நினைவின் சிறகுகள்.

கவிஞர்களின் வாழ்வை முதன்மைப்படுத்தி உருவாக்கபட்ட இரண்டு படங்கள் எனக்கு எப்போதும் பிடித்தமானவை. ஒன்று நோபல்பரிசு பெற்ற கவிஞரான பாப்லோ நெருதாவின் தலைமறைவுகால வாழ்வில் அவருக்கும் ஒரு தபால்காரருக்குமான நட்பைச் சொல்லும் Il Postino என்ற இத்தாலியப்படம். Michael Radford இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளியானது. படம் முழுவதும் கவித்துவமான உரையாடல்கள். இசையும் ஒளிப்பதிவும் நடிப்பும் அற்புதமாக அமைந்த படம். ஒரு கவிஞன் எப்படி உருவாகிறான் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி.

மற்றொரு படம் Darioush Mehrjui யின் ஈரானியத் திரைப்படமான The Pear Tree இது வெற்றிபெற்ற ஒரு கவிஞனின் பால்யகால நினைவுகளை, எழுதிச் சோர்ந்து போன அவனது இன்றைய மனநிலையின் நெருக்கடிகளை இடைவெட்டி வெளிப்படுத்துகிறது. இரண்டுமே உலக சினிமாவில் மிக முக்கியமான படங்கள். கவிஞர்களின் மனஉலகை உண்மையாகவும் நுட்பமாகவும் சித்தரித்த படங்கள் இவை.

தனது வாழ்நாளெல்லாம் காதலைக் கொண்டாடிய கவிஞனான நெருதா இப்படத்தில் உள்ளுர் தபால்காரன் ஒருவனின் காதலுக்காக தானே கவிதைகள் எழுதித் தருவதோடு அவனையும் கவிஞனாகவும் உருமாற்றுகிறார். கவிதை உலகின் விசித்திரங்களை தபால்காரன் அறிந்து கொள்கிறான். காதலிலும் வெற்றிபெறுகிறான். புகழ்பெற்ற கவிஞன் ஒருவனுக்கும் கவிதை எழுத விரும்புகின்ற இளம் வாசகனுக்குமான நட்பும் பகிர்வும் இதில் சிறப்பாக வெளிப்படுத்தபட்டிருக்கிறது

இல் போஸ்டினோ படத்தில் நெருதாவின் கவிதைகளே பயன்படுத்தபட்டிருக்கின்றன. Twenty Love Poems என்ற நெருதாவின் காதல்கவிதைகளுக்கு நிகராக இன்றுவரை வேறு எந்த கவிதைகளையும் நான் வாசிக்கவில்லை.

இந்தபடம் காதலின் கொண்டாட்டத்தையும் கவிதையின் வழி அடையும் ஆனந்தத்தையும் முன்வைக்கிறது என்றால் இதற்கு நேர் எதிரான ஒரு மனநிலையின் வெளிப்பாடே தி பியர் ட்ரீ. இப்படத்தின் பின்புலம் 1940களின் காலகட்டம்.

கிராமப்புறத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டிற்கு எழுதுவதற்கான தனிமை வேண்டி செல்கிறார் புகழ்பெற்ற கவிஞரும் அரசியல் எழுத்தாளருமான மெஹமூத். அந்த வீட்டில் தான் அவரது பால்யகாலம் கழிந்திருக்கிறது. நிறைய மரங்களோடு உள்ள அழகான பண்ணை வீடது. அந்த வீட்டில் இப்போது யாருமில்லை. தான் புதிதாக எழுத ஒத்துக் கொண்ட விசயங்களை முடிக்க வேண்டும் என்பதற்காக அங்கு வந்து சேர்கிறார் மெஹமூத். அவரது மனம் ஏனோ படைப்பில் ஈடுபாடு காட்ட மறுக்கிறது.

காதல்கவிதைகள் எழுதத் துவங்கி நல்ல கவிஞராக அடையாளம் காணப்பட்டு, அதிலிருந்து அரசியல் இயக்கங்களில் நேரடியாகப் பங்குபெற்று, தீவிரமான  சமூக அக்கறையுள்ள எழுத்தாளராக நிறைய படைப்புகளை எழுதி புகழின் உச்சியில் இருக்கிறார் மெஹமூத். ஆனால் அவரால் தனது புதிய படைப்பை எழுத முடியவில்லை. மனம் அதில் குவிய மறுக்கிறது.

எழுதி எழுதி திருப்தியில்லாமல் காகிதங்களைக் கிழித்துப் போடுகிறார். ஏன் அப்படியானது என்று அவருக்கே புரியவில்லை. Writer’s block எனப்படும் மனத்தடையது. பதிப்பாளர் கொடுத்த காலக்கெடு நீண்டு கொண்டே போகிறது என்று உள்ளுற பதற்றமடைகிறார். ஆனால் அவர் விரும்பியது போல மனம் எழுத்தில்  ஆர்வம் காட்ட மறுக்கிறது. நகரில் இருந்தால் தேவையற்ற சந்திப்புகள், வீண் அரட்டைகளில் நேரம் போய்விடும் என்று இங்கே வந்தால் இங்கும் தன்னால் எழுத முடியவில்லையே என்று தன்மீதே கோவித்துக் கொள்கிறார்

அவரது தோட்டத்தில் உள்ள ஒரு பேரிக்காய் மரம் காய்க்க மறுக்கிறது என்று அவரது தோட்டத்தை கவனிக்கும் முதியவர் கதவைத் தட்டி மெஹமூத்திடம் புகார் செய்கிறார். தன்னால் அதை எல்லாம் கவனிக்க நேரமில்லை என்று மெஹமூத் முதியவர் மீது கோபப்படுகிறார் . முதியவரோ நிதானமாக அய்யா இது உங்கள் தோட்டம். நீங்கள் ஒரேயொரு முறை அந்த மரத்திடம் வந்து பேசுங்கள். அது உங்கள் பேச்சைக் கேட்டு ஒருவேளை காய்க்கத் துவங்கிவிடும். மரங்கள் நமது பேச்சை கேட்க கூடியவை. அதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். இப்போது ஏனோ அது காய்க்க மறுக்கிறது. அதை பேசி சமாதானம் செய்ய வேண்டியது நமது வேலை. ஒருவேளை அந்த மரத்தை ஏதாவது துர்வினைகள் பிடித்துக் கொண்டிருக்காலம். நாம் தானே அதன் மீது அக்கறை காட்ட வேண்டும் என்கிறார்.

மெஹமூத்திற்கு அவரது பேச்சு எரிச்சலை உருவாக்குகிறது. எனக்கு எழுத வேண்டிய வேலை தலைக்கு மேலே கிடக்கிறது. இந்த மரம் காய்க்காவிட்டால் அதை வெட்டி எறியுங்கள் என்று சொல்லி கதவை மூடிக் கொள்கிறார்

முதியவர் அந்தக் கோபத்தை கண்டு பொருட்படுத்துவதேயில்லை.  மறுபடியும் ஜன்னல் கதவைத் தட்டி இந்த மரம் ஏனோ வீம்பாக நடந்து கொள்கிறது. இதைப் பார்த்து மற்ற மரங்களும் காய்க்க மறுத்துவிட்டால்  என்ன செய்வது. இம்மரத்திற்கு நான் தண்ணீர் விட்டேன். இத்தனை ஆண்டுகாலம் கவனமாக வளர்த்துவந்தேன். இப்போது அது காய்க்காமல் இருப்பது  என்னை அவமானப்படுத்துவது போலிருக்கிறது என்று  சொல்கிறார்.

மெஹமூத்விற்கு அவரை காண்பதே பிடிக்காமல் போய்விடுகிறது. ஜன்னலையும் மூடிக் கொண்டு எழுத முற்படுகிறார். மனதில் வார்த்தைகள் சுரக்கவேயில்லை. அவர் நிம்மதியிழக்கிறார். ஆத்திரமாக வருகிறது. ஆனால் எப்படி அந்த மனநிலையைக் கடந்து போவது எனத் தெரியவில்லை.

சற்று நேரத்தின் பிறகு அதே முதியவர் தனது நண்பர் அழைத்து வந்து மெஹமூத்தின் அறைக்கதவை தட்டுகிறார். இந்த மரத்தினைச் சாந்தி செய்ய ஒரு சடங்கு செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு நீங்கள் அனுமதியுங்கள் என்கிறார். மெஹமூத் ஆவேசமாகி  ஏன் என் பிரச்சனையை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள் என்று கத்துகிறார். அதற்கு முதியவர் நீங்களும் ஒரு காலத்தில் என்னைப் போலவே அந்த மரத்தை நேசித்தீர்கள். அதனடியிலே படுத்து கிடந்திருக்கிறீர்கள். அதில் ஏறி விளையாடியிருக்கிறீர்கள்.  அதெல்லாம் உங்களுக்கு மறந்து போய்விட்டதா என்று கேட்கிறார்.

மெஹமூத்திற்கு தனது பதின்வயது நாட்கள் நினைவிற்கு வருகிறது. அப்போது அவர் எம் என்ற தன்னை விட வயதில் மூத்த அழகான ஒரு பெண்ணைக் காதலித்து கொண்டிருந்தார். உறவுக்காரப்பெண் அவள். அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார். இருவரும் பகலெல்லாம் ஒன்றாக விளையாடினார்கள். கூடிக் கதை பேசினார்கள். எம் உறங்கும் போது அவள் அருகில் இருந்து பார்த்துக் கொண்டேயிருக்கிறார் மெஹமூத். அவள் மீதான காதல் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அதைக் கண்டு மற்ற பையன்கள் கேலி செய்கிறார்கள்.

அந்தக் காதலின் வேதனையில் தனது முதல்கவிதையை எழுதுகிறார். அந்தக் கவிதையை அவர் அறியாமல் எடுத்து படித்த எம் கேலி செய்து சிரிக்கிறாள். அவளும் தன்னைக் காதலிக்கிறாள் என்று நம்புகிறார் மெஹமூத். அவர்களுக்குள் வெளிப்படுத்தபடாத ஒரு காதல் நாடகம் நடந்து கொண்டிருக்கிறது,

திடீரென ஒரு நாள் அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் எம் காரில் தன்குடும்பத்தோடு ஊரைவிட்டு புறப்பட்டு போகிறாள். அவள்  மெஹமூத்தின் கவிதைகளையும் தன்னோடு சேர்த்து எடுத்துக் கொண்டு போவதை உணர்ந்து ஒரு முறையாவது சந்தித்துவிட வேண்டும் என்று சைக்கிளில் பின்னாடியே துரத்துகிறார். ஆனால் அந்தக் கார் கடந்து போய்விடுகிறது. அவளது பிரிவுத்துயர் உருவாக்கிய மனவேதûனையை அவரால் தாங்கிக் கொள்ள முடியவேயில்லை.

அந்த நினைப்பு அவரை உடல்நலமற்றுப் போகச் செய்கிறது. எப்போதும் தனிமை பீடித்து போயிருக்கிறார். விளையாட்டும் கலகலப்பும் அவரை விட்டுப் போய்விடுகிறது. ஆனால் கவிதைகள் மனதில் சுரக்கத் துவங்குகின்றன. பின்பு ஒரு நாள் உடல்நலமற்று போன அவரைக் காண எம் வருகிறாள். அவளைப் பார்க்க கூடாது என்று முகத்தை போர்வையால் மூடிக் கொண்டு கண்ணீர் விடுகிறார். எம் தன்னுடைய விரலால் துணியின் மீது கசியும் கண்ணீரைத் துடைத்துவிட்டு என்றாவது ஒரு நாள் நாம் ஒன்று சேருவோம் என்கிறாள். பின்பு எம்மை அவர் காணவேயில்லை. அரசியல் இயக்கங்களில் பங்கேற்று பிடிபட்டு சிறையில் அடைக்கபடுகிறார். புகழ் பெற்ற எழுத்தாளர் ஆகிவிடுகிறார். எம் ஒரு நாடக நடிகையாகிவிடுகிறாள். எங்கிருந்தோ அவருக்கு காதல் கடிதங்கள் எழுதுகிறாள். பின்பு ஒரு நாள் அரசியல் கைதியாக சிறையில் இருந்த போது எம்மின் நண்பன் ஒருவன் அவள் ஒரு விபத்தில் இறந்து போய்விட்டதைச் சொல்கிறான்.

அந்தத் துயரத்தை அவர் மனது ஏற்றுக் கொள்ள முடியாமல் விம்முகிறது. தனது முதற்காதலின் சாட்சியாக இருந்தது அந்த மரம் என்பது இப்போது நினைவிற்கு வருகிறது, மரத்தின் நிழலில் தான் ஆடிய விளையாட்டுகளும், அம்மாவும் உறவுப்பெண்களும் கூடி அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டதும், கோவித்துக் கொண்டு தான் மரமேறியதும், மரத்தடியில் கொசுவலை கட்டி உறங்கியதும் என ஒவ்வொன்றாக நினைவில் மோதுகின்றன. அப்படிப்பட்ட மரம் இன்று ஏன் காய்க்க மறுக்கிறது என்று அவரும் யோசிக்கிறார்,

முதியவரும் அவரது நண்பரும்  சாந்தி செய்யும் சடங்கிற்கு என்று மெஹமூத்தை மரத்தின் அருகாமைக்கு அழைத்துப் போகிறார்கள்.  அங்கே ஒரு மரம் வெட்டுகின்றவன் நிற்கிறான். அவன் மரம் காய்க்க மறுக்கிறது என்பதால் வெட்டிவிடலாம் என்று தனது கோடாரியைத் தீட்டுகிறான். மெஹமூத்துவும் அதற்குச் சம்மதிக்கிறார். ஆனால் முதியவர் தான் கடைசியாக ஒரு முறை மரத்திடம் பேசிப்பார்க்கிறேன் என்று யாவர் முன்னிலையிலும் மரத்திடம் பேசுகிறார்

ஏய் மரமே, நீ செய்வது உனக்கே சரியாக இருக்கிறதா. உனக்கு என்ன கோபம். உன் இலைகள் பசுமையாக இருக்கின்றன. வேர்கள் உறுதியாக இருக்கின்றன. ஆனால் நீ காய்க்க மறுக்கிறாய். மரமாக இருந்து கொண்டு காய்க்க மறுத்தால் வெட்டுபட்டு அழிந்து போவாய் என்பதை மறந்துவிட்டாயா? உனக்கு எதற்கு இந்த வீம்பு. பிடிவாதம்.  உனக்குள் எதற்காக இத்தனை மௌனம். ஏன் இப்படி உறைந்து போயிருக்கிறாய் என்று ஆதங்கப்படுகிறார்.

மரம் வெட்டுகிறவன் தன் கோடாலியை  மரத்தின் மேல் பாய்ச்ச முனைகிறான். முதியவர் மரத்தை கட்டிக் கொண்டு அது ஒரு உயிருள்ள ஜீவன். அதைக்கொல்ல வேண்டாம்.  கொஞ்ச நாள் அவகாசம் கொடுத்து பார்க்கலாம் என்கிறார். அதற்கு யாவரும் ஒத்துக் கொள்கிறார்கள். மிகுந்த வேதனையோடு அந்த மரத்திடம் முதியவர் கெஞ்சிக் கேட்கிறார்

மரமே நீ உன் கோபத்தை விட்டு காய்த்து பழங்களை தராவிட்டால் உன்னை என்னால் காப்பாறவே முடியாது. உன்னை மாற்றிக் கொண்டுவிடு

அவர்கள் யாவரும் அங்கிருந்து போன பிறகு மெஹமூத் தனியே இரவில் அதே மரத்தடிக்கு வருகிறார். அவரும் மரத்திடம் பேசுகிறார்.

உனக்கு என்னவானது. ஏன் இப்படி திடீரென காய்க்க மறுக்கிறாய். எது உன்னை தடுத்து நிறுத்துகிறது. உன்னிடமிருந்து நான் எவ்வளவு பழங்களைப் பறித்து தின்று இருக்கிறேன். அந்த ஞாபகங்கள் எனக்குள் அப்படியே இருக்கின்றன. இனறு ஏன் இப்படி நடந்து கொள்கிறாய். உன்னுடைய பிரச்சனை என்று கேட்கிறார். மரம் அமைதியாக நிற்கிறது.

தானும்  அந்த மரமும் ஒன்று தான் என அந்த நிமிசத்தில் அவருக்குப் புரிகிறது. தனது மனதோடு பேசுவது போல மரத்தோடு அந்தரங்கமாகப் பேசுகிறார். யாரோடு பகிர்ந்து கொள்ளாத தனது பதின்வயதின் துயரம் அவருக்குள்ளிருந்து பீறிடுகின்றது. அவர் காய்க்காமல் நின்ற மரத்தை தனது நெருக்கமான நண்பனைப் போல புரிந்து கொள்கிறார்

பெயர், புகழ், பரபரப்பு என்று அலைந்த தனது வாழ்வை மறுபரிசீலனை செய்து கொள்ள மரம் காரணமாகிறது. அவரை எப்போதும் துரத்திக் கேள்விகேட்கும் பத்திரிக்கையாளர்கள் அன்று அவரது கற்பனையில் தோன்றி இனி அவர் என்ன செய்யப்போகிறார் என்று கேட்கிறார்கள். பரிகாசம் செய்கிறார்கள்.  அவர்களிடம் உறுதியான குரலில் தான் துவங்கிய இடத்திற்கே மறுபடி செல்ல இருக்கிறேன் என்று தான் காதலித்த எம்மை பற்றிய காதல்கவிதைகளை மறுபடி எழுத போவதாகச் சொல்கிறார்.

மரமோ மனிதனோ எதுவாயினும் அதன் அகம் ஒடுங்கிப்போகும் போது அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மறுக்கிறது. ஆழ்ந்த வருத்தமும் நிராகரிப்பும் வேதனையும் மனிதனை மட்டுமில்லை மரத்தையும் பாதிக்ககூடியது என்பதைப் புரிந்து கொள்கிறார்.  பாசாங்கில்லாத அன்பும், நிஜமான அக்கறையும் தன்னுயிர் போல மற்ற ஜீவன்களையும் நேசிக்கும் பாங்கும் கொண்ட முதியவரின் செயல்பாடு அவருக்கு ஒரு வழிகாட்டியைப் போல அமைந்துவிடுகிறது.

அவர் புதிய எழுத்துலகம் நோக்கி நகர இருப்பதன் அறிகுறி போல எந்தப் பரபரப்பும் இன்றி தான் எழுதுவதற்காக கொண்டுவந்த டைப்ரைட்டர், காகிதங்கள், புத்தகங்கள் அத்தனையும் மூட்டை கட்டிவிட்டு அங்கிருந்து கிளம்புவதோடு படம் முடிவடைகிறது

எழுதுவது என்பது ஒருவனின் அகவெளிப்பாடு. அது தன்னியல்பாக நடக்க வேண்டும். மரங்கள் கனி தருவது போல விந்தையான வெளிப்பாடது. எப்போதாவது எழுதுவதை ஒரு நெருக்கடியாக எழுத்தாளன் உணரத் துவங்கினால் அது தான் அவன் வீழ்ச்சியின் முதல்படி. எழுத்து ஒரு ஆனந்தம். அது ஒரு விந்தை, அதே நேரம் எளிமையாகவும், பயன்பாட்டிற்கு உரியதாகவும்,   பயன்பாட்டிற்குள் மட்டும் அடங்கமுடியாததாகவும், பல்வேறு நிலைகளை கொண்டது. எழுத்து ஒரு மீட்சி.   நினைவுகளை அசைத்து பறக்கும் ஒரு உன்னத முயற்சியு என்று எழுத்தின் ஆதாரசெயல்பாட்டினை அறிந்து கொள்கிறார்

இயற்கையும் எழுத்தும் ஒன்று போலவே செயல்படுகிறது என்பதை இதை விட அற்புதமாக வேறு எவராலும் திரையில் சொல்லிவிட முடியாது. பால்யநினைவுகள் ஒரு படைப்பாளியின் மனதில் உருவாக்கும் அலைகளும், பிரிவின் வலி நீண்டு பலவருசங்களுக்குப் பிறகும் கரைந்து போகாமல் ஒடிக் கொண்டேயிருப்பதும். முதற்காதலின் வடுக்கள் வாழ்நாள் முழுவதும் அழியாதவை என்பதையும் படம் சிறப்பாகச் சொல்கிறது.

படத்தில் பதின்வயது காலக் காட்சிகள் தனித்த வண்ணத்தில் உருவாக்கபட்டிருக்கின்றன. ஈரானிய நிலக்காட்சிகளும், முற்றிய வெயிலில் களைந்து உறங்கும் பெண்களும், சிறார்களின் விளையாட்டு உலகமும், பதின்வயதின் இனம்புரியாத தவிப்புகளும் படத்தோடு நம்மை கரைந்து விடுகின்றன. தானே பழுத்து உதிரும் கனிகளைப் போல நம் மனது கடந்தகாலத்தின் நினைவுகளை உதிர்க்க துவங்குகின்றது.

ஈரானிய சினிமாவின் தனிப்பெரும் ஆளுமை தரியூஷ் மெஹருஜி. உலகசினிமா அரங்கில் மஜித் மஜித்திற்கும், அபாஸ் கிராஸ்தமிக்கும் கிடைத்த கவனமும் வரவேற்பும் இவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரையும் விட பன்மடங்கு சிறந்த இயக்குனராக இவரையே கருதுகிறேன்.

ஈரானிய கலைப்படங்களின் திருப்புமுனையாக அமைந்தது இவரது The Cow திரைப்படம். ஈரானிய கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது பசுவை சொந்தபிள்ளையைப் போல வைத்து காப்பாற்றுகிறார். அவர் ஊரில் இல்லாத நேரத்தில் நிறைசூல் கொண்ட பசு இறந்து போய்விடுகிறது. அந்த உண்மையை சொன்னால் அவரால் தாங்கிக் கொள்ள முடியாது என்று முடிவு செய்த ஊர்வாசிகள் பசு தப்பியோடிவிட்டது என்று பொய் சொல்கிறார்கள். அதை நம்பிய விவசாயி மாட்டைத் தேட ஆரம்பிக்கிறார். பசுவை இழந்தது அவரது மன இயல்பையே மாற்றிவிடுகிறது. தன்னையே பசுவாக கருதத் துவங்குகிறார். பசுவைப் போலவே அவரது செயல்களும் மாறுகின்றன. படம் முழுவதும் பசு நிகரற்ற அன்பின், தூய்மையின் குறீயிடு போலவே வருகிறது. ஈரானிய கிராம மனிதனின் மனவுலகை, கிராமவாசிகளின் இயல்புவாழ்வினை சித்தரித்த அற்புதமான படமது.

அமெரிக்காவில் திரைப்படப்பள்ளியில் பயின்ற தரியூஸ் தனது முன்னோடியாக லூயிபுனுவலை குறிப்பிடுகிறார். இவரது திரைப்படங்கள் ஈரானில் வெளியாக முடியாமல் தடைசெய்யப்பட்டிருந்தன. வெனிஸ் திரைப்படவிழாவில் இவரது The Cow திரைப்படம் முன்னறிவிப்பின்றி திரையிடப்பட்டு விழாவின் மொத்தக் கவனத்தையும் ஈர்த்ததோடு முக்கிய விருதையும் பெற்றது. தத்துவத்திலும் இசையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் தரியூஸ்.

ஈரானியப் படங்களில் பெரும்பாலும் தங்கமீன்கள் ஒரு குறியீடு போல காட்டப்படுவதுண்டு. தங்கமீன்கள் அவர்களுக்கு நம்பிக்கையின் அடையாளம். புது வருசம் பிறக்கும் போது தங்கமீன்களை வாங்கிப் பரிசு தருவது மரபான வழக்கம். மஜித் மஜிதியின் படங்களிலும், ஜாபர் பனாகியின் படங்களிலும் தங்கமீன்கள் முக்கிய காட்சிப்படிமமாக விவரிக்கபடுகிறது.

அப்படி ஈரானிய நவ சினிமாவின் அடையாளமாக ஒரேயொரு தங்கமீனிருக்கிறது. அது  தரியூஷ் மெஹருஜி எனும் உன்னத இயக்குனர்.

**

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: