இரண்டு குறுங்கதைகள்

காதல்மேஜை.

முள்கரண்டி ஒன்று வெள்ளியால் ஆன ஸ்பூன் ஒன்றை நீண்ட நாட்களாக காதலித்து கொண்டிருந்தது. இருவரும் மிக நெருக்கமாக ஒரே மேஜையில் இருந்தபோதும் ஸ்பூன் தான் ஒரு பேரழகி என்ற பெருமிதத்தில் முள்கரண்டியை  பெரிதாக கண்டு கொள்ளவேயில்லை

முள்கரண்டி தீராத காதலின் ஏக்கத்துடன் ஸ்பூனை பார்த்து சொன்னது

.”தேனில் கிடந்து ஸ்பூன்களின் குரலும் கூட இனிப்பான இருக்கிறது. அதற்காகவே காதலிக்க விரும்புகிறேன்.”

மாறாக ஸ்பூன் சொன்னது

.”முள்கரண்டிகள் அருவருப்பானவை. அவை எதையும் லாவகமாக கையாளுவதேயில்லை. குத்தி கிழிப்பது தான் அதன் சுபாவம்.

முள்கரண்டி அப்போதும் காதல் மாறாமல் சொன்னது

.”ஸ்பூன்கள் கச்சிதமானவை. அளவுக்கு மீறி எதையும் அவை ஏற்றுக் கொள்வதேயில்லை. என்ன நளினம். என்ன ஒய்யாரம். இதற்காகவே காதலிக்க விரும்புகிறேன்.

ஸ்பூன் வெல்வெட் துணியில் புரண்ட படியே எரிச்சலுடன் சொன்னது

“முள்கரண்டிகள் நிம்மதியற்றவை. அவை மூன்று நாக்குகள் கொண்டிருக்கின்றன. நடந்ததையும் நடப்பதையும் நடக்க போவதையும் ஒன்றாக குழப்பிக் கொள்ள கூடியவை .”

அதை கேட்டு சற்றே எரிச்சலுற்ற முள்கரண்டி சொன்னது

“ஸ்பூன்கள் வெட்கமற்று மனிதர்களின் நாக்கை முத்தமிடுகின்றன. தடவி கொடுக்கின்றன. முள்கரண்டிகள் ஒரு போதும் அப்படி இருப்பதேயில்லை.”

கோபமுற்ற ஸ்பூன் சொன்னது

முள் கரண்டிகள் ஒரு போதும் சூப்பின் சுவையை அறிய முடியாது. உப்பும் சக்கரையையும் ஒரு போதும் தீண்டமுடியாது. ஐஸ்கிரீமின் குளிர்ச்சியை ஒரு போதும் உணரவே முடியாது. பாவம் அர்த்தமற்ற வாழ்க்கை.

இரண்டும் முகத்தை திருப்பிக் கொண்டன.

வீட்டின் உரிமையாளன் உணவு மேஜைக்கு வந்து சேர்ந்தான். சூடான சூப்பிற்குள் ஸ்பூனை தூக்கிபோட்டான். முள்கரண்டியை ஆவி பறக்கும் இறைச்சியின் நடுவில் குத்தினான். இரண்டும் மௌனமாகின. பசி தீருமட்டும் சாப்பிட்டுவிட்டு எச்சில்பட்ட ஸ்பூனையும் முள்கரண்டி இரண்டும் ஒன்றாக தட்டில் போட்டு எழுந்து சென்றான்.

சுத்தம் செய்யப்படுவதற்காக இரண்டும் ஒரே தண்ணீர் வாளிக்குள் போடப்பட்டன. மிகுந்த ஆவேசத்துடன் ஸ்பூனை கட்டி தழுவியபடியே முள்கரண்டி சொன்னது.

.அன்பே இந்த நிமிசத்திற்காக தான் காத்துக் கொண்டிருந்தேன். .

ஸ்பூனும் முள்கரண்டியும் மாறி மாறி முத்தமிட்டு கொண்டன.

**

பெரு நகரத்தவளைகள்

ஒரு நாளைக்கு பதினெட்டு லட்சம் பயணிகள் வருவதும் போவதுமாக உள்ள அந்த மகாநகரில் இரண்டே இரண்டு தவளைகள் மட்டுமே வசித்து வந்தன.

ஒரு காலத்தில் அந்த நகரில் ஏழு ஏரிகள்இருந்தன. அதன் கரைகளிலும் தண்ணீரிலும் ஆயிரக்கணக்கான தவளைகள் வசித்தன. அந்த தவளைகள் தாங்கள் அழைப்பதால் மட்டுமே மழை அந்த நகரில் பெய்கிறது என்றும் நம்பிக் கொண்டிருந்தன. ஆனால் நகரம் பெரியதாக விரிவடைய ஆரம்பித்தவுடன் ஏரிகள் மூடப்பட்டு அந்த இடங்களில் உயர்ந்த நவீன கட்டிடங்கள், அடுக்குமாடி வீடுகள் உருவாகின. கிணறுகள், குளங்கள் யாவும் மூடப்பட்டு நீர்சேகரம் முற்றிலும் அழிந்து போன சூழலில் மீதமிருந்த தவளைகள் வாழ்விடம் தேடி வெளியேறின.

வெளியேற மனதில்லாத கிழட்டுத் தவளைகளை தேடி கொல்வதற்கு என்று இரண்டு தன்னார்வ நிறுவனங்கள் உருவாக்கபட்டன. அவை ஒன்றிரண்டு ஆண்டுகளில் அந்த நகரை தவளைகள் இல்லாத மாநகராக உருவாக்கி அரசின் உயர்ந்த பரிசினை பெற்றது.

ஆயினும்  புறநெருக்கடிகளை தாண்டி இதே மாநகரில் இரண்டு தவளைகள் இருந்தன. அதில் ஒன்று மிக உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான ரபேல் டவரின் எழுபது மாடி குடியிருப்பின் தண்ணீர் தொட்டியில் வசித்து வந்தது. பூமியில் இருந்து மிக உயரத்திற்கு சென்று வசித்த முதல் தவளை அதுவாக தானிருக்க கூடும். ஆனால் அந்த தவளை அதை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. குடியிருப்பில் வசித்த எவர் கண்ணிலும் படாமல் வசித்து வந்தது

அதே நகரின் மின்சார ரயில் ஒன்றின் கழிப்பறையில் இன்னொரு தவளை வசித்து வந்தது.  ரயில் பயணிகள் அதன் மீது நாள் எல்லாம் மூத்திரம் பெய்தபடியே இருந்தனர்.

இந்த இரண்டு தவளைகளுக்கும் இடையில் விளக்கி சொல்ல முடியாத ஒரு நெருக்கமிருந்தது. ஒன்றையொன்று பார்த்தறியாத இந்த தவளைகளுக்குள் பரஸ்பரம் ஒருவர் பேசுவது மற்றவர்க்கு கேட்டது. அது எப்படி என்று மனிதர்களை போல அந்த தவளைகள் யோசிக்கவில்லை. மாறாக தவளைகள் எங்கிருந்து பேசினாலும் இன்னொரு தவளைக்கு கேட்பது இயல்பு தானே என்று வாய் ஒயாமல் இரண்டும் பேசிக் கொண்டிருந்தன.

தண்ணீர்தொட்டி தவளை சொன்னது

நகரம் என்பது மாபெரும் கல்லறை. .வீடுகள் இறுக்கமாக மூடிக் கொண்டு மூச்சுவிடக்கூட முடியாத நெருக்கடியில் தானிருக்கிறது. நகரில் வசிக்கும் மனிதர்கள் கரப்பான்பூச்சிகள் போன்றவர்கள். எந்த நெருக்கடிக்குள்ளும் வாழ்ந்துவிடுவார்கள். என்னால் அப்படியிருக்க முடியவில்லை எனக்கு வானம் தெரியவேண்டும். காற்று வேண்டும். மழை என் மீது படவேண்டும் என்றது.

உடனே ரயில்தவளை அலுப்புடன் சொன்னது

நீ பரவாயில்லை. நான் இருக்குமிடம் மிக மோசமானது. மனிதர்கள் விடிகாலை துவங்கி நாள் எல்லாம் மூத்திரம் பெய்தபடியே இருக்கிறார்கள். மனிதர்களை தவிர வேறு எந்த மிருகமும் மலஜலம் கழிக்க இவ்வளவு சிரமம் கொள்வதில்லை. இவ்வளவு நேரத்தை வீணடிப்பதில்லை. மாநகர மனிதர்கள் மிக ஆபாசமானவர்கள். அவர்கள் மூத்திரம் அடிப்பதை கூட பெரிய சாதனையாக நினைக்கிறார்கள். மின்சார ரயில் என்பது ஒடிக்கொண்டேயிருக்கும் ஒரு அசுரமிருகம் என்றது.

உடனே தொட்டிதவளை ஆதங்கத்துடன் சொன்னது.

நீயாவது மூத்திரத்தில் நனைந்தபடியே  ஒடிக்கொண்டேயிருக்கிறாய். நானோ பிறந்தது முதல் தரையிறங்கி வந்து பார்த்ததேயில்லை. ஆகாசம் கூட தெரியாதபடி இரும்பு பலகை கொண்டு தண்ணீர் தொட்டி பூட்டப்பட்டிருக்கிறது.

உலகில் தண்ணீரை பூட்டி வைக்கிறவர்கள் மனிதர்கள் மட்டும் தான். இந்த இரும்பு கதவு வாரம் ஒரு நாள் திறக்கும். அப்போது ஒரு இயந்திரம் மிகுந்த இரைச்சலோடு இதை சுத்தம் செய்யும். அந்த இரும்பு கைகள் ஒரு நாள் என்னையும் உறிஞ்சிவிடும் என்று பயமாக இருக்கிறது என்றது.

அதைக்கேட்ட ரயில் தவளை சொன்னது.

நல்லவேளை ரயிலின் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் மனிதர்கள் அதிக அக்கறை கொள்ளவில்லை. அதனால் நான் தப்பித்தேன். எனக்கு தேவை ஒரு நல்ல உறக்கம். மனித மூத்திரம் உடலில் படாமல் உறங்க மட்டுமே விரும்புகிறேன். அதற்கு போக்கிடமே  இல்லை என்றது.

உடனே தொட்டி தவளை நீ விரும்பினால் என் இருப்பிடத்திற்கு வந்து சேரலாம் இங்கே நிம்மதியாக உறங்கலாம் என்றது. உடனே மின்சார தவளை நீ விரும்பினால் என் ரயிலுக்குள் வந்துவிடலாம். அது நகரினை தானே சுற்றிகாட்டிவிடும் என்றது. உடனே பச்சை தவளை சிக்கலான பாதைகள் கொண்ட நகரில் எங்கே நீயிருக்கிறாய் என்று எப்படி நான் கண்டுபிடிப்பது  என்று கேட்டது.

உடனே ரயில் தவளையும் உயர்ந்த கட்டிடங்கள் உள்ள இந்த நகரின் எந்த அடுக்குமாடி குடியிருப்பில் நீயிருக்கிறாய் என்று எப்படி  கண்டுபிடிப்பது என்றது. இரண்டு ஒரு நாள் முழுவதும் யோசித்தன.

பிறகு தொட்டி தவளை சொன்னது. என் அடுக்குமாடி குடியிருப்பு கண்ணாடியால் ஆனது. இங்கே படிக்கட்டுகளே கிடையாது நிறைய கார்கள் முன்னால் நிற்கும் என்றது. உடனே ரயில் தவளை அப்படி தான் நான் வசிக்கும் மின்சார ரயிலும். இந்த ரயிலுக்கு கதவுகளே கிடையாது. இதை பார்த்தவுடன் மனிதர்கள் இடித்து நெருக்கி கொண்டு ஒடிவருவார்கள்.  என்றது.

இவ்வளவு தானா கண்டுபிடித்துவிடலாம் என்று இரண்டு தவளைகளும் ஒன்றையொன்று சந்திப்பதற்கான நாளை குறித்து கொண்டன. தண்ணீர்தொட்டியை சுத்தம் செய்யும் இயந்திரத்தின்  குழாயில் ஒட்டிக் கொண்டு பச்சை தவளை வெளியேறியது. அது போலவே கழிப்பறை தவளையும் பிளாஸ்டிக் காகிதம் ஒன்றில் தன்னை நுழைத்துக் கொண்டு தாவி குதித்து வெளியேறியது.

இரண்டு தவளைகளும் நகரின் வேறுவேறு பகுதியில் ஒன்றையொன்று தேடி அலைந்தன. நகரின் இரைச்சல்களும் வாகன நெருக்கடியும், பதட்டம் நிரம்பிய முகங்களை கண்ட   தவளை பயத்தில் நீ எங்கேயிருக்கிறாய்  என்றது.  ரயில் தவளை பயத்துடன் நான் உன்னை பார்க்கிறேன்  என்று நினைக்கிறேன். தாவி குதித்தால் என்னை பார்க்க முடியும் என்றது.

உடனே தொட்டி தவளை நீயும் தாவி குதித்தால் என்னை பார்க்கலாம் என்றது. இரண்டு தவளைகளும் நகரின் இரண்டு சாலைகளில் நின்றபடியே தாவி தாவி குதித்துக் கொண்டிருந்தன. ஆனால் இரண்டு பார்த்துக் கொள்ள முடியவில்லை. முடிவில் அலுப்புடன் தொட்டி தவளை சொன்னது நாமும் மனிதர்களை போலவே நடந்து கொள்கிறோம். நம்மால் அருகில் இருந்தும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்றது.

உடனே ரயில் தவளை எனக்கு பயமாக இருக்கிறது எப்படியாவது அந்த கழிப்பறைக்கே நான் திரும்பி போய்விடுகிறேன் என்றது.  தொட்டி தவளையும் நானும் தண்ணீர்தொட்டிக்கு போய்விடுகிறேன் என்றது.

இரண்டும் அவசரமாக சாலையின் குறுக்கே தாவின. அதிவேகமான காரின் சக்கரத்தில் சிக்கி இரண்டும் நசுங்கி போயின. மறுநாள் காரில் பள்ளிக்கு செல்லும் குழந்தையொன்று சாலையில் நசுங்கி கிடந்த தவளையை காட்டி அது என்னவென்று கேட்டது. குழந்தையின் அப்பா அது சாலையை கடக்க தெரியாத முட்டாள் தவளை என்றபடியே சிரித்தார்.  குழந்தை பாவம் என்றது  உடனே அப்பா  சாலை அசுத்தமாகிவிட்டது என்று முகஞ்சுழித்தபடியே மகளோடு செல்ல துவங்கினார்.

(நகுலன் வீட்டில் யாருமில்லை. குறுங்கதைகள் தொகுப்பில் இருந்து)

***

Archives
Calendar
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
Subscribe

Enter your email address: