சினிமா மின்னல்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச்சேர்ந்தவர் மின்னல். இவரது இயற்பெயர் உதுமான் முகையதீன்.  ஜனசக்தி இதழின் பத்திரிக்கையாளராக துவங்கி விளம்பர நிறுவன அதிபராகவும், படத்தயாரிப்பாளராகவும் இயங்கிய அவர் தனது சினிமா அனுபவங்களை தொகுத்து மறக்க முடியாத திரைப்படத் தயாரிப்பு அனுபவங்கள் என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். நர்மதா பதிப்பகம் 2004ல் இதை வெளியிட்டுள்ளது. மிக சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம் தந்த புத்தகமிது. சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் தமிழ்முரசில் இதன் முதற்பாகம் தொடராக வெளியாகியிருக்கிறது.

2005ல்  நான் மலையாளத் திரைப்பட இயக்குனர் ஜான் ஆபிரகாம் பற்றி எழுதிய ஒரு கட்டுரையை  வாசித்துவிட்டு அவர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜானை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். நான் அவரது படங்களைப் பார்த்திருக்கிறேன்.

அவரது ஒடேசா சினிமா இயக்கத்தோடு தொடர்பு உண்டு என்று சொன்னேன்.

நான் தான் ஜானின் முதல்படத்தைத் தயாரித்தேன்.  அவரது சினிமா வாழ்க்கை என் வழியாகவே துவங்கியது என்று சொல்லி அரைமணி நேரம் ஜான் ஆபிரகாம் பற்றிய தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். கேட்கையில் மிக வியப்பாக இருந்தது.

தமிழ்திரையுலகில் விளம்பர ஏஜென்ட், தயாரிப்பு நிர்வாகி என்று பலபொறுப்புகளில் செயல்பட்டுக் கொண்டிருந்த மின்னல் மலையாளத்தில் தனது முதல்படத்தைத் தயாரிக்க நினைத்தபோது அன்றைய பிரபல இயக்குனர் பி.என்.மேனனை வைத்து ஒரு படத்தை உருவாக்கலாம் என்று முனைந்திருக்கிறார்.

இதற்காக தீவிரமான கதை விவாதம் நடந்திருக்கிறது. அதில் கவிஞர் வயலார் ராமவர்மா போன்றோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.  பகலிரவாகக் குடித்துத் தீர்த்தபோதும் கதை வரவேயில்லை. காலிபாட்டில்களை பார்த்த மின்னல் சோர்ந்து போய்விட்டார் இனி நாம் கதை பேசிப் பயனில்லை  என்று செம்மீன் புகழ் தகழியை வேறு வரவைத்து கதை கேட்டிருக்கிறார்கள். அவர் சொன்ன கதையும்  திருப்தியளிக்கவில்லை.

அப்போது கதை விவாதத்தில் இருந்த பூனா திரைப்படக்கல்லூரியில் படித்த ஆசாத் என்பவர் தன்னோடு படித்த ஜான் ஆபிரகாமை அழைத்து படம் பண்ணச் செய்யலாம் என்ற யோசனையைச் சொல்லியிருக்கிறார். ஜான் வந்து சேர்ந்து குடிவிருந்தில் கலந்து கொண்டார்.  ஜான் வந்தபிறகு குடி மிக அதிகமானதே தவிர கதை உருவாகவில்லை. ஆனால் முடிவில் ஒரு நல்லகதையை உருவாக்கினார்கள். அதன் பெயர் வித்யார்த்திகளே இதிலே இதிலே. முழுவதும் வெளிப்புறத்திலே படப்பிடிப்பு நடத்திவிடலாம் என்று திட்டமிட்டு குறைந்த முதலீட்டில் படம் தயாரிக்கப்பட்டு வெளியானது அதற்கு கேரள அரசு வரிவிலக்கு அளித்தது. படத்தின் இசை எம்.பி. சீனிவாசன்.

படத்திற்கு டெல்லிபடவிழாவில் சிறந்த இசை, சிறந்த திரைக்கதை விருது கிடைத்தது. பின்னாளில் ஜான் ஆபிரகாம் கொண்டாடப்படும் ஒரு இந்திய இயக்குனராக உருமாறினார். ஆனால் அவரது முதல்படம் என்னோடு தான் துவங்கியது. அந்தப் படத்தில் டிராலி தள்ளுவது, படப்பிடிப்பிற்கான உதவிகள் செய்வது என்று களஉதவியாளராக  ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா அவர்கள் பணியாற்றினார். அந்த நாட்களில் அடிக்கடி என்னிடம் வந்து நிறைய கதைகள் சொல்லுவார். நல்ல திறமைசாலி ஒரு நாள் முன்னேறிவருவார் என்று நம்பிக் கொண்டிருந்தேன். அது பின்னாளில் நிஜமானது என்று சொன்ன மின்னல் இது போன்று நூற்றுக்கணக்கான அனுபவங்கள்  எனக்குள் இருக்கின்றன. என் காலத்திற்குள் அதை யாரிடமாவது பகிர்ந்து கொண்டுவிட வேண்டும் என்றார்

மின்னலில் புத்தகத்தில் அவர் கலைஞர், எம்.ஜி.ஆர். சிவாஜி, தேவர் மற்றும் அன்றைய மலையாள நட்சத்திரங்களுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவங்கள் சுவைபட எழுதப்பட்டிருக்கின்றன. ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் திரைப்படம் தயாரிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்ட போது அதற்கு மின்னல் பெரிதும் உதவி படம் வெளிவரக் காரணமாக இருந்திருக்கிறார். நடிகை ஷீலாவை இயக்குனராக உயர்த்தி இவர் தயாரித்த யக்சகானம் பட அனுபவம் வேடிக்கையாக உள்ளது.

ஒரு காலத்தில் நாடே கொண்டாடிய சினிமா நட்சத்திரங்களைக் கூட காலமாற்றத்தில் பார்வையாளர்கள் கண்டுகொள்ளாமல் மறந்து போய்விடுகிறார்கள். இதில் தயாரிப்பாளர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு நாள் மாயாபஜார் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவு மேதை மார்கஸ் பட்லேயின் புகைப்படம் வேண்டும் என்று எங்கெங்கோ தேடிஅலைந்து முடிவில் மங்கிப்போன ஒரு சிறிய ஜெராக்ஸ் காப்பி ஒன்றினை பெற்றேன். ஆகச்சிறந் ஒளிப்பதிவு செய்த மேதைக்கே புகைப்படமில்லை. நம்மிடம் திரைத்துறை சார்ந்த முறையான தகவல்கள், படப்பிரதிகள், செய்திகள், புகைப்படங்கள் கொண்ட ஆவணக்காப்பகம் இல்லை. தனியார் சேமிப்பில் உள்ள சிலவற்றில் தகவல்கள் மாறுபடுகின்றன. நிறைய கறுப்பு வெள்ளைத் தமிழ்படங்களின் பிரதிகளே இல்லை. அவற்றை இனி வெறும் பெயர்களாக மட்டுமே நாம் அறிந்து கொள்ள முடியும். அதன் மூலப்படச்சுருள்கள் எரிந்தும் கவனமின்றிப் போட்டு சிதைவுற்றும் அழிந்து போய்விட்டன.

தமிழ் சினிமாவின் இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஆளுமைகள் பற்றிய விரிவாக எழுதப்பட்ட புத்தகங்களும் நம்மிடையே இல்லை. பல படங்களில் வயதானவராக நடித்த ரங்காராவ் தனது முதுமையை அடையும் முன்பே இறந்து போய்விட்டார் என்ற தகவலை நண்பர் ராஜநாயஹம் வலைப்பக்கத்தில் ஒரு முறை வாசித்த போது அதிர்ச்சியாக இருந்தது. திருப்பூரில் வாழும் எழுத்தாளர் ராஜநாயஹம் கறுப்பு வெள்ளைக் கால தமிழ் திரையுலகின் ஒரு நடமாடும் ஆவணக்காப்பகம். அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள சுவாரஸ்யமான திரைக்குறிப்புகள் தனித்து நூலாக வரவேண்டியவை. இவரைப்போல தனது நினைவுகளில் தமிழ்சினிமாவின் கடந்தகாலத்தை துல்லியமாக கொண்ட பலர் இருக்கிறார்கள். அவை அச்சில் பதிவாகவேயில்லை. சமீபத்தில் வெளியான கவிஞர் கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்கள் புத்தகத்தில் நாற்பது வருசங்களுக்கு முந்தைய திருநெல்வேலியின் திரையரங்குகளும், எம். ஜி. ஆர் படங்களின் அழியாத நினைவுகளும் மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு முறை சென்னையின் கே.கே.நகரில் வசிக்கும் படிக்காதமேதை படத்தை தயாரித்த பாலா மூவிஸ் கிருஷ்ணசாமி அவர்களைத் தேடிச்சென்று சந்தித்தேன். இவர் தமிழ்நாட்டில் முதன்முறையாக திறந்தவெளி சினிமா தியேட்டரை உருவாக்கியவர். இன்றுள்ள பிரார்த்தனா திரையரங்கு போன்றதன் முன்னோடி முயற்சியது. இவர் திறந்தவெளித் திரையரங்கை சென்னையை அடுத்த சோமங்கலம் என்ற கிராமத்தில் அமைத்தார். வயல்வெளியின் நடுவே மிகப்பெரிய களம் போன்ற இடம். அங்கே சிறிய மரப்பெஞ்சுகள். ஒரு பக்கம் பெரிய திரை. இவ்வளவே அரங்கின் அமைப்பு. மிகவும் குறைவான கட்டணம். ஒரு ஆண்டுகாலம் இந்த அரங்கம் செயல்பட்டிருக்கிறது. பின்பு அரங்கிற்கான வரி அதிகமாக போடப்பட்டு அரங்கம் முடக்கபட்டுவிட்டது.

கிருஷ்ணசாமி தான் முதன்முறையாக நட்சத்திர கிரிக்கெட் போட்டியை சென்னையில் அறிமுகப்படுத்தியவர். மும்பை அணிக்கும் சென்னை அணிக்கும் நடைபெற்ற அந்தக் கிரிக்கெட் போட்டியின் புகைப்பட ஆல்பத்தைக் காட்டினார். அதில் எம்.ஜி. ஆரும், சிவாஜியும் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள்.  அது போலவே ராஜ்கபூர் தேவ் ஆனந்த், நர்கிஸ், நூதான் என வட இந்திய நட்சத்திரங்கள் பலரும் கிரிக்கெட் மட்டையுடன் நின்று கொண்டிருந்தார்கள். தான் படிக்காதமேதை படத்தை வங்காளத்தில் இருந்து உரிமை வாங்கி தமிழில் உருவாக்கிய கதையை இரண்டு மணி நேரம் விரிவாக சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சம்பவங்கள் படத்தை விட அதிகமான அதிர்ச்சியும் திருப்பங்களும் வியப்பும் கொண்டிருந்தது.

ஒரு திரைப்படத்தை தயாரிப்பதில் ஏற்பட்ட சிரமங்கள், உடன் இருந்தவர்களின் சூழ்ச்சிகள், நீதிமன்ற வழக்குகள் என்று அவர் தனது வெற்றிப்படத்தின் பின்னால் இருந்த மறையாத வடுக்களை சொல்லிக் கொண்டேயிருந்தார். நினைவு வலியது. அதன் கண்கள் எப்போதும் கடந்தகாலத்தை உற்றுப்பார்த்தபடியே இருக்கின்றன போலும். ஒவ்வொரு வெற்றியும் அதன் பின்னால் வெளிப்படுத்தபடாத துயரக்கதை ஒன்றினை கொண்டிருக்கிறது என்பது நிஜம் தானில்லையா.

**

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: