கனவின் மிச்சம்

சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் தி போப்ஸ் டாய்லெட்.(ThePope’s Toilet) உருகுவே நாட்டில் தயாரிக்கபட்ட படமிது. இயக்கியவர் Cesar Charlone and Enrique Fernandez. 2007ம் ஆண்டு வெளியான இப்படம் சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதிற்குச் சிபாரிசு செய்யபட்டது.

லத்தின் அமெரிக்க நாடான உருகுவேயில் கதை நடைபெறுகிறது. மெலோ என்ற சிறிய ஊர். உருகுவே பிரேசில் எல்லையில் உள்ளது. இந்த ஊருக்கு 1988ம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் விஜயம் செய்யப் போவதாக அறிவிக்கபடுகிறது. இந்தச் செய்தி அந்த ஊர்மக்களின் இயல்பு வாழ்வை எப்படியெல்லாம் மாற்றுகிறது. ஊடகங்களின் மிதமிஞ்சிய ஆளுமையால் எப்படி மக்களின் கனவுகள் உருவாகின்றன. எப்படிச் சிதறடிக்கப் படுகின்றன என்பதை அற்புதமாகச் சொல்லி யிருக்கிறார்கள்.

கதையின் முக்கிய கதாபாத்திரம் பீடோ. இவன் ஒரு கடத்தல்காரன். சிறிய குற்றங்களில் ஈடுபட்டு பொருள் சம்பாதி ப்பவன். இவன் பிரேசில் எல்லையில் இருந்து  சைக்களில் வெளிநாட்டுப் பொருட்களை கடத்தி வந்து தன் ஊரில் விற்று வாழ்கிறான்.உருகுவேயில் வெளிநாட்டுப் பொருட்கள் விற்பதற்கு நேரடியான அனுமதி கிடையாது.உள்ளுர் சட்டங்கள் கடுமையானவை.

ஆகவே எல்லைப்புற கிராமங்களில் திருட்டுதனமாக வாகனங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்டு பொருட்கள் விற்கப்பட்டன.  மெலோ எல்லைப்புற கிராமம் என்பதால் அங்கே ஒரு ராணுவசாவடி அமைக்கபட்டிருக்கிறது. அதில் காவலர்கள் கடந்து போகின்றவர்களை தீவிர சோதனை செய்தே அனுமதிக்கிறார்கள்.

பீடோ அதிகம் படிக்காதவன். சைக்களில் தினம் 60 மைல் சென்று பொருட்களை கடத்தி கொண்டு வருகிறான். சாலை வழியாக வந்தால் மாட்டிக் கொண்டுவிடுவோம் என்று வயல்வழியாக தப்பித் தப்பி வருகிறான். காவலர்களிடம் மாட்டிக் கொண்டால் பொருட்கள் பறிக்கபட்டு விடும். இப்படி கடத்தி வந்தால் மட்டுமே அவனது வாழ்க்கை ஒடும் நிலை.

பீடோவின் மனைவி அவன் சாமர்த்தியற்றவன் என்று திட்டுகிறாள். பீடோவின் மகள் சில்வியாவிற்கு எப்படியாவது செய்தி அறிவிப்பாளராகிவிட வேண்டும் என்பதே ஆசை. அதற்காக வீட்டில் தனித்து இருக்கும் நேரங்களில் எல்லாம் அவள் காகிதத்தைச் சுருட்டி கையில் வைத்து கொண்டு செய்திவாசிப்பது போல நடிக்கிறாள். அது பீடோவிற்கு பிடிப்பதில்லை. தன் மகள் தன் சக்திற்கு மேலே கனவுகாண்கிறாள் என்று கோபப்படுகிறான்.

இப்படியான சூழலில் அந்த ஊருக்கு போப் வரப்போகிறார் என்ற தகவல் வெளியாகிறது. உடனே ஊடகங்கள் மெலோவை நோக்கி படையெடுத்து வரத்துவங்குகின்றன. சிறப்பு பார்வைகள், உள்ளுர்மக்களின் நேர்காணல்கள் என்று மாறிமாறி தொலைக்காட்சி செய்தியில் அந்த ஊர் அடிபடுகிறது. ஊர்க்காரர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது கொஞ்சம் காசு பார்த்துவிட வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்

போப்பின் வருகையை ஒட்டி எப்படியும் முப்பதாயிரம் பேர் அந்த ஊருக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆகையினால் அவர்களுக்குத் தேவையான உணவு உடை தேநீர் கடை, ரொட்டிக்கடை மற்றும்  வண்ண வண்ண போஸ்டர்கள், அலங்காரப் பொருட்கள் என்று தயாரித்து விற்பனை செய்வதால் பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்புகிறார்கள். யார் என்ன தொழில் செய்வது என்று பெரிய போட்டியே நடக்கிறது.  பீடோவிற்கு தான் என்ன தொழில் துவங்குவது என்று தெரியவில்லை.

அவன் வீட்டில் முறையான கழிப்பறை கிடையாது. ஆகவே அவனுக்கு ஒரு யோசனை உருவாகிறது. போப் வருகையை ஒட்டி வரப்போகின்ற முப்பதாயிரம் பேர் கழிப்பறைக்கு என்ன செய்வார்கள் என்று நினைக்கிறான். ஆகவே தான் ஒரு கட்டணக் கழிப்பறையை கட்டி வாடகைக்கு விடுவதன் மூலம் உட்கார்ந்த இடத்திலிருந்தே பணம் சம்பாதிக்க முடியும் என்று கனவு காணத் துவங்குகிறான். முதலில் இதை மனைவி மகள் இருவரும் ஒத்து கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் பேசிப் பேசி அவர்களை சம்மதிக்க வைக்கிறான்.

கழிப்பறை கட்ட பணம் தேவைப்படுகிறது. இதனால் அடிக்கடி கடத்தலுக்காக எல்லைதாண்டி போகிறான்.  ஒரு நாள் சோதனை சாவடியில் மாட்டிக் கொண்டு  கடத்திக் கொண்டு வந்த அத்தனை பொருட்களையும் இழக்கிறான். பீடோ மீது கண்காணிப்பு இருக்க வேண்டும் என்று உயர் அதிகாரி உத்தரவிடுகிறார். இதனால் ஆத்திரமான பீடோ அதிகம் குடித்துவிட்டு  ராணுவ அதிகாரிகளை திட்டி கலாட்டா செய்கிறான். அவனது நண்பர்களை பகைத்து கொள்கிறான். முடிவில் போதையேறிய அவனை மனைவியும் மகளும் வந்து  வீட்டிற்கு அழைத்துப் போகிறார்கள்.

போப் வருகைக்கான ஏற்பாடு துரிதமாகிறது. மற்றவர்கள் தங்கள் தொழில்களை துவங்குகிறார்கள். பீடோ இந்த இக்கட்டில் எப்படி கழிப்பறை கட்டுவது என்று தெரியாமல் தடுமாறுகிறான். அப்போது ராணுவ சாவடியில் உள்ள ஒரு அதிகாரிக்கு தேவையான பொருள்களை அவன் கடத்தி வந்து தருவதாக இருந்தால் அவனை அனுமதிக்க முடியும் என்ற சூழல் உருவாகிறது. இதற்காக அதிகாரியின் பொருட்டு கடத்தலில் மீண்டும் ஈடுபடுகிறான் பீடோ. கிடைத்த முன்பணத்தில் கழிப்பறை வேலை துவங்கபடுகிறது. அக்கம்பக்கத்து நண்பர்கள்  அவனுக்காக உதவி செய்கிறார்கள்.

போப் வருகையைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று ஊடகங்கள் வீடு தேடி வந்து பேட்டி காண்கின்றன. சில்வியா இந்த சந்தர்ப்பத்தில் தான் ஒரு செய்தியாளர் ஆகிவிட முடியாதா என்று ஆசைப்படுகிறாள். ஊர்மக்கள் தொலைக்காட்சியில் தோன்றி ஆளுக்கு ஒரு கனவை சொல்கிறார்கள். ஊரே திடீரென புதிய வெளிச்சம் கொண்டுவிட்டது போல உணரப்படுகிறது. மக்கள் அதிக வட்டிக்கு கடன்வாங்கி தங்கள் தொழில்களைத் துவங்குகிறார்கள். வீதியெங்கும் திருவிழா கோலமாகிறது.

கழிப்பறை கட்டும் பணியில் முக்கால்வாசி முடிந்து போகிறது. ஒரு கதவு வைத்துவிட்டால் அது நிறைவேறிவிடும் என்ற சூழலில் பீடோவிடம் காசில்லை.  அப்பா மீண்டும் கடத்தல்காரனாகிவிட்டார் என்ற கோபத்தில் மகள் சில்வியா  சண்டையிடுகிறாள். அவர்கள் நலனிற்காகவே தான் புதிய தொழிலில் ஈடுபடுவதாக சொல்கிறான் பீடோ. ஆனால் அம்மாவும் மகளும் அவனோடு கோவித்து கொண்டு பேச மறுக்கிறார்கள்.

தன் சொந்த மகள் தன்னோடு பேசமறுப்பது அவனுக்கு மிகுந்த மனவேதனை தருகிறது. தனது கடனை அடைத்த பிறகு கடத்தலில் ஒரு போதும் ஈடுபடவே மாட்டேன் என்று உறுதி சொல்கிறான். மகளின் படிப்பிற்காக பீடோவின் மனைவி சேமித்து வைத்த மொத்த பணத்தையும் எடுத்துவந்து தந்து முதலில் அவன் கடனை அடைக்க சொல்கிறாள். கடனை அடைத்ததோடு கழிப்பறையின் கதவையும் வாங்கி கொண்டுவருகிறான் பீடோ

கழிப்பறை தயார் ஆகிறது. அடுத்த கட்டம் அதை எப்படி நிர்வகிப்பது என்பதே. படத்தின் வாய்விட்டு சிரிக்கும்படியான காட்சி இதுவே. பீடோ தனது மனைவி மற்றும் மகளுக்கு எப்படி கழிப்பறையை நிர்வகிப்பது என்று பயிற்சி தருகிறான். அவர்கள் கூச்சத்துடன் அதை கற்றுக் கொள்கிறார்கள். அந்த கழிப்பறை அவனுக்கு ஒரு வங்கியின் ஏடிஎம் போலவே காட்சிதருகிறது.

போப்பின் வருகையை ஒட்டி ஐம்பதாயிரம் பேருக்கு மேல் வரக்கூடும் என்று தொலைக்காட்சி ஆருடம் கூறுகிறது. இந்த செய்தி ஊர்மக்களை அதிக சந்தோஷப்படுத்துகிறது. இதற்கிடையில் தனக்காக வேலை செய்த மறுத்த பீடோவை முடக்க வேண்டும் என்று நினைத்த அதிகாரி அவன் சைக்கிளை பறிமுதல் செய்கிறான்.

ஊருக்குள் போப் வந்தாகவிட்டதாக அறிவிக்கபடுகிறது. பதற்றத்துடன்  கழிப்பறையில் பதிக்க வாங்கிய பீங்கானோடு ஊருக்குள் ஒடி வருகிறான் பீடோ. ஆனால் வீதிகளில் கூட்டமேயில்லை. மிக குறைவான பார்வையாளர்களே போப்பை காண வந்திருக்கிறார்கள். ஊடகங்கள் இதை ஊதிபெருக்கியிருக்கிறது என்பது தெரிய வருகிறது. போப்பின் பேச்சை கேட்க வந்தவர்கள் உரை முடிந்ததும் கிளம்பி போய்விடுகிறார்கள்.

இந்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் ஊரே கொந்தளிக்கிறது. சமைத்த உணவுகள். பொருட்களை கிடைத்த விலைக்கு விற்க தயார் ஆகிறார்கள். அப்படியும் ஏராளம் மீதமாகிறது.  ஊரே கடனில் மிதக்கிறது. ஏமாற்றம் கவலை வேதனை என்று மக்கள் பெருமூச்சிடுகிறார்கள். யாரை குற்றம் சொல்வது என்று கூட தெரியவில்லை.

பீடோ ஆசையாக கட்டிய கழிப்பறையை ஒருவர் கூட எட்டிப்பார்க்கவில்லை. போப் கிளம்பி போய்விடுகிறார். சிதைந்த கனவோடு படம் நிறைவுறுகிறது.

விளம்பரத்திற்காக ஊடகங்களின் வெளியிடும் மிதமிஞ்சிய பொய்ச்செய்திகள். மற்றும் பரபரப்பு கதைகளால் ஒரு அமைதியான ஊர் எப்படி தன் இயல்பை இழந்து வேதனை கொள்கிறது என்பதை படத்தில் முடிவில் உணர முடிகிறது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படமது.

ஆவணப்படம் போல அத்தனை நுட்பமாகவும் நிஜமாகவும் உருவாக்கபட்டிருக்கிறது. உள்ளுர்மக்களே படத்தில் அதிகம் நடித்திருக்கிறார்கள். பல காட்சிகளில் அவர்களின் இயல்பான உணர்ச்சிவெளிப்பாடு கவித்துவமாக உள்ளது. படத்தின் இயக்குனர்களில் ஒருவரான பெர்னான்டஸ் மெலோவில் பிறந்தவர். தனது சிறுவயதில் பீடோவை போன்ற ஒருவரை தான் சந்தித்து இருப்பதாகவும் அந்த உந்துதல் காரணமாக இந்தக் கதையை உருவாக்கியதாகவும் கூறுகிறார்.சொந்த ஊரின் கதை என்பதால் நம்பகத்தன்மையை மிக கூடுதலாக உருவாக்கியிருக்கிறார்.

மூன்று விதங்களில் இந்த படம் முக்கியமானது என்று கருதுகிறேன். ஒன்று மதம் மக்களின் மீது உருவாக்கும் பாதிப்பு. மற்றும் அதன் விளைவுகள். போப்பின் வருகை என்பது ஒரு குறியீடு போலவே பயன்படுத்தபட்டிருக்கிறது. மதம் ஒரு எல்லைபுற கிராமம் ஒன்றினுள் தனது அதிகாரத்தால் என்ன பாதிப்புகளை உண்டாக்குகிறது என்பதை படம் கடுமையாக விமர்சனம் செய்கிறது. அதே நேரம் போப்பின் வருகை ஒரு கால்பந்தாட்டம் போல கேளிக்கை நிகழ்ச்சியாக எப்படி உருமாறுகிறது என்ற கேலியான தொனியும் படத்திலிருக்கிறது

இரண்டாவது அம்சம் எளிய மக்கள் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு அற்புதம் நடக்ககூடும் என்பதற்காக எப்போதும் காத்திருக்கிறார்கள், அந்த அற்புதம் போப்பின் வருகையாக காட்டப்படுகிறது. அதன்வழியே தங்கள் எதிர்காலத்தை உருவாக்க திட்டமிடுகிறார்கள். எத்தனையோ வேறுபட்ட தொழில்கள் துவங்கபடுகின்றன.மக்கள் பணம் சம்பாதிக்க எந்த வழியையும் மேற்கொள்வார்கள் என்பதை படம் தெளிவாகக் காட்டுகிறது.

மூன்றாவது ஒரு எளிய குடும்பம் தனக்கென ஒரு கழிப்பறை கூட இல்லாமல் வாழ்கிறது. அதன் நாயகன் கடத்தல் தொழில் செய்து பிழைக்கிறான். ஆனால் அவன் அன்பானவன். மனைவி மகளை நேசிக்கிறான். அவனது கனவாக உருக்கொள்வது கூட ஒரு கழிப்பறை தான். அதை உருவாக்க அவன் மேற்கொள்ளும்பாடுகள் மனித ஆசையின் உச்சத்தை காட்டுகின்றன. கழிப்பறை ஒருவகையில் நவீன மனிதனின் ஆசைகளின் குறியீட்டினை போலவே இருக்கிறது.

இந்த மூன்று அம்சங்களையும் கட்டுபடுத்தியும்,மிகைப்படுத்தி பெருக்கியும் செய்யும் வேலையை ஊடகங்கள் மேற்கொள்கின்றன. ஆகவே ஊடகங்களின் பொய்களில் இருந்து நாம் தப்பிக்க வேண்டும். அதை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்பது படத்தின் ஆதாரக் கருத்தாக உள்ளது.

போப் அந்த நகரிற்கு வந்து போன பிறகு மக்கள் அடையும் ஏமாற்றம் சொல்லில் அடங்காத துக்கமாக காட்சிபடுத்தபடுகிறது. தொடர்ந்து தேர்தல்கள், மற்றும் பொய்வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்ட இந்திய மக்களின் நினைவுகள் இதை காண்கையில் பெருக்கெடுக்கின்றன.

Cesar Troncoso பீடோவாக நடித்திருக்கிறார். நாடக நடிகர் என்பதால் அவரது முகபாவங்கள் துல்லியமானவை. படம் முழுவதும் அவரது எத்தனிப்புகள், வேதனைகள், ஏமாற்றங்கள் யாவும் பார்வையாளனை கட்டிப்போடக்கூடியவை. தன் மனைவிக்காக அவர் வாங்கி வந்த பரிசை தரும் ஒரு இரவுக்காட்சி ஒன்று போதும் அவரது இயல்பான நடிப்பிற்கு சாட்சி.

படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேசிலில் வாழும் உருகுவேயை சேர்ந்த  Cesar Charlone. இவர் சிட்டி ஆப் காட் படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பீடோ சைக்கிளில்  செல்லும் காட்சிகளில் கூடவே கேமிராவும் பதிவு செய்கிறது.  ஆவணப்படங்களை போல கையால் எடுத்து செல்லப்படும் டிஜிட்டில் கேமிராவில் பதிவு செய்யப்பட்ட பேட்டிகள், அறிவிப்புகள் என்று படம் உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்க ஒளிப்பதிவு உதவி செய்திருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் சிட்டி ஆப் காட் படத்தின் இயக்குனர் Fernando Meirelles. உருகுவே படம் என்பதை தாண்டி நமது தமிழக கிராமம் ஒன்றின் கதையை நிஜமாக படமாக்கியது போன்ற நெருக்கத்தைப் படம் தருகிறது. அதற்காகவே இதை அவசியம் பார்க்க வேண்டியதாக உள்ளது.

**

0Shares
0