காண் என்றது இயற்கை

எனது புதிய புத்தகமான காண் என்றது இயற்கை குறித்து கவிஞர் கலாப்ரியாவின் கட்டுரை.

••

காண் என்றது இயற்கை – கவிஞர் கலாப்ரியா

’நதி’ மலையாள சினிமா என்று நினைவு. வயலாரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.இது மொழிபெயர்ப்பு

“ உன்னைக் குறித்து நான் பாடிய பாட்டுக்குஓராயிரம் அலைகள் சுருதியிட்டன உன் மனோராஜ்ஜியத்தின் நீலக்கடம்பில் நீயென் விளையாட்டோடத்தைக் கட்டிப் போட்டாய், அன்பே கட்டிப் போட்டாய்.”

ஒரு நதிக்கரை. இக்கரைக்கும் அக்கரைக்கும் ஓடுகிற ஓடம், ஓட்டுகிற ஓடக்காரன்….ஓடத்தை சற்றே ஒரு முளையில் கட்டிப் போட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான். ஓடம் கரையோரம் அலையாடிக் கொண்டிருக்கிறது…. ராமகிருஷ்ணின் நதி போன்ற கட்டுரை அல்லது கதை அல்லது அது என்ன படைப்பானாலும் அதன் ஆற்றொழுக்கான வரிகளில் ஓடமென நீந்திக் களிக்கும் போது, அபூர்வமான ஒரு வரி நம்மை இப்படிக் கரையில் கட்டிப் போட்டு விடும். அவர் ஓடக்காரனென ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்….. இப்படிப் படைப்பின் இடையே வரிகள் நம்மைக் கட்டிப் போடுவதுதான் படைப்பாளியின் வெற்றி.

நானும் ராமகிருஷ்ணனும் பேசிக் கொண்டிருந்தோம் எனது வீட்டில். அவர் அப்போது ஒரு கபந்தகப் பசியுடன் இருந்தார்… சாப்பிட்டு எத்தனை நாளாயிற்றோ….சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தோம்… நானும் வேறு பேச்சு சுவாரஸ்யத்தில் அதிகமாக விழுங்கிக் கொண்டிருந்தேன்,.வீட்டில் டீச்சர் சப்பாத்தி போட்டு மாளவில்லை. அப்போதெல்லாம் அவர் அடிக்கடி தென்காசிக்கு வருவார்.

பேச்சு, ‘கண் தெரியாத இசைஞன்’ நாவல் பற்றிச் சுழன்றது.அதில் வரும் ஒரு வரியைக் குறித்து இருவரும் ஏக காலத்தில் பேச ஆரம்பித்தோம், அந்த வரி, இருவரையும் கட்டிப் போட்டது. கை கழுவ எழுந்திருந்தோம். (டீச்சர் அப்பாட என்று பெருமூச்சு விட்டிருப்பாள்). அதில் கண் தெரியாவிட்டாலும், அவன் நன்கு குதிரை ஓட்டவும் பழகி இருப்பான்..அப்படிக் குதிரை ஓட்டிச் செல்லும் போது, அவன் வழியில் ஒரு கல்லில் கால் ஊன்றி நிற்பான்,அது ஒரு மைல்க்கல். என்று ஒரு வரி வரும்.அவனுக்கு அது பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லையென்பது சொல்லாமல் சொல்லப் பட்டிருக்கும்.

அப்படிப் பேசிக் கொண்டிருந்தவரின் இன்றைய வரிகள் என்னமாய் வாசகனைக் கட்டிப்போடுகின்றன…என்று நான் வியந்து வியந்து போகிறேன்.

” உலகினை ஒளியின் கைகள் தினமும் தூய்மைப் படுத்துகின்றன,குழந்தையை விழிக்க வைப்பது போன்று ஒளி மலையை எழுப்புகிறது.”விழித்துக் கொண்டபடியே அம்மா எழுப்புவதற்காகக் காத்துக் கிடக்கும் குழந்தையைப் போன்றதுதான் மலையிருக்கிறது..” என்று ராமகிருஷ்ணனின் இந்த நூலில் ஒரு வரி வருகிறது.

எந்த அழகிலிருந்து அல்லது எந்த அவதானிப்பிலிருந்து எது வந்தது என்று அறிய முடியாத ஒரு திகைப்பைத் தரும் வரிகள்.ரிவர்ஸ் மெட்டஃபர் என்கிற மாதிரி எதற்கு எது மறு உருவகம் என்று ஒரு சந்தோஷமான திகைப்பு.நீரெடுத்து நீருக்கே நீரால அர்ப்பணம் என்கிற மாதிரி ஒரு அனுபூதியான நிலை.அங்கிருந்து வந்த மொழி அங்கேயே செல்வது போல ஒரு தொன்மையான உணர்வு. இது எழுத்து தரும், அவரது அருமையான உரை நடை தரும் திகைப்பு. அவர் சொல்லுகிற, சொல்லத் தேர்ந்தெடுத்த விஷயங்கள் தரும் ரசானுபவம் இன்னும் சிறப்பானது.

மலை என்பது மாபெரும் நிசப்தம் என்கிறார்.

ஆம்…அங்கே ஆயிரம் ஒலிகள் இருந்தாலும் அது நிசப்தம்.

பாபனாச மலையில் ஒரு அழகான விடுதி இருக்கிறது.மின் வாரியத்துக்குச் சொந்தமானது.அதில் குடும்பத்தோடு ஒரு பகலில் தங்கி இருந்தேன். அந்த விடுதியின் பக்கவாட்டில்நடந்து சென்றால் வவேசு அய்யர் தவறி விழுந்து இறந்த கல்யாணி தீர்த்தம் வரும்.அதைப் பார்த்து விட்டு எல்லோரும் நகர்ந்து விட்டார்கள்.

நான், கீழே கொட்டிக் கொண்டிருக்கும் கல்யாணி தீர்த்த அருவியையும், பொங்கி வழிகிற ஓடையையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.. கருப்பென்றால் அப்படியொரு கரும்பாறை.. வெண்மையாய் விழும் தண்ணீர் இன்னும் கருப்பாக்கிக் கொண்டிருந்தது…..நான் நின்றது நல்ல உயரம்..திடீரென்று எனக்கு எல்லாமே நிசப்தமாக இருந்தது.

என்னருகிலிருந்து, ஒரு சங்கீதக் கிரீச்சலுடன் பறந்து, பாறைகளில் மோதிச் செல்லும் நதிப்பிரவாகத்தைக் கடந்து ஒரு பறவை எதிர்த் திசை மரமொன்றில் அமர்ந்தது. நதியும் சரி, அந்த சங்கீத ஒலியும் சரி… எதுவுமே புத்தியில் எட்டாமல் நிசப்தமோ நிசப்தமாயிருந்தது…. திடீரென்று தோன்றியது. ‘அய்யர்’ வேண்டுமென்றே விழுந்திருப்பாரோ என்று…இன்னும் கொஞ்ச நேரம் நின்றால் நானே குதித்தாலும் ஆச்சரியமில்லை என்று தோன்றியது….மரியாதையாக குடும்பத்தாரை நோக்கி நடந்தேன்.

அவர்கள் பேசுகிற எதிலும் என்னால் லயிக்க முடியவில்லை. மனம் கல்யாணி தீர்த்தத்தை, அந்தப் பிரம்மாண்ட உயரத்திலிருந்து பார்த்ததை நினைத்துக் கொண்டே இருந்தது.

இயற்கையை, கால நேரமின்றிப் பார்த்துப் பார்த்து அலுக்காதவனே நல்ல கலைஞனாயிருக்கிறான்.தாகூரின் வழிபாடும் வெளிப்பாடும் எல்லாமே இயற்கை சார்ந்தவைதான். அவரது ஒரு வரி நினைவுக்கு வருகிறது

“OH TINY GRASS UNDER THY FOOT IS THIS GREAT EARTH”

ஒற்றைக்கால் புல்லின் காலடியில்தான் இந்த பூமி கிடக்கிறது. அங்குலப்புழுக்கள்தான் காட்டை அளந்த வண்ணமிருக்கின்றன. அவைகளுக்குத் தெரியுமா அது மாளாத விஷயம் என்று……குழந்தைகள் தொட்டதும் சுருண்டு கொள்கிற வளையல்ப் பூச்சிகள் மறுபடி நிமிர்ந்து தன் புதிய பாதையில் சென்று கொண்டேதானே இருக்கின்றன…. புழுவின் பயணத்தை வைத்த கண் வாங்காமல்ப் பார்த்தவன் தானே எழுதுகிறான்…

என்பிலதனை வெயில் போலக் காயுமே….” என்று. ராமகிருஷ்ணனுக்கு எறும்பின் பயணத்தை, அது முப்பது மாடியை வெயிலில் ஏறுவதைப் பார்த்து அதிசயித்து மாளவில்லை, சிறு செடியை, அதன் இலைகளைப் பார்த்து அதிசயிக்கிறார். அதை, தான் சொற்களால் மட்டுமே அறிந்திருக்கிறேன் என்று ஒரு விதமான சுய பச்சாதாபமான உரையாடலை அதனுடன் மேற்கொள்ளும் போதுதான் அவர் ஒரு விருட்சமாகிறார்,

தன் எழுத்துக்களில். ‘நகல் என்பதே இயற்கையில் இல்லை’ என்னும் ராமகிருஷ்ணனும் அசலான கலைஞன்.

வெவ்வேறு காலப் பொழுதில் பெய்யும் மழையைப் பற்றிய அவரது கண்டுபிடிப்புகள்தான் எவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்கிறது.மழையும் மழை சார்ந்து அவர் கிளர்த்தும் ஆச்சரியங்கள் ஆச்சரியமானவை. ”கள்ளன் போலீஸ் விளையாடும் போது வீடு ஒரு தீப்பெட்டி போலாகி விடுகிறது” என்று ஒரு வரி.மழையைப் பற்றி குழந்தைகளிடம்தான் எத்தனை புனைவுகள். மழையும் வெயிலும் சேர்ந்து அடித்தால்…”காக்காய்க்கும் நரிக்கும் கொண்டாட்டம்” என்று சொல்லுகின்றன. காக்காயைப் பார்த்திருக்கலாம் நரியை எங்கே பார்த்திருக்கின்றன, ஆனாலும் என்னவோ, குழந்தைகள் இரண்டு உயிர்களையும், இரண்டு இயற்கையையும் ஒரு அதிசயச் சரட்டில் இணைக்கின்றன. வானில் பறக்கும் கொக்குகளிடம் நகங்களில் பூ போடுமாறு கேட்கின்றன.

கவிஞன், மழையிடம், வான் மேகங்களிடம் நிலவிடம். கவிதை கேட்கிறான். கலைஞனிடம் மழைக்கான தாகம் வற்றுவதேயில்லை…அது பெய்தும் தாகத்தை அதிகரிக்கிறது, பெய்யாமலும் அதிகரிக்கிறது.குழந்தைகளின் அபாரப் புனைவைப்போலவே, கலைஞனின் மழை குறித்த புனைவுகளும் அதிசயமானவைதான்.ரிஷ்ய சிருங்கர் கதை ஒர் எடுத்துக்காட்டு..மழை துயர் தருகிறது, துயரைப் போக்குகிறது..( ராமாயண சீரியலின் ஒரு எபிசோட்)

ராமகிருஷ்ணனை கோணங்கிதான் என்னிடம் அழைத்து வந்தான், அவனுக்கான பயணத்துணையாக. அவனே ராமகிருஷ்ணனை ஒரு அற்புதமான் பயணியாக்கி இருக்கிறான் என்று எனக்குத் தோன்றுகிறது.நாம் இன்று எல்லோரும் இருவருடனும் கால்களாலன்றி ஒரு பயணம் மேற்கொள்கிறோம். ஆனால் இது ஒரு நகல்ப் பயணம்.அதனால்த்தான் பயணத்தின் இடையே அவரை வசீகரிக்கும் மரத்தை, நிழல், தரையில், வீழ்த்துவதாக எழுத முடிகிறது. அவர் சொன்ன பிறகுதான் அந்தப் படிமத்தின் குளிர்ச்சி பிடிபடுகிறது.

புதிய சாலைகளின் அருகே கைவிடப்பட்ட சாலைகளின் தனிமையும் ஏக்கமும் அவரது நடையினால், அவரது புழுதி படிந்த கால்களினால், நம்மை எட்டுகிறது. அவரது இந்தக் கண்ணோட்டம் என்னும் களிபெருங்காரிகை மனதே இயற்கையை, நம் மடியில் ஒரு குழந்தையைத் தருவது போல் தருகிறது.

ராமகிருஷ்ணன் எழுதுகிறார், ” ஒரு பூ வேறு வாசனைகள் தனக்குள் புகுந்து விடாமல் தனது வாசனையைப் பூட்டி வைத்திருப்பதாக”.

டி.கே.சி சொன்னதாக கி.ரா மாமா சொல்லுவார், செண்பகப் பூவின் மணத்தில் ஒரு சோக பாவம் இருப்பதாக.செண்பகப் பூ கவலையைப் பூட்டி வைத்திருக்கிறது போலும்.

என் அம்மா சொல்லுவாள், ”ஆனையப் பார்த்தா அன்னைய தோசம் போயிரும்”,என்று. அதற்காகவே நெல்லையப்பர் கோயில் யானை தெரு வழியாகப் போகும் போது (போகும்போது மட்டுமே) தெருவாசலுக்கு வந்து, படி தாண்டாமல் எட்டிப்பார்த்து, லேசாக கன்னத்தில் போட்டுக் கொள்ளுவாள்.பல இளம்பெண்கள் வலைச்சன்னல் வழியாகப் பார்ப்பார்கள், விடலைக் கண்கள் அவர்களை மொய்க்க. என்னுடைய சுயம்வரம் கவிதையில் சினிமா விளம்பரவண்டி வாசல் கடக்க அதை இளம்பெண்கள் எட்டிப் பார்ப்பதாக எழுதியிருப்பேன். மூவருலா வந்த காலங்களிலும், பெண்கள் அரசனையும் யனையயும் இப்படிப் பார்த்திருக்கிறார்கள். பிச்சாண்டியாக வரும் கங்காளநாதரை சனகாதி முனிவர்களின் பெண்டுகள் ஆடை நெகிழப் பர்த்திருக்கிறார்கள்.இது ஒரு.தொல்லியத் தொடர்பு. யானை ஒரு தொல்லியல்ப் படிமம்.

நமது தொன்மங்களில் எத்தனையோ கதைகள், பறவைகளையும் மிருகங்களையும் பேச வைத்து மகிழ்கின்றன. மகாபாரதத்தில் நிறையக் காணலாம். (இந்திரத்யும்னன்கதை)..

ஆயிரம் கொக்குகள் என்ற இந்தநூலின் மிகச் சிறந்த கட்டுரையாக எனக்குப் படுகிறது.ஒன்றிரண்டு கட்டுரைகள் விஷயதானத்திற்காக பத்திரிக்கைகள் தரும் நெருக்கடிக்கிடையே எழுதப்பட்டவை போல் இருக்கின்றன. இந்த நெருக்கடி புதுமைப் பித்தன் தொடங்கி எல்லோருக்கும் உண்டு.

பிரபஞ்சத்துடனான மானசீக உரையாடலை இயற்கையின் புலனாகாத பல ஊடகங்கள் வழியாகவே நாம் நடத்தியாக வேண்டியிருக்கிறது. ராமகிருஷ்ணனுக்கு, பிரபஞ்சத்தின் மூளையாக, உடலாக, பறவையும் மிருகமும், மலையும், செடி கொடியும், எறும்பும் சிறு செடியும், பெரு நிழலும், மழையும், நதியும் இயற்கைப் பருண்மையாக, அந்த உரையாடலுக்கான எல்லா சாத்தியங்களையும் வழங்கியிருப்பதை இந்தத் தொகுதியில் நன்றாக அனுபவிக்க முடிகிறது.

அவர் அதில் மகத்தான வெற்றி அடைந்திருக்கிறார்.அவருக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.

(மதுரையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
Subscribe

Enter your email address: