார்வையில் மகாபாரதக் கதையை விவரிக்கிறது. தற்போது அந்த நாவல் திரைப்படமாக உருவாக்கப்படப்போகிறது என்கிறார்கள். தமிழில் இரண்டாம் இடம் நாவல் வெளியாகியுள்ளது. குறிஞ்சி வேலன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

டாக்டர் டி.எம். ரகுராம் கேரளாவில் உளவியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறவர். ஆங்கிலம் தமிழ் மலையாளம் மூன்றிலும் படைப்புகளை வெளியிட்டுள்ளார். நன்கு அறியப்பட்ட இந்தோ-ஆங்கிலக் கவிஞர். அவரது முதல் புத்தகம் 1987 இல் காமன்வெல்த் கவிதை பரிசுக்குச் சிபாரிசு செய்யப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து சர்வதேச கவிஞர் விருதைப் பெற்றுள்ளார்.

தமிழிலிருந்து மலையாளத்திற்கும், மலையாளத்திலிருந்து தமிழுக்கும் மொழியாக்கங்கள் செய்து வருகிறார்.  இவரது  பலவிதமான வீடுகள் என்ற நவீன மலையாள சிறுகதைகளைக் கொண்ட தொகை நூலை வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

**

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: