நூலாறு

நேற்று வேலூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.  ஆழிபதிப்பகம் நடத்தும் நண்பர் செந்தில்நாதன்.  தன்னுடைய அரிய முயற்சியால் இந்தப் புத்தக கண்காட்சியைத் தனது ஆழி அறக்கட்டளை மற்றும் வேலூர் வாசகர் பேரவை அமைப்புடன் இணைந்து முதன்முறையாக துவக்கியுள்ளார்.  புத்தகக் கண்காட்சி அல்லது புத்தக திருவிழா என்பதற்கு மாற்றாக நூலாறு 2010 என்று அவர்கள் விளம்பரப்படுத்தியிருந்தது பிடித்திருந்தது.

எழுத்தாளர் அழகிய பெரியவன் இந்தப் புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பில் அயராது ஒடியாடி வேலை செய்து கொண்டிருந்தார், புத்தகங்கள் மீது அவர் கொண்ட நேசம் தான் அப்படி செயல்பட செய்கிறது என்பது சந்தோஷமாக இருந்தது ,

வேலூர் கோட்டை சரித்திர நினைவுகளால் நிரம்பியது. நானும் கோணங்கியும் அங்கே சுற்றியலைந்து நிறையப் பேசியிருக்கிறோம். மதியம் சென்னையில் இருந்து காரில் பயணம் செய்யும் போது வழியெங்கும் உள்ள கிராமங்கள் மெல்ல சென்னையின் புறநகரமாக உருமாறிக் கொண்டிருப்பது புலப்பட்டது. சாலையில் எங்காவது ஒரு ஆடு மாடு ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்தபடியே வந்தேன். அநேகமாக வேலூர் வந்து சேரும்வரை  ஒன்றை கூட காணமுடியவில்லை.

பெரும்பான்மை கிராமங்களில் விவசாய நிலங்கள் கைமாறிப்போய்விட்டன.  புறவழிச்சாலை உருவான பிறகு எல்லா ஊர்களும் ஒன்று போலவே தெரிகின்றன.  அவசரமில்லாத பயணம் என்பதால் ஆங்காங்கே நிறுத்தி நிறுத்தி இறங்கி நடந்து மெதுவாகவே சென்றேன். இவ்வளவு வாகனங்கள் பயணம் செய்யும் சாலைகளில் எங்குமே குடிநீர் வசதிகள் கிடையாது.

சாலையோரம் இளநீர் விற்றுக் கொண்டிருந்த ஒருவர் என்னிடம் குடிப்பதற்காக தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டு வாங்கி குடித்தார். இத்தனை ஊராட்சிகள், நகராட்சிகள் இருக்கின்றன. அவை அந்த ஊரின் புறவழிச்சாலையில் ஒரு மகிழ்விடம் அமைத்து கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்து தந்தால் வழிப்பயணிகளுக்கு உபயோகமாக இருக்ககூடும்.

பயணத்தில் படிப்பதற்கு ஏதாவது வார மாத இதழ்கள் வாங்கலாம் என்று  சென்னையை விட்டு புறப்படும் போது நினைத்துக் கொண்டேன்.  வேலூர் வந்து சேரும்வரை வழியில் ஒரு இடத்தில் கூட எந்த இதழ்களும் கிடைக்கவில்லை.

ஒன்றிரண்டு பெட்டிக்கடைகளில் விசாரித்த போது வார இதழ்கள் வேண்டுமானல் ஊருக்குள் உள்ள பேருந்து நிலையம் அருகே செல்ல வேண்டும் வேறு எங்கும் கிடைக்காது என்றார்கள். பொதுவாக இது போன்ற நீண்ட புறவழிச்சாலைகளில் மருந்துக்கடைகளும் புத்தக கடைகளும் அவசியமான தேவை. இரண்டுமே தமிழகத்தின் எந்தப் புறவழிச்சாலையிலும் நான் கண்டதேயில்லை.

காலையிலே மழை பெய்திருந்தது போலும். காற்றில் அந்தக் குளிர்ச்சியிருந்தது.  தூரத்து மலைகளைப் பார்த்தபடியே பயணம் செய்வது பிடித்தமானது. நேற்றும் அப்படியே நடந்தது.

இரண்டு மணி நேரப் பயணத்தில் வேலூர் வந்து சேர்ந்தேன். வேலூர் என்றதுமே என் நினைவில் வருபவர்கள் சிவராமனும் சீனிவாசனும்.  தீவிர இலக்கிய வாசகர்கள். அவர்களை பார்க்க முன்பு அடிக்கடி நானும் கோணங்கியும் வருவதுண்டு. சிவராமன் இப்போது சென்னையில் இருக்கிறார். ( பைத்தியக்காரன் என்ற பெயரில் வலைப்பதிவு செய்பவர் அந்த சிவராமனே. ) சீனிவாசன் வீடு சத்துவாச்சாரியில் இருந்தது. அவர்களுடன் வேலூரை சுற்றி வந்திருக்கிறோம் .

வேலூரில் பணியாற்றும் நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான குப்புசாமியை சந்தித்தேன். அவர் நோபல் பரிசு பெற்ற ஒரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு நூலை மிக சிறப்பாக மொழியாக்கம்  செய்திருக்கிறார். அவரோடு பேசியபடியே அறையில் இருந்த போது மழை துவங்கியது.

பலத்த மழை. அவ்வளவு ஆவேசமான, கிறுக்குபிடித்த மழையை நேற்று தான் கண்டேன். கொட்டித் தள்ளியது. புத்தகக் கண்காட்சியின் உள்ளே தண்ணீர் ஒழுகி நிறைய புத்தகங்கள் நனைந்து போய்விட்டன. வெளியே அமைக்கபட்டிருந்த பொது அரங்கம் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. காலி நாற்காலிகளை காற்று அடித்து உருட்டியிருந்தது. எங்கும் ஈரம். தண்ணீரின் கெத்தலிப்பு. நனைந்த புத்தகங்களை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். மழைவெறிக்கவேயில்லை. ஆங்காங்கே ஆட்கள் நின்றபடியே மழையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள்.

நேற்று நான் பேசுவதாக இருந்த நிகழ்ச்சி ரத்தானது. ஆனால் இந்த நிகழ்விற்காக வந்திருந்த நிறைய வாசகர்களுடன் புத்தகக் கண்காட்சியின் உள்ளே உயிர்மை அரங்கில் ஒரு மணி நேரமளவு மனம்விட்டு பேசும் கலந்துரையாடல் நடைபெற்றது. அற்புதமான அனுபவமது. எவ்வளவு ஆழ்ந்து படிக்கிறார்கள். சினிமா, இலக்கியம், பயணம் என்று வேலூர் நண்பர்களுடன் நிறைய பேசிக் கொண்டிருந்தேன்.

விளையாட்டை ஊக்கபடுத்த பெரும்பான்மை ஊர்களில் விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன. ஆன்மீக ஈடுபாட்டிற்கு கோவில் தியான மையங்கள் இருக்கின்றன. தொழில் முனைவோருக்கு சேம்பர் இருக்கிறது. ஆனால் இலக்கியம் இசை நாடகம் சினிமா என்று அறிவுத்துறை சார்ந்து விருப்பம் கொண்டவர்கள் சந்தித்து பேச, பகிர்ந்து கொள்ள ஏன்  எங்கும் சந்திப்பு மையங்கள், கலாச்சார வெளியே இல்லை என்பதைப் பற்றியே பேச்சு நீண்டது.

நூலகங்கள் ஏன் மாலையோடு மூடப்படுகின்றன. புத்தகம் இரவல் தருவது மாலையோடு முடிந்து போவது சரி. ஆனால் அங்கே மாலை 5 மணி துவங்கி 9 மணி வரை வேறு கலச்சார நிகழ்வுகள் நடத்தலாம் தானே.

சிறுவர்களுக்காக விளையாட்டு பூங்கா போல பெரியவர்கள் சந்தித்து பேசிக் கொள்ள  அறிவுப்பூங்காக்களை உருவாக்கலாமே.  சினிமா தவிர வேறு கேளிக்கை வடிவங்கள் யாவும் ஏன் முடக்கபட்டுவிட்டன.  இந்தச் சந்திப்பு வெளி இல்லாமல் போனதால் தான் அதை இணையத்தின் வழியே இன்று சாத்தியமாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னேன்.

பெரும்பான்மை வாசகர்கள் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து சந்தேகம் கொண்டிருக்கிறார்கள். அப்படி எந்த குறுக்குவழிகளும் வாசிப்பில் கிடையாது.  சில வேளைகளில் பரிந்துரைகள், விமர்சனங்கள் வழிகாட்ட கூடும். மற்றபடி வாசிப்பது பெரிதும் மனவிருப்பம் சார்ந்த ஒன்று. எந்த புத்தகத்தை நான் நாளை படிக்க கூடும் என்று இன்று என்னால் முடிவு செய்ய இயலாது என்று சொன்னேன்.

மேடை என்ற வடிவத்தை விடவும் இது போன்ற நெருக்கமான உரையாடல்கள் அதிகம் பகிர்ந்து கொள்ள உதவி செய்கிறது. நேற்றும் அப்படியே ஆனது. ஒன்பது மணியளவில் மழை வெறித்திருந்தது.  கூட்டம் நடைபெறாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்தார் செந்தில். அதை விடவும் இந்தச் சந்திப்பு பிடித்திருப்பதாகச் சொல்லி விடைபெற்றேன்.

வேலூர் புத்தக கண்காட்சியில் பனிரெண்டு புத்தகங்கள் வாங்கினேன்.  இரவில் கிளம்பி மறுபடியும் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தேன்.  அதே சாலை ஆனால் இரவில் வேறு தோற்றம் கொண்டிருந்தது. மழைக்குப் பிந்திய காற்றின் அருமையை நேற்றிரவு முழுமையாக உணர்ந்தேன்.

பழைய பாடல்கள் கொண்ட இசைத்தட்டு ஒடத்துவங்கியது.  மழைஇருட்டும், ஏகாந்தமான சாலையும் குளிர்காற்றும் பிடித்தமான பாடலுமாக நேற்றிரவின் பயணம் அற்புதமாக அமைந்தது.

சென்னைக்குள் வந்த போது பின்னிரவாகியிருந்தது.  நகரம் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. காலியான சாலைகள், பின்னிரவின் நீண்ட அமைதி. சென்னையை இப்படிப் பார்க்க  பிடித்திருந்தது.

விடிந்து எழுந்த போது இந்த நாளின் பரபரப்பு தொற்றிக் கொண்டது. போன் மணி ஒலிக்கத் துவங்கியது. இடைவிடாத அழைப்புகள் . அவசரம். முந்திய நாள் மழையின் சுவடேயில்லை. சென்னை மாநகரம் ஒய்வேயில்லாமல் ஒடிக்கொண்டேயிருக்கும் ஒரு மின்சார ரயில் போல தான் இருக்கிறது.  நானும் அதில் ஏறி ஒடிக்கொண்டிருக்கிறேன்.

**

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: