வீடில்லாத புத்தகங்கள்

வர்ஜீனியா உல்பின் Street Haunting: A London Adventure என்ற கட்டுரையை வாசித்தேன். 1930 வருடம் குளிர்காலத்தின் ஒரு மாலையில் வர்ஜீனியா வுல்ப் (Virginia Woolf) ஒரு பென்சில் வாங்க வேண்டும் என்று லண்டன் முழுவதும் அலைந்து திரிந்த நிகழ்வை எழுதியிருக்கிறார்.

பென்சில் என்பது வெறும் காரணம் மட்டுமே. குளிர்காலத்தில் ஒளிரும் லண்டன் வீதிகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை இப்படி உருவெடுத்திருக்கிறது. ஏதாவது ஒரு அற்ப காரணம் போதும் ஊர் சுற்றுவதற்கு. வர்ஜீனியா நடந்து திரிவதன் வழியே கண்ணில் பட்ட லண்டனின் ஒவ்வொரு தெருவையும் பற்றி அற்புதமாக எழுதியிருக்கிறார்.

வர்ஜீனியா வுல்ப் ஒரு அற்புதமான எழுத்தாளர். கல்லூரி நாட்களில் அவரது Mrs Dalloway என்ற நாவலை படித்திருக்கிறேன். அதிலிருந்து அவளை தேடித் தேடி வாசித்தேன். மனதின் எண்ணவோட்டங்களை புறநிகழ்வுகளோடு இணையாக எழுதக்கூடிய அற்புதமான எழுத்துமுறை அவளுடையது. நனவோடை உத்தி என்று பல்கலைகழக விமர்சகர்கள் பெயர் சூட்டி அவளை பத்து மார்க் கேள்வியாக்கிவிட்டிருக்கிறார்கள்.

கல்லூரியில் பாடமாக வைக்கபட்ட எந்த இலக்கிய புத்தகமும் வாசிக்கபடாமலே போகிறது. அதன் மேல் காரணமில்லாத வெறுப்பு வந்துவிடுகிறது. ஒரே விதிவிலக்கு ஷேக்ஸ்பியர் மட்டும் தான் போலும். ஷேக்ஸ்பியரை வாசிக்கின்றவன் அவர் பின்னாடியே போக துவங்கிவிடுகிறான். மெக்பெத் வழியாக ஷேக்ஸ்பியரை வாசிக்க ஆரம்பித்து அவரது 24 நாடகங்களை வாசித்து முடித்தேன். பாதி புரியவில்லை.

ஒவ்வொரு நாடகத்தையும் பலமுறை வாசிக்கவும் ஆழ்ந்து புரிந்து கொள்ளவும் வேண்டியிருந்தது. ஷேக்ஸ்பியரை வாசிப்பதற்கு இங்கிலாந்தின் சரித்திரத்தை அறிந்து கொள்வது மிக முக்கியமானது. அவை வெறும் நாடகங்கள் மட்டுமில்லை. மாற்று குரல்கள். எதிர்ப்பு வடிவம். ஷேக்ஸ்பியர் ஒரு மந்திரவாதி. சொற்களை ஒரு முயலாகவோ, தேவதையாகவோ, சூனியக்காரியாகவோ உருவாக்க முடிந்தவர்.

ஷேக்ஸ்பியர் வரலாற்றை புத்துருவாக்கம் செய்கிறார். லண்டனின் அரண்மனை நாடங்களுக்குள் சூனியக்காரிகளை அறிமுகபடுத்திய பெருமை இவருக்கே உண்டு. இங்கிலாத்தின் அரசிகள் தான் அந்த மூன்று சூன்யக்காரிகளோ என்னவோ?

லண்டன் வீதிகளை பற்றி எவ்வளவு எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். வேறு எந்த நகரமும் இவ்வளவு எழுதப்பட்டிருக்குமா என்றுதெரியவில்லை. டிக்கன்ஸ் காட்டும் லண்டன் நகரின் காட்சிகள் இருண்மையானது. அதன் உள்ளே உறக்கமற்ற மனிதர்கள், திருடர்கள், வேசைகள், குழந்தை தொழிலாளிகள் அலைந்து திரிகிறார்கள். டேனியல் டீபோ காட்டும் லண்டன் வேறு விதமானது.  லண்டனின் பருவகால மாற்றம் இலக்கியத்தில் மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மகாத்மா காந்தி லண்டனில் தங்கி சட்டம் படித்திருக்கிறார். அவர் மனதில் லண்டனின் இயற்கை காட்சிகள் பதிவாகவேயில்லை. அவர் லண்டன் பற்றி அதிகம் எழுதவில்லை. எழுதியதெல்லாம் அவர் எங்கேயிருந்து படித்தார். என்ன கற்று கொண்டார் என்பதே. தேம்ஸ் நதியோ, இயற்கை அழகுகளோ, லண்டனின் இரவு வாழ்க்கையோ அவர் கண்ணில் படவேயில்லை. அவர் காந்தியாகவே வாழ்ந்திருக்கிறார் என்பது சரிதான். சொற்களில் வெளிப்படும் லண்டன் நிஜமான நகரத்தை விடவும் அற்புதமானது. லண்டனின் இருண்ட வீதியில் ஒடும் சுண்டெலி கூட எழுதப்பட்டிருக்கிறது. பாக்கியமான நகரமது.

வுல்ப் நமது ஊர் அக்காக்களை போலவே இருக்கிறாள். வர்ஜீனியா வுல்பின் அம்மா இந்தியாவில் பிறந்த வெள்ளைக்கார பெண். அதனால் தானோ என்னவோ அவளோடு கூடுதல் நெருக்கம் உருவாகிறது.

வுல்ப் தன்  எழுத்தில் எப்போதுமே மனதை உற்று நோக்கியபடியே இருக்கிறாள். காரணமில்லாத துக்கம் அவளை வாட்டி எடுக்கிறது. அவள் நேசிக்கபட வேண்டும் என்று ஆசை கொள்கிறாள்.

அப்பா லெஸ்லி ஸ்டீபன்  பெரிய சரித்திர பேராசிரியர். மற்றும் மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டவர்.  அவர்கள் வீட்டிற்கு அன்றைய முக்கிய எழுத்தாளர்களான ஹென்றி ஜேம்ஸ் துவங்கி பலரும் வந்து போயிருக்கிறார்கள். எழுத்தாளர்களோடு பார்த்து பழகிபேச எழுத்தை விரும்பியவள் வுல்ப். அவளது பதின்பருவத்தில் அம்மா இறந்து போனாள். சகோதரி எதிர்பாராமல் மரணமடைந்தாள். இரண்டு சோகமும் அவளை மனசிதைவிற்கு உள்ளாக்கியது. தீவிர சிகிட்சைகள் பெற்றிருக்கிறாள் வுல்ப்.

வுல்பின் கணவர் லியோனார்டு அற்புதமானவர். நரம்பு தளர்ச்சியும் மனசிதைவும் கொண்ட மனைவியை மிக அக்கறையோடு கவனித்து கொண்டிருந்திருக்கிறார். அவரும் ஒரு எழுத்தாளர். அரசியல் சிந்தனையாளர். ஹோகார்த் என்ற பதிப்பகத்தை உருவாக்கி நடத்திவந்திருக்கிறார். இலங்கையில் சில காலம் வசித்த லியோனர்டு Village in the Jungle எனும் கதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். அவை அற்புதமான சிறுகதைகள்.

வுல்ப் தீவிரமான மனப்பிரச்சனைகளின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாள்.அதுவும் கல்லை கட்டிக் கொண்டு ஆற்றில் விழுந்து செத்திருக்கிறாள். அதுகூட நம் ஊர் பெண்களின் மனநிலையை போலதானிருக்கிறது.

வுல்ப்பை எப்போதுமே எனக்கு மூத்த அக்காவாகவே  நினைக்கிறேன். ஏனோ அப்படியான நெருக்கம் அவளை வாசிக்கும் போது தோன்றுகிறது.

பனி பொழியும் இரவுவெளிச்சம். குளிராடை அணிந்த மனிதர்கள். கண்களால் நிரப்பிக் கொள்ள முடியாதபடி காட்சிகள் ததும்புகின்றன. அழகை தேடித்தேடி கண்கள் அவசரமாக தின்கின்றன. ஒரு வண்ணத்துப்பூச்சி பூக்களின் தேனை மட்டும் உறிஞ்சி எடுத்துவிடுவதை போல கண்கள் கடைகளின் வீதிகளின் அழகை தனித்து குடிக்கின்றன.

வுல்ப் தன் மனம் போனபடி நடக்கிறாள். ஒரு நகரில் எத்தனை வீதிகள். எவ்வளவு கதவு ஜன்னல்கள், காற்றில் நடப்பது போல மனிதர்கள் கடந்து போகிறார்கள், வணிக வீதிகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்தும் விலகியும் கொண்டிருக்கும் உறவும், அதில் உலவும் மனிதர்களும். வணிகத்தை நம்பி வாழும் மனிதர்களின் விசித்திர மனப்போக்கும் அவளை வியப்படைய வைக்கின்றன.

தன்னை கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதனும் ஒரு கதையை கொண்டிருப்பதை உணரும் தருணமது. மனிதர்கள் எது எதையோதேடி அலைகிறார்கள். காத்திருக்கிறார்கள். அவர்களை மனதின் ஆசைகள் இயக்கிக் கொண்டேயிருக்கின்றன. எந்த நகரிலும் இரண்டு வீதிகள் ஒன்று போல இருப்பதில்லை. ஒரு வீதியின் கடைகள் அந்த வீதியின் தொன்மையை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன.

காட்சிகளின் நிறங்களே அவளை முதலில் வசீகரிக்கின்றன, இறைச்சி கடை துவங்கி சாலையோர தேநீர்கடை வரை காணப்படும் நிறங்களை துல்லியமாக எழுதுகிறார், குளிர்கால இரவின் தனித்துவம் அவளது எழுத்தின் ஊடாக நுட்பமாக பதிவாகிறது,

கடைப்பணியாளர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்தே வெளிஉலகை காண்கிறார்கள். அவர்கள் கூண்டிலிருந்து உலகை காண்பதை போலவே இருக்கிறது. வணிகம் மனித உணர்ச்சிகளை மதிப்பதேயில்லை. அதை இயக்குவது பணம் மட்டுமே. அதன் வருகைக்காக மனிதர்கள் காத்திருக்கிறார்கள். அதை அடைவற்காக எந்த இழிவையும் ஏற்றுக் கொள்கிறார்கள். வணிக வீதிகளின் பின்னால் எப்போதுமே மனித துயரமும் அவமானமும் கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டுதானிருக்கிறது.

கண்ணில்படும் பொருட்களை எல்லர்ம் மனிதர்கள் மனதில் அணிந்து பார்க்கிறார்கள், சந்தோஷம் கொள்கிறார்கள், சாலை வாகனங்கள் மெதுவாக செல்கின்றன, காட்சிகள் கரை த்தும்புகின்றன

லண்டன் நகரின் காட்சிகள் ஒரே நேரத்தில் இரண்டு காலத்தில் தோன்றுகின்றன. ஒன்று கடந்து செல்லும் இந்த நிமிசம். மற்றது நூற்றாண்டு பழமையான அதன் நினைவுகள். சில வணிக நிறுவனங்களை காணும் போது அதன் உள்ளே என்றோ இறந்து போய்விட்ட அதன் உரிமையாளர்கள் இன்றும் ஆவிகளை போல அலைந்து திரிவதை காண முடியும்.  ஆசைகளை தூண்டுவிடும் காட்சிகள், இயக்கம். வீதியில் நடக்க நடக்க வீடும், நமது இருப்பும் முக்கியமற்றதாகிவிடுகிறது.

துணிக்கடையில் வேலை செய்யும் பெண்கள் மலிவான புன்னகையோடு கடந்து செல்பவர்களை பார்த்தபடியிருக்கிறார்கள். இரண்டு பருத்த உயரமான பெண்கள் கடந்து போவதை காண்கிறார் வுல்ப். அவர்களின் நடையும் பாவனையும் கேலியாக இருக்கின்றன.

புத்தக கடைகள் திறந்து வைக்கபட்டிருக்கின்றன. உலகின் எந்த வீதியில் புத்தக கடையை கண்டாலும் உடனே உள்ளே சென்று பார்த்து விட வேண்டும் என்ற ஆசை உருவாகிறது. காலணிகள் விற்கும் ஒரு கடையில் விற்பனை பெண் விதவிதமான காலணிகளை சலிப்பில்லாமல் எடுத்து காட்டிக் கொண்டிருக்கிறாள்.விதவிதமாக சாலையோரம் விற்கபடும் பொருள்கள்.பழமையான கடைகள். விசித்திரமான அதன் பெயர்கள். அந்த கடையின் பெயர்பலகையில் உள்ள பிரபுக்கள் இறந்து போய் பல வருசத்தின் பிறகும் ஆவிகளை போல அதே வீதியில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்

வுல்ப் பழைய புத்தக கடை ஒன்றை பார்க்கிறாள். பழைய புத்தகங்களுக்கு அவள் இடும் பெயர் எனக்கு பிடித்திருக்கிறது. அவை வீடில்லாத புத்தகங்கள் என்கிறாள். ஒவ்வொரு புத்தகமும் அதற்கான மனிதனை தேடி பிடித்து ஏதாவது ஒரு வீட்டிற்குள் புகுந்து கொண்டுவிடுகிறது. இப்படி சில புத்தகங்கள் வீடில்லாமல் வீதியில் கிடக்கின்றன. கைவிடப்பட்ட இந்த புத்தகங்கள் சாலையோரம் செல்பவர்களின் கருணையை  எதிர்நோக்கி காத்திருக்கின்றன என்கிறாள்

முடிவில் பென்சில் கடையை தேடி ஒரு பென்சிலை வாங்கிவிடுகிறாள். எளிய நிகழ்வு இது. ஆனால் அதன்பின்னே ஒரு பெண்ணின் அகசுதந்திரமும் வீட்டிலிருந்து வெளியேறி தன்னிச்சையாக  சுற்றிவரும் ஆசையும் உலகின் களிப்பை கொண்டாடும் மனதும் அற்புதமாக வெளிப்படுகிறது.

பென்சிலை வாங்க தேடுவதாக சொல்லிக் கொண்டு வீதிவீதியாக குளிர்காலத்தில் சுற்றிவருவது அற்புதமமான அனுபவம் என்கிறாள். கட்டுரை முழுவதும் வுல்பின் குரல் கடகடவென காட்சிகளையும் நினைவுகளையும் பின்னி பின்னி சொல்லிக் கொண்டே போகிறது, நாமே கூட நடப்பது போலிருக்கிறது, எவ்வளவு விவரணைகள், எவ்வளவு கவித்துவம்.  எவ்வளவு அவதானிப்புகள், உன்னதமான எழுத்து இது,

நானும் இப்படி அற்பகாரணங்களை சொல்லிக் கொண்டு எங்கெங்கோ அலைந்திருக்கிறேன்.. மனது சுற்றி திரிய விரும்பினால்  காரணங்கள் நாம் கற்பித்து கொள்வது தானே.

**

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: