காட்சிகளின் புதிர்பாதை

கிறிஸ்தபோர் நோலனின் இன்செப்ஷன் (Inception ‎)  திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தேன். ஒரு நிமிசம் எது நிஜம் எது கனவு என்று தெரியாதபடி நகரம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. கனவிற்குள் போய் எண்ணங்களை திருடி வருபவனை பற்றிய படம். ஒரு கனவினுள் மற்றொரு கனவை உருவாக்கி அதன்வழியே புதிதாக ஒரு எண்ணத்தை புகுத்த முடியுமா என்று கதைகளத்தை எடுத்து கொண்டு சர்ரியலிச சினிமா போல உருவாக்கியிருக்கிறார்கள். அற்புதமான முயற்சி, காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன, ஆனாலும் படம் சற்று குழப்பமானது.

காட்சிகள் புதிர்பாதை போலவே இருக்கின்றன. என்றோ இறந்து போய் இன்றும் நினைவில் வாழும் பெண் பழிவாங்க அலைகிறாள். ஒருவர் மற்றவர் கனவில் நுழைந்து புதிய காட்சிகளை உருவாக்குகிறார்கள். கனவு நிஜமான ஒரு நகரம் போலவே இருக்கிறது. எந்த கனவில் யார் இருக்கிறார் என்று துல்லியமாக தெரிந்து கொள்வது சவாலே.

எது கனவு எது நிஜம் என்று ஆழ்ந்து புரிந்து கொள்ள தவறினால் புதிர்பாதையில் நாமே மாட்டிக் கொண்டுவிடுவோம். எஷரின் (M.C.Escher) ஒவியங்களில் இருந்து காட்சிகள் உருவாக்கபட்டிருக்கின்றன. போர்ஹேயின் கதையை வாசிப்பது போன்றே படம் உருவாக்கபட்டிருந்தது. சில நேரங்களில் வீடியோ கேம்  உள்ளே போய்விட்டோமோ என்று கூட தோணியது.

கனவை பற்றி எவ்வளவோ பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். ஆலீஸ் நாம் எவர் கனவிலோ நடமாடிக் கொண்டிருக்கிறோம் என்று ஆலீஸின்அற்புத உலகம் நூலில் கூறுகிறாள். கனவை பிராய்டு ஆழ்மனதின் வெளிப்பாடு என்கிறார். எவ்வளவு விளக்கினாலும் கனவை பற்றிய வியப்பு கலையவே போவதில்லை தான்.

சமீபமாக கோவில்பட்டிக்கு சென்றிருந்தேன். கவிஞர் தேவதச்சனை சந்தித்து நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன ஒரு விசயம் மனதில் திரும்ப திரும்ப வந்து கொண்டேயிருந்தது. தேவதசச்னின் நண்பர் ஒருவர் அவரிடம் நீங்கள் நேற்று என் கனவில் வந்தீர்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அது தேவதச்சனுக்கு கூச்சத்தை உருவாக்கியது. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிரித்துவிட்டு வெற்றிலை போடத் துவங்கிவிட்டார். வீட்டிற்கு வந்த பிறகு தனக்கு தெரியாமல் எப்படி அடுத்தவன் கனவிற்குள் சென்றேன். என் அனுமதியில்லாமல் அவன் எப்படி என்னை கனவில் காண்கிறான் என்று குழப்பமாக இருந்தது என்றார். அதைப்பற்றி இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டேயிருந்தோம்

எனக்கும் அது சரிதானே என்று தோன்றியது. எவரது கனவிலோ நாம் நுழைகிறோம். அல்லது யாரோ நம்மை கனவில் சந்திக்கிறார்கள். அது நமக்கு தெரிவதேயில்லை என்பது எவ்வளவு பெரிய புதிர். அது ஏன எளிமையாக எடுத்து கொள்ளப்படுகிறது. ஆலீஸில் அற்புத உலகம் நாவலில் அவள் நாம் யார் கனவிலோ நடமாடிக் கொண்டிருக்கும் உருவம். அவர் விழிப்பு கொண்டால் நாம் கலைந்து போய்விடுவோம் என்கிறாள். அது உண்மை தானா

நாம் எவரெவர் கனவுகளில் வந்திருக்கிறோம் என்று கணக்கிட முடியுமா என்ன? ஒரு ஆள் எதற்காக நாம் கனவில் வருகிறான். சிலரை எப்படியாவது கனவில் பார்த்துவிட வேண்டும் என்று முயற்சித்திருக்கிறேன். ஒரு முறை கூட சாத்தியமானதில்லை.

பள்ளிவயதில் எம்.ஜி. ஆர் தன் கனவில் வந்து தனக்கு கத்திசண்டை போட கற்று தந்ததாக முருகேசன் சொன்னதை ஒருவரும் நம்பவில்லை. ஆனால் நான் நம்பினேன். எம்.ஜி. ஆர் என் கனவில் அப்படி வந்திருக்கிறார் என்பதால். அவன் என்னிடம் நல்லநேரம் படத்தில் வருவது போன்ற தலைமுடியும் டிரஸ்சும் அணிந்து வந்திருந்தார் என்று சொன்னான். அதை நான் சந்தேகம் கொள்ளவேயில்லை அது சாத்தியம் தானே. எம்.ஜி. ஆரோடு என்ன பேசினான் என்பது மறந்து போய்விட்டது என்றான். இது தான் கனவுகளின் இயலாமையே. கனவில் நாம் பேசியது பெரும்பாலும் மறந்து போய்விடுகிறது.

சிறுவயதில் அதிகமான கனவுகள் வந்தன. தினசரி வந்த கனவை பற்றி பேசிக் கொள்வது வழக்கம். இதற்காகவே சிறுவர்கள் ஒன்று கூடுவார்கள். கனவு வராத சிறுவர்கள் தாங்களாக ஒரு கனவு கண்டதாக உருவாக்கி சொல்லுவார்கள்.அதை மற்றவர்கள் நம்பவைப்பது பெரிய கஷ்டம். ஒரு நாள் கனவில் மழை பெய்து கொண்டிருந்தது. அதில் சிக்கி கொண்டு ஒடியோடி வீடு கண்டுபிடிக்க முடியாமல் அலைந்து திரிந்து திடுக்கிட்டு கண்விழித்த போது வெளியே மழை பெய்து கொண்டிருந்தது.

ஒரு நிமிசம் என் கனவு நிஜம் தானோ என்று உடல் நடுக்கம் கொள்ள ஆரம்பித்துவிட்டது. எழுந்து உட்கார்ந்து அருகாமையில் உறங்கி கொண்டிருப்பவர்களை கண்டேன். அது என் வீடு. என் அறை. பாதுகாப்பாக இருக்கிறேன என்ற உணர்வு உருவானது. சற்று ஆசுவாசமாக இருந்தது.

இயக்குனர் பெர்க்மென் ஒரு கனவை பற்றி விவரித்திருக்கிறார். தன்னுடைய முதிய வயதில் பலமுறை வந்திருப்பதாகவும் கூறுகிறார். அக்கனவில் கூட்டம் கூட்டமாக வெள்ளை நிற பறவைகள் பறந்து வருகின்றன. அவை அவரது வீட்டின் முன்பு நிரம்பிவிடுகின்றன. இடைவிடாமல் கத்துகின்றன.  அவ்வளவு ஆயிரம் பறவைகளை ஒன்று சேர்ந்து தன் வாழ்வில் ஒருமுறை கூட பார்த்ததேயில்லை. அவை ஒன்றாக பறந்து போய்விடுகின்றன. அந்த இடம் வெறுமையாகிறது. தான் பறவைகள் கூடவே ஒடுவதாக சொல்கிறார்.

கனவின் விசித்திரம் அதை நாம் முடிவு செய்யவே முடியாது என்பது தானோ.

**

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: