காலைக்குறிப்புகள் -3 மணலின் விதி

Collection of Sand என்ற கட்டுரைத் தொகுப்பில் இதாலோ கால்வினோ விசித்திரமான பழக்கம் கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்தப் பெண் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கிருந்து பிடி மண் அள்ளிக் கொண்டுவந்து அதை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டுப் பாதுகாத்து வைப்பது வழக்கம். அந்த ஜாடியின் வெளியே அது எந்த ஊரில் எடுக்கப்பட்ட மண் என்று எழுதி வைத்துக் கொள்வார்.

இப்படி அவர் சேகரித்தவற்றை ஒரு முறை கண்காட்சியில் வைத்திருக்கிறார். அதைப் பார்வையிட்ட கால்வினோ இப்படி மணலை சேகரித்து வைப்பதன் பின்னுள்ள மனநிலையைப் பற்றி அழகான கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் ஒவ்வொரு ஜாடியிலுள்ள மணலும் ஒரு டயரிக்குறிப்பு போன்றதே. எழுத்திற்குப் பதிலாக மணல் உள்ளது. வெளிப்படையாக மணலைப் பார்த்தால் நிறத்தைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால் இரண்டு தேசங்களின் மணலும் ஒரே வரலாற்றைக் கொண்டிருக்காது தானே. கடற்கரையின் மணல் கடலின் சாட்சியமில்லையா.

நினைவுகளை அழியாமல் பாதுகாக்கத் தான் இப்படி மணலைக் கொண்டுவருகிறார் போலும் என்றும் கால்வினோ குறிப்பிடுகிறார். மணலை சேகரித்து வருவது விசித்திரமான பழக்கமில்லை. என் பள்ளி வயதில் நாங்கள் கன்னியாகுமரிக்குப் போன போது கடற்குச்சிகளும் மணலும் சிறிய பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். இந்தியாவின் கடைசி முனையில் உள்ள மணல். ஆகவே அது மதிப்புமிக்கது என்றார் ஆசிரியர். நாங்கள் அந்த மணல்பாக்கெட்டை விலை கொடுத்து வாங்கினோம்.

அன்று விவேகானந்தர் பாறைக்குப் படகில் போய்விட்டுத் திரும்பி மாலை கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது வெண்ணிற மணலை ஆசை ஆசையாக அள்ளி பை நிறைய நிரப்பிக் கொண்டோம். இந்தக் கடற்கரை மணலை ஊருக்குக் கொண்டு போய் வீட்டின் முன்னே பரப்பினால் விளையாட எவ்வளவு சுகமாக இருக்கும் என்று தோன்றியது. டிராயர் பாக்கெட் நிறையக் கடல் மணலுடன் நாங்கள் பேருந்தில் ஏறிய போது ஒரு பையனின் ஒட்டை பையிலிருந்து மணல் கொட்டவே ஆசிரியரால் கண்டுபிடிக்கப்பட்டோம். அவர் எல்லா மணலையும் அங்கே திரும்பக் கொட்டும்படி சொன்னார்.

ஊர் திரும்பிய பிறகு எங்கள் ஊரின் மண் ஏன் மிருதுவாக இல்லை என்று தொட்டுத்தொட்டு பார்த்துக் கொண்டிருந்தோம். துணி துவைப்பவர் கழுதைகளில் சென்று உவர்மண் எடுத்துக் கொண்டுவரும் போது அந்த உவர் மண்ணைத் தொட்டுப் பார்த்திருக்கிறேன். அதே மிருதுவான மணல்.

இன்னொரு முறைத் தார் பாலைவனத்திற்குப் போன போது அழகான மணற்குன்றைக் கண்டேன். காற்றில் மணல் அடித்துச் சென்றபடியே இருந்தது. உலர்ந்த மணல். துளி ஈரமில்லை. மணல்துகள் என்பது சிறியதொரு கண். பூமிக்குப் பல்லாயிரம் கண்கள் இருக்கிறது என்றான் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவன். மணல் விசித்திரமானது. மணலின் விதியை யாராலும் அறிந்து கொள்ளவே முடியாது.

கிராமப்புறங்களில் ஊரைவிட்டுப் பிரியும் போது பிடி மண் எடுத்துக் கொண்டு போவார்கள். ஒரு நண்பர் சென்னையில் புதுவீடு கட்டும் போது கிராமத்திலிருந்த தனது பூர்வீக வீட்டின் வாசலிலிருந்து பிடி மண் கொண்டுவந்து புதுவீட்டின் முன்னால் போட்டுக் கொண்டார். மண்ணை நேசிப்பது என்பது ஒரு பிடிமானம். பற்று. பெருநகரங்களில் உடையில் லேசாக மண் ஒட்டிவிடுவதை அசிங்கமாக நினைக்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் மண் வெறுக்கப்படுவதில்லை.

The Women in the dunes என்ற ஜப்பானிய நாவலில் மணற்குன்றுகளுக்குள் வாழும் மனிதர்களைப் பற்றிக் கோபே அபே எழுதியிருக்கிறார். பூச்சி இனத்தை ஆராய்ச்சி செய்யச் சென்ற ஒருவன் அந்த மணற்குன்றினுள் மாட்டிக் கொள்கிறான். மணல் கொட்டிக் கொண்டேயிருக்கும் வீட்டில் அந்தப் பெண்ணிற்குத் துணையாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மணல் ஒட்டிக் கொள்வது போலத் தான் காமம் போலும். மணலுக்குள் வாழுவது என்பது ஒரு குறியீடு. அந்த நாவல் திரைப்படமாக வந்துள்ளது. மிகச்சிறந்த படம்.

போர்ஹெஸ் தனது The Book of Sand கதையில் NEITHER THE BOOK NOR THE SAND HAS ANY BEGINNING OR END என்கிறார்

மணல் என்பது முடிவின்மையின் அடையாளம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

••

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: